வைதீகமான பெருநகரத்து அந்நியனின் கதைகள்,நேநோ ...

தமிழ் கலகக்காரனின் கதைகள்
லக்ஷ்மி மணிவண்ணன்

( சென்னை புக் பாயிண்ட் அரங்கில் 03-07-99 அன்று நடைபெற்ற சாரு நிவேதிதாவின்  "நேநோ" சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் படிக்கப்பட்ட கட்டுரை)

சாரு நிவேதிதா பற்றி தமிழில் பல்வேறுபட்ட புனைவுகள் உள்ளன. கலகக்காரன் ,எதிர் கலாச்சாரவாதி ,வன்முறைக்கு எதிரான தந்தை என்றும் : ஆபாசமான எழுத்தாளன் , கலை இலக்கியம் என்ற பெயரில் ஆபாசமான பாலியல் கதைகள் எழுதக் கூடியவர் என்றும் அவரைப் பற்றிய பிம்பங்கள் வளர்கின்றன .பொதுவாகவே தமிழில் எழுத்தாளர்கள் பற்றி வளரும் புனைவுகளுக்கும் அவர்களது எழுத்துக்களுக்கும் உள்ள தொடர்பு பலகீனமானது ,தெளிவற்றது .பிம்பங்கள் பெரும்பாலும் குடும்ப அரசியல் மொழியின் உதவியுடன் மிருகத்தைப் போல வளர்க்கப்படுகின்றன .
வெகுஜன குடும்ப அரசியல் மொழி தனது புனைவுகளைக் கட்டமைத்து வருகிறது . இத்தகைய புனைவுகளுக்குள்ளிருந்து எழுத்தாளன் தொடர்ந்து தப்பித்துக் கொள்ளவேண்டியது அவனது செயல்பாட்டில் முக்கியமானது . தொடர்ந்து மனதை விழிப்புடன் வைத்துக் கொள்வதன் மூலம் அவன் தன்னைப் பற்றிய புனைவுகளைத் தாண்டிச் செல்ல முடியும் .
தமிழில் கலைஞர்களும் ,எழுத்தாளர்களும் குடும்ப அரசியல் மொழி உருவாக்கும் புனைவுகளுக்குள் சுருங்கி விடுகிறார்கள் .சாருவைப் பொறுத்தவரையில் தன்னைப் பற்றிய புனைவுகளை ,செல்லப் பிராணிகளைப் போல வளர்க்க பிரியப்படுகிறார் என்பது: சிறு பத்திரிகைகளில் அவர் எழுதியுள்ள கதைகளைப் படிக்கிறபோது தெரிகிறது என்றாலும் அக்கதைகளைச் சற்று கவனமாகப் படிக்கிற வாசகன் -சாருவைப் பற்றிய புனைவுகளுக்கும் ,அவரது கதைகளுக்கும் தொடர்பில்லை என்பதை மிக எளிதாகவே உணர்ந்து கொள்ள முடியும் .
"நேநோ"என்ற சாருவின் சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 25 கதைகள் உள்ளன . இவற்றை வாசகன் தனது வசதிக்கு ஏற்றபடி சாருவின் மீட்சி வகைக் கதைகள், கணையாழி வகைக் கதைகள் ,தினமலர் வகைக் கதைகள் என்று பொதுவாகப் பிரித்துக் கொள்ளலாம் .இந்தப் பிரிவினை கதைகளின் தோற்றம் சம்பந்தப்பட்ட விஷயம் தானே தவிர ,கதைகளின் உலகம் சம்பந்தப்பட்டது அல்ல .
இந்தத் தொகுப்பில் " டீ " என்கிற கணையாழி வகைக் கதை ஒன்று மீட்சியில் வெளியாகியுள்ளது .அதுபோல " நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணந்தின்னிகளும் " என்கிற மீட்சி வகைக் கதை முன்றிலில் வெளிவந்துள்ளது ."என் முதல் ஆங்கிலக் கடிதம் " என்கிற கணையாழி ரகக் கதை சில காரணங்களை முன்னிட்டு தினமலரில் வெளியாகியுள்ளது . இதுபோல "கண்ணி நுண் சிறு தாம்பு "என்கிற தினமலர் ரகக் கதை கணையாழியில் வெளிவந்துள்ளது .
தொகுப்பில் இந்தவகைகளுக்குள் சிக்காமல் தனித்து விடப்பட்ட கதைகளாக இரண்டு கதைகளைச் சொல்லலாம் .சுபமங்களாவில் வெளியாகியுள்ள மணிரத்னத்தின் சமீபத்திய திரைப்படங்களை நினைவுபடுத்தும் "பிளாக் நம்பர் : 27 திர்லோக்புரி " என்கிற கதை ஒன்று.அதேபோல தினமணிக் கதிரில் வெளியாகியுள்ள " நாகமணி " என்கிற கதை மற்றொன்று.சாருவின் கதைகளை முன்னிட்டுப் பத்திரிக்கைகளைப் பார்க்கிறபோது அவை ஒன்றை ஒன்று சில புள்ளிகளில் அனுசரித்துக் கொள்ளும் தன்மைகள் கொண்டிருப்பதையும் ,அல்லது ஒன்றாகவே இணங்கக் கூடிய உறவுகள் கொண்ட வகைமாதிரிகள்தான் அவை என்பதையும் உணரமுடிகிறது .
சாருவின் கதைகள் பல வகை மாதிரிகளுக்குள் வரும்போதும் கூட அவை அனைத்தையும் ஒரே வகையானவை என்றே சொல்லவேண்டும் .தீவிர எழுத்தில் அவரது சமகால எழுத்தாளர்களுடன் ஒப்பிடும்போது ,சாருவின் பங்களிப்பு மிகவும் சாதாரணமானது என்பதுதான் என் எண்ணம் .
மொழியில் சாரு அடைந்துள்ள மந்தத்தன்மையை இத்தொகுப்பிலுள்ள கதைகள் தெரியப்படுத்துகின்றன .அ-நேர்கோட்டுத் தன்மை கொண்ட கதைகளைப்போல் வெளித் தோற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தக் கதைகளின் உட்பரப்பு நேர்கோட்டுத் தன்மை கொண்டதாக உள்ளது . உட்பரப்பிற்குத் தொடர்பற்ற வெளித்தோற்றத்தின் மூலம் மொழியில் வீழும் கதைகளாக சாருவின் கதைகளை உணர்கிறேன் .
சாருவின் மனம் வைதீகமான பெருநகரத்து அன்னியனால் நிரம்பியது என்பதை இவரது எழுத்தைப் படிக்கும் வாசகன் உணர்ந்து கொள்ளமுடியும் . இந்த வைதீகமான பெருநகரத்து அந்நியனை சாருவின் எழுத்தில் சகல பகுதிகளிலும் உணரமுடியும் .
தன்னுடன் மானசீகமான உறவு உள்ளவர்களாக பார்பரா, அத்தை,நடிகை சுஷ்மா போன்ற பெண்களை குழந்தையைப் போன்று பாவிக்கும் இந்த அந்நியனுக்கு ,நாப்கின் -யோனி -மாதவிடாய் -போன்றவையும் ,பாலியல் பழக்கவழக்கங்களும் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன .ஒவ்வொருவரின் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் உள்ள ரகசிய கதவு காற்றில் அசைந்த படியே உள்ளது .இத்தகைய ஒரு பாலியல் சூழலில் சாருவின் கதை வாசகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக பொதுவாகக் கருதப்படுகின்றது .?
எனது வாசிப்பில் இந்த பெருநகரத்து அந்நியனுக்கு வாழ்வின் ஒருபகுதி பெரும் அதிர்ச்சியூட்டுகிறது என்றே தோன்றுகிறது .இதற்குக் காரணம் சாருவின் மனதில் செயல்படக் கூடிய இரட்டைத்தன்மை . ஒரு பக்கத்தில் குழந்தை ,தெய்வம் .மறுபுறம் பிசாசும் ,அருவருப்பும் .இவை இரண்டும் ஒன்றிணையாமல் தனித்தனியே சாருவின் உலகில் செயல்படுகிறது .
இது ஜி .நாகராஜனின் எழுத்துக்கு முற்றிலும் எதிரான ஒரு உலகம் . ஜி.நாகராஜன் தெய்வங்களும் ,பிசாசுகளும் அற்ற உலகத்துக்குள் அல்லது தெய்வத்தையும் பிசாசையும் ஒன்றாக்கும் உலகத்துக்குள் மூடிக் கிடக்கும் இருளுக்குள் தன் மொழியை நகர்த்திச் செல்கிறார் .ஆனால் சாருவின் கதைகளில் காண்பது வெளிச்சத்தில் நின்றபடி பிசாசுகளையும் அருவருப்பையும் நினைத்து கோபத்திலும் பயத்திலும் சோர்ந்து அலறும் வைதீகமான பெருநகரத்து அந்நியனை .
சாருவின் நாவல் ஒன்றில் இவரைப் பற்றி எழுதப்பட்டுள்ள குறிப்பு "இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் முற்றிலும் சிதறுண்டுபோன தமிழ் மனம் சாரு நிவேதிதாவினுடையது "என்று பேசுகிறது .இந்தச் சிறுகதைகளை வாசித்துப் பார்க்கிறபோது இந்த வாக்கியம் சாருவை முன்னிட்டு முற்றிலும் பிழையான ஒரு வாக்கியம் என்றே தோன்றுகிறது .
தமிழில் நகுலனுக்கு இந்த வாக்கியம் ஒருவேளை பொருந்தக்கூடும் . முற்றிலுமாக தர்க்கங்கள் சிதறுண்டு போன நிலையில் நகுலனின் மனவெளி
திசை சிதைந்து நெருப்பு நாயாக மொழியில் அலைகிறது .நகுலனால் அந்தவெளியைப் படைப்புரீதியிலான விழிப்பு நிலையாக உருவாக்க இயலவில்லை என்றாலும் கூட சிதறுண்ட மனதின் வெளியைப் படைத்தது அவரது பங்களிப்பு .தமிழில் நகுலன் உருவாக்கி இருக்கும் வெளி முக்கியமான கலைஞனுக்கு அதிகபட்ச சாத்தியப்பாடுகளை வழங்கக்கூடும் .சாருவிடம் அ -நேர்கோட்டுத் தன்மை தோற்றமாக மட்டுமே தெரிகிறது .
சாரு நிவேதிதாவின் இந்தச் சிறுகதைகளை கோபி கிருஷ்ணனின் சிறுகதைகளோடு ஓரளவுக்கு மேலோட்டமாக தொடர்புபடுத்திப் பேச முடியும் .அதற்கு காரணம் வைதீகமான பெருநகரத்து அந்நியனின் கதைகள் என்று சாருவின் கதைகளை நினைவுபடுத்திக் கொள்ளும்போது ,கோபியின் கதைகளை காலத்தில்
பின்தங்கிப் போன ,கிராமத்தின் மனசாட்சியை இறுகப்பற்றியபடி தோற்றுக்கொண்டிருக்கும் அந்நியனின் கதைகள் என்று சொல்லத்
தோன்றுகிறது .மனசாட்சியைப் பெருமிதத்தோடு கட்டித் தழுவியபடி தோற்றுக்கொண்டிருக்கும் கோபியின் கோலம் வருத்தத்தை ஏற்படுத்தக் கூடியது.அது ஒருவிதத்தில் உறவையும் ஏற்படுத்தக் கூடியது . ஒருவிதத்தில் யோசித்துப் பார்கிறபோது கோபியின் மனசாட்சி எனது தாத்தாவினுடையது .எனக்கு தாத்தாவோடு உள்ள முரண்பட்ட உறவு கோபியுடன் சாத்தியப்பட்டிருக்கிறது . சாருவுடன் சாத்தியப்படவே இல்லை .
சாருவின் கதைகளில் எனக்கு வருத்தமோ ,துன்பமோ இல்லை .தேவை இல்லாமல் துன்பப்படுகிற ஆன்மா என்கிற எரிச்சலே உள்ளது .இதற்குக் காரணம் சாரு எனது காலத்தின் சக பயணியாக செயல்படுகிறார் என்பதாகும் .நானும் ,அவரும் வெவ்வேறு விதமான விழிப்பு நிலையோடு ஒரே ரயிலில் பயணம் செல்பவர்களாக இருக்கிறோம் ஒரே பெட்டி ,பக்கத்து இருக்கை.
சக பயணி மூல நோயாளிகளை மட்டுமே பார்த்துக் கொண்டு வருபவனாக இருக்கிறான் . அருவருப்படைகிறான் .கோபப்படுகிறான் .தோள்களை அழுத்தித் தொட்டு அதை எனக்குக் காட்டித் தருபவனாக இருக்கிறான் . வெதுவெதுப்பான ஈரமாய் வேட்டிகளில் விரியும் ரத்தக்கறையைப் பார்த்து அவன் அடைந்த மன உணர்வை நானும் அடையவேண்டும் என்று விரும்புகிறான் . குசுக்களின் சத்தம் அவனது விழிப்புணர்ச்சியில் பேரொலியாகக் கேட்கிறது .நான்கைந்து ஸ்டேஷன்கள் கடந்த பிறகு " குசுச் சத்தம் கேட்டால் என்னைய்யா ? "என்று கேட்க வேண்டி வருகிறது .
இன்றைய வாழ்வில் தத்துவங்களுக்கும் ,எழுத்தாளனுக்கும் ,கலைக்கும் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சவால்களில் ஒன்று ,முந்தைய காலகட்டங்களில் பெரும்
புகழோடும் ,விலை மதிப்போடும் இருந்த மாய எதிரி அரூபமாகி விட்டான் என்பதும் - எளிய எண்ணங்களால் நமது சுட்டு விரல் காட்டக் கூடிய எந்தத் திசையிலும் அவன் இல்லை என்பதும் ஆகும் .
பழக்கத்தின் காரணமாக மட்டுமே சுட்டு விரல்கள் மனப்பிறழ்வு அடைந்து திசைகளை வெறித்துக் காட்டுகின்றன .எதிரிகள் அற்றவர்களாக வாழ வேண்டியவர்களாக இன்றைய மனிதர்களின் இருப்பு சிக்கலாகிவிட்டது . கடவுளும் ,மாய எதிரியும் இணைந்து ஒருவராகி அரூப ரகசியங்களின் புதிர்களில் வேகமாகச் சென்று ஒளிந்து கொள்கிறார்கள் .
மனிதனுக்குக் கலை ,தத்துவம்,விஞ்ஞானம் ,மதம் என்று எல்லா தர்க்கங்களின் வாசல்களும் அடைக்கப்பட்டு விட்டன .இந்நிலையில் எழுத்தாளன் அல்லது கலைஞன் தனது நுட்பமான மொழியசைவின் மூலம் ரகசியங்களை நோக்கிப் பயணிக்க வேண்டியிருக்கிறது .எதிரியற்ற வெளியில் ஆவேசங்களும் கோபங்களும் செயல்களை இழந்துவிடுகின்றன . ஆனால் சாருவின் மொழி தவளையைப் போன்று ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்கு ஆவேசத்தோடும் ,கோபத்தோடும் துள்ளிக் கடக்கிறது . அது தனது துள்ளலில் கடந்து விடுவது ரகசியங்களையும் ,நுட்பங்களையும் , கடவுளின் இருத்தலையும் ஆகும் .உள்ளடுக்கின் சாரங்களைக் காணும் வெளியைக் கவனமற்றுக் கடக்கும் மொழியால் "நாகமணி " உட்பட அனைத்துக் கதைகளும் இந்தத் தொகுப்பில் திராணியற்ற விறைப்புத் தன்மையோடு உள்ளன .இத்தகைய மொழி மூலம் சாருவால் ஒரே கதையை மட்டுமே எழுத முடிகிறது .
சாருவின் மீட்சி வகைக் கதைகளில் தன்னைப் பற்றிய புனைவை நிகழ்த்திக் காட்டுவதில் ஆர்வமாக உள்ளார் .பார்பரா ,சுஷ்மா,அத்தை இவையெல்லாம் ஒரேவகைப்பட்ட கற்பனைகள் .அதிலும் பார்பரா வரும் கதை சாருவின் மனம் பெண்களின் உடலை முன்னிட்டு எத்தகைய வரிசையில் கட்டப்பட்டுள்ளது என்பதைத் தெரியப்படுத்துகிறது .
மொத்தத்தில் இந்தத் தொகுப்பை சாருவுக்கு என்ன முக்கியத்துவம் என்பதை யோசித்துப் பார்க்கும்போது அதிர்ச்சியோடும் ,பயத்தோடும் நடுங்கி கொண்டே உட்கார்ந்திருக்கும் சாருவின் கதைகள் எடுத்துக் கொள்ளும் சுதந்திரமே அது என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது .இது தமிழில் புதியதில்லை .சாருவின் கதைகளின் சுதந்திரம் நிகழ்த்தி முடித்த நாடக போன்று செயலற்றுக் கிடக்கின்றது .இந்த சுதந்திரத்தை பயன்படுத்தி கொண்டு சாரு என்ன செய்திருக்கிறார் என்பதற்கு பதிலேதும் இல்லை .
ஆனால் சாருவின் இயக்கம் மூலம் நிகழ்ந்திருப்பது ,இன்னொரு எழுத்தாளன் தனக்கு சாதகமாக எடுத்துக் கொள்வதற்கான சுதந்திரம் மட்டுமே ?


குறிப்பு :

(ஒரு புத்தக வெளியீடு நிகழ்விலேயே அந்த புத்தகத்தையும் , படைப்பாளியையும் முற்றிலும் நிராகரிப்பதற்கான ஒரு சூழல் தமிழ்நாட்டில் இருந்திருப்பதை யோசித்துப் பார்க்க ,ஆச்சரியமாகத்தான் உள்ளது .இப்போது இது சாத்தியம்தானா ? )

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"