சித்திரக்கூடம் [ கதை ]

சித்திரக்கூடம்






கட்டிடம் வெளித்தோற்றத்திற்கு நேராக அடுக்கடுக்காக அமைந்திருப்பது போல தோன்றியது.

ஆனால் எப்போதும் அது பாலித்தீன்பை போல வளைந்திருக்கிறது என்பதையே பார்த்தேன். அது உருவத்தை மாற்றியமைத்தபடியிருந்தது. ஒவ்வொருவருக்கும் அது ஒவ்வொரு விதமாக அமைந்திருந்தது என்றாலும் புலப்பட்ட தோற்றங்களை மட்டுமே ஒவ்வொருவரும் அதன் நிரந்தரத் தோற்றமாகக் கற்பனை செய்து கொண்டார்க்ள். கற்பனைக்கு மாறாக அவற்றின் தரைப்பகுதி சாய்வாக இருந்தது. சாய்வாக இருந்தது யாருக்கும் பொருட்டாகவும் இருக்கவில்லை. ஒரு வகையில் அது சாய்வாக இல்லாமல் சமதளத்தில் இருப்பதாகவே கற்பனை செய்து கொண்டார்கள்.

ஒவ்வொருவரும் உள் நுழைந்ததும் அது ஒவ்வொரு விதமாக வளைவதைப் பார்த்தேன். பெரிய எந்திர உருவங்களில் அசைந்து கொண்டிருந்தது எனக்கு பயத்தை ஏற்படுத்தியது. கட்டிடத்தின் அபாயத்தை யாரும் உணராமல் இருந்தது குறித்துக் கவலைப்பட்டேன். அறைகள் வளைவதை அவர்களிடம் தெரிவித்தால் எனக்கு மனநிலை சரி இல்லாமல் போய்விட்டதாக அவர்கள் கருதக்கூடும். ஏன்றாலும் அந்தக் கட்டிடம் வளைந்திருப்பதைத் தெளிவாகப் பார்த்தேன். இது சம்பந்தமாக புகாரை எழுப்ப வேண்டும் என்றும், அது எனது முக்கிய கடமைகளுள் ஒன்று என்பதையும் அறிந்தேன். அதன் மூலம் மட்டுமே நடக்க இருக்கும் அபாயத்திலிருந்து குறைந்தபட்ச நபர்களையேனும் பாதுகாக்க முடியும். ஆனால் புகாரை எழுப்புவதற்கான தடயங்கள் என்னிடம் என்ன இருக்கின்றன ?

புகாரை எனக்குள்ளாக தெளிவுபடுத்திக் கொள்ள முயற்சித்தபோது புகார் சம்பந்தப்பட்ட வாசகங்கள் மூளையின் திரையில் குறைந்த வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தன. ஒரு வாசகம் கூடி மறைவதற்கும் ,உருவாகும் மறுவாசகத்துக்கும் இடையிலான வெளி அதிகமாகவும் மௌனமாகவும் வெளிறிய சாம்பல் நிறம் கொண்டதாகவும் இருந்தது. அந்த வெளியைக் கடக்க மிகுந்த சிரமத்தை முயற்சிக்க வேண்டியிருந்தது. மடுவிலிருந்து ரத்தம் கறப்பது போல. எப்படியிருந்தாலும் திடமாகவும் சமநிலையோடும் மனநிலையை வைத்துக்கொள்ள வேண்டும். அபாயத்திலிருந்து வெளியே வேறு பாதைகளோ முறைகளோ இல்லை. கட்டிடத்தின் பல பகுதிகளிலும் அலைந்து திரிந்து ரகசியமாக உளவு மேற்கொள்ள வேண்டும். அறைகள் உருமாறுவதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அவை உருமாறுவதைக் காணும் கண்கள் ஏதேனும் அந்தக் கட்டிடத்திற்குள் இருக்கிறதா? என்பதைக் கண்டடைய வேண்டும். அதுவே முதற்கட்டப் பணி. தடயங்களைக் கண்டடைவது வரையில் எனது புகாருக்கு வேறு முகங்கள் இல்லை. அபாயத்தைத் தடுக்கவும் வழிகள் இல்லை.

கட்டிடத்தின் சகல பகுதிகளுக்கும் ரகசியமாக அலைந்து திரிந்தேன். அறைகளின் சுவர்கள் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தன என்பது எனக்குத் தெரிந்தது. அங்கே நடமாடுபவர்களின் சப்தங்களையும் ரகசியங்களையும் சுவர்கள் உறிஞ்சியிழுந்தன. தனது உருமாற்றத்தை யாரும் கண்டுகொள்ளக் கூடாது என்கிற தீர்மானத்திலும் நுட்பத்திலும் அவை செயல்பட்டன. எனது கண்கள் அவற்றை அறிந்து கொண்டன என்பதை சுவர்கள் அறிந்து கொள்ளும் பட்சத்தில் அபாயத்தின் கொடுக்குகள் என்மீது பாய்ந்து விடும் என்பது தெளிவாகத் தெரிந்தது.

நடமாடுபவர்களிடம் பேசுவதற்கு பயமாக இருந்தது. உடல் நடுங்குவதை உணர்ந்தேன். உரையாடலைத் தொடங்கி முதலில் எனது புகார்களுக்கு நம்பகத்தன்மையை உருவாக்க வேண்டும். அது சாதாரண காரியமாகப் படவில்லை. தனிமை மிகத் தீவிரமாக எனக்குக்குள் இயங்கிக் கொண்டிருந்தது. சுவர்களின் மீது விரிக்கப்பட்டிருந்த வலைகளையும், அதில் இறந்த நிலையில் அழுகாமல் தொங்கிக் கொண்டிருந்த உடல்களையும் கவனித்தேன். அதனை எவ்வாறு விவரிப்பது? கட்டிடம் முழுதும் இவ்வாறு இறந்த நிலையில் தொங்கும் அழுகாத உடல்கள் மொத்தத்தில் எவ்வளவு இருக்கும்? இவற்றுக்கு நேர்ந்த கதி என்ன? குழப்பமும்; கடமை உணர்ச்சியும் என்னை வதைத்தன. உடல் மிகவும் சோர்ந்திருந்தது. வியர்வை சுரப்பிகள் குண்டூசிகளைப் போல வியர்வையை வெளியேற்றத் துடித்தன. எனது அவஸ்தைகளைப் போன்ற அவஸ்தைகளோடு ஏதேனும் அறையில் யாரேனும் இருக்க வேண்டும். அவர்களின் உதவியை நாட வேண்டும் என்கிற நம்பிக்கை மட்டும் சிறு பொறிபோல நெஞ்சில் துலங்கிக் கொண்டிருந்தது.

இறந்த நிலையில் தொங்கிய இரண்டு மூன்று உடல்களின் ஞாபகங்கள் எனக்கு வந்தன. கனவு மூண்ட எவ்வளவு வசீகரமான உடல்களாக அவை இருந்தன? அவற்றின் திரட்சியையும், கவர்ச்சியையும் சொல்லி மாளாது. அந்தக் கட்டிடத்திற்குள் நுழையும் தருவாயில் மிகவும் சாதாரண உடல்களாகவே அவை இருந்தன. உள்ளே நுழைந்ததும் அவற்றின் உடலில் கனவொன்று நுழைந்து கொண்டது. தெளிவாக இன்னதென்று அறிய இயலாத கனவு அது. என்றாலும் கனவு, நுழைந்ததும் உற்சாகம் பெருக்கெடுக்கத்; துவங்கியது. அதன் பிறகு நடைபெற்றவை எல்லாம் மயக்கங்கள். தனக்கு நடப்பது இன்னதென்று அறிய இயலாத மயக்கங்கள்.
அவற்றில் ஒரு உடலைக் கொண்டிருந்தவரை பல வருடங்களாக நான் அறிவேன். கணினி நிறுவனம் ஒன்றில் மேலாளராக இருந்து வந்தார். ஒருமுறை தற்கொலைக்கு முயற்சித்து மீண்ட பிறகு இந்தக் கட்டடத்தின் எழில் குறித்தும் ரகசியங்கள் குறித்தும் வசீகரம் கொண்டவரானார். இந்தக் கட்டிடத்தினுள் நுழைவதற்கான பாதைகள் குறித்துப் பலரிடமிருந்தும் சூட்சுமமாக அறிந்து கொண்டார். பத்து வருடங்களுக்கு முன்பு இந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்தார். அன்று அவருக்கு கட்டிடத்திற்குள் நுழையும் போது தயக்கம் இருந்ததைப் பார்த்தேன். அது நான் இந்தக் கட்டிடத்தினுள் நுழைந்த போது இருந்த தயக்கத்தை நினைவுபடுத்தியது.

அவர் முகத்தைப் பார்த்தபோது எனக்குப் பயமாக இருந்தது. எவர் மீதும் அன்பற்ற முகமாய் அவரது முகம் அமைந்திருந்தது. கருணையற்ற கண்களுடன் அவர் என்னைப் பார்த்தபோது எனது உடல் எரிவது போல் இருந்தது. பின்பு மெதுவாக நகர்ந்து வரவேற்பதை நோக்கிச் சென்றார். வரவேற்பறையில் அவரை வரவேற்க இரண்டு பெண் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தங்கள் பிறப்புறுப்பையும் மார்பகங்களையும் அழகிய ரோஜா மலர்களால் அலங்கரித்திருந்தனர்.

வரவேற்பு என்கிற வைபவம் மிகத் திறமையாக நடந்தது. அலங்கரிக்கப்பட்ட மார்பகங்கள், பிறப்புறுப்புகளுடன் அவர்கள் அவரைச் சுற்றி நடனமாடினார்கள். அந்த சமயத்தில் அவரது ஆண்குறி ஆடைகளுக்கு வெளியே நீண்டு வந்தது. தான் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தது பற்றி அவருக்கு அப்போது ஞாபகம் வந்தது. அந்த சமயத்தில் அது நினைவுக்கு வந்திருக்க வேண்டிய விஷயம் இல்லைதான். மலர் அலங்காரங்களுடன் பெண்கள் தன்னைச் சுற்றி நடனமாடும்போது அந்தக் கசப்பான அனுபவம் நினைவுக்கு வந்தது வருத்தமாக இருந்தது. மிகவும் இளகிய மனதுடன் அவர் அந்தக் கசப்பான அனுபவம் பற்றி அவர்களிடம் சொல்லத் தொடங்கினார். பின்பு அவர்களைக் கட்டித் தழுவி அழுதார். அவர்களின் மார்பகங்கள் அவர் உடலில் பரவ, ஆண்குறியைக் கைகளில் பிடித்தபடி அவர்கள் ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றhர்கள்.
நான் பின்தொடர்ந்தேன். அங்கு வரும் ஒவ்வொருவருக்கும் வரவேற்பு மிகத் துல்லியமான திறமையோடு நடந்து வந்தது என்பதை அறிவேன். என்றhலும் அவருக்கு நடந்த வரவேற்பு சில விசேஷ அம்சங்களைக் கொண்டிருந்தது. அதன் காரணமாகவே எனக்கு அவர்களைப் பின்தொடர்ந்து செல்வதில் ஈர்ப்பு இருந்தது. எனக்கு அந்தக் கட்டிடத்தில் மனக்குழப்பங்களை ஏற்படுத்தக்கூடிய வேலை கொடுக்கப்பட்டிருந்தது. என்னால்; அது என்ன வேலை என்பதை அறிந்து கொள்ள இயலவில்லை.
அந்தப் பெண்கள் அழைத்துச் சென்று அவளுடைய கருணையற்ற கண்களில் முத்தமிட்டார்கள். அவரை அவர்களுக்கு ஏற்கனவே தொpயும் என்றும் காலத்தில் பல யுகங்களாகக் கடந்து வந்து கொண்டிருப்பவர் தான் அவர் என்றும் அவருக்கு அவரைத் தெளிய வைத்தார்கள். அவர் மிகவும் அப்பாவியானவர், அன்புமயமானவர் என்றும் விசுவாசத்தில் அவர் எந்தளவுக்கும் குறைந்தவில்லை என்றும் புதிய வரலாற்றைக் கற்பித்தார்கள்.

பின்பு அவர் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடைந்து வருவதைக் கண்டேன். கருணையற்ற அவர் கண்களிலிருந்து அன்பு ஒளி பரவியது. அவர் குரல் சாந்தமடைந்தது. கசப்பும் கவலையும் அவர் ஞாபகங்களிலிருந்து வெளியே பறந்து சென்றன. ஒரு கிறிஸ்தவப் பாதிரியைப் போல் நடந்து கொண்டார். வருடங்கள் பல கடந்து சென்றன. கற்பிக்கப்பட்ட புதிய வரலாறு அவருள் செயல்பட மறுக்கும்தோறும் அவர்களிடமிருந்து கண்காணிப்புகள் பரவி தன்னை நெருக்குவதை உணர்ந்தார். ஆனால் அதற்கு என்ன பரிகாரம் தேடுவது? புதிய வரலாறு உடம்பிலிருந்து தோல் உரிவதைப் போல் உரிந்து கொண்டிருந்தது. வரவர அது வேகமாக உரிந்தது. அவரை ஆரம்பத்தில் அழைத்துச் சென்ற பெண்கள் மீண்டும் வரவேயில்லை. அவருக்குப் புரிந்துகொள்ள முடியாத, சுவர்களில் விரிக்கப்பட்டிருந்த வலைகளில் சிக்குண்டு இறந்த உடலானார். மீண்டும் அந்தப் பெண்கள் வரும் வரையில் அவர் இவ்வாறு காத்திருக்க வேண்டும் போலும். மலரினால் அலங்கரிக்கப்பட்ட பெண்கள் ஆரம்பத்தில் அவர் உடலைச் சுற்றி நடனமாடும்போது அவர் உடல் கொண்டிருந்த கவர்ச்சியும், மதமதப்பும் இப்போது எங்கே போயிற்று ?

ரகசியக் கதவுகள் எல்லாவற்றையும் திறந்து பார்த்துக்கொண்ட இருந்தேன். சில வருடங்களில் என்னைப் போலவே அவஸ்தைகளோடு இருந்த கண்களை அவ்வப்போது கண்டேன். ஆனால் அவை விரைவாக என்னைக் கடந்து சென்று விட்டன. இப்போது அந்தக் கண்களில் ரேகைகள் துல்லியமாக எனக்குத் தெரியும். அவை ஏதேனும் அறைகளில் பதுங்கி இருக்க வேண்டும். அவற்றைக் கண்டறிய வேண்டும். இப்போதும் அதிகார பூர்வமான எனது வேலை என்னவென்று அறிய இயலாத வேலைதான். ரகசிய வேலையாக மேற்கொண்டிருந்த வேவையே கூட எனது அதிகாரபூர்வமான வேலையாக இருக்கலாம்.

மனதை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எனது உடல் முழுதும் நுட்பமாக நடுங்கியது. இந்தக் கட்டிடத்தின் சாpயான பாதைகளையும், குறுக்குப்பாதைகளையும் எத்தனை மாடிகள் இந்தக் கட்டிடத்தில் இருக்கின்றன என்பதையும் என்னால் விளங்கிக் கொள்ள இயலவில்லை பெரிய நகரத்தின் பாதைகளைப் போல இவை நுட்பமான வலைகளால் பின்னப்பட்டிருக்கின்றன. இந்தப் பின்னல்களைத் தௌpவாக ஊன்றிக் கவனிக்க அமைதி எனது உடல் முழுதும் பரவவேண்டும். உடலை ஸ்திரப்படுத்தி காட்சிகளை ஒழுங்குபடுத்தாமல் அபாயத்திலிருந்து விடுதலை தேடும் எனது முயற்சிகள் எதுவும் வெற்றியடையப் போவதில்லை.

இந்தக் கட்டிடத்தின் பொதுவான தோற்றம் முதல் மாடி இரண்டாவது மாடி என்கிற வரிசையில் அடுக்கப்பட்டிருந்தது. அறைகளுக்கு நடுவில் விரிந்த நீளமான பாதைகள் இருந்தன. புதிதாக நுழைபவர்கள் புதிய வரலாற்றை எடுத்துக் கொண்டு இந்தப் பாதைகளில் கை வீசிய படி நடந்து திரிவதைப் பார்த்தேன். அவர்கள் எத்தகைய சிரமமும் இல்லாமல் சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் கட்டிடத்தின் மொத்த அமைப்பும் குலைந்து கிடப்பதில் கவனமில்லை. அவற்றின் சிறிய வளைவுகளில் சில சமயம் பெரிய பாதைகள் உருவாகி உள் அமைப்பு ஒன்று உருவானது. அங்கே சித்ரவதைக் கூடங்கள் இருந்தன. கை கால் இழந்தவர்களும், தலை அறுக்கப்பட்டவர்களும் குறிகள் கத்திரிக்கப்பட்டவர்களும், முலைகள் கிழிந்தவர்களும் காட்சிப் பொருளாக அங்கே பாதுகாக்கப்பட்டார்கள். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெண்களால் ஊற்றி நிரப்பிய புதிய வரலாறு வெளிறி தோலுரிந்து வருபவர்களின் பார்வைக்காக இறந்த உடல்கள் பாதுகாக்கப்பட்டன.

இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு மழைக்காலம். பாதைகளின் சகல இடைவெளிகளில் உள்ளும் மழை நீண்டு படுத்திருந்தது. எங்கே ஒதுங்குவது என்று தெரியவில்லை. மழையின் கசப்பும் குழப்பமும் எனது உடல் முழுதும் பரவியிருந்தன. மழை நிரப்பிய பாதைகளில் நடுங்கும் உடலோடு நடந்து திரிந்தபோது அந்தக் கட்டிடத்தைப் பார்த்தேன். அது கண்ணாடியிலான சிறைக்கூடம் போல அப்போது தோன்றியது. அதில் நடமாடியவர்களும் படுத்திருந்தவர்களும் தண்டனை வழங்கப்பட்டிருப்பவர்களும் எல்லோரையும் ஒளியில் மிகத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. ஒளி மஞ்சள் கலந்த சவத் தன்மை. நான் பயத்தோடும் தயக்கத்தோடும் அந்தக் கண்ணாடியிலான கட்டிடத்தை நெருங்கினேன். மெதுவாகத் தொட்டேன். கண்ணாடிச் சுவர்கள் குளிர்ச்சி நிரம்பியிருந்தன. மழையில் நடந்து வ6ந்ததால் கால்களில் சாக்கடை ஏறி ஊரலெடுத்தது. ஆடைகள் தொப்பலாக நனைந்து உடலோடு ஒட்டியிருந்தன. கட்டிடத்தினுள் நுழைவதற்கான பாதைகளைத் தேடினேன். பாதைகள் எதுவும் தென்படவில்லை. அதனுள் நுழைவதற்கான வழி அறிய இயலாதபடி அந்தக் கண்ணாடியிலான கட்டிடம் அமைந்திருந்தது. அப்போது பெண் உடலுடன் கூடிய ஆண் என்னைக் கடந்து கட்டிடத்தின் கதவுகளைத் திறந்து உள்நுழைந்தாள். அவளைப் பின்தொடர்ந்து நுழைந்தேன். நான் செயல்பட்டதை யாரேனும் அப்போது கவனித்திருந்தால் குழந்தையின் நடவடிக்கையாக அதனை எடுத்துக் கொண்டிருக்கக்கூடும். வரவேற்பறையில் நனைந்த ஆடைகள் களையப்பட்டு, புத்துணர்ச்சி கொண்ட ஆடைகள் எனக்குத் தரப்பட்டன. மிருதுவாக என்னைக் கையாண்டார்கள்.
30 வயதுக்குள் உள்ள இரண்டு ஆண்களே என்னைக் கவனித்தார்கள். என்றாலும் அத்தகைய தொடுதல்களை அம்மா இறந்தபிறகு நான் ஸ்பரிசித்ததே இல்லை. அப்பா மிகவும் கடுகடுப்பானவர். அதே சமயத்தில் இரக்க சுபாவமுள்ளவர். அவரது கடுகடுப்பே எனது மேல்தோலாக மாறியிருந்தது. அதற்காக ஆறுதல் கூறினார்கள். அப்படி ஆறுதல் கூறுவது அவர்களது வேலை இல்லை என்றாலும் ஏதோவொரு மன நெகிழ்ச்சியில் அவ்வாறு நடந்து கொண்டார்கள். அவர்களும் இந்தக் கட்டிடத்திற்குள் ஏதோவொரு தூண்டுதலில் உள்ளே நுழைந்தவர்கள்தான். இப்போது இந்தப் பணியினை மேற்கொண்டிருந்தார்கள். மேற்கொண்டிருந்த பணியில் அவர்களது கடமையுணர்ச்சி தீராத காதலுணர்வைத் தூண்டுவதாக இருந்தது.

புதிய ஆடைகளோடு ஆறுதல் சொல்லி அவனை வேறொரு அறைக்கு அனுப்பி வைத்ததோடு அவர்களது பணி நிறைவு பெற்றது. அடுத்த கட்டமாக அந்த அறையில் எனக்காக ஆண் உடலுடன் கூடிய பெண் காத்திருப்பதைப் பார்த்தேன். அவள் வணக்கம் கூறி என்னை வரவேற்றாள். அவளை எங்கோ ஏற்கனவே சந்தித்திருப்பது போல் தோன்றியது. அவள் எனக்கு சில சித்திரங்களைத் தேர்ந்தெடுத்துத் தந்ததோடு அவற்றில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு கூறினாள். அவளிடம் எனக்குப் புரிபடாத அளவில் நிறைய சித்திரங்கள் இருந்தன.

பொதுவாகவே அவள் ஒருவருக்கு ஒரு சித்திரத்தை வழங்குவதுததான் முறை. ஆனால் எனக்காக அவள் நான்கு சித்திரங்களைகத் தேர்ந்தெடுத்து அதில் ஒன்றை அணிந்து கொள்ளுமாறு கூறியதை சலுகை தருவதாகவே கருதினாள். முதல் சித்திரத்தைப் பார்த்தேன். அது எனக்குத் தெரிந்த ஒரு அப்பாவியினுடைய சித்திரமாக இருந்தது. அவன் பல இடங்களிலும் இருந்தான் என்றாலும் குறிப்பிட்ட ஒரு குழுவில் இருக்கும்போது எல்லோரும் கேலி செய்யும் பொருளாக இருப்பான். அதிகாரத்தைப் பெருக்கிக் கொள்ள ஏதுவாக, குழு உரையாடலைத் துவக்குவதற்கான பாத்திரமாக அவனிருப்பான். அவனை எல்லோரும் விரும்புவது போல பாவனை செய்வார்கள். அவனைக் கேலி செய்தபடியே குழுவின் பேச்சை வளர்ப்பார்கள். பேச்சு எந்திரத்தைப் போல தன்னிச்சையாக வளரத் துவங்கியதும் அவன் முக்கியத்துவமற்றவனாக மாறியிருப்பான். அதன் பிறகும் அவன் இருப்பான் என்றாலும் அவனது தேவை முடிந்துவிட்டது போல தோன்றும்.

அவனை எனது குடும்பத்திலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறேன். உரையாடல் வளர்ந்து ஓயும் தருவாயில் மீண்டும் அவன் பேரில் குழுவின் கவனம் திரும்பும். அவன் உரையாடவைப் பற்றியோ அவற்றின் சூட்சுமங்கள் பற்றியோ எவ்வித கவனமும் அற்றவனாய், அதே சமயத்தில் தன்பேரில் அவர்கள் மேற்கொள்ளும் கேலி பேச்சுகளில் ஆர்வம் கொண்டவனாய் இருப்பான். ஊரையாடல் நிறைவு பெற்ற பிறகு, அவனைத் தவிர மற்றெல்லாருக்கும் குறிப்பிட்ட வாpசைக் கிரமத்தில் பதவிகள் உருவாகியிருக்கும் அப்பாவியினுடைய சித்திரத்தைக் கீழே விட்டெறிந்தேன். அதை அவன் இளக்காரமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

அடுத்ததாக நான் எடுத்த சித்திரம் தீவிரவாதியினுடையதாய் இருந்தது. சித்திரத்தைப் பார்த்த மாத்திரத்தில் பயம் கலந்து மரியாதை உருவானது. அவனையும் ஏற்கனவே அறிவேன். பெரும்பாலும் தீவிரமாகத் தன்னை வெளிப்படுத்தும் தருணங்களில் மட்டுமே அவனிருப்பான். அதுதான் அவனுக்குரிய விதி. அவனைப் பல் துலக்கும் போதோ மேலாடை இல்லாமல் இருக்கும் போதோ சிறுநீர் கழிக்கும் போதோ நம்மால் பார்க்க முடியாது. தீவிரமான அவனது தருணங்கள் தவிர மற்ற தருணங்கள் அவன் வாழ்விலிருந்து கத்தரிக்கப்பட்டிருந்தன. சிரிப்பதற்கு மிகவும் ஆலோசிப்பவனாக அவனிருந்தான். தர்க்கபூர்வமாகத் தவிர மற்றபடி தனது உடலிலிருந்து எந்த அசைவும் வெளிக்கிளம்பி விடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தான்.

அது பெரிய சிரமமாய் அவனுக்கிருந்தது. அவன் ஏதும் வெளியில் சொல்லத்தகாது. அவனது சிரமங்கள் பற்றி அவன் வெளியே சொல்லித் திரிவது என்பது அவமானகரமானது. அதை அவன் யோசித்துப் பார்ப்பது கூட அவமானம். ஒருவேளை தவறுதலாய் நாம் அவனைக் குளிக்கும்போதோ, சிறுநீர் கழிக்கும்போதோ பார்த்தாலும் அவன்தான் என்று நமக்குத் தோன்றhது. அப்படித் தோன்றவும் இயலாது. அதுதான் அவனது சிறப்புப் பாத்திரம். தீவிரமான கூட்டங்களில் அவன் மையமாய் இருப்பான். சுpறப்பு முடிவுகள், தீர்மானங்கள் தவிர வேறு எதிலும் அவனது கவன் விழாது. குறிப்பாக , குழுக்களிலுள்ள அப்பாவியிடமோ, அவனைப் பற்றிய கேலிப் பேச்சுகளிலோ அவன் ஆர்வம் ஏதும் காட்டுவதில்லை. அப்பாவியின் இருப்பு அனது பதவிக்கு ஒருபோதும் அவசியப்படாதது. பிறருக்குத்தான் அது அவசியமாக இருந்தது. அவனுடைய பதவி எப்போதும் உறுதியானதாகவே இருந்தது. அந்த சித்திரத்தையும் கீழே போட்டுவிட்டு அடுத்த சித்திரத்திற்குள் நுழைந்தேன்.

மூன்றாவது சித்திரம் விசுவாசியினுடையது. அவனைப் பாத்தமே புரிந்து கொண்டேன். அவன்தான் எனது மிக முக்கியமான எதிரி என்பதை அவன் தொடர்ந்து எனது சிறுவயது தொடங்கி இன்று வரையின் நான் புழங்கும் சூழல்கள் எல்லாவற்றிலும் இருந்து வருபவன். எனது இருப்பைத் தனது சாதுர்யத்தால் குலைப்பவன் இவன்தான். எனது இளவயதில் உடன்பிறந்த சகோதரனாக அவனிந்தான். சித்தி நுட்பமாக ஏற்படுத்தும் துன்பங்களை எல்லாம் சகித்துக் கொள்வான். ஒருபோதும் அதுபற்றிய பராதிகளை அவன் பரப்புவதில்லை. நானோ பராதிகளைப் பரப்புபவனாக இருந்தேன். எனது தகப்பனாரிடம் சென்று முறையிட்டேன். எனது தகப்பனார் சித்தியின் நியாயங்களின் பார்வைகளின் மூலமாகவே உலகைப் பார்க்கப் பழகியிருந்தார் என்பது எனக்குப் புரிபடவில்லை. புனிதமான நீதிபதியாக நான் அவரைக் கற்பனை செய்து கொண்டேன். எவ்வளவு பலவீனமான கற்பனை அது. ஆனால் எனது சகோரனோ தெளிவாகவும் ஸ்தூலமாகவும் விஷயங்களைப் புரிந்து வைத்திருந்தான். எப்படி தகப்பானாரை சகல அதிகாரமுள்ளவராக நான் கற்பனை செய்து வைத்திருந்தேனோ அதற்கு நேர் எதிர்நிலையாக சித்திதான் அதிகாரம் என்பதை கண்டு பிடித்திருந்தான். சித்தி எத்தகைய அநீதிகளில் ஈடுபட்டாலும் அதை அவன் கண்டுகொள்வதே இல்லை. எந்த அளவுக்கு அவள் அநீதிகளில் ஈடுபட்டாளோ அந்த அளவுக்கு அவன் அவளிடத்தில் அதிகப்படியான விசுவாசத்தில் இருப்பான். அவளிடத்தில் விசுவாசமாக இருக்கும் ஒரு சிறிய சந்தர்ப்பத்தைக் கூட அவன் பயன்படுத்தாமலிருப்பதில்லை. புதிதாக கிறிஸ்தவனாக மாறியவன் தீவிர ஊழியத்தில் ஈடுபடுவதைப் போல அவர்களுக்கான நியாயத்தின் தீவிர பிரச்சாரகனாயிருந்தான். அதன்மூலம் கிடைத்த வெகுமதிகள் மிகக் குறைவாகவே இருந்தன. ஏன்றாலும் அவனை மிகவும் கவனத்தில் எடுத்துக் கொண்டிருந்தாள் சித்தி. சூழலில் அவனுடைய கருத்து முக்கியமானது என்கிற தகவலை ரகசியமாகப் பரப்பினாள். அவனது குரலுக்கான சந்தர்ப்பங்களை அதிகப்படுத்தினாள். அவனுடைய குரல் பெருக்கெடுத்து ஓடத்துவங்கியது. அவனது ஊழியத்தில் உண்மைகளோ நியாயங்களோ இல்லை என்று சொல்லமாட்டேன். அதில் குறைந்தபட்ச நியாயங்களும் உண்மைகளும் அடிப்படையாக இருந்தன. ஆனால் அவற்றை அவன் ஊதிப் பெருக்கி பெரிய பலூனாக மாற்றினான். இதன் மூலம் எனது நிலைமை வெகுவாகச் சீரழிந்தது. எனது அடிப்படை உரிமைகள் சுதந்திரம் சார்ந்த சாதாரண மனுக்கள் கூட மிகவும் ஆழமான கிணற்றுக்குள்ளிருந்து குரல் எழுப்புவது போல பலகீனப்பட்டது. அதனால் சற்று உரத்த சத்தத்தாடு எனது கருணை மனுக்களைத் தெரிவிக்க வேண்டி வந்தது. ஆனால் அப்படி சத்தமிட்டுப் பேசுவதோ ஆரோக்கியக் குறைவானதாகவும், மனச்சிதைவை நோக்கிச் செல்பவனின் குரலை ஞாபகப்படுத்தும் விதமாக அமைவதாகவும் கருதப்பட்டது.

மாணவர் பிராயத்தில் ஒரு கட்சியில் பணியாற்றிய போதும் அவன் உடனிருப்பதைப் பார்த்தேன். எவ்வளவோ மாறு வேடங்களில் வேறுவேறு இடங்களில் அமர்ந்திருப்பவனாக அவனிருந்தான். கட்சிக் கூட்டங்கள் நடக்கும்போது அவனது விசுவாசத்தைக் காட்டும் தருணங்களில் அவன் பேசத் தொடங்குவான். அப்போது அங்கிருக்கும் நபர்களைத் தனது விசுவாசத்தின் அடிப்படையில் தனித்தனியே பிரிப்பான். ஓரே சமயத்தில் அவனது பணி விசுவாசத்தை உருவாக்குவதாகவும் விசுவாசத்தின் மூலம் அனைவரையும் கட்டுவதாகவும் அமையும். மேலும் அங்கிருந்தவர் ஒவ்வொருவரையும் எத்தகைய அதிகார வரிசையில் கட்ட வேண்டும் என்பதையும் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சதவீத அதிகாரம் உண்டு என்பதையும் அவனுடைய இசை மொழியில் தெரிவிப்பதுபோலவும் அது அமையும்.

அவனுடைய பேச்சு என்கிற இசையைக் கேட்டு கிறக்கம் கொள்ளாதவர்களே அப்போது கட்சியில் இல்லை. அந்த இசையை ஒருவித ரீங்காரம் என்று சொல்லலாம். ரீங்காரத்தைத் தொடர்ந்து கவனித்தால் மட்டுமே அதுவொரு எந்திரத்தின் ஆடுகளத்திலிருந்து உருவாகும் சப்தம் என்பது புலப்படும். விசுவாசியின் இருப்பு முக்கியமானதாகக் கருதப்பட்டது. அவன் இல்லையென்றhல் கட்சிக்குத் தனது அதிகார வரிசையை நிர்ணயித்துக் கொள்வதில் சீரான நிலை இராது. அது மட்டுமல்லாமல் கட்சி தனக்குள்ளிருக்கும் அன்னியர்களையும் விசுவாசிகளையும் கண்டுகொள்ள அவனது கண்களே பயன்படுத்தப்பட்டன.

கடைசியாக எனக்குத் தரப்பட்ட சித்திரம் நாகரிக மனிதனுடையதாய் இருந்தது. மிகவும் கவர்ச்சியான சித்திரம் அது. அந்த நாகரீக மனிதனுக்கு நகரின்ன் பல முக்கிய அதிகாரிகளுடன் பழக்கம் உண்டு (சில சமயங்களில் அவரே முக்கிய அதிகாரியாகவும் இருப்பார்). எவரையும் அவர் சிரமப்படுத்துவதில்லை. ஒவ்வொருவருடனும் உள்ள உறவுகளின் போதும் மிகச் சரியான தருணத்தில் அவர்களைப் பிரிந்து சென்றுவிடுவார். அந்த ரகசியத்தை அறிந்து கொண்டது மட்டுமே அவரை நாகரீக மனிதனாக்கியது. யாருக்கும் அவர் மனச்சோர்வை ஏற்படுத்துவதில்லை. ஆனால் ஒருவருக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும் போதுதான் உறவோ, நட்போ கூடி வருகிறதோ என்றும் அவர் சந்தேகப்பட்டார். பழக்கவழக்கங்களால் அவரது உடலையும் நேர்த்தியான அசைவுகளால் மட்டுமே அவர் வெளிப்படுத்தினார்.

சட்டை இல்லாமல் இருப்பாரானாலும் கூட அவருக்கு நேர்த்திக் குறைபாடு எதுவும் ஏற்படாது என்று எல்லோருக்கும் தெரியும். யாரிடமும் அவர் எதிர் விவாதங்களுக்குச் செல்வதில்லை. அதற்கு எந்த சந்தர்ப்பமுமே அவரிடமிருந்து தரப்படாது என்பது நமக்குத் தெரியும். குழு தொடர்ந்து பராதிகள் பரப்பி வரும் நபர்கள் மீது மட்டும் அவரும் இரக்கம் மிகுந்த பராதிகளை முன்வைத்து லேசாக வருத்தப்படுவார். அவரே வருத்தப்படுகிறhர் என்று குழு அதைத் தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் அவருக்குக் கொடுக்கப்பட்ட கடமைகளை சாpயாகச் செய்வார். ஆனால் அவை மிகவும் மேலோட்டமானதாக இருக்கும் என்றாலும் கடமை தவறாதவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

எப்போதேனும் சில சமயங்களில் நண்பர்களுடன் அவர் குடிப்பதுண்டு. நாகரீக மனிதர்கள் எல்லோருமே குடிக்கக்கூடியவர்கள் என்கிற முடிவுக்கு நாம் இதன் மூலம் வரவேண்டியதில்லை. குடிக்காத நாகரீக மனிதர்களும் நிறைய பேர் இருப்பார்கள். ஆனால் அவர் குடிப்பதில் ஓரு துளி கூட அவரது சட்டையில் விழுவதில்லை. குடிப்பதில் ஏற்படக்கூடிய மனக்கிளர்ச்சியால் உளறிவிடக்கூடாது என மிகக் கவனமாக இருப்பார் அல்லது மனக்கிளர்ச்சி ஏற்படுகிற அளவுக்கு அவர் குடிப்பதில்லை. நண்பர்கள் அவருடன் குடிக்கும்போது நம்பிக்கையுடன் இருப்பார்கள். சற்று ஒழுக்கத்துடன் இருக்க முயற்சிப்பார்கள். மனக்கிளர்ச்சி ஏற்படும்போது கூட அவர் இருக்கிறார் என்பது அவர்களுடைய ஞாபகத்தில் இருக்கும்.

நாகரீக மனிதர், எல்லோருக்கும் உதவிகள் செய்யக்கூடியவர். அந்த உதவிகள் அளவுக்குப் பிறரிடமிருந்து அவர் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்வார். வீணாக எதையும் செய்வதில்லை. உற்சாக மனிதர் அவர். அவரது மனைவி இருக்கும் இடங்களைத் தவிர பிற இடங்களில் அவருக்கு மனச்சோர்வு ஏற்படுவதில்லை. அவரது உற்சாகமான உழைப்பின் மூலம் களைப்படைந்து போவது அவரது மனைவிதான் என்பது அவருக்குத் தெரியும். தொடர்ந்து இப்படி உற்சாகமாகச் செயல்படுவதன் மூலம் அவரது மனைவி குற்றவுணர்வு நிரம்பியவளாக இருப்பாள். அவள் ஒழுக்கத்தோடு செயல்பட வேண்டும் என்பதும் அவருக்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதும் அவளுடைய அரணாக அமைந்திருக்கும்.

இந்த நான்கு சித்திரங்களையும் பற்றிய எனது வாசிப்பு எவ்வளவு பலகீனமானது என்பதை நீங்கள் தற்போது நன்றாகப் புரிந்திருப்பீர்கள். இந்த சித்திரங்கள் இன்னும் எவ்வளவு சிக்கலானது. வேறு பக்கங்கள் கொண்டது என்பதையும் வாசிக்கும்போதே நீங்கள் புரிந்து கொண்டிருப்பது எனக்குத் தெரிகிறது. நீங்கள் மனது வைத்தால் நான் சொல்லிய தரவுகளை வைத்துக் கொண்டு இந்த சித்திரங்களில் சொல்ல விட்டுப்போன பக்கங்களையும் இணைத்துப் புரிந்துகொள்ள முடியும். பழைய நாடகங்களில் காவிய கதாபுருஷர்கள் கொடுக்கப்பட்ட சித்திரங்களோடு அப்படியே வந்து செல்வதைப் போல இந்த சித்திரங்களைச் சொல்லியிருக்கிறேன். எனது அவசரத்தை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். இந்த சித்திரங்கள் கூட அவ்வளவு முக்கியமானவை இல்லை. அந்தக் கட்டிடம் பற்றிய தகவல்களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். அதன்மூலமாக நீங்கள் எனக்கு சில ஒத்துழைப்பைச் செய்ய இயலும்.

எனக்குத் தரப்பட்ட இந்த நான்கு சித்திரங்களையும் வாசித்து முடித்ததும் இவை எனக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடியவை என்றும் இவற்றைப் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் எனது உடலும் மனமும் தனிமையை அடைய வேண்டியிருக்கும் என்றும் அதில் இறந்து போய்விடுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் மற்றபடி இந்த சித்திரங்களை அணிந்து கொள்வதில் தனிப்பட்ட கோபதாபங்களோ பிடிவாதங்களோ இல்லை என்றும் அவளிடம் சொன்னேன். அவள் அதனை நிதானமாகக் கேட்டுக் கொண்டாள். அப்போதும் அவளிடம் ஏதேனும் ஒரு சித்திரத்தை எனக்கு வற்புறுத்திவிட முடியும் என்கிற நம்பிக்கை உறுதியாய் இருந்ததைக் கவனித்தேன்.

அவள் நிதானமாக என்னோடு விவாதிக்கத் தொடங்கினாள். இப்படிப்பட்ட சித்திரங்களைப் பொருத்திக் கொண்டவர்க்ள் அந்தக் கட்டிடத்தில் பலபேர் இருப்பதாகவும் அவர்கள் என்னோடு நண்பர்களாவதற்கான வாய்ப்புகள் உண்டென்றும் எனவே இந்த சித்திரங்களை அணிந்து கொள்வதால் தனிமைப்பட்டு விடுவதாய் நினைப்பது வெறும் கற்பனையே தவிர வேறொன்றுமில்லை என்றும் சொன்னாள். மேலும் இந்த சித்திரங்களை நான் வாசித்துப் புரிந்துகொண்ட விதமே சரியானதில்லை என்றும் இவற்றை அணிந்து கொள்வதால் எனக்கு ஏற்படக்கூடிய அனுகூலங்கள் பற்றி எனக்குச் சரியான தகவல்களை வாசிக்க்த் தெரியவில்லை என்றும் அவள் வருந்தினாள். இரண்டு வருடங்கள் அவள் என்னிடம் விவாதத்தில் ஈடுபட்டாள். இரண்டு வருடங்களில் அவளிடமிருந்து பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். பலர் அவளிடமிருந்து சித்திரங்களைப் பெற்றுக் கொண்டு கட்டிடத்திற்குள் நுழைந்தார்கள். அதன் மூலமாகவேனும் நான் ஏதேனும் சித்திரங்களுக்கு வசப்படக்கூடும் என்று அவள் நினைத்தாள்.
எனக்கு உடலுறவு என்பது விரும்பத்தக்க விஷயம் தான் என்றாலும் ஆண் உடலுடன் கூடிய பெண்ணாய் அவளிருந்ததால் உடலுறவு சாத்தியமில்லாமலாயிற்று. பெண் உடலுடன் கூடிய ஆணாய் இருக்கும் பட்சத்தில் எனக்கு உடலுறவு ஏற்படுவது சாத்தியமாகலாம். பெண்குறி இருக்க வேண்டிய இடத்தில் அவளுக்கு ஆண்குறி முளைத்திருப்பது எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டம். அந்தக் காலங்களில் அவளோடு மது அருந்துவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தேன். அதில் எவ்விதமான சிரமுமில்லை. சாயங்கால வேளைகளில் அவளது அறையை விட்டு வெளியே வந்து கீழறையிலிருந்த மது விடுதிக்குச் செல்வோம். அந்த வரிசையில் முழுவதுவமே மது விடுதிகள் தான் அமைந்திருந்தன. குடியர்களின் நடமாட்டமும் புலம்பலும் வெறியும் கூத்தும் என்று அந்தப் பகுதி முழுவதும் சப்தம் பெருக்கெடுத்தோடியது.

அந்த மது விடுதிக்கு வரும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அவள் கீழறைகளில் குடிக்க வேண்டியவளில்லை என்றும் இதுபோன்றே மேலறைகளிலும் குடிப்பதற்கான விடுதிகள் நிறைந்திருப்பதாகவும் அங்கே குடிக்க வேண்டியவள்; அவள் என்றும் எனக்கு சித்திரத்தை வற்புறுத்த இயலாத காரணத்தினாலேயே கீழறை மது விடுதியில் சீரழிய வேண்டியிருப்பதாகவும் புலம்புவாள். ஓவ்வொரு முறை அவள் இங்கு வரும்போதும் இவ்வாறு புலம்புவது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அவள் தனது அறையைவிட்டுக் கிளம்பும்போது அவளிருந்த இடத்தில் அவளைப் போன்று வடிவமைக்கப்பட்ட சிலையை நிறுத்துவாள். அதன்பின்பு அறையை மூடிவிட்டுக் கிளம்பியதும் இவ்வாறு புலம்பத் துவங்குவாள். எனக்குத் தரப்பட்ட சித்திரத்தில் ஏதேனுமொன்றினை அணிந்து கொண்டால், நானும் மேலறைகளில் நிரம்பியுள்ள மது விடுதிகளில் குடிக்க முடியுமென்றும், கீழறைகளில் நிரம்பியுள்ள நோய் கொண்ட விபச்சாரிகளுக்குப் பதிலாக மேலறைகளில் நவீன கனவுடன் கூடிய அழகிகள் நிரம்பியிருப்பதாகவும் சொன்னாள். அவர்கள் கீழறைகளிலுள்ள விபச்சாரிகளைப் போல வலியச் சென்று அழைப்பவர்களல்ல. பிடுங்கக் கூடியவர்களும் அல்ல. கீழறையிலிருந்த நோயுற்ற விபவ்சாரிகளிடம் உள்ள மனநோய்க் கூறுகள் எதுவுமே மேலறைகளில் உள்ள அழகிகளிடம் இல்லை என்றும் மேலறைகளில் உள்ள அழகிகளிடம் உள்ள மனநோய்க் கூறுகளும் மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் இருக்கும் என்றும் அவள் சொன்னாள்.

நபர்களுக்கு சித்திரங்களை அணிவிக்கும் வேலை தனக்குப் பிடித்தமானதாக இல்லை என்றும் அது மனச்சோர்வை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும் சில நேரங்களில் மதுவின் போதையில் சொல்வாள். அதனை நாம் நம்புவதில்லை. அப்படி அவள் சொல்வது தந்திரமாகத் தோன்றும். மிகப்பெரிய நாவலாசிரியனால் மட்டுமே வாசித்து அறியக்கூடியடி ஆயிரக்கணக்கான சித்திரங்களை விட்டு வெளியேறுவது அவளுக்கு சாத்தியமில்லை. ஆனாலும் அவள் சொன்ன ஒரு விஷயம் எனக்கு ஒத்துக்கொள்ளும்படியானதாக இருந்தது. எனக்கு அவளால் சித்திரங்களை வற்புறுத்த இயலாமல் போவதன் மூலம் ஒவ்வொரு வருடமும் நான்கு வயது அதிகாpத்து வருவதாகவும் என்னைப் போல மேலும் இருவர் இந்தக் கட்டிடத்திற்குள் வருவார்களேயானால் தனக்கு மரணம் சம்பவித்து விடும் என்றும் அவள் சொன்னாள்.

அவளுக்குப் பதிலாக இருந்த சிலை ஆரம்ப காலங்களில் மிகவும் வசீகரமிக்கதாக இருந்தது. அதன் தலையைச் சுற்றி ஒளிவிட்டம் கூட இருந்ததாக எனக்கு ஞாபகமிருக்கிறது. இரண்டு வருடங்களில் மிகவும் சிதைந்து போயுள்ளது என்பது பார்ப்பவர்களுக்கே எளிதில் புரியும். ஆரம்பத்தில் அந்தச் சிலை பற்றிய வசீகரம் பெரிய உணர்வாய் அந்தக் கட்டிடம் முழுக்க நிறைந்திருந்தது. ஒருபோதும் தீராத சித்திரங்கள் அந்தச் சிலையிடமிருந்தே வருவதாகவும் அது மட்டும் இல்லையென்றால் கட்டிடம் எப்போதோ புழங்கும் தன்மையற்றுப் பாழடைந்து போயிருக்கும் என்றும் வதந்திகளும் கிசுகிசுக்களும் உலவின.

அந்தச் சிலை அப்போது எனக்கு ஒரு கட்சிச் செயலாளரை நினைவுபடுத்தியதும் உண்டு. கட்சியில் பரபரப்பானவர். அவரைச் சுற்றி இளைஞர்களின் கூட்டம் நிரம்பியிருக்கும். கட்சியில் புதிதாக வந்து சேர்பவர்கள் அனைவரும், அவரைக் கடந்தே கட்சியினுள் செல்ல வேண்டும் என்கிற விதமாக கட்சியில் வாயில் வரவேற்பாளராக அவரிருப்பார். அவரை இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் கனவை இட்டு நிரப்புவார். ஒவ்வொரு இளைஞன் மீதும் தனித்தனியான அக்கறை கொண்டவரைப் போல தோன்றுவார், அது தோற்றம் மட்டுமே. அவரால் எந்த இளைஞனுக்கும் நெருக்கடி நேரங்களில் உதவ இயலாது என்பது நமக்கு நன்றாகத் தெரியும்.

இரண்டு வருட இறுதியில் வருத்தப்படத்தக்க சம்பவம் ஒன்று நடந்தது. ஆண் உடல் கொண்ட அந்தப் பெண்ணுக்கு எட்டுவயது அதிகமாயிருந்தது. அவள் முகத்திலிருந்த பளபளப்பெல்லாம் சுருக்கங்களாக மாறியிருந்தன. ஐம்பதை எட்டிய இந்தியப் பெண்மணிபோல உள்ளூர உற்சாகமின்மையோடு காணப்பட்டாள். எனக்கு சித்திரத்தை அணிவிப்பதில் தோல்வியுற்றதன் காரணமாக அவளுக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. மேலறைகளில் உள்ள மது விடுதிகளின் கழிவறைகளை அவள் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் அவளுக்கு ஒரு சொட்டு மதுகூடக் கிடைக்காது. அதற்கு அவள் ஆசைப்படவும் தேவையில்லை. இந்தக் காரியத்தைச் செய்வதன் மூலமாக மட்டுமே வருடத்திற்கு நான்கு வயதாக அவள் வயது பெருகுவதைத் தடுக்க முடியும். இந்தப் பணியில் அவள் சரிவர இயங்காவிட்டால் அதன்பிறகு அவளுக்குக் கீழறைகளில் உள்ள மதுவறைகளிலுள்ள கழிவறைகளைச் சுத்தம் செய்யும் பணி தரப்படும்.

ஒருநாள் காலையில் அவள் அவசரமாக என்னை எழுப்பினாள். கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் பணிக்குக் கிளம்பும் நேரம் வந்து விட்டதாகவும் கழிந்தகால சாயங்காலங்களில் அவளுடன் மது அருந்தியமைக்காக நன்றி தெரிவிப்பதாகவும் கூறினாள். அதே சமயத்தில் அவளுடைய இந்த சீரழிவுக்கு சித்திரவத்தை நான் அணிய மறுத்ததுதான் காரணமென்றும் மேலறைகளில் உள்ள குடியர்களிடம் என்னைப் பற்றிப் பல்வேறு விதமான சித்திரங்களைப் பரப்ப இருப்பதாகவும், அதிலிருந்து என்னால் ஒருபோதும் தப்ப முடியாது என்றும் சபித்தாள். மூலையிலிருந்த சிலையைக் காலால் மிதித்து உடைந்தாள். நான் யோசித்தபடியே படுத்திருந்தேன்.

அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த கதிக்கு நான்தான் காரணமோ என்கிற குற்றவுணர்ச்சி மேலோங்கியது. எல்லோரும் ஏதேனும் சித்திரங்களை அணிந்துகொண்டு கட்டிடத்திற்குள் நுழைந்ததுபோல நானும் நுழைந்திருக்க வேண்டும். ஆனால் பிடிவாதம் காரணமாக எனக்கு இயலவில்லை. எனது பிடிவாதம் ஏதேனும் அர்த்தமுள்ளதா? இதையே சிந்தித்துக் கொண்டு கிடந்தேன். அந்தப் பெண் சிலையைக் காலால் உடைத்துத் தள்ளும்போது அவள் முகம் எவ்வளவு வருத்தம் தோய்ந்திருந்தது. இந்தக் கட்டிடத்தில் நானொரு அன்னியன் என்றுதான் அதுவரையில் நினைத்திருந்தேன். ஆனால் இங்கு நடக்கும் சம்பவங்கள் என்னோடும் சேர்த்து நூலிழைகளால் பிணைக்கப்பட்டுள்ளன என்பதை இந்த வருத்தப்படத்தக்க சம்பவம் உணர்த்திற்று.

சற்று நேரத்தில் இரண்டு பேரழகிகள் அந்த அறைக்குள் நுழைந்தார்கள். அவர்கள் இருவருமே அவர்களைப் போன்றே தோற்றமளித்த இரண்டு சிலைகளையும் எடுத்து வந்தார்கள். இனி சித்திரக்கூடத்தின் பொறுப்பு அவர்களுடையது. அந்தப் பேரழகிகளில் எவளேனும் ஒருத்தி என்னிடம் ஏதேனும் சித்திரத்தை அணிந்திருக்கச் சொன்னால் அந்தப் பேரழகுக்கு முன்னால் மண்டியிடுவது தவிர எனக்கு வேறுவழி இருந்திருக்காது. அவர்கள் என்ன சொன்னாலும் பணிந்து நடப்பது என்று ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தேன். இவ்வளவு பேரழகுக்கு முன்பும் எனது பிடிவாதத்தைத் தளர்த்தாமல் நடந்து கொள்வேனனால் அது மிகவும் அருவருப்பாக இருக்கும் என்பது எனக்குத் தெரிந்தது. ஆனால் அவர்களோ எந்த சித்திரத்தை அணிந்து கொள்ளுமாறும் என்னை வற்புறுத்தவில்லை.

அவர்களில் ஒருத்தி என்னைப் பார்த்து இந்த அறையில் நீ தங்க இயலாது என்றும், சித்திரங்களை அணிய மறுத்ததற்கு நன்றி தெரிவிப்பதாகவும், இந்த கட்டிடத்தில் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் அலைந்து திரிய அனுமதி கிடைத்திருப்பதாகவும் தனி அறை ஏதும் ஒதுக்கப்படவில்லை என்றும் ஏற்கனவே சித்திரங்களை அணிய மறுத்த இரண்டு பெண்களும் மூன்று ஆண்களும் அந்தக் கட்டிடத்தினுள் அலைந்து திரிவதாகவும் கூறினாள்.

அதனையொட்டி அடுத்த பெண் செய்தி வாசிப்பவனைப் போல முகத்தை என் பக்கமாகத் திருப்பி, இப்படி சித்திரங்களை அணிய மறுப்பவர்களின் எண்ணிக்கை இந்தக் காலகட்டத்தில் ஏழாக இருக்கலாமென்றும் மேலும் அதிகரிக்குந்தோறும் மூப்பு அடிப்படையில் ஒருவர் கொல்லப்படுவார் என்றும் தெரிவித்தாள். கட்டிடத்திலுள்ள என்னுடைய விதி இதுதான் என்று அவள் மேலும் தெரிவித்தாள். இந்த உத்தரவுகளையெல்லாம் பிறப்பிக்க உங்களுக்கு யார் அனுமதியளித்தார்கள் என்று கேட்டேன். அதற்கு அவள் என்னைப் போலத்தான் அவர்களும் என்றும் ,எப்படி இந்த உத்தரவுகள் தங்கள் கைகளை வந்தடைகின்றன என்பது அவர்களுக்குத் தெரியாது என்றும் ,எனக்கு எந்தத் தொடர்புமில்லாமல் நான் உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரும் போது எனக்கு ஓரளவுக்கு நிலைமை புரிபடும் என்றும் தெரிவித்தார்கள். எனக்கு அவர்கள் கூறியதைப் புரிந்து கொள்ள இயலவில்லை. அப்படியானால் எனது காலைக் கடன்களை முடித்துவிட்டுச் செல்கிறேன் என்று சொன்னேன். அதற்கு வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள்.

மிஞ்சிய பதினெட்டு வருடங்களில் என்னை ஆரம்பத்தில் சித்திரங்களுக்கு வற்புறுத்திய ஆண் உடல் கொண்ட பெண் கிழவியாயிருந்தாள். அவளுக்கு மேலும் தண்டனை அதிகரிக்கப்பட்டிருந்தது. அவள் இப்போது கீழறைகளிலுள்ள மது விடுதிகளில் கழிவறைகளைச் சுத்தம் செய்பவள். அவளது ஞாபகங்களில் பல விஷயங்கள் இன்று சரிந்துவிட்டன. கசப்பு நிரம்பியவளாக இருந்தாள் அவள். ஆனால் அவளுக்கு என்னைப் பற்றிய ஞாபகங்களும் பகைமையும் மட்டும் மிகத் தீவிரமாக ஜொலித்துக் கொண்டிருந்தன.

அவள் ஒரு வேலை செய்தாள். அதற்கு நான் ஒத்துழைக்கவில்லை அதற்குத் தண்டனையான அலையும் வாழ்வைத்தான் நானும் வாழ்ந்து வருகிறேன். இதில் அவள் தனிப்பட்ட விரோதத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்பது எனக்குப் புரிந்துகொள்ளுமாறு இல்லை. ஒருவேளை அவளது கடந்த காலத்தின் மீது ஞாபகம் ஊன்றிப் பிடிக்க என்மீது பகைமை கொள்வது அவசியமாக இருந்ததோ என்னவோ? அவள் சபித்தது, எனது உடலை இந்தப் பதினெட்டு வருடங்களில் எந்தளவுக்குப் பாதித்திருக்கிறது என்பதை நன்றாக அறிகிறேன். ஆரம்பத்தில் அவள் கொடுத்த நான்கு சித்திரங்களையும் அணிய மறுக்கும் போதிருந்த எளிமை பின்பு வரவில்லை. மிகவும் சிரமப்பட்டேன். தொடர்ந்து என்னைப் பற்றிய சித்திரங்களைக் காற்றில் உலவவிட்டபடி இருந்தாள். அவை சரியாக என்னை அப்பிக் கொண்டன. அவற்றைக் கழற்றி எறிவதுதான் எவ்வளவு சிரமமானது? அவள் மது விடுதிகள் தோறும் சென்று என்னைக் குடிகாரன்; என்று சொல்லிச் சென்றிருந்தாள். மது விடுதிக்குள் நுழையும்போது குடியர்கள் என்னையொரு குடிகாரனாகப் பார்த்தார்கள். கிசுகிசுவாக குடிகாரன் என்று வர்ணித்துக் கொண்டார்கள். குடிப்பவர்களுக்கு மத்தியில் ஒருவனைக் குடிகாரனாக மாற்றுவது என்கிற புனைவு இவர்களுக்குள் ஏன் தீவிரமாக இயங்க வேண்டும்?

அவர்களோ தொடர்ந்து குடித்தபடி மது விடுதிகளிலேயே படுத்துக் கிடப்பவர்கள். நானோ எப்போதாவது மது விடுதிக்குச் செல்பவன் என்றhலும் எதிர் நிலையாக என்னை மட்டுமே குடிகாரனாக அவர்கள் புரிந்துகொள்வது எப்படி? நானிந்த பதினெட்டு வருடங்களில் பலமுறை அவர்களைப் பார்த்துச் சொல்லியிருக்கிறேன். நண்பர்களே, என்னைத் தனிமைப்படுத்தாதீர்கள். எனக்குத் தனியே குடிப்பது அலுப்பாக உள்ளது. இந்த மது விடுதிகளில் எவ்வளவு துன்புறுத்தியிருக்கிறீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். நமக்குள் உறவு சீராகுமோ இல்லையோ தெரியவில்லை. நான் சொல்வதைத் தயைகூர்ந்து கவனியுங்கள். உங்கள் குற்ற உணர்ச்சிகளின் சித்திரத்தை வரைந்து கொள்ள எனது உடலை நீங்கள் பயன்படுது;திக் கொள்வது தவறு. அதிலும் அந்தக் குடிகார சூன்யக் கிழவியின் வதந்திகளை நம்பி நீங்கள் என்னைத் தனிமைப்படுத்துவது தாங்க இயலாத துயரத்தைத் தருகிறது. நீங்கள் மது விடுதியில் என்னைத் துன்புறுத்துகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அரசியல் பேசுகிறீர்கள். சினிமா நடிகர்களைப் பற்றிப் பேசுகிறீர்கள். இலக்கியம் பேசுகிறீர்கள். இலக்கியத்தின் அதிகாரம் பற்றிப் பேசுகிறீர்கள். அறிவின் அதிகாரம் பற்றிப் பேசுகிறீர்கள் சமூக நிலவரங்களைப் பற்றி விவாதிக்கிறீர்கள். நீங்கள் படிக்காத புத்தகங்களைப் பற்றிப் புளுகுகறீர்கள். நீங்கள் மது விடுதிக்குள்; நுழைந்ததுமே உங்களுக்கு உங்கள் குருக்களைப் பற்றிய ஞாபகம் வந்து விடுகிறது. அவர்களது வசீகரம் பற்றிப் புளுகித் தள்ளுகிறீர்கள். அவர்களது அபிப்ராயங்களை உங்களது அபிப்ராயம் போல பாவிக்கிறீர்கள். அவற்றை ஊதிப் பெருக்கித் தள்ளுவதிலேயே உங்கள் காலம் கழிகிறது. உங்களுடைய எதிரியைப் பற்றி நீங்கள் தொடர்ந்து பேசிவரும் குற்றவுணர்வுகளால் தூண்டப்பட்டு திடீரென அவனைப் புகழ்ந்து தள்ளத் தொடங்குகிறீர்கள். ஏற்கனவே உருவான வாக்கியங்களைப் பேசத் தொடங்கி வாக்கியமே உங்கள் உடலாக உருமாறிய பின்பு உங்கள் உடலிலிருந்து தோன்றும் வாக்கியங்கள் அச்சுறுத்துகின்றன.

நானும் மனிதப் பிறவிதான். உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரிகிறது. ஆனால் கவனிப்பதால் எனக்கு உருவாகும் மன உணர்வுகளையோ அபிப்ராயங்களையோ பிறருக்குத் தெரிவித்துவிடக்கூடாது என்பதை மட்டும் உங்கள் கண்கள் நன்றாக எனக்குப் புரியச் செய்கின்றன. உங்கள் கண்காணிப்பையும் மீறி எனது தரப்பை முன்வைத்தால் மிக மோசமாக என்னைத் தண்டிப்பீர்கள் என்பதை உங்கள் கண்கள் தெரிவிக்கின்றன. இது சரியானதுதானா நண்பர்களே? நமது ஜனநாயகப் பண்புகள் பேரில் நீங்கள் கொண்டுள்ள அக்கறை இதுதானா? யோசித்துப் பாருங்கள். நீங்கள் பேசுகிற ஒவ்வொரு விஷயத்திலும் எனது தரப்பும் சேர்ந்து ஊடு கலக்க வேண்டாமா? வரலாற்றில் எனது இடமும் பதிவாக வேண்டாமா? என்னைக் குடிகாரன், ஒழுக்கக் குறைவானவன் என்று சொல்லி சூனியக்காரியின் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் நிலைநிறுத்திக் கொள்வது ஆபாசமாக இல்லையா?

நண்பர்களே, அந்த சூனியக்காhpயின் வார்த்தைகள் உங்கள் ஆழ்மனங்களில் பதியத் தொடங்கிய சில சம்பவங்களை நினைவுபடுத்திச் சொல்கிறேன். அது அவசியம் நீங்கள்; சம்பவங்களை அதன் நேர்த்தியோடு நினைவுபடுத்திக் கொள்ளத் தயாராக இல்லை. சம்பவத்திலிருந்து அதிகார முளைவிட்டு எழுந்த புனைவுதான் உங்களுக்கு இனிய நினைவாக உள்ளது. நீங்கள் விரும்பும் புனைவுகளாக சம்பவங்ககைத் திரிக்கிறீர்கள்.

பத்து வருடங்களுக்கு முன்பு ஒருநாள் நான் மது விடுதிக்கு வந்தேன். இப்போது அந்த சம்பவம் உங்கள் ஞாபகத்துக்கு வருகிறது. ஆனால் அது நீங்கள் விரும்பிய புனைவாக உங்கள் மனதில் சுருண்டு கிடக்கிறது. அதைத் தட்டி எழுப்புங்கள். அந்தப் புனைவோடு எனக்குப் பேச வேண்டும். நீங்கள் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் அலுப்பின் காரணமாகக் குடித்தாலும் எனக்குப் போதை ஏற்படாமலிருந்ததால் பதினைந்து நாட்கள் இடைவெளி விட்டு மது விடுதிக்குள் அப்போது நுழைந்திருந்தேன். பெரும்பாலும் எல்லோரும் முகத்தைத் திருப்பிக் கொண்டீர்கள். சிலர் மதுக்குவளைகசளை எடுத்துக் கொண்டு வேறு திசைகளுக்கு நகர்ந்தார்கள். நீங்கள் உங்;களுடைய மொத்த சாத்தான்களின் ரூபமாக என்னைப் பார்க்க விரும்பியது. அப்போது எனக்குப் புhpந்தது அதையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. இது வழக்கமான ஒன்றுதானே என்று விட்டுவிட்டேன். நான் கடவுளின் குழந்தை என்பது உங்;களுக்கு நன்றாகத் தெரியும் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்.

நான் மதுபுட்டியைத்; திறந்து குடிக்கத் தொடங்கினேன். நீங்கள் எனது தனிமையைக் கேலி செய்தீர்கள். விறுதே இருந்தேன். அதன் பிறகு நீங்கள் அனுப்பி வைத்த பக்கிரி என்னிடம் வந்தான். நீ கொலை காரனாமே, அதிலும் நண்பர்களைக் கொலை செய்கிறவனாமே. உன்னிடம் ஒரே நபராகத் தொடர்ந்து பழகுவது சிரமமாமே என்று கேட்டேன். ஓரே நபராக நான் ;தொடர்ந்து என்னிடமே பழகாதபோது ஒருவர் ஏன் ஒரே நபராக நான் எவரிடமும ;தொடர்ந்து பழக வேண்டும்? ஆணியால் அறையப்பட்டது போல அப்போது துன்புற்றேன். என்றாலும் பொறுத்துக் கொண்டேன். அந்த சூனியக்காஇர்யின் வார்த்தைகளை நம்பித்தானே பக்கிரியே குடிகாரர்களுக்கு மத்தியில் என்னைக் குடிகாரன் என்றும் கொலைகாரர்களுக்கு மத்தியில் என்னைக் கொலைகாரன் என்றும் புரிந்து கொண்டுள்ளாய்.

நாம் ஒவ்வொருவருமே கொலைகாரர்கள்தான் என்பது நமக்கு நன்றாகத் தெரியும்தானே பக்கிரியே என்று நான் அவனிடம் கேட்டேன். அதற்கு அவன் என்ன சொன்னான்? அவன் என்னை அப்படித்தான் சித்தாரிப்பான் என்றும் அதுதான் அவனுக்கு விடுதலை தருவதாகவும் சொன்னான். அப்போதுதான் அவனை ஓங்கி அறைந்தேன். அவனது பல்லிடுக்குகளிலிருந்து ரத்தம ;கசிந்தது. நீங்களோ ரத்தம் வந்துவிட்டதும் கொலைகாரன், கொலைகாரன் என்று கத்தினீர்கள். எனது சித்திரத்தை இவ்வாறெல்லாம் திhpப்பது எவ்வளவு குருதி சிந்தக்கூடிய அனுபவம் என்பது உங்;களுக்குத் தெரியாதா நண்பர்களே? அவனது விடுதலைக்காக நான் சிறைக்கூடங்களிலும், மனநல விடுதிகளிலும் வதைபடுவது நியாயமா?

மேலறையிலுள்ள மது விடுதிகளில் மட்டுமல்ல, கீழறைகளில் உள்ள மது விடுதிகளிலும் இதே நிலைமைதான். ஒரு சமயம் கீழறைகளில் உள்ள மது விடுதியொன்றில் குடித்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னைப் போலவே சித்திரங்களை அணிய மறுத்த ஒருவன் மது விடுதிக்குள் நுழைந்தான். அவன் உள்ளே நுழைந்ததுமே கண்டுபிடித்துவிட்டேன். அவன் சித்திரங்களை அணிய மறுத்தவன் என்பதற்கான ரேகைகள் அவன் முகத்தில் தெரிந்தன. அவர்களும் கண்டுபிடித்துவிட்டார்கள். குடித்துக் கொண்டிருந்த ஒருவன் அவனிடம் சென்று நீ யார் என்றும், எதற்கு இங்கு வந்திருக்கிறாய் என்றும் ஒரு காவல் அதிகாரியின் தோரணையோடு அவனை விசாரித்தான். உண்மையில் விசாரித்தவன் காவலதிகாரி இல்லை என்றாலும் விசாரணைக்கு உட்பட்டவன் குற்றவாளி போல உடல் நடுங்கினான். எல்லோரையும் போலவே குடிப்பதற்கு வந்திருப்பதாகத் தெரிவித்தான். ஆனால் சற்றைக்கெல்லாம் எனக்குப் புரிந்துகொள்ள முடியாத ஒரு தருணத்தில் அவனை அவர்கள் எல்லோரும் சூழ்ந்து தாக்கினார்கள். மர்ம உறுப்பில் காலால் முட்டித் தள்ளினார் காவல் அதிகாரி. அப்போது கூச்சலிட்டேன்.

நண்பர்களே, இங்கு நடைபெறும் கலவரத்திற்கான காரணம் எனக்குப் புரியவில்லை என்றும், ஒரு சமூகக் கலவரம் நிகழும்போது ஒரு தரப்பிலும் இணையாமல் நான் தனியே குடித்துக் கொண்டிருப்பது என்னை சமூக விரோதி ஆக்கிவிடும் என்றும், அந்த அவப்பெயர் எனக்குத் தேவையில்லை என்றும், எனவே அவனைத் தாக்குவதற்கான காரணத்தைப் புரிந்து கொண்டால் நானும் சேர்ந்து கொண்டு அவனைத் தாக்கி அழிப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தேன். ஆனால் அவர்களோ, குடிகாரனே, நடத்தை கெட்டவனே, வேசிக்குப் பிறந்தவனே, மனநிலை பறழ்ந்தவனே என்று பல்வேறு வசைகளை என்னை நோக்கி வீசியபடி, உனக்குக் காரணத்தை நாங்கள் சொல்ல வேண்டுமா? என்ன திமிர் என்று என்னைச் சூழந்து தாக்கத் துவங்கினார்கள். அப்போது ஒரு விஷயம் எனக்கு நன்றhகப் புரிந்தது. சூன்யக்காரி துரத்தி வற்புறுத்தும் சித்திரத்தில் ஏதேனும் ஒன்றையேனும் ஏற்றுக் கொண்டால் நான் சமநிலையை அடைந்து விடுவேன் என்பதும், சூன்யக்காரி செயலற்றுப் போய்விடுவாள் என்பதும்,சூன்யக்காரியை நான் ஆரம்பத்தில் இரண்டு வருடம் சந்தித்ததற்குப் பின்னர் எப்போதுமே அவளைப் பார்த்ததில்லை. அவள் எப்போது இந்தக் கழிவறைகளைச் சுத்தம் செய்ய வருகிறாள், போகிறாள் என்கிற விபரம் கூட எனக்குத் தெரியாது. என்றாலும் தொடர்ந்து சித்திரத்தை வற்புறுத்த என்னைப் பின்தொடர்ந்து வருகிறாள் என்பது தெரிந்தது.

“வாசகர்களே , இப்படியாக எனக்கு நேர்ந்த விஷயங்களைப் போலவே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம் ஏற்பட்டிருக்கும். எனக்கு நேர்ந்தது போலவே ஒவ்வொருவருக்கும் நேர்ந்த விஷயங்கள் எல்லாமே இப்போது முக்கியமானவை அல்ல. இந்தக் கட்டிடத்திற்குள் எல்லோருக்கும் நேரவிருக்கும் அபாயம் பற்றியதே எனது கவலை”. இதனை எவருமே அறி[ந்து கொள்ளாமலிருக்கிறார்கள். அன்றhட வேலைகளில் ஈடுபட்டவண்ணமிருக்கிறhர்கள். உத்தரவுகளைப் பிறப்பிக்கிறhர்கள். உத்தரவுகளை ஏற்றுக் கொள்கிறார்கள். கடைபிடிக்கிறார்கள். பணிகளை மேற்கொள்கிறார்கள். எல்லோருக்கும் மரணம் கட்டடத்தின் மேலிருந்து உற்றுப் பார்த்தபடி வலைகளை விரித்து வைத்தபடி காத்துக் கொண்டிருக்கிறது. சித்திரத்தின் சாயல் கலைந்து வருபவர்களெல்லாம் இறந்த உடலாகி வருகிறார்கள்.

நான் முடிவெடுத்தேன். இனி ரகசியமாக எதையும் உளவு பார்த்தோ பேசியோ பலனில்லை. கட்டடம் பாலித்தீன் போல வளைந்து காணப்படுகிறது. வெளிப்படையாகவே பிரச்சாரத்தைத் துவங்கிவிட வேண்டியதுதான். அது மட்டும்தான் ஏதேனும் பயனிக்கக்கூடியதாக இருக்கும். மேலறை, கீழறைகளிலுள்ள மது விடுதிகளை எனது பிரச்சாரத்திற்கான இடங்களாகத் தேர்ந்தெடுத்தேன். எல்லோரையும் அழைத்து நான் சொன்ன செய்தி இதுதான். “நண்பர்களே, நமது பழைய பகைமையை எல்லாம் மறப்போம். நாம் ஒன்றுசேர்ந்து செயல்படுவதற்கான தருணம் இது. இந்தக் கட்டிடம் பாலித்தீன் பை போல வளைந்திருக்கிறது. இது வரையில் நாம் கற்பனை செய்து கொண்டிருப்பது போல இது கட்டிடம் அல்ல. மிகப் பெரிய வினோத எந்திரம். இதன் உட்பரப்பிற்குள் நாம் ஜீரணமாகிக் கொண்டிருக்கிறேhம்”.

பிரச்சாரம் படுதோல்வியடைந்தது. மொத்தமாக நேரவிருக்கும் அபாயத்தைப் பற்றிப் பேசியதற்குப் பதிவாகத் தங்கள் கடமைகளில் தங்களுக்கிருந்த சிரமத்தையே எல்லோரும் என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். எனது குரல் ஒரு ரட்சகனின் குரல்போல அவர்களுக்குத் தோன்றியதோ என்னவோ, சிலர் பாவமன்னிப்பு கேட்டார்கள். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பெரும்பாலும் அவர்கள் எல்லோரும் அந்தக் கட்டிடத்தின் ஒழுங்கையும் தாக்கத்தையுமே பதிலாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அதுவே அவர்களுக்கு வாழ்க்கையாகவும் தெரிந்தது.

நான் வெளியேறிவிடுவது என்று தீர்மானித்தேன். ஆனால் வெளியேறும் வழிகள் ஏதும் புலப்படவில்லை. முழுதும் கண்ணாடியால்; அது அடைக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் நான் இருபது வருடங்களுக்கு முன்பு உள்ளே நுழைந்தபோது உள்ளே நுழைந்த பெண் வெளியேறுவதைக் கவனித்தேன். அவளை வேகமாகப் பின்தொடர்ந்து வெளியேறினேன். கண்ணாடிக் கூண்டுக்கு வெளியே இருந்த திண்ணையில் படிந்திருந்த தூசிகளில் வெளியேறிய காலடிச் சுவடுகள் சில பதிந்திருந்தன. அவை சித்திரங்களை அணிய மறுத்தவர்களுடைய காலடிச்சுவடுகளாக இருக்கக்கூடும் என்று யூகித்துக் கொண்டேன். எனக்குக் கட்டிடத்தை விட்டு வெளியேறியது ஒரு கனவிலிருந்து விழித்ததுபோல் தோன்றியது. எனது வயதில் இருபது வருடங்கள் திடீரென குறைந்துவிட்டது அதிசயமாக இருந்தது. ஆனால் மனதில் மட்டும் கனக்கின்ற மர்மமான ஒரு உணர்வு இருந்தது. மழை பெய்து கொண்டிருந்தது. பாதைகளில் மழை நிரம்பியிருந்தது. சோடியம் விளக்கின் ஒளி சாலையில் மூடிக்கிடந்த மழை மீது மூடியிருந்தது. நடக்கத் தொடங்கினேன். 


[புனைகளம் இதழில் 2000 ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"