அய்யா வைகுண்டர் இதிகாசம்-47

 அய்யா வைகுண்டர் இதிகாசம்-47


மறு நாள் காலை முத்து படுக்கையில் இருந்து எழும்பவில்லை.தூக்கத்தின் கடைசி நுனியில் கோழிக் கோட்டு மாடன்,முத்துவின் தாய் மாமன் பேசிக் கொண்டிருப்பது போல உணர்ந்தான்.விடியற்காலை கனவின் அங்கம் போல அவர் பேச்சு விழுந்து கொண்டிருந்தது.

இந்த பயக்கள இப்படியே விட்டா சரிப் படாது கேட்டியா ...அந்த தாமர குளத்துகார பய கள்ளனாக்கும்...சுசீந்திரத்ல நா அவுத்து வுட்டிருக்கேன் பாத்துக்க ...இவனுக்க கூட்டு அவந்தாங்...அக்கா வெயிலாளிடம் பராது சொல்லிக் கொண்டிருந்தார் கோழிக்கோட்டு மாடன்

அவிய இவனோட ரொம்ப கவலையிலயாக்கும் இருக்காவ..உனக்கு தெரியுதா ..மீண்டும் கொதித்தார்

அத்தானத் தாங் சொல்லுதேன்.அவிய கவல உனக்கு படுதா ..

அவிய கவலயெல்லாம் படல சும்மா வெத்துக் கம்பு சுத்தாண்டாம்.நிறுத்து என்றாள் வெயிலாள்.

உனக்கு இப்ப தெரியாது.இவனுக போக்கு பெரும்போக்கு கேட்டியா ...இடையனுவ கூடயாக்கும் ஸ்னேகிதம்.விளங்குமா ? நீ செல்லம் குடுத்து தட்டி கேளாம இருந்தா தறுதலையா போயிரும் பாத்துக்க

இருப்பே இல்ல இந்த பயக்களுக்கு எல்லா ஊருக்குள்ளயும் திரியானுவ ..எப்புடியும் இவனுவ போற போக்குக்கு அம்புட்டு சீரழிவானுவ பாத்துகையாம்..இப்ப நா சொல்லுகது உனக்கு பரிகாசமா இருக்கும்.புறவு நீ எங்கிட்ட வந்து என்ன செய்யிகதுனு அழப்புடாது.நேத்து முழுக்க இடைனுக்க சோறு தின்னுகிட்டு மருத்துவா மலையில திரிஞ்சிருகானுவ ...பிந்திதான் எனக்கு தெரியும் பாத்துக்க ,முந்தி தெரிஞ்சிருந்தா நேர்ல போய் தூக்கிற்று வந்துருப்பேன்.மாமனுக்கு ஊரேல்லாம் பழக்கம் தெரியாண்டாமா இந்த பயக்களுக்கு ? தல்லி வண்டி மாட்டுல ஏத்திக் கொண்டுவந்து போட்டா தாங் இனி இடைசோறு தின்னும் பழக்கம் நிக்கும்.அந்த சோறு ஆன மயக்கியிலும் மோசம்,பிராந்துண்டாகும்

உள்ளே குறுவாசல் கடந்து உள்ளே வந்த பொன்னு மாடன்,இவன் ஏங் வெள்ளனே கிடந்து சலம்புதாங்..புள்ளைய நல்லாத்தாங் இருக்கு.. நம்மள விட ஒருபடி மேல ..அதான் பிடி கிட்டுதுல்ல.பிடி கிட்டாதுதுல அப்படியோ இப்படியோனு நாலும் தோணும்.எனக்கும் தோணுச்சு,பண்டிதர்கிட்ட நா போனதே தப்பு...பிள்ளையின் நாட்டம் நம்ம நாட்டமில்ல.அவ்ளோதான் சங்கதி.அவன கொற சொல்ல ஆரும் இந்த படி கேறண்டாம் என்றே அதிரும் குரலில் சொல்லி முடித்தார்

லே ..தம்மி புட்டு தின்னுட்டு போல ..அவிய அப்படி சொல்லுவாவ..கோவமெல்லாம் கிடையாது.நீ கொறைய தப்பு பாத்தியா ...உனக்கு எல்லாம் தப்பாத்தாங் தெரியும்.புள்ளய காணவுடாம நிக்கபடாது கேட்டியா?

புட்டும் பழமும் தின்று வெளியேறுகையில் முத்து எழும்பி நின்று கொண்டிருந்தான்.

அப்பனும் அம்மையுந் சேந்து குரங்காக்கிருவாவப்போ உன்னைய ...சொல்லதாங் முடியும் வேறென்ன செய்ய ...என்றவாறு வெளியேறினார் கோழி

முத்து அவருக்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை

நாச்சியார் பேருண்டாக்கின பிள்ளைக்கு தம்மி லே..நீ பட்டம் சூட்டண்டாம் போ என்றாள் உள்ளே இருந்தவாறே வெயிலாள்.

கோழிகோட்டு மாடன் ஊரில் நல்லவர்.ஊர் மதிப்பு குறையாதவர்.உழைப்பாளி.உழும் கலப்பைகளை உண்டாக்குவதில் சிரஞ்சீவி.அவர் மரம் காண்பதே மரம் கண்ட பேறு என்பார்கள்.மூட்டு மரங்களே கலப்பைக்கு உகந்தவை.ஆனால் மூட்டு மரத்திற்குள் கலப்பை இருக்கிறதா ? என்பதைக் காணத் தெரிந்திருக்க வேண்டும்.அல்லாவிட்டால் மூடு ஏமாற்றிவிடும்.நாளில் ஐந்து கலப்பைகள் வரையில் அவர் உண்டாக்கி விடுவார்.

அவருடைய பட்டறை கிணற்றங்கரையில் காவோலைக் கூரையிட்டு பக்கவெளி திறந்திருக்கும்.மரவாசனை மிகுந்த வெளியது.அதிலும் மூட்டு மரங்களின் வாசனை நாள் முழுதும் நிலத்தில் நின்று காணும்.காலையில் கஞ்சி குடிப்பதற்கு முன்பாகவே அவர் ஐந்தாறு கலப்பைகளுக்கு உண்டான மூடுகளை கோடாரி இட்டு பதமாக்கி வைப்பார்.கருக்கலில் அவை கலப்பைகளாகி விடும்.

கிணற்றங்கரை குடிசைகள் வெயிலாள் அம்மையின் சகோதரர்களுடையவை.அவை வடக்கு பார்க்க ஒரே நீளமாக அமைந்திருந்தன.முற்றத்தில் ஒரு சிறிய ஒல்லிக் கிணறு .பத்தடி ஆழத்தில் சுவை நீர்.ஐந்தடிக்குக் கீழாக சீவக்கல் பாரால் ஆன சுற்று வட்டம்.கிணற்றுக்கும் எதிர்விளையில் கோழியின் பட்டறை இருந்தது.கோழியின் பட்டறைக்கு எதிராகவே பின் நாளில் தெற்கு நோக்கி அய்யா வைகுண்டர் உருவாக்கிய முத்திரி கிணறு அமைந்தது.

வெள்ளாங்குடியிலிருந்தும் கலப்பைக்கு சொல்லிச் செல்வார்கள்.வடக்குத் தாமரைக் குளம் தொடங்கி,சுசீந்திரம் வரையில் மவுசு கொண்டவை கோழிக் கோட்டு மாடனின் கலப்பைகள்.

[தொடரும்..]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"