அய்யா வைகுண்டர் இதிகாசம்-48 வெயிலாள் குடும்பம்

 அய்யா வைகுண்டர் இதிகாசம்-48

வெயிலாள் குடும்பம்


செம்பனின் மக்கள் நால்வர்.மாயன் மூத்தவர்.திருவனந்த பெருமாள்,கோழிகோட்டு மாடன் இருவரும் இளையவர்கள்.வெயிலாள் மகள்.இளையவள்.இவர்களில் மாயனுக்கு வாரிசுகள் இல்லை.திருவனந்த பெருமாளின் மக்கள் சாமி நாதன்,பரமார்த்த லிங்கம்,நாராயண வடிவு ஆகியோர்.இவர்களில் பரமார்த்த லிங்கத்திற்கு ஆறு பிள்ளைகள்.பொன்னையா,அரிகிருஷ்ணன்,முத்தைய்யா,சீதா லட்சுமி,லட்சுமணப் பெருமாள்,பாலைய்யா.சீதா லட்சுமி எனக்கு அப்பம்மை ஆவார்.அப்பம்மை என்றால் அப்பாவின் தாயார் .

கோழிக்கோட்டு மாடனுக்கு ராமசாமி,ஸ்ரீ கிருஷ்ணன் என்று இரண்டு வாரிசுகள் உண்டு.

இந்த குடும்பம் முழுவதுமே கிணற்றங்கரையிலேயே வசித்தார்கள்.செம்பன் காலத்தில் உழைத்து தலையெடுத்து பிள்ளைகளின் காலத்தில் செல்வந்தர்கள் ஆகியிருந்தார்கள்.செல்வந்தன் என்று சொல்லும்போது காடு திருத்திக் களனி உண்டாக்கி முதல் தலைமுறையாக திண்ணை கொண்ட நாலுகட்டு வீடுகள் பணி செய்யும் நிலைக்கு உயர்ந்திருந்தார்கள்

கோழிக்கோட்டு மாடன் முதலில் ஓலைக் குடில்களை அகற்றி நாலு கட்டு வீட்டுப் பணி தொடங்கியிருந்தார்.அதனை ஒட்டி மாயனும் ,திருவனந்த பெருமாளும் வீட்டுப் பணி தொடங்கினார்கள்.ஒரே சீராக நீளமாக அவர்கள் அமைத்திருந்த ஓலைக் குடில்களைப் போலவே ஓட்டு வீடுகளும் நீளமாக அமைந்தன.ஒவ்வொருவர் வீட்டிற்கும் தனி தனித் திண்ணைகள்.மேலே பலகை மறித்து சுண்ணாம்பிட்டு பூசிய மச்சு.மேல் மாடி அறை கொண்ட மச்சு வீடுகள் தாழ்ந்த சாதியினரிடையே மிகவும் அரிது.சாஸ்தாங் கோயில் விளையில் எடுத்துக் கொண்டால் ஒன்றிரண்டு குடும்பங்களே இந்த நிலைக்கு வந்து சேர்ந்திருந்தார்கள்.பிற குடும்பங்கள் இதிலிருந்து வரிசையாக கீழே பின் தங்கியிருந்தார்கள்.அப்படி பின்தங்கியவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் மச்சு வீட்டுக்கனவு இருந்தது.அவர்கள் அனைவரின் உழைப்பும் அதனை நோக்கி நீண்டு தலைவைத்துப் படுத்திருந்தது.மூன்று தலைமுறை உழைப்பில் அவர்களின் கனவு பலிதம் ஆனது.வெயிலாள் தன்னுடைய பிள்ளைக்கு முடிசூடும் பெருமாள் என்று பெயரிடுவதற்கு முன்பே ,அவளுடைய குடும்பத்தில் திருவனந்த பெருமாளும் ,மாயனும் பெயர் சூட்டபட்டிருந்தார்கள்.

கோழிக் கோட்டு மாடன் தான் பின்பக்கமாக இருந்த செம்பனின் பூர்வீக வீட்டை மறைத்து வீட்டுப் பணி தொடங்கினார்.அது மிகவும் சிறியது.வெளி தரைத்தளம் உயராமல் அப்படியே உள்ளே நுழையும் சற்றே பெரிய குடில் அது.நெற்குதிரைகளை பாதுகாப்பதற்காகவே அறைகள் அமைக்கபட்டிருந்தன.மண் குளைத்து உருவான சுவர்கள். அவை சிறிது நாட்களிலேயே சற்றே சாயும்.செம்பனின் சுவர்கள் இப்படி சாய்ந்தவை.சாணி மெழுகி ஓலைக் குடில் போட்ட திண்டுகளில் பிள்ளைகள் ஆங்காங்கே தூங்குவார்கள்.

கோழிக் கோட்டு மாடன் வீட்டுப் பணி தொடங்கியதும்,கலப்பைல உண்டாகுனத ,கறண்டில விட்டுருவாங் போலிருக்கடே இவங்...என்று செம்பனுக்குக் குறை இருந்தது.அப்போ நீங்க சொல்லுகதப் பாத்தா ஆயுசு முழுக்க புழு போல தரையில ஊர்ந்திட்டே வரணும்கியளா அய்யா என்று செம்பனைக் கேட்டாள் வெயிலாள்.

வெறும் பவிசிக்குத்தானேமா அவங் செய்யுதாங்..வேற என்ன உண்டு,இதுக்கெல்லாம் அர்த்தம் ? உருப்படியா இருந்தா போதும்.உருப்படியா இருந்தாலே நிமிந்து நின்னது போலதாம்மா..அதுக்கு குஞ்சமெல்லாம் வைக்க வேண்டியதில்லை.

குஞ்சம் வச்சாதானே அய்யா குஞ்சம் வச்சாச்சுனு தெரியும் வைக்கட்டு வைக்கட்டு...குஞ்சம் வைக்கணும்.நீங்க சும்மா கிடங்க ..என்றாள் வெயிலாள்.

வைக்கட்டு வேணாங்க்கல வைக்கட்டு,வச்சு காணட்டு,யாரும் வேணாங்கல குட்டி.ஆனால் அவங் வைக்குற குஞ்சம் எனக்கு தல மறச்சு நிக்கலாமா ? எனக்கு அவங் என்ன மறைச்சு சுவரு கட்டுதாங்.. கட்டப் போய்
எனக்கு வெள்ளன இல்லாமலாச்சு,அந்தியும் கருகலுமா கிடக்கேன்.

இருகட்டு உங்களை மறைச்சு நாங்க..எங்கள மறச்சு இனி எங்க புள்ளைக ,அதுகள மறைக்கும் அவுக புள்ளைக..இது அந்தியும் கருக்கலும் இல்ல அய்யா ,வம்சம் விருட்சமாகும் போது நம் மேல விழும் நிழல் அய்யா..நிழல், இது வெயிலாள்.

கோழிகோட்டு மாடனுக்கு மட்டுமே அவர்கள் குடும்பத்தில் வெளித் தொடர்பு ஏற்பட்டிருந்தது.என்ன என்ன வெளி த் தொடர்புகள் அவருக்கு உண்டு என்பதெல்லாம் அத்தனை தெளிவாக இல்லாத சமாச்சாரங்கள்.கொழிக்கோட்டு மாடன் ராசாகிட்டயே பேசுவாராம்ப்ல என பேசிக் கொண்டார்கள்.அதுவே அவரை ப் பிறர் பயங்கொள்ள போதுமான காரணமாக இருந்தது.கொஞ்சம் தொடர்பு இருந்தது உண்மைதான் என்றாலும் அது பயங்கொள்ளும் அளவிற்கு வலிமையுடையது அல்ல.ஆனால் துரப்பாண்டி வரையில் இவர்கள் குடும்பத்தின் பேரில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும் பின்னணியில் இது ஒரு காரணமாக அமைந்திருந்தது.அந்த தொடர்புகள் என்ன என்பதை அறியும் பேச்சுகளில் கோழி திறமையாக ஒதுங்கிக் கொள்வார்.உண்டென்றும் சொல்வதில்லை,இல்லையென்றும் மறுப்பதில்லை.ஒன்றிரண்டு முறை ராசாவுக்கு படை திரட்டி அழைத்துச் சென்றிருக்கிறார்.அப்போது திரட்டி அழைத்துச் செல்லப்படும் படைகளில் நாடார்கள் முக்கிய அங்கமாக இருந்தார்கள்.படைகளில் இடம்பெறாமல் ஒதுங்கி நின்று எவனும் வெல்ல முடியாது,ராசாவை பகச்சி ஒண்ணும் ஆவப் போறதில்ல,ராச விசுவாசம் இருந்தாதா முன்னேற முடியும் என்பதெல்லாம் கோழிக்கோட்டு மாடனின் பேச்சுகளில் இருந்து வெளிப்படக் கூடிய விஷயங்கள்.எல்லாவற்றுக்கும் மேலாக அரச விரோதம் எதையும் ,அரசு சரியில்லை என்பது எதையும் கோழியிடம் யாரும் முணுமுணுப்பது கூட இல்லை.அவர் நீட்டி முழங்குவார் என்பது ஒரு காரணம் என்றால்,அரசின் காதுகளை எட்டிவிட்டால் என்ன செய்வது என்கிற அச்ச உணர்வும் இருந்தது.பெரும்பாலும் அவரிடம் பேசிய மக்கள் அரசைப் புகழ்ந்தார்கள்.குறையில்லை என நடித்தார்கள்.

[ தொடரும் ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"