கொடைக்கானலில் கவிஞர் விக்ரமாதித்யனோடு உரையாடல்

கொடைக்கானலில் கவிஞர் விக்ரமாதித்யனோடு உரையாடல்


இசையின் கவிதைகள் ###

குட்டி ஒடிசா

கோயம்புத்தூர் மாநகராட்சியின்
93 வது வார்டில்
புதிதாக உருவாகியிருக்கிற மைதானத்தில்
மட்டையாட்டம் நிகழ்கிறது
அங்கு ஒரிய மொழி ஒளி வீசுகிறது
ஆட்டத்தின் முசுக்கரத்தில் கிளம்பும் புழுதியில்
ஒரு "குட்டி ஒடிசா " எழுந்து வருகிறது
ஒரு புளியமரம் பல தலைமுறைகள் காண்பது
இன்று
அம்மரத்தடியில் அமர்ந்திருந்த ரசிகர் கூட்டம்
"மாரோ ... மாரோ .."என்று கத்துகிறது .
அந்த இடது கை ஆட்டக் காரன்
இறங்கி
ஒரு இழு இழுக்கிறான்
மகிழ்ச்சியின் கூச்சலினுடே பறந்து செல்லும் அப்பந்து
மைதானத்தைத் தாண்டி
ஒரு மூமுதுகிழவனின் தோளில் விழுகிறது
அவன் அப்பந்தைத் தூக்கி
அதே மகிழ்ச்சியின் கூச்சலினுடே
திரும்ப எறிகிறான்
அவனை "கணியன் பூங்குன்றன் " என்றறிக !

2

18ஆம் பெருக்கு : பாடிவீடு

வாராது காண் மழை வெள்ளம்
வடிந்த மணல் பரப்பில் உயிர்க்கும் மெல்ல
ஒற்றிய பெண்களின் சிந்திய
திலகம்
பழங்கால ஆயுத வடிவ
கற்கள் மீது
உறைந்து குருதிக்கறையாகும்
நிலை குத்திய கண்களோடு
விரிசடை கீழ்
சந்ததிக்கு உரைக்கும் அருஞ்சொற்கள்
அருளி
சூடம் சப்பி மலையேறுவாள்
துண்டித்த ஆடுகளின் குரலில் ஏதேதோ பாவனையில்
அகழும் பள்ளங்களில் ஊறும்
ஊற்று ரத்தம்
தோய போவதில்லை - இனி
அவள் மோவாய்க்குழியில்
அருகருகே கூப்பிய கரங்களில்
தெய்வமாகின்றனர் வீட்டுப்பெண்கள்
ஆண்கள் தேவாங்கைப் போல நொய்ந்து கிடக்க
சந்திரகாளி புடவைக்காரி
மெல்ல சாந்தத்தைக் கொண்டையிடுகிறாள்
ஆக்ரோசமடைந்து துவைத்த துணிபோல
துவண்டு கிடைக்கும்
ஒருவர் கோலிசோடாவை உடைத்துத் தருகின்றார்
நுரைத்து சுழிந்து வழிகிறது
ஆறு புரட்டாத கற்களில் .

( மிடற்றுதல் - குளறுதல் )

3

கொடும்பாவி

நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்
தள்ளு முள்ளு வரிசையில் கடவுளிடம்
வாங்கி வந்த வரத்தை
தரிசு நிலத்தில் வைத்து அழகு பார்த்துக் கொண்டு
ஒரு கண்ணாடி செய்யக் கூடிய காரியமல்லவா அது
பளபளக்கும் கற்களில் ஆரோகணித்திருக்கும்
கசங்கிய பிம்பம்
அர்த்தமற்ற சிரிப்பில்
புனிதப் பயணவழி நிழல் மரங்கள்
ஒரு மன சாட்சியாய்த் தோன்றுகிறது
வீடுகள் தனி தேச சிறைச்சாலைகளை
போன்று கலையிழந்து கிடக்க
நிலமெங்கும் வெயில் முளைத்துள்ளது
வெயிலை அறுவடை செய்து "கொடும்பாவி " கட்டி
மாரடித்து இழுத்துச் செல்கின்றனர்
சிறைவாசிகள்
உய்ய விழையும் மனதோடு
சாலைகளை வெறித்துக் கிடக்கிறேன்
வெயில் காய்ந்து கொண்டு

4

அப்பாவானவர்

தென்னை மரங்கள்
ஒவ்வொன்றாய்
காய்ந்து உதிருகின்றன
தன் தலையை உதிர்த்துவிட்டு
ஒரு முண்டத்தைப் போல
நின்று கொண்டிருக்கிறது
இதன் காய்கள் நன்குபெருக்க
சிலிக்கன் ஜெல் ஊசி வேறு
எப்போதும் நிலத்தைப் பார்ப்பது
மோசமான அரசு மருத்துவமனையின்
கட்டில்களை ஞாபகப்படுத்துகிறது
காய்ந்த மரத்தின்
கடைசிப் பயனாக
அதன் ருசி மிக்கக் குருத்துச் சோறு
வாய்கரிசியைச் சமைப்பது போல
வேட்டையில் சிக்கிய
முள்ளம்பன்றி இறைச்சி இருக்கும்
இந்த மாலைவரையும் கூட
வெள்ளி நைட்ரேட் வாங்கப்போன
அப்பாவானவர்
நகரத்திலிருந்து திரும்பவில்லை
கடைவீதிகளில்
ஷோகேஸ் பொம்மைகளைக் கண்டு
இனம் தடுமாறி நிற்கக்கூடும் யாரேனும் கண்ணுற்றால்
தயை செய்து
அப்பாவானவரைத் திருப்பி அனுப்புங்கள்

சு வெங்குட்டுவன் கவிதை ###

மும்முறை அழைக்கப்பட்ட அவள் அசோகமரத்து நிழலிலிருந்து வெளிப்பட்டாள்
வெள்ளை வேட்டிகளையும்
கறுப்புச் சட்டைகளையும்
காக்கித்
தொப்பிகளையும்
கடந்து உள்ளே போய் சுவரோரமாக நின்றாள்
பெயரை உறுதிப்படுத்திக் கொண்ட மாஜிஸ்திரேட்
வாய்தாவை அறிவித்து ஆஜராக ஆணையிட்டார்
கையெழுத்திட்டுத் திரும்பியவள் மேல் பார்வைகள் மொய்த்து
பொதுமையானதொரு கேள்வியை வினவ
என்னவாக இருக்கும்
கண்டுபிடியுங்களேன் எனும் விதமாய்
நடை நடந்து போன அவள்
பூவரசின் நிழல் நிற்கும் மகிழுந்துவில் அமர்ந்து அறைந்து சாத்தினாள்
கதவை

நரன் கவிதைகள் ###

1

பறவை

"ஒரு பறவை"- இதற்கு முன்
யாருமதை பார்த்திலர்
வேட்டையாடிகள் யாருமதை வேட்டையாடிலர்
நிறம்:பெயரறிந்திலர்
முட்டை இடுமா ? - தெரிந்திலர்
எப்போதுமது அவன் வலக்கையிலிருக்கும் - பச்சை குத்தப்பட்டு

அவன் கையை ஆட்டி ஆட்டிப் பேசும்போது அது பறக்கும்
ஓய்வாய் தொங்கவிட்டால் சும்மா கிடக்கும்
அவன் கையால் அள்ளி அள்ளி உண்ணும்
சொம்பில் நீர் வாங்கி அருந்தும்
அயற்சியில் தலைக்குத் தோதாய் கையை மடித்து வைத்து
உறங்கும்

2

காதை மூடிக்கொள்

இம்மலையை டெண்டர் எடுத்த குவாரிக்காரன்
ஜெலட்டின் குச்சி ; கரி மருந்து ; அழுத்து விசை
காதை மூடிக்கொள்
பலத்த ஓசை பொடிந்து ...
மூன்றாம் நூற்றாண்டுச் சமணப்படுக்கையது
புடைப்புச் சிற்பத்தின் கையில் கூம்புத் தாமரையை
சுமந்து நிற்கும் ரூப சுந்தரி
கை தனியாய் ;மலர் தனியாய் ;மார்பு தனியாய் -யெல்லாம்
இந்நூற்றாண்டின் ஜெலட்டின் குண்டு வெடித்து
குவாரி லாரிகளில் ஏற்றப்பட்டு
அவள் பிருஷ்டமும் மார்பும் சமத்தளமாக்கப்பட்டு
வழவழப்பாக்கப்படும் .
இந்த நகரெங்கிலும் வீற்றிருக்கும் அரசு பூங்காக்களின்
கற்பெஞ்சுகளில்
ஜோடிஜோடியாய் வந்தமர்கின்றன புடைத்த பிருஷ்டங்கள்

லக்ஷ்மி மணிவண்ணன் கவிதை ###

தொடர்வண்டியில் தொங்கும் இளவரசி

ஆடும் கைப்பிடிகளிரண்டினிடையே
உடலைக் கோத்துத் தொங்கவிட்டபடி
ஆடிக் கொண்டிருக்கிறாள்
தொடர்வண்டியில் தொங்கும் இளவரசி

நள்ளிரவில் புறப்படும் புறநகர்
தொடர்வண்டியில் உடல் தொங்காத கைப்பிடிகள்
இளவரசிகளுக்காக ஆடியபடி காத்திருக்கின்றன
புலப்படாத இளவரசிகள் ஒரு வேளை
அந்த கைபிடிகளில் உடலைக் கோர்த்திருக்கக் கூடும்

கடவுள் பயணிக்கும் நள்ளிரவில்
ஆளற்ற இருக்கைகளிலிருந்து பயணிக்கிறார்கள்
அவர்களின் காதலர்கள்.

இளவரசிகளைக் கவர்ந்திழுக்க வேண்டிய
காதலர்களின் கண்கள்
உள் திருங்கியிருக்கின்றன

கடக் கடக் ஓசையுடன்
தொங்கியபடி பயணிக்கும் இளவரசியின்
நதியில் தோய்ந்த வரி படர்ந்த வெள்ளையுடலில்
கருங்கல் சிற்பமாய்
கரிய யோனி

விலா எலும்புகள்
துருத்திய மார்பில்
சதையற்றுச் சப்பிய முலைகள்
உலர் திராட்சை
முலைக் காம்புகள்

சிற்ப யோனியை
சதைக்குறிகளால்
முட்டி நெரிக்கும் நிகழ்காலம்
தூங்கும் வேளையில்
இளவரசி பயணித்துக் கொண்டிருக்கிறாள்

தொடர்வண்டியில் பொருள்களின் அறையில்
திரிசடையோடும் ,கறுத்த பாசி படர்ந்த உடலோடும்
சிற்பக்குறி வெளித்தெரிய
அவளது காதலன்
தூங்காமலிருக்கிறான்

ஆளற்ற இளவரசர்களோடு
தனிமையில் பயணிக்கும் இளவரசியின் கண்கள்
முதிய நிழலுருவங்கள் ஊடாடித் திரியும்
நீளமான பழுதடைந்த கொட்டாலைகளை
கனவு காண்கின்றன

கொட்டாலை முற்றத்தில்
அழகிய கோலம் ஈரமுலராமலிருக்கிறது

கண்டராதித்தன் கவிதை ###

பிழையான விலங்கை நாம்
ஏற்பதும் ,ஏற்காமலிருப்பதும்
சட்டப்படி தண்டனைக்குரியது அல்ல

நீண்ட காலத்திற்குப் பிறகு ஊர் முச்சந்திக்கு வந்தான்
வித்தைகளை வாங்கி விற்கும் யாத்ரீகன்
தற்செயலாக நாங்கள் கேட்டோம்
ஐயா உம் பயணத்தில் பிழையான மன்னனைக்
கொண்ட
மக்களைக் கண்டதுண்டோ வென்று
பதிலுக்கு யாம் வெட்கும்படி
காற்றைப் பிளந்து கூறிட்டான்
நீரை அளவிட்டு முடித்தான்
கற்பாறைகளை விலை காட்டினான்
நாங்கள் சினந்து வளரும் மிருகத்தைப்போல
உறுமினோம்
பிறகு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்
அதன்பின் சாந்தமாகி அது நாங்கள்தானா என்றோம்
அது சமயம் அவன் கேட்டான்
இவ்வாறு அண்டிக்குழைந்தீர்
மதிகெட்டீர் மானமிழந்தீர்
எப்படி இதுவெல்லாம்
இன்ன விலை
இன்ன பொருள்
பார் முழுதும்
விற்க
இது வேண்டும்
கற்றது ஆரொடு சொல்லுதி விரைந்து

ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள் ###

1

காத்திருப்பு

வீடு பூட்டியிருந்தது
தெரு திறந்திருக்கிறது
நண்பனைத் தேடி வந்த நண்பன்
திரும்பி நடக்கிறான்
கடையில் திரைப்பாடல் ஒலிக்கிறது
ஒரு கோப்பை தேநீருக்கு
முதலாளியாகிறான் .
அக்கத்திலும் பக்கத்திலும்
நாட்டை ஆள விரும்பாதவர்கள்
நாளிதழ் படித்துக் கொண்டிருக்கிறார்கள்
முகம் தெரியாத பெண்
பண்பலையில் படபடக்கிறாள்
பைகளுக்குள் கை நுழைக்காமலே
பணத்தை எண்ணிப் பார்க்கிறான்
நடைபாதைக்கு வரிவித்தித்தால்
நடமாடவே முடியாத வசதியோடிருக்கிறான்
புகைக்குச்சியின் விலையேறியிருக்கிறது
தரத்தை இறக்கிக் கொள்கிறான்
இருமல் உலுக்குகிறது
காறித் துப்ப துப்பில்லாமல் மேலும்
காத்திருக்க ஆயத்தமாகிறான்
தேடி வந்த நண்பனோ
ஒரு புத்தகத்தைப் போல்
தன் வீட்டைத் திறந்து வெளிப்பட்டு
தெருவை ரகசியமாகப் பூட்டுகிறான்

2

கேடு

அதிகாலையில் எழுந்து அன்றைய
புது நம்பிக்கைகளை அயன் பண்ணியணிந்து
கடை வீதிக்கு வந்து
சுமாரான சுவையோடு
சூடானத் தேநீரை பருகிக் கொண்டிருக்கையில்
அந்தநாள் அக்கணமே
திடுமென அஸ்தமித்தால் எப்படியிருக்கும்
அப்படித்தான் இருந்தது எனக்கு
அன்றைய நாளிதழின் மேலிருந்த தலைப்புச் செய்தி
முக நூலில் கணக்கு இல்லாதவர்கள்
ஜனத்தொகையிலிருந்து களையப்படுவார்கள் என
உலகநாடுகள் அறிவித்திருந்தன
உலகநாடுகள் ஒன்றுபட்டிருந்தன
நான் துண்டு துண்டாக்கப்பட்டேன்
மேலும்
தங்கள் முகத்துக்கொரு நூலெழுதிக் கொள்ள
மூன்று நாட்கள் கெடு கொடுத்து
கருணையும் காட்டியிருந்தது
அக்கம் பக்கம் சுற்றி பார்த்தேன்
யார் முகத்திலும் எந்தப் பதட்டமுமில்லை
என்னைத் தவிர ?

யவனிகா ஸ்ரீராம் கவிதை ###

ஆறுமுகா காபி ஒர்க்ஸ்

எனது தேசம் விடுதலையின் கனவுகளில்
இருந்த போது பிறந்தவன் நான்
அப்போது ஒரு சந்நியாசி கைத்தடியுடன்
கிழக்கும் மேற்குமாய் சத்தமிட்டபடி அலைந்து கொண்டிருந்தார்
வெகுகாலம் முன்பாக கப்பலில் வந்தவர்கள் தங்களுக்குள்
சுருட்டிக் கொண்டது போக ஒருநாள் நள்ளிரவில்
நைச்சியமாய் கைகுலுக்கி விடைபெற்றார்கள்
மக்கள் பெருமூச்சு விட்டபடி விவசாய நிலங்களுக்கு
நீர் நிலைகளுக்கு கியாமத் சாலைகளுக்குத் திரும்பினார்கள்
நான் காப்பிக் கொட்டைகளை சீராக வறுக்கும்
ஒரு இயந்திரத்திற்கு உரிமையாளனானேன்
எனது நண்பன் உள்ளூர் கைநூற்புகளை நெய்யும்
தறியில் நெசவாளியாக அமர்ந்தான்
சிலரோ எப்போதும் போல் கழிவறைகளைத் தூய்மை செய்தனர்
கோவில்களில் மங்கல விளக்குகளும்
ஆலயங்களில் மெழுகின் தீபமும்
மசூதிகளில் பாங்கும் இழைய
எனது தேசம் அணைகளில் பாய்ந்து
ஆலைகளில் உயிர் பெறத் துவங்கியது
ஒருநாள் வியாபாரி ஒருவன் உரம் கொண்டுவந்தான்
வேறொருவன் புதிய விதையொன்றைக் கண்டுபிடித்தான்
அதை விற்க ஒருவன் ஆங்காங்கே கடை திறந்தான்
கடைபெறுகி வீதியாகி வீடுள்ள தெருவெல்லாம்
விறுவிறுவென சந்தைக் காடானது
இந்த ஏராளச் சந்தைக்கு யார்யாரோ
தாராளமாய் கடன் கொடுத்தார்கள்
இப்படித்தான் நண்பர்களே என் இயந்திரம்
என் கையை விட்டுப் போனது
என் நெசவாளி நண்பனும் நேற்றுத்தான் செத்தான்
விடுதலைக்குப் பிறகு இப்போது என்னிடம்
மனைவியோடு ஒரு வாடகை வீடு
காப்பி வறுவலைச் சோதிக்கும் ஒரு மாதிரிக் கரண்டி
பவுடர் நிறைக்கும் பட்டர் பைகள் மற்றும்
புகை படர்ந்த ஒரு காந்தியின் படத்தோடு
கல்லாப்பெட்டியும் கொஞ்சம் கடனும் இருக்கின்றன

ஷங்கர்ராமசுப்பிரமணியன் கவிதை ###

மணிபாப்பா

தோற்றம் : 1981 மறைவு : 1984
நீ மறைந்தாலும் உன் நினைவுகள் மறைவதில்லை

இப்படிக்கு
மணிபாப்பா குடும்பத்தினர்

*
எப்போதாவது எங்கள் பகுதியைக் கடக்கும் போது
இந்த சுவரொட்டியை நீங்களும் பார்த்திருக்கலாம்
வருடங்கள் கடந்தும்
கடப்பவர் நினைவில் தடம் பதிக்கிறாள் மணிபாப்பா
இருண்ட கருப்பு-வெள்ளை புகைப்படத்தில்
கிருஷ்ணர் ஒப்பனையில் புரண்டு படுத்தவாறு
இருக்கும் மணிபாப்பாவின் முகத்தை
பார்ப்பவர் எவரும் மறக்க முடியாது
எனக்கு எப்போதும் ஒரு பயம்
கடவுளே
மணிபாப்பா வளர்ந்த இளைஞனாக சைக்கிளில்
எதிரில் வந்துவிடக் கூடாது

மணிபாப்பாவின் குடும்பத்தினர் யார்
வசதியானவர்களா
அடிதடியில் ஈடுபடுபவர்களா
மணிபாப்பா பிறந்த நாளிலும்
இறந்த நாளிலும்
சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன
ஏதாவது பிரமுகர்கள் நகருக்குள் விஜயம் செய்யும் போதும்
மணிபாப்பாவின் குடுமபத்தினர்
வாழ்த்துச் சுவரொட்டிகள் ஒட்டுகிறார்கள்
மாடுகள் சுவரொட்டியின் எழுத்துக்களை
தின்றுவிட்டு புகைப்படத்தை மட்டும்
மிச்சம் வைத்து சென்றுவிடுகின்றன
மணிபாப்பாவின் புகைப்படத்தின் மேல்
மற்றொரு மணிபாப்பாவின் புகைப்படம்
அதற்கு மேல் மற்றொரு மணிபாப்பா
ஆண்டுகள் சென்ற பின்னும் .
அதன் இறுதியில் சுபாஷிணியைப் பற்றியும் சொல்லாமல்
இருக்கமுடியாது
அவள் கொடுக்கும் தொந்தரவு வேறுவிதமானது

*

சுபாஷிணி

பிறப்பு 1983 இறப்பு :2002

சுபாஷிணியின் வீடு எந்த திசையில் இருக்கிறது ?
சிரிப்பு உதிராத புகைப்படத்திலிருக்கும்
சுபாஷிணி
தற்கொலை செய்து கொண்டாளா
மழைக்கால நோய் ஒன்றில் இறந்துபோனாளா
சாலை விபத்தா
சுபாஷிணிகளைப் பற்றி
சுவரொட்டிகள்
எதையும் தெரிவிப்பதில்லை

ஸ்ரீநேசன் கவிதைகள் ###

1

ஒரு மாநகரத்துக்கும் இன்னொன்றுக்குமிடையே
குளிரூட்டிய ரயில் பெட்டியில் பயணிக்கும்
முதல் வகுப்புக் கனவான்களே
ஒருபோதும் உங்கள் பாதங்கள் வறண்ட கரம்புகள்
அனல் வீசும் தாவரங்களற்ற சிறு குன்றுகள்
வயோதிக இடையனை அலைய விடும் ஆட்டு மந்தைகள்
சாபம் பெற்ற பாழடைந்த கிராமங்கள்
வதங்கிய கரும்புப் பயிர்கள்
குருத்து சாய்ந்த தென்னங்கன்றுகள்
கருகிக் காய்ந்த நெல் வயல்கள்
வெடிப்புகளோடு கானல்வீசும் ஏரிகள் முள் புதர்கள்
அம்மனாக குழந்தையை இடுப்பில் கொண்டு செல்லும்
மெலிந்த பெண்கள்
கோவணத்தோடு மரத்தடியில் எதற்கோ காத்திருக்கும்
தரித்திர விவசாயிகள்
காய்ந்த சருகுகளை மென்று கடக்கும் கால்நடைகள்
ஒற்றைப் பறவைகள் அமர்ந்திருக்கும் பட்டமரக் கிளைகள்
இவையெல்லாம் என்ன எவருடையவை
இங்கெல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கும்
உயிர்க் கூட்டத்துக்கும் உமக்கும் இதுதான் உறவு
கண்ணாடி ஜன்னலில் எரிச்சலோடு முகம் திருப்புகிறவரே
சொல்வீரா ?

2

ஓர் ஒப்பாரியைப் போல்
இந்தக் கவிதை தொனித்துவிடக்கூடாது
ஏனெனில் ஒரு ஏறி ஒருபோதும் அதை விரும்புவதில்லை
அது மரித்து நாளாகிவிட்ட தெனினும்
வேனிற்கால வெடிப்புகளில் பாய்ந்து உறங்கி
இன்று காயமுற்று குரோதமடைந்த சூரிய ஒளி
இந்தக் கைபிடிச் சுவரின் மேல்
தள்ளாடுகிறதைப் பாருங்கள்
பெட்ரோல் பங்கிலிருந்து கிளம்பும் வாகனத்தை
ஏர் மாடுகள் ஒருபோதும் வழிமறிக்கப் போவதில்லை
ஏனெனில்
நோஞ்சான் விவசாயி இத்தகைய எதிர்காலத்தைப் பற்றி
கற்பனை கொண்டிருக்கவே முடியாது
சிமெண்ட் சாலை விளிம்புகளில் குடியேறிய
மக்களின் பொந்துகளில்
நாடுகளின் ஆன்மாக்கள் பிராண்டுகின்றன
பின் திகைக்கின்றன
அருகே பாதாளச் சாக்கடையில் முடங்கிக்க கிடைக்கும்
மதகு நீர்ச் சலசலப்பின் ஓசை
ஒருபோதும் அவற்றுக்கு கேட்பதாயில்லை
எண்ணற்ற பறவைகள் அலைந்து கொண்டிருக்கின்றன
அந்த உன்னி புதர்ச் செடிகளுக்கும் இந்தக்
குரோட்டங்களுக்குமிடையே
அகாலத்தில் இல்லம் திரும்பும் ஒற்றை ஆளை
இந்நகரை நினைவில் கொண்டுள்ள அந்நாளைய
கிராமத்துக்கு குடிமகனின் கடைசி ஆவி
இடைமறித்து மிரட்டுகிறது
இந்நள்ளிரவில்
இதோ அந்த இரட்டை நட்சத்திரங்கள் நினைவு கூர்கின்றன
அந்நாளின் இருண்ட ஏரி நீரின் மேல்


தாம் மிக அழகாகப் பிரதிபலிக்கப்பட்டதை

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்