அய்யா வைகுண்டர் இதிகாசம்-49 வெயிலாள் குடும்பம்-3

 அய்யா வைகுண்டர் இதிகாசம்-49

வெயிலாள் குடும்பம்-3-கோழிக்கோட்டு மாடன்


நீங்கள் உயருவதை எப்படி கண்டறிவீர்கள் எனில் ,நீங்கள் நிலை உயருந்தோறும் தாழ்வில் இருப்பவர்களின் குணாதிசயங்களை அப்பட்டமாகப் பார்ப்பீர்கள்.ஏனெனில் அவர்கள் இப்போது, நீங்கள் கடந்து வந்த இடத்தில் இருக்கிறார்கள்.உயர்ந்த குலத்தில் பிறந்து தாழ்ந்த குணத்தில் ஒருவர் இருக்கலாம்.தன் சொந்த குலப்புத்தியை தாழ்வில் இருந்து எடுக்கத் தெரியாமல் ஒருவர் விழிபிதுங்கிக் கொண்டிருக்கலாம்.தாழ்வு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

தன் நிலையின் தாழ்வை ஒருவர் கண்டடைதலுக்குப் பெயரே விடுதலை.அதனை எப்படி கண்டறிவது எனில் வாழ்வதன் பொருட்டு,முன்னோக்கி வாழ்வதன் பொருட்டு மட்டுமே கண்டறிய முடியும்.எதைக் கைவிடும் போது எது வந்து தோன்றுகிறது என்பதை வாழ்பவன் அறிவான்.தெய்வம் விரும்பும் பண்புகளை அடைதலுக்குப் பெயரே அது,விடுதலை.வெள்ளந்தியாக இருப்பதும் மக்காக இருப்பதும் வேறு வேறு.வெள்ளந்தியாக இருப்பதில் ஒரு விழிப்பு நிலை அருகிலேயே அமர்ந்திருகிறது.மக்காக இருப்பவனிடம் அது கூட்டு வைப்பதில்லை.

ஒரு விடுதலையை கண்டடைந்த உடன்தானே பிழைகள் செய்கிறவர்கள் உண்டு. அனேகம் பேர் அப்படியானவர்கள்.அவர்கள் பெற்ற விடுதலையால் உயர்வு பெற முடியாமல் ஆகிறார்கள்.தன் தாழ்ச்சியை அறிந்து கண்டடைந்தவுடன் ,அந்த தாழ்ச்சியில் வெறுப்படைகிறவர்கள் அவர்கள்.ஒருவிதத்தில் தன் தாழ்ச்சியே அது.அந்த விடுதலைக்கு அது காரணியாகவும் இருந்திருக்கிறது இல்லையா?மேலாதிக்கத்தின் மூல வேர் இந்த தன் தாழ்ச்சியை வெறுக்கும் நலிந்த பண்பில் அடங்கியிருக்கிறது.தன் தாழ்ச்சியில் உயர்வடைந்த பின்பு தன் தாழ்ச்சியில் மேலெழும்புவதற்கு எவருக்கேனும் உதவி புரிந்தால் அதுவே குரு காணிக்கையாகிறது.குருவுக்கு பணிவிடைகள் செய்யாத விடுதலை குரூரமானது,செத்த பறவையை வானில் மிதக்க விடும் முயற்சி அது.

தன் தாழ்ச்சியின் அடுத்த படிக்கட்டில்தான் விடுதலை அமர்ந்திருக்கிறது.அதனை அடைபவன் தன் தாழ்ச்சியை பிறரிடம் வெறுப்பவனானால்,அவன் தன் உயர்விலிருந்து கீழே இறங்கி விடுகிறான்.தன் தாழ்ச்சிக்கே திரும்பவும் நுழைகிறான்.இயற்கையாக ,இயல்பில் தன் தாழ்ச்சியில் இருப்பவனை விடவும் ,விடுதலை அடைந்த பிறகு தன் தாழ்ச்சியை பிறரிடம் வெறுப்பவன் இரண்டாமிடத்துக்கு வந்து சேருகிறான்.அதனால் ஒரு பலன் இல்லை,கெடுபலன்கள் தவிர,ஒரு புண்ணியமும் இல்லை.தன் தாழ்ச்சி என்பது தெளிவிற்கு முந்தைய நிலை.அதனாலேயே அது இயல்பானது,இயற்கையானது,அதற்கு பேரழகு உண்டு.ஆனால் அடைந்த விடுதலையில் பிந்தங்குபவனை அற்பத்தனம் சூழ்ந்து கொள்கிறது.விட முடியாத அற்பத்தனமாகவும் அது ஆகிறது.தன் தாழ்ச்சி ஒரு நிலை.அதுவாக நம் முன்பு வந்து நிற்கும் ஒரு நிலை.அது யாருடையதும் அல்ல.அது கர்த்தாவுடையது,குருவுடையது,அதனாலேயே அது அழகும் பெறுகிறது.குருவின் ஒரு அங்கமே தன் தாழ்ச்சி,மற்றொரு அங்கம் அதிலிருந்து பெற்ற தெளிவு ,பேறு.இரண்டும் ஒன்றுடையதே

கோழிக்கோட்டு மாடனுடைய சிக்கல் இதுவே.அவர் வழி வந்த பாதைகள் அனைத்துமே முக்கியமானவை.கறடும் முறடும் ஏறி இறங்கி கற்று,அனுபவத்தால் உண்டாக்கிக் கொண்ட பாதை அது.அவர் சொல்வதன் வழியே ஒருவன் சென்றால் சிறப்பாவான் சந்தேகமில்லை.அது கோழிக்கோட்டு மாடன் அளவிற்கு உயர்ந்த பாதை அவ்வளவே.அதற்கும் மேலே ஏராளம் தொலைவு இருக்கிறது.கோழிக்கோட்டு மாடன் தன் உயரத்திற்குக் கீழே இருப்பவர்களை வெறுப்பவராகவும்,தன் உயரத்திற்கு மேலே உயரமுண்டு என்பதை அறியாதவராகவும் இருக்கிறார்.அதுவே அவருடைய பிரச்சனை.அப்படியிருப்பவர்கள் அப்படியிருப்பவற்றை நொறுக்கத் துணிகிறார்கள்.தாழ்விலும் உயர்விலும் வெறுப்பு மகா தீமை.பொன்னு நாடாரும் ,கோழிகோட்டு மாடனும் அடிப்படையில் ஒருவரே.ஆனால் இன்னுமின்னும் மேலிருப்பவற்றை பொன்னு காண்கிறார்.குரு பணிவிடை அவர் பண்பு.கோழியிடம் சூழ்ந்து நிற்பதெல்லாம் மகா அகங்காரம்,மகா வெறுப்பு

இந்த மகா வெறுப்பிலிருந்து வருகிற கலப்பைகள் மட்டும் எப்படியோ அழகாக இருக்கின்றன.ஏனெனில் அது சுடுகிற உழைப்பிலிருந்து உருவாகிறவை.சுடும் உழைப்பிலும் அரிது ஒன்றில்லை.மகா தீமைகளிலிருந்து இப்படியான அழகான பொருட்கள் ,நன்மை உண்டாக்கும் கனிகள் வருவதுண்டா ? வருகிறது என்பதே உண்மை.ஆனால் அந்த அழகுகளும் ,கனிகளும் தீமைக்கு சொந்தக்காரனிடம் அழிந்து விடுகின்றன.உடனுக்குடன் அழிகின்றன.அந்த அழகுகள் தரும் கனிகளை தீமை முன்வந்து உடனுக்குடன் அழிக்கிறது.மேம்பட விடுவதே இல்லை.விடுதலையே மகா பாவங்களை வெல்லும் வழியாகவும்,அதனுள் செல்லும் வழியாகவும் இருக்கிறது.அதே சமயம் ஒவ்வொரு வம்சத்திலும் ஒரு கோழிக் கோட்டு மாடன் உருவாகவும் செய்கிறான்.தன் தியாகத்தால் சிலவழி தூரம் உயர்த்தவும் செய்கிறான்.எனவே அதன் தியாகத்தை விலக்குதலும் நன்றன்று.

கோழிக் கோட்டு மாடனின் பெயரில் ஒரு கதை இருக்கிறது.அது அவர் கோழிக் கோட்டுக்கு செல்ல நேர்ந்த கதை.அவர் பெயரிலேயே தொக்கி நிற்பது போல .

[ தொடரும் ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"