கடலொருபக்கம் வீடொருபக்கம்

 



அச்சுஅசல் ஒரு நாய்க்குட்டி

குழந்தையைப் போலவே இருக்கிறது
குழந்தையைப் போலவே விளையாடுகிறது
குழந்தையைப் போலவே குதிக்கிறது
ஆர்ப்பரிக்கிறது
குழந்தையைப் போல
கனவு காண்கிறது
ஏதோ ஒரிடத்தில் இருந்து
குழந்தை நாயாகிறது
குழந்தை பூனையாகிறது
நரியாகிறது
எலியாகிறது
மனிதனாகிறது
பல ஊர்களுக்கும்
பிரியும்
முச்சந்தி போலொரு இடம்
அதனதன்
ஊர்களுக்கு
அதிலிருந்து
திரும்பிச் செல்கின்றன
பல ஊர்களுக்கு
பல கிளைகளுக்கு
குழந்தை தன்னில் நீங்கியதும்
உரியவை வந்து
எடுத்துச் செல்கின்றன
தங்கள் தங்கள்
மிருகங்களை

2

போலீஸ் சாலையில் காவல் நிற்கிறாள்
போலீஸ்காரி
நளினம் வற்றா உடல்
அதிகாரம் ஏறாத
அவயங்கள்
குதிரை இடுப்பு
சுற்றி வெட்கம் சுழலும் கண்கள்
நெரித்து ஏறும் கூட்டத்தை
நெறிப்படுத்தவேண்டும்
இப்படி வாங்க
அங்க போகாதீங்க
என
சத்தமாகச் சொல்லும் அவள் உதடு
மெதுவாக
அப்படி போகாத
இப்படியா போ
என ஒருமுறை தயக்கத்துடன்
பேசிப் பார்க்கிறது
இப்படி போடே
அப்படி போகாதடே
என்பது நோக்கி
அவள் சொற்கள்
இழுபடுகின்றன
ஆசையாசையாய்
இழுபடும் வார்த்தைகளைக்
கண்டு
ரசிக்கிறாள்
போலீஸ்காரி
முதல் தயக்கத்தின் தலைமீது
ஏறிக்கடக்கிறது புத்தம்புதிய
வாகனம்
சாலையின் குறுக்கே

3

இறந்தவரை அன்பிரண்ட்
செய்ய வேண்டியிருப்பது
எவ்வளவு
அசந்தர்ப்பமானது ?
இறந்தவரின் பிறந்த நாள்
குறுக்கிடுகையில்
ரயில் தண்டவாளத்தைக் கடப்பது போலொரு
அதிர்வு
ஒரு வாழ்த்து சொல்லிக் கடந்து விடலாமெனில்
இறந்தவரை
வாழ்த்துவதற்குரிய
ஒரு சொல் கூட
கைவசம் இல்லை
காலை வணக்கம் அய்யா
என்று சொன்னால்
இறந்தவருக்கு பிடிக்குமோ
என்னமோ ?

4

ஒருவர் இறந்துபோனால்
மீதமுள்ள உலகம் அப்படியே இருக்கிறது
ஒருமாற்றமும் இல்லை
மீதமுள்ள உலகம் அவருக்கு
அணைந்து போனது தவிர்த்து
ஒருமாற்றமும் இல்லை
மீதமுள்ள உலகம்
அப்படியேதான் இருக்கும்
என்பதை
கொஞ்சம் முன்னதாக
அவர் தெரிந்திருந்தால்
மீதமுள்ள உலகத்தில்
அவர் நீடித்திருக்கவும் கூடும்
இன்னும் சிறிது நாட்கள்
மாதங்கள்
ஆண்டுகள்
மொத்தத்தில்
மீதமுள்ள உலகத்தில்
இருப்பவர் நாம் இல்லையா
பல்லியின் வால் போல
இழந்த உலகின் ஒருபகுதிதான்
இந்த மீதமுள்ள உலகம் இல்லையா

5

காட்டில் அண்டை கூட்டிப்
பொங்கிக் கலைந்த இடத்தில்
தெய்வங்கள் வந்துகூடிக் கலைந்தது
போலும்
தெரிகிறது
வீட்டின் பின்புறத்தில்
விறகடுப்பில்
பொங்கிக் கலைந்த பின்னர்
காடு வந்து
சற்று நேரம்
அமர்ந்து
ஓய்வெடுக்கிறது

6

கடலொருபக்கம் வீடொருபக்கம்
கடலின் பக்கம் இருந்து
திரும்பினேன்
அதனினும் மிகச் சிறிதான
தோட்டத்துள் நுழைந்து
அதனினும் சிறிதான சாலையில் கேறி
அதனினும் சிறிதான தெருவில் கால் வைத்து
சிறிதினும் சிறிதான
வீட்டுக்கு
மீண்டும் கடல்நோக்கித் திரும்புகிறேன்
வீட்டினும் பெரிதான வீதியில் இறங்கி
வீதியிலும் பெரிதான சாலையில் கேறி
கடலுக்கு
வீட்டுக்கும் எனக்குமான தூரமே
வழி
நெடுகிலும்
வீட்டுக்கும் கடலுக்கும் இடையிலான தூரமே
மனம் முழுதிலும்

7

பந்தயம்
வெற்றியடைந்த நடிகன்
வீழ்ச்சி அடைந்தான்
பின்னர்
எழும்பவே இல்லை
வெற்றியடைந்த நடிகை வீழ்ந்தாள்
பின்னர் எழும்பவே இல்லை
இவர்களும் கலைஞர்கள் தாம்
வெற்றியடையாத கவிஞன்
வீழவும் இல்லை
எழும்பவும் இல்லை
வெற்றியுமில்லை
தோல்வியுமில்லை
வெற்றியடைந்த அரசியல்வாதி
முதலில் வெற்றி அடைந்தான்
பின்னர் தோல்வியடைந்தான்
எழும்பவே இல்லை
வெற்றியடைந்த தொழில் அதிபர்
முதலில் வென்றான்
வென்றது எதற்கு என்று
முடிவில்
தோன்றக் கண்டான்
வயோதிகக் கவிஞன்
வென்றானுமில்லை கொண்டானுமில்லை
ஆனால்
ஓங்கிச் சுடர்கிறான்
விஸ்வரூபம் எடுத்து
[ கவிஞர் விக்ரமாதித்யனுக்கு ]


8

உன் இருப்பு
பூரணமாகிறது
1
புதிய இடம்
உனதிருப்பை
அங்குள்ள
சிறுபூச்சிகள் உணர
ஐந்தாறு வருடங்கள் ஆகும்
நாயும் பசுவும் உணர சிலமாதங்கள்
சுற்றும் முற்றும் தாவரங்கள் உணர
ஓராண்டு காலம்
நீ சிடு மூஞ்சி என்பதை அறிவதாயிருந்தால் கூட
நீ அரக்கன் என்பதை அறிவதாயிருந்தால் கூட
சுய நலம் பிடித்தவன்
ஆங்காரி
எதுவென்றாலும் அறிய காலம் பிடிக்கிறது
அது அதற்கென்று
ஒரு காலம் ஆகிறது
அதன் பின்னரே
நீ அமைதியாக நடந்து செல்கிறாய்
நீ யார் என்பது
புல்லுக்கும் தெரிந்த பின்னரே
உன் இருப்பு
பூரணமாகிறது
2
முன்னர் இருந்த
இடம்
உன் வாசனையை
ஒரு பூச்சி மறப்பதுவரையில்
வீசிக் கொண்டிருக்கிறது
3
நீ கிளம்பிச் சென்ற பின்னரும்
நெடுநாட்கள்
இங்குதான்
இருக்கிறாய்
4
நீயெதுவாக இருந்தாலும்
ஏதுமற்றவன்
என்று
யாரும்
எடுத்துக் கொள்வதில்லை
5
தண்ணீர் விடுகிறாயோ இல்லையோ
செடிகளுக்கு
நீ தேவைப்படுகிறாய்
கருணை காட்டுகிறாயோ இல்லையோ
பூச்சிகள்
உன்னைத் தேடிக் கொண்டிருக்கின்றன
அன்பற்றவனாயிருந்தால் கூட
நீ எப்போதோ இறைத்த
ஒரு சிறு செம்பு நீரின் நிமித்தம்
மாமரம்
தன் கனியை
உனக்குத்
தந்துவிடவே
விரும்புகிறது

9

அறிவது அறி


###அறிவது அறி
1
ஆரம்பத்திலேயே அறிந்து கொண்டால்
அறிவு மிச்சமாகும்
ஆரம்பத்திலேயே அறிந்து கொண்டால்
அனைத்தும் மிச்சமாகும்
ஆரம்பத்திலேயே அறிந்து கொண்டால்
ஆயுள் மிச்சமாகும்
2
தாழ்ந்து அறிவது தாழ்ச்சி
தாழ்ந்து அறிவது வினை
தாழ்ந்தும் அறிய இயலாமற்போனால்
அது
ஊழ்வினை
3
இருள் பாம்பால் கட்டப்பட்டிருக்கிறது
இருள் இருளால் கட்டப்பட்டிருக்கிறது
இருள் ஒளியாலும் கட்டப்பட்டிருக்கிறது
4
இருள் சூழ்ந்தால்
நிழல் கிரகங்கள்
சூழும்
5
ராகுவும் கேதுவும்
சகோதரர்கள்
இருளை
அள்ளியெடுத்து
உண்பதில்
ஆனந்தம்
அவர்களுக்கு
6
சனி செய்ய மறந்ததையும்
ராகு செய்கிறான்
ராகு கொடுக்க மறந்ததையும்
கேது
கொடுக்கிறான்
7
இருளுக்கு ஒரு வடிவமுண்டு
இருள் என்பது பாம்பால்
கட்டபட்டிருக்கும்
வடிவம்

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"