யாரோ ஒருவருக்காக எங்களூரில் ரோடுகள் போடுகிறார்கள்

யாரோ ஒருவருக்காக எங்களூரில் ரோடுகள் போடுகிறார்கள்

தினமும் சராசரியாக எழுபது கிலோமீட்டருக்கு குறையாமல் சுற்றுவட்டார பகுதிகளில் பயணிக்கிறேன்.எல்லாஇடங்களிலும் சாலைகள் போடுகிறார்கள்.ராட்ஷச சாலைகள் .இது நாங்கள் பயணிப்பதற்காக இல்லையென்பது நிச்சயமாகத் தெரிகிறது.யாரோ வரவிருக்கிறார்கள்,அவர்களுக்காக இந்த சாலைகள் பண்படுகின்றன.தினமும் ஒன்றோ இரண்டோ சாலை விபத்துக்களைத் தாண்டி நான் பயணிக்க வேண்டியிருக்கிறது.இப்போது விபத்தின் நிகழ் தகவில் வேறு ஒருவர் மாட்டியிருக்கிறார் என்பதால் நான் தப்பித்து விட்டதாக அர்த்தமில்லை.அதே நிகழ்தகவின் ஊடாகத் தான் நானும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.நாய்கள் ,ஆடுகள் அபூர்வமாக மாடுகள் அடிபட்டுக் கிடப்பதெல்லாம் சாதாரணமான நிகழ்வுகள்.இன்று ஓந்தான் ஒன்று அடிபட்டு சாலை விபத்தில் பலியாகிக் கிடந்தது.ஓந்தான் என்பது ஓணானை எங்களூரில் குறிக்கும் வார்த்தை.

சிறிய ரக டயனோசர் அது.ஒருவருக்கும் அதனால் ஒரு கெடுப்பலன்களும் கிடையாது.ஏராளம் நன்மைகளைக் கொண்ட அரிய இனம் அது.செம்பருந்தும் ஓணானும் நல்ல நிலையில் கணக்கு கிடைக்கிற இடங்களில் காற்று சுத்தமாக இருக்கிறது என்று பொருள் .செம்பருந்து தீய வாடை தெரிந்தால் அங்கிருந்து உடனடியாக முதலில் இடம் விட்டு விடும்.அதனால்தான் அது கிருஷ்ண பருந்தானது. ஓணானுக்கு சூழலின் தாவரங்களும் சிறப்புடன் இருக்க வேண்டும்.முது மூதாதையான ஓணான் அழிவது தீய சமிக்சை .ஒரு ஓணானுக்கும் நமக்கும் இருக்கும் இடைவெளியைக் கொண்டு நமக்கும் இயற்கைக்கும் இடையிலான தூரத்தை கணக்கிட்டுக் கொள்ளலாம்.எவ்வளவு உயரப் பனையிலிருந்து  கீழே விழுந்தாலும் ஓணானுக்கு ஒன்றும் ஆகாது.விழுந்த உயரத்திற்கு தக்கவாறு ஓய்வெடுத்து விட்டு கிளப்பிச் சென்று விடும்.அது மிகவும் தொன்மையான உயிரினமும் கூட.மனிதனுக்கெல்லாம் முன்னரே தோன்றிய தெய்வம் அது.என்னிடம் உங்களுக்கு ஓணான் வேண்டுமா ? சாலைகள் வேண்டுமா என்றால் எனக்கு ஓணான் வேண்டும்.சாலைகளை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன் ?

ஓணான் சாலை விபத்தில் பலியாவது  ஒரு மூத்த குடி சாலை விபத்தில் பலியாவதற்குச்  சமம் .எங்கள் பகுதியில் இருந்த ஒத்தை காளை வண்டிப் பாதைகள் அனைத்துமே நூறடிச் சாலைகளாக மாற்றம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.இந்த வண்டிப் பாதைகளின் இரண்டு பக்கங்களிலும் மனிதர்கள் ,விலங்குகள்,சாமிகள் எல்லோருமாக சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.பாதைகளும் சாலைகளும் விரிவு கொள்ளும் போது அதனைக் கடப்பதற்கான புதிய நுட்பம் உடனடியாக எங்களை வந்தடைந்து விடுவதில்லை.மூளையில் உணர்வில் ஒரு சாலை அழிய,பிறிதொரு சாலை உருவாக  இரண்டு தலைமுறை காலம் தேவைப்படும்.உயிரினங்களுக்கு அதுவும் காணாது. ஊருக்குள் திடீரென ஒரு சாலை விரிவடைந்து விட்டாலும் நாங்கள் அப்பாதையைக் கடக்க முடிவதில்லை.புதிய பாதைகளில் நாங்கள் கடப்பது  எங்களுக்குள் ஏற்கனவே இருந்து கொண்டிருக்கிற சாலையையே.அதற்குள் புதிய வாகனம் ஒன்று எங்கள் மீது ஏறிச் சென்று விடுகிறது.

நான்கு புறத்திலும் சாலைகள் போடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.ஆனால் இது எனக்கான சாலையில்லை.நிச்சயமாக இது வேறு எவருக்கோ போடப்படுகிற சாலை.போடப்படுகிற இந்த சாலைகளுக்கு அடியில் புராதனமான எனது சாலை இருக்கிறது.ஓணானும் நானும் அடிபட்டு இறக்கும் வாய்ப்பற்ற சாலை அது.

இந்தியாவில் வளர்ச்சி என்பது பூர்வீகக் குடிகளை அழித்து நவீன குடியேற்றத்தை ஏற்படுத்துவதைக் குறிக்கிறது.ஓணானை அடித்துச் சென்ற வாகனத்தின் உள்ளிருந்து ஒரு பொமரேனியன் குரைப்பதனைப் போன்று.

ஓரிடத்தில் வாழும் உயிரினங்கள் பிறிதொரு இடத்தில் வாழ இயலாதவை.அவர்களை எதன் பேரிலும் அழிக்க யாருக்கும் உரிமை கிடையாது.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"