கோடைகாலக் கவிதைகள்

எட்டு மரப்பலகைகள் கொண்ட
கடை நீலவேணி அக்காவுடையது
வெற்றிலை பாக்கு ,சர்பத் ,தேன்குழல் மிட்டாய்கள்
குளிர்ந்த பானை மோர்
சுற்றுப் பீடிகள்
சுருட்டு வெம்மை

சாலை சிறுக சிறுக உயர்ந்ததில்
திண்ணை இரண்டடி பள்ளத்தில்
மாட்டிக் கொண்டது
நீலவேணி அக்கா
பாதி உயரத்தில்
நின்று தெரிகிறாள்
அவள் காலடிகள்
மூன்று தலைமுறைகளுக்கு
முந்தைய காலத்தில்
புதையுண்டிருக்கிறது

கடைக்குள் உள்ள காலம்
வெளியில் இல்லை

வெளியில் உள்ள காலத்தை
உள்ளே அனுப்ப
வழிகள் ஏதுமில்லை

நீலவேணி அக்காவாக இருக்கும் போது
அந்த கடைக்குள்
நுழைந்தாள்
அவள் முழு உயரம் அறிந்திருந்த
காலம் அது

இந்த பக்கம் இருந்தால்
அந்த பக்கத்திற்குள் நுழைய முடியாது
அந்தப் பக்கமிருந்தாலோ
இந்த பக்கத்திற்கு
வாசல்கள் இல்லை

இருவேறு காலங்களுக்கு மத்தியில்
வெறுமனே
எட்டு பலகைகள்

2

இருபது வருடங்களுக்குப் பிறகு
நண்பனை
சந்தித்தேன்
ஹலோ என்றேன்
ஹலோ என்றான்
அடையாளம் தெரியாமல்
நகர்ந்தான்
அடையாளம் தெரியாமல் நகர்வது எவ்வளவு சுகமாயிருக்கிறது ?

நகர்ந்தவன் பின் திரும்பி
உங்கள் குரலை எங்கோ
கேட்டிருக்கிறேன்
என்றான்
உலகில் ஏழுபேரின் குரல்கள் ஒன்று போலவே இருக்குமோ என்னவோ
என பதில் கூறி
சுகத்தை எடுத்தபடி
திரும்பிவிட்டேன்

3

எங்கேனும் பாலியல் பலாத்காரம் நடந்தால்
எனது குறி உள்ளே உள்ளே நுழைந்து ஒளிந்து கொள்கிறது
தண்டனைச் செய்திகள் வருகையில் முகத்தை மூடிக் கொண்டு
உட்கார்ந்து உடல் நடுங்கி அழுகிறது
எந்த புழுப்பூச்சிக்கும் பின்னர் நெடுங்காலம்
அசைந்தே கொடுப்பதில்லை
பின்னர் சமாதானப்படுத்தி குணப்படுத்தி
தெருவுக்கு அழைத்து செல்கையில்
பக்கத்துக்கு வீட்டு பெண்ணியவாதியை காண நேர்ந்தால்
தலைதெறிக்க நெடுந்தூரம்
எனது உடலை விட்டு நீங்கி
ஓடிவிடுகிறது

அவர்கள் உன்னை வெட்டமாட்டார்கள்
சும்மா பேச்சுக்குத்தான் சொல்கிறார்கள் என்று
எவ்வளவோ நானும்
பேசிப் பார்த்து விட்டேன்.

4

பிரணவ் ஸ்கேன் சென்றர்

ஸ்கேன் சென்றரில் மரணத்தின் முன்பாகக் காத்திருக்கும் முகங்கள்
அனைத்தையும் தெரிவித்து விடுகின்றன
போதும் போதும் எவ்வளவு பார்த்தாயிற்று ?
இவ்வளவு விரைவாகவா ?
முடிந்து விடுமோ ?
இதற்காகத்தானா ?
இன்னும் கொஞ்சம் வாழ்ந்திருக்கலாமோ ?
பாதி கூட முடியவில்லையே ?
நிறைய வலி இருக்குமோ ?
சரியாகத்தான் போராடியிருக்கிறேன் ?
எவ்வளவு தவறுகள் ?
அகங்காரத்திற்கு ஒரு தலையணை தரக் கூடாதா ?
ஒவ்வொரு முகத்திலும்
தனித்தனி மொழி

ஸ்கேனிங் தொடங்குவதற்கு முன்னரே
முகங்கள்
அனைத்தையும் பேசி விடுகின்றன

எந்திரம் ஒவ்வொரு முகத்தையும் கூண்டுக்குள்
மெல்ல நகர்த்தி அழைத்துச் செல்கிறது
முகங்கள் பெற்றிருக்கும்
உடல்களுக்காக

5

என்னைப் பற்றிய என்னுடைய
கதாபாத்திரம் ஒன்று
தத்தித்தளும்பி தள்ளாடி
எனது அறைக்குள்
வந்து சேர்ந்தது

நான் உங்களைப் பற்றிய கதாபாத்திரம்
வந்திருக்கிறேன் என்றது
ஓ அப்படியா ?
என்ன பிரச்சனை என்று
அதனிடம் கேட்டேன்

முடியவில்லை
அதுவென்று சொல்கிறார்கள்
இதுவென்று சொல்கிறார்கள்
எதுவென்றே விளங்கவில்லை

ஓ அப்படியா ? என்று
முதல் ஆப்பிளை ஒருபுறம் கடித்து
மறுபுறத்தை
புசிக்கக் கொடுத்தேன்

பசித்து முடித்து
என்னே ருசி என்று கூறிய வண்ணம்
அறையை வெளியேறியது
பாம்பின் சட்டை போலும்
உதிர்த்துச் சென்ற
என்னுடைய
கதாபாத்திரத்தை எடுத்து
குப்பைக் கூடையில்
போட்டேன்
பின்னர்
பல் துலக்கத் தொடங்கினேன்

இப்படியாக என் பின் மதியம்
தேனிலவானது

6

வெகுநாட்களுக்குப் பிறகு
ஐந்தாம் வகுப்பிலேயே எல்லோருக்கும்
தந்தையை போன்று
நடந்து திரியும் பால்ய நண்பனைப் பார்த்தேன்

எப்போதும் யாரைக் கண்டாலும்
உடனடியாக
தந்தையாகிறவன் அவன்

அவன் எப்படி குழந்தையிலேயே
எல்லோருக்கும்
அப்பாவானான்
என்கிற
வரலாற்றை
அறிய மாட்டேன்.

ஆனால் சிறுவயது அப்பாவானதே
அவன் பிரச்சனை என்பது தெரியும்

நீ இப்போது எத்தனை குழந்தைகளுக்கு
தந்தை என்று கேட்டேன்

விபத்தில் கால்
முறிந்து விட்டது மக்கா ...
என்றவன்
துணியை ஒதுக்கி
ஒளிந்திருந்த கால்களைக் நீட்டினான்
தந்தையாக இல்லாத
ஒரு தருணம் கிடைத்தது

அதனை எடுத்துக் கொண்டேன்
தந்தையாக அவன் எனக்குள் இருக்கும்
சிலைக்கு பக்கத்தில்
இதனை வைத்தேன்
வெள்ளந்தியாக
சிரிக்கிறது
தானொரு தந்தையாக
இல்லாதது
குறித்து
இச்சிலை

ஒடிந்தது உனது தந்தைக்குத்தான் மக்கா
உனக்கல்ல
ஓய்வெடு
சரியாகும்


No comments:

Post a Comment

நினைத்தார்கள் நினைத்திருந்தேன் - 62

நினைத்தார்கள் நினைத்திருந்தேன் 1 இடையில் இறந்து விடுவேன் என்றே எல்லோரும் நினைத்தார்கள் நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன் 2 ...