ஏற்பாடு செய்த திருமணங்கள் மோடியால் நிறுத்தி வைக்கப்படவில்லை

ஏற்பாடு செய்த  திருமணங்கள் மோடியால் நிறுத்தி வைக்கப்படவில்லை

[ அம்பலம் இணைய இதழுக்கு என்று நண்பர் எழிலன் மோடியின் பணமதிப்பிழப்பு பற்றி என்னிடம் அவசரமாக ஒரு கட்டுரை வேண்டுமென இரு வாரங்களுக்கு முன்னர் கேட்டார்.கட்டுரை எழுதி அனுப்பிய பின்னர் என்னைப்பற்றிய குறிப்புகளும் வேண்டும் அனுப்புங்கள் என்றார் .அதன் பின்னர் புகைப்படங்கள் அனுப்பப் சொன்னார்.அனுப்பிவைத்தேன். இப்போது அதனை வெளியிட இயலாது மன்னித்துக்கொள்ளுங்கள் என்று பதில் அனுப்பியிருக்கிறார்.வெளியிட இயலாததால் எனக்கொன்றும் இல்லை.சுமார் இருபதினாயிரம் பேர் என்னுடைய பதிவுகளை படிப்பதாக இணையம் சொல்கிறது பிளாக் ,முகநூல் உட்பட.எனவே  வெளியிடப்படாததில் எனக்கு இடர்பாடு ஏதுமில்லை.வாசகர்கள் அதனை வேறு வழிகளில் படித்து விடுவார்கள்.

ஆனால் இவர்கள் ,எழிலன் போன்ற ஊடக  நண்பர்கள்  தங்களை ஜனநாயகவாதிகளாகவும் ,மாற்று கருத்துக்களை ஆராதிப்பவர்களாகவும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பவர்கள்.தாங்கள் கொண்டிருக்கும் கருத்துகளுக்குத் துணையான கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளைத்தான் இவர்கள் பிறரிடம் கேட்கிறார்கள்.பிறவற்றிற்கு இவர்களிடத்தே இடம் கிடையாது. அப்படி மேலும் மேலும் ஜனநாயகவாதிகளாக
பீற்றிக் கொண்டலையாதீர்கள் என்று நான் இவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். ]- லக்ஷ்மி  மணிவண்ணன்

[ கவிஞர் ,பத்திரிக்கையாளர்.சிலேட் சிற்றிதழின் ஆசிரியர்.கவிதைத்
தொகுப்புகள்,சிறுகதை நூல்கள் ,நாவல் ,கட்டுரைத் தொகுதிகள் என இதுவரையில்பதினோரு நூல்கள் வெளி வந்துள்ளன.

கட்டுரைத் தொகுதிகளில் "குழந்தைகளுக்குச் சாத்தான்  ; பெரியவர்களுக்கு
கடவுள் " ஆனந்த விகடன் விருது பெற்றது."ஓம் சக்தி ஓம் பராசக்தி " கட்டுரை
நூல் குமுதம் தீராநதி,அம்ருதா ஆகிய இதழ்களில் எழுதிய பத்தி கட்டுரைகளின் தொகுப்பு .இந்த ஆண்டின் சிறந்த கட்டுரை நூலுக்கான பீமராஜா விருது பெற்ற நூல் இது .

சமீபத்தில் வெளியான இதுவரையிலான ஒட்டுமொத்த கவிதைகளின் தொகுப்பு நூல் "கேட்பவரே" படிகம்  நவீன கவிதைகளுக்கான இதழின் சிறந்த கவிதை தொகுப்பு வரிசையில் வெளிவந்துள்ளது.

மலையாளம்,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

நாகர்கோவிலில் வசிக்கிறார். ]


ஏற்பாடு செய்த  திருமணங்கள் மோடியால் நிறுத்தி வைக்கப்படவில்லை

#

மோடியின் "  செல்லாது" அறிவிப்பு வந்ததிலிருந்து எங்கள் ஊர்பக்கமுள்ள
பணக்காரர்கள் படும் துன்பத்தைக் காண எனக்கு உண்மையாகவே மகிழ்ச்சியாக உள்ளது.எந்த மதிப்பீடுகள் என்னை சிறுவயதிலிருந்து அவமானத்திற்கும் இகழ்ச்சிக்கும் உட்படுத்தி வந்ததோ ,அந்த மதிப்பீடுகளின் உடமையாளர்கள் நெருக்கடிக்குள்ளாகிறார்கள் என்பதிலிருந்து என்னை வந்தடைந்த மகிழ்ச்சி இது.நாளையே இவர்கள் தரப்பு மற்றொரு மார்க்கத்தைக் கண்டடைந்து மேலும் வேகம் கூட்டுமாக இருக்கலாம்.ஆனாலும் என்னுடைய இன்றைய மகிழ்ச்சி பொய்யில்லை.நிதர்சனம்.மோடியின் பணமதிப்பு இழப்பு பற்றிய அறிவிப்பை நான் இந்த கண்ணோட்டத்தில் மட்டும்தான் பார்க்கிறேன்.பொருளாதார மேதைகளின் கண்ணோட்டங்கள் எதுவும் எனக்கு அவசியமில்லை.என்னைச் சுற்றிலும் மோடியின்
இந்த அறிவிப்பு மகிழ்ச்சியாக சுற்றுகிறது.கண்கொள்ளாக் காட்சிகள் பலவற்றை தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

எனது குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் உட்பட பண முதலைகள்,நிலக்கிழார்கள் இப்போது திவங்குகிறார்கள் .மட்டுமல்லாமல் பணத்தை மட்டுமே மதிப்பீடாகக் கொண்டியங்கிய சமூக மனதில் முதன்முறையாக ஒரு சிறு கீறல் ஏற்பட்டிருக்கிறது. பணத்தை முதன்மைப்படுத்தி அதனையே ,அதனை மட்டுமே சமூக
அந்தஸ்தாகவும் , ஒரேயொரு வாழ்க்கைமுறையாகவும் ஸ்தாபிதமும் கற்பிதமும் கொண்டு அகங்காரம் ஊதி பெருத்து வாழ்ந்தவர்கள் அவர்கள்.அவர்களின் அகந்தையும் தன்னகங்காரமும் அழிந்து தேம்பியழுவதை தினமும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.இதனைக் காண எனக்கு பெருமகிழ்ச்சியாக உள்ளது.

இரண்டு மாதங்களுக்கொருமுறை இரண்டு லட்சம் தேங்காய்கள் அறுவடை செய்கிற ஒரு அம்மா எனது நெருங்கிய உறவினர்தான் ,மோடிக்கு எதிராக தெருவில் இறங்கி பிரச்சாரம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.தூக்கமில்லை.பத்து ரூபாய் வைத்துக் கணக்கிட்டாலும் கூட மாத வருமானம் அவருக்கு பத்துலட்சம் ரூபாய். இன்று நேற்று அல்ல காலம்காலமாக அவர் பெற்று வருகிற வருமானம்
அது. அவர் தனது தோப்பில் வேலை செய்கிற அடிமைகளிடம்,பிற சாதிகளிடமும் அகங்காரம் தொனிக்க நடக்கும் மமதையைத் தந்தது இந்த
வருமானம்தான்.அதுதவிர்த்து ஆணவத்திற்கும், அவர் கொண்டியங்கும்
தன்னகங்காரத்திற்கும் வேறு காரணங்கள் எதுவுமே கிடையாது. அதன்பேரில்
தற்போது ஒரு பரிசீலனை வந்திருக்கிறது என்பதைத்தான் அவரால் தாங்க
முடியவில்லை.இத்தனைகாலம் கேட்பாரற்ற மகாராணியாகத் திகழ்ந்தவருக்கு இப்போது ஒரு பரிசீலனை செய்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. போவோர் வருவோர் அனைவரிடமும் இதே பேச்சுத்தான் அம்மையாருக்கு .இதுநாள் வரையில் அரசியல் பிரவேசம் எதுமே வாழ்வில் இல்லாதிருந்தவர்.மோடியின் செல்லாது அறிவிப்பு அவரை அரசியல் நோக்கி நகர்த்தியிருக்கிறது.அவரைப் பொறுத்தவரையில் இப்போதைய அவரது அரசியல் பிரவேசம் தான் அவருக்கு மிகவும் நேர்மையானது.வாழ்வில் முதன்முறையாக அவர் நெருக்கடிக்குள்ளாகி அரசியல்ரீதியில் போராடியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.இதுநாள் வரையில் மோடியின் தீவிர ஆதரவாளர் அவர்.அவர் எந்த காரணத்திற்காக மோடியை இதுவரையில் ஆதரித்தாரோ அந்த காரணத்திற்காகத் தான் நான் அவரை எதிர்த்தேன்.இப்போது எந்த காரணத்திற்காக மோடியை அவர் எதிர்க்கிறாரோ அந்த காரணத்திற்காகத் தான் மோடியை இந்த விஷயத்தில் முழுமையாக ஆதரிக்கிறேன்.மிகவும் எளிமையாகப் புரிந்து கொள்வதெனில் இதுதான் விஷயம்.சமாச்சாரம் .

இதுபோல என்னைச் சுற்றியிருக்கும் மூன்று நான்கு தலைமுறைப் பணக்காரர்கள் எனது குடும்பத்தில் மட்டும் நூறுபேருக்கும் அதிகம்.எனது ஒரு உறவினர் மருத்துவர்.  இரண்டிரண்டு கிலோமீட்டர் சுற்றளவுப் பரப்புள்ள நான்கைந்து குட்டிக்கிராமங்களின் உடமஸ்தர்  .அவ்வளவு சொத்து. எனக்கு ரேஷன் கடைகளில் உள்ள அத்தனை சலுகைகளும் இதுநாள்வரையில் அவருக்கும் உண்டு. அவர் தோட்டத்தில் இரவும் தங்கியிருந்து வேலை செய்கிற கூலித் தொழிலாளியின் சம்பளம் தினத்திற்கு எண்பது ரூபாய் . இப்போது கூலித்  தொழிலாளிகளின் கணக்கை பயன்படுத்தி ஏதேனும் செய்ய இயலுமா என முயற்சிப்பதை தொழிலாளிகள்  தேநீர்க் கடைகளிகளில் அம்பலம் செய்கிறார்கள்  . இந்த நிலை எனக்கு மிகுந்த
கிளர்ச்சியையும் உற்சாகத்தையும்  ஏற்படுத்துகிறது. ஒரு கூலித்
தொழிலாளியின் வாழ்க்கை தன்னிலும் ,தான் நம்பி வாழும் மதிப்பீடுகளைக்
காட்டிலும் தரம் உயர்ந்ததுதானோ என்கிற ஐயம் அவர் மனதில் இப்போதுதான்
லேசாக முளை பிடித்திருக்கிறது.

மக்களைக் கொன்றும் சம்பாரித்த மருத்துவர்கள் அனைவருமே எங்கள்
மாவட்டத்தில் நெருக்கடியான மனநிலையில் இருப்பதாகக் கேள்விப்
படுகிறேன்.சிலர் தொகையைக் குறைப்பு செய்திருக்கிறார்கள்.வாங்கும் தொகையை எதுவரினும் குறைப்பு செய்ய முடியாது என்று விடாப்பிடியாக இருந்து மனநெருக்கடியில் இருப்பவர்களும் உண்டு.மன நெருக்கடி அடைந்திருப்பவர்களில் மனநல மருத்துவர்களும் அடக்கம்.இவர்களின் மருத்துவமனைகளில் தாதியர்களாக கேரளாவிலிருந்தும்  பிற இடங்களில் இருந்தும் கொட்டப்படுகிற பெண்குழந்தைகளுக்கு மாத வருமானம் இன்றுவரையில் நாலாயிரத்து ஐநூறுக்கும் குறைவு.எந்த உத்திரவாதங்களும் கிடையாது.காசோலையில் சம்பளம் வழங்கப்படுவதில்லை.அந்த குழந்தைகளுக்கு அந்ததந்த மருத்துவமனைகள்
தயாரித்து வழங்குகிற தரமற்ற உணவுகளை இன்றுவரையில் எந்த அரசியல்வாதியும் தின்று பார்த்ததில்லை.தின்று பார்த்தால் மனிதர்கள் உண்ண இப்படியும் உணவுப் பண்டங்கள் இருக்கிறதா என்பது விளங்கும்.

மனநல மருத்துவர்கள் பெரும்பாலோர் ஸ்டாப் நர்ஸ்களை பணியில் வைத்துக் கொள்வதில்லை.ஸ்டாப் நர்ஸ்களை பணியில் வைத்துக் கொண்டால் மட்டுமே உள்நோயாளிகளை இரவு நேரங்களில் மருத்துவமனைகளில்  அனுமதிக்க முடியும்.உள்
நோயாளிகளை இருபத்துநான்கு மணிநேரம் இயங்கும் மனநல மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டுமாயின் இரண்டு ஸ்டாப் நர்ஸ்கள் அத்தியாவசியம்.ஸ்டாப் நர்ஸ்கள் குறைந்தபட்சம் இருபத்தியையாயிரத்திற்கு குறைவான ஊதியத்திற்கு
கிடைக்க மாட்டார்கள்.எனவே அவர்கள் அனைவருமே மது அடிமைகள் மறுவாழ்வு என்கிற அஸ்திரம் ஒன்றினைக் கையில் வைத்திருப்பார்கள்.கேட்பாரும் கேள்வியுமற்று உடனடி அனுமதி இவர்களுக்கு கிடைக்க ;இந்த குறுக்கு யுக்தி
ஒரு வழிமுறையைத் திறந்து தரும் .இருந்தாலும் ஆண் நோயாளிகளை இரவிலும் அனுமதிப்பதற்கு மட்டுமே இந்த அனுமதியும் உதவும்.உங்கள் குடும்பத்திலோ ,வட்டத்திலோ மனநல மருத்துவ உதவிக்கு அவசரமாக தேவையேற்படுகிற ஒரு பெண்நோயாளியை நீங்கள் இரவில் அனுமதிக்கும் தேவை ஏற்படுமேயாயின் நீங்கள் இவர்களிடம் சேர்ப்பிக்க முடியாது.வேறுஏதேனும் மருத்துவமனைகளில்
அனுமதித்து இரவைக் கழிக்க பரிந்துரைப்பார்கள்.  காரணம் இவர்களிடம்
ஸ்டாப் நர்ஸ்கள் இல்லாததால் இரவில் பெண்களை  அனுமதிக்க சட்டம் இடம் தராது மட்டுமல்ல,நோயாளிக்கு  ஏதேனும் இடர்பாடு ஏற்பட்டால் ஸ்டாப் நர்ஸ் அப்போது யார் ? என்கிற கேள்வி எழும்.இன்னும் ஒவ்வொரு நோயாளிகளிடமும் பணத்தை தாங்களே வசூலிக்கிற ,தாதியர்களையோ கணக்கர்களையோ வைத்துக் கொள்ளாத பல மனநல
மருத்துவர்களை நீங்கள் அனுபவத்தில் எல்லா ஊர்களிலும் பார்க்க முடியும்.பல மனநல மருத்துவர்கள் சல்லித்தனங்கள் நிறைந்தவர்கள்.

தங்களுக்கு பெரும் உபரியாகவும் ,வரியில்லா பணமாகவும் வந்து சேருபவற்றில் இருந்து கூட ஸ்டாப் நர்ஸ்களை நியமிக்க விருப்பமற்றவர்கள்
இவர்கள்.இவர்களைக் குற்றம் சுமத்த இதனைச் சொல்லவில்லை.இப்படியான உபரி வருமான புத்தி ஒன்று இங்கே பல இடங்களும் செயல்பட்டுக்
கொண்டிருக்கிறது.இவர்களில் பெரும்பாலோர் இதுவும் போதாதென்று
இப்போதெல்லாமமருந்துதொழிற்பேட்டைகளைவைத்திருக்கிறார்கள்.உங்களுக்கு இவர்கள் எழுதிக் கொடுத்து ;அவர்கள் மருத்துவமனைகளிலேயே விற்கும் மருந்துகளை நீங்கள் உலகமே அழிந்தாலும் கூட பிற மருந்தகங்களில் வாங்கவே முடியாது.இதன் தாத்பரியம் வேறொன்றுமில்லை.இவர்களின் ரீபேக்கிங் இண்டஸ்ரிகளில் இருந்து உங்கள் கைகளை வந்தடைபவை இவை.ரீபேக்கிங்
இண்டஸ்ரிகளின் வேலை ஏற்கனவே இருக்கும் கம்பெனி மருந்துகளை பிரித்து புதிய அட்டைகளில் விலை கூட்டியடைப்பது.உதாரணமாக ஒரு பாராசிட்டமால் மாத்திரை என்றே வைத்துக் கொள்ளுங்கள்.அதன் விலை ஒரு ரூபாய். அது புதிய கூட்டில் அடைக்கப்படும்போது அதன் விலை ஐந்தாகவோ ,ஆறாகவோ மாறிவிடும்.பொதியில் புதிய கம்பெனி ஒன்றின் பெயர் அச்சிடப்பட்டிருக்கும்.புதிய பெயர் அச்சிடப்பட்டிருக்கும்.மருந்து ஒன்றுதான்.விலை அதிகம். அதன் அலுவலகம்
மதுரையிலோ,திண்டுக்கல்லிலோ ,திருநெல்வேலியிலோ என்று
குறிப்பிடப்பட்டிருக்கும்.அப்படி அலுவலகங்கள் எதுமே கிடையாது."உங்களிடம் மட்டுமே கிடைக்கிற மருந்துகள் உலகத்தின் ஒரு பகுதியிலும் கிடைப்பதில்லையே ஏன் ?" என்று எப்போதாவது ஒரு மருத்துவனையேனும் கேட்டுப் பார்த்திருக்கிறோமா ? ஏன் இப்படி துணிகிறார்கள் ? பிறரை விடுங்கள். மருத்துவனும் ,ஆசிரியனும் இந்த சமூகத்தில் எப்போதிலிருந்து சட்டவிரோதமாகத் துணிந்தார்கள் ?

இவையெல்லாமே இனி சரியாகிவிடுமா? என்று நிரந்தர மோடியெதிர்ப்பாளர் ஒருவர் கேள்வியெழுப்பலாம் .தாதியருக்கு இனி முறையான சம்பளம் கிடைத்து விடுமா? பணமதிப்பில் ஏற்பட்டிருக்கும் பலமான அடி ஒரு பரிசீலனையை சமூகத்தின் ஏற்படுத்தியிருப்பதை உணர்கிறேன்.இது தாற்காலிகமாகக் கூட இருக்கலாம்.ஆனால் இதுவரையில் இல்லாதது.  பணமதிப்பு கீழிறங்கும்போது எனது மதிப்பும்,உயிர்மதிப்பும்  தாற்காலிகமாகவேனும் சற்று உயர்கிறது என்பதுதான் அவருக்கான எனது பதில் .இத்தைகைய பண மதிப்பிழப்பை ரஷ்யா உட்பட
கையாண்டு பார்த்த உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்பட்ட அவலங்கள்
இந்தியாவில் ஏற்படவில்லை  என்பது மட்டுமல்ல ஏற்படவும் செய்யாது என்பதை நினைவில் கொண்டே இவற்றைச் சொல்கிறேன்  .

எங்கள் ஊரில் பத்திரப்பதிவுகள் செத்த நிலைக்குத்
தள்ளப்பட்டிருக்கின்றன.புதிய கல்வித் தந்தைகள்,மருத்துவர்கள் இணைந்து
எங்கள் மாவட்டத்தில்  தரகர்களாக தொழில்பட்ட நிலவிற்பனைத் தொழில் இது. பாகப் பிரிவினைகள் ,இஷ்ட தானங்கள் தவிர்த்து பிற அனைத்து விதமான வியாபாரமும் படுத்திருக்கிறது.கழிந்த  பதினைந்து வருடங்களில் இருபது மடங்கு உயர்ந்திருந்த வியாபாரம் இது.பணத்தின் சமூக மதிப்பை கோடிகளுக்கு மாற்றிய தொழில் இது.திடீர்  கல்வித்தந்தைகளும் ,மருத்துவர்களும் இணைந்தே இந்த தொழிலில்  ஈடுபட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.அது இனி முன்னைப்போல மீளாது என்கிறார்கள்.அதில் முதலீடு கட்டியவர்கள் செய்வதறியாமல் சாய்ந்து கிடக்கிறார்கள்.

பதினைந்து வருடங்களுக்கு முன்னர் எனக்கிருந்த லட்ச ரூபாய் மதிப்புள்ள
நிலத்தின் இன்றைய  மதிப்பு  இரண்டு கோடி.பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இரண்டு லட்சத்திற்கு விற்றவை நான்கு கோடிகளாக முன்னிற்பது எவ்வளவு ஏக்கம் நிறைந்தது ? பதினைந்து வருடங்களுக்கு முன்னர் ஒன்றரை ஏக்கர் நஞ்சையை இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஊரில் விற்றேன்.அதன் இன்றைய நாளின் மதிப்பை கேள்விப்பட்ட நாளில் உண்மையாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.எவ்வளவுபேர் இங்கே சொந்த விவசாயநிலங்களை அற்ப தொகைகளில் இப்படி இழந்து பின்னர் வாடிப் போனவர்கள்?.நிலமதிப்பு சரிபாதியாக இறங்கும் நிலை உடனடியாக இருப்பதாகச் சொல்கிறார்கள் இங்குள்ள அனுபவஸ்தர்கள்.அப்படி சாத்தியமானால் இரண்டு சென்று வாங்கி வீடுகட்ட நினைப்பவனின் கனவில் இப்போதைய நிலை மறைமுகமாக ஒரு முதலீடு ஆகிறது.அவனுக்கு இப்போதைய நிலையில் ஒரு இழப்பும் இல்லை.அவன் மதிப்பு
கூடுதலாக்கப்பட்டிருக்கிறது.வரதட்சணை விலை குறைந்திருக்கிறது.அதுவும் ஊரில் பல கோடிகளுக்கு நகர்ந்திருந்த புனித வியாபாரம்.ஒரு ஏழை அவன் கனவின் மீதான முதலீடு இந்த மோடியின் நடவடிக்கை.ஒரே ஏழைக்கு ஒரு
சென்று நிலத்தை வாங்கும் தைரியம் ஏற்பட்டால் கூட அதற்காக மோடிக்கு நன்றி சொல்லியாக வேண்டும்.அவன் தன பெண்குழந்தைக்கான வரதட்சணைக்காக இனி பாதியளவிற்கு சம்பாதித்தால் போதும்.

எங்கள் பகுதியை சேர்ந்த மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் சிலவற்றில் பணத்தை எரித்ததாகவும் பின்னர் கொஞ்சத்தை  ஊழியர்களுக்கு கொடுத்ததாகவும் மக்கள் பேசிக்கொண்டார்கள் .இவற்றின் உண்மை நிலவரம் என்ன என்பது முக்கியமல்ல.இப்போது உருவாகிற வதந்திகள் அனைத்துமே எனக்கு தனிப்பட்ட  சுவாரஸ்யமூட்டுகின்றன.எங்கள் ஊர் பண்ணைகளில் அப்பாவிப்பண்ணைகள் பணத்தையும் நகைகளையும் பாதுகாக்க எடுக்கும் முயற்சிகளாக நிறைய கதைகள் உருவாகிவிட்டன.அவை பல தொல்கதைகளுக்கு நிகராக உள்ளன. மக்கள் இக்கதைகளை
திகில் கதைகளின் பாவங்களோடு ஆர்வத்துடன் சொல்கிறார்கள்.எங்கள் பகுதியில் முளைத்த திடீர்க் கல்வித்தந்தை கதைகதையாக தேநீர் கடைகளில் இருந்து  வீடுகளுக்கும் சென்று சேர்ந்து கொண்டிருக்கிறார்.எங்களுக்கு
மதுக் கஷாயக் கடைகளில் நிரந்தரக் கணக்கு இருந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் ;மது கஷாய லோட் மேனாக அறிமுகமானவர் திடீர் கல்வித்தந்தை.ஐநூறு கோடிக்குச் சொத்தும் ,இரண்டாயிரத்து ஐநூறு குழந்தைகள் படிக்கும் தனியார் பள்ளியையும் அவர் இந்த பத்தாண்டுகளில் உண்டாக்கியிருக்கிறார்.ஊழியர்களின் பி.எப் கணக்கு உட்பட சகலத்திலும் கலப்படம் செய்யும் கல்வித்தந்தை அவர்.

மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளின் பணம் எரிகிறது என
கேள்விப்படுகிறேன்.பிணம் எரிகின்ற மகிழ்ச்சியெனக்கு . பெரிய
மகிழ்ச்சி.எனது நண்பர்கள் சிலர் வீடுகளைக் கூட அவர்களிடம் பறிகொடுத்து
மனைவிமார்களை விதவையாக்கிச் சென்றார்கள்.அவர்கள்  சார்பாக  எனக்கு
மகிழ்ச்சியன்றி வேறு என்ன  ஏற்பட முடியும்? ஒருவருடைய பிணத்தை அறுபது நாட்களுக்குப் பிறகு ஒரு தனியார் எலும்புமுறிவு  மருத்துவமனையில் இருந்து போராடிப் பெற்றோம். வீட்டையெல்லாம் விற்று எல்லாப்பணத்தையும் கொடுத்த பின்னரும் இரண்டு லட்சம் கட்டிவிட்டு பிணத்தை எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள்."பிணத்தை எடுத்துக் கொள்".என்று போராடிய பின்னர் கொடுத்தார்கள் வேறு வழியின்றி .ஆறேழு வருடங்களுக்கு முந்தைய அனுபவம் இது.சமீபகாலங்களில் எனில் இதுவும்கூட இயலாது.விட்டுவிட்டுச் செல்லுங்கள்
" பிணத்தை எடுத்துக் கொள்கிறோம்" என்று சொல்லியிருப்பார்கள்.

மற்றபடி மோடியின் இந்த நடவடிக்கையை எதிர்ப்பவர்களை ஐந்துவிதமாகப்
பார்க்கிறேன்.நிரந்தர மோடி எதிர்ப்பாளர்கள் முதல் வகை .அவர்களுக்கு
இருக்கும் மோடி எதிர்ப்புத்தன்மை முற்றிலும் நியாயமற்றது என்னும் எண்ணம் எனக்கில்லை.ஆனால் ஏற்கனவே மோடியை எதிர்ப்பதற்கு காரணமாக உள்ள காரணங்களை வைத்து மட்டுமேதான் அவரை எல்லாவிஷயங்களிலும் மதிப்பிட வேண்டுமா என்பதே
அவர்களை நோக்கிய என்னுடைய கேள்வி.அப்படி பார்க்கப் போனால் இங்கே
தவறுகளுக்கு ஒருபோதும் உடந்தையாக நில்லாத ஒரு தலைவன் கூட கிடையாது என்பதே நிதர்சனம்.அறுபது வருடங்களில் காங்கிரஸ் கட்சி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆற்றியிருக்கும் அநீதிகளைக் கருத்தில் கொண்டால் அவர்களை ஒருபோதும் வீட்டு நடைகளிலேயே ஏற்ற முடியாது.ஒரு அநீதியை நியாயப்படுத்த இன்னொரு அநீதியை காரணமாக்க இயலாது.ஆனால் இவ்விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் உள்கிடப்பின் அரசியல் நல்லதல்ல  .

இரண்டாவது வகை இடதுசாரிகள்.அவர்கள் முன்வைக்கும்
புள்ளிவிபரங்கள்,எதிர்கால யூகங்கள் ஜோதிடங்கள் எவற்றின் பேரிலும் எனக்கு நம்பிக்கையில்லை.போலிக் புள்ளிவிபரங்களை பலவிஷயங்களிலும் தொடர்ந்து சாதித்து வருபவர்கள் . தங்களின் தரப்பிற்காக பொய்யில்
துணிபவர்கள்.இறப்பின்,தற்கொலைகளின் புள்ளிவிபரங்களை இன்று எவர்
பாக்கட்டில் வேண்டுமாயினும் வாய்கிற சந்தர்ப்பங்களில்  கொட்ட முடியும்
என்பது இங்கே எவரும் அறியாததல்ல.ஜெயலலிதா அம்மையார் கர்னாடகச்  சிறையில் விடுதலைப் போரில் ஈடுபட்டிருந்தபோது  ஊருக்கு ஊர் தற்செயலாக சுயசாவு செய்து கொண்டவர்களை இந்த பட்டியலில் இணைத்தோம்.கிராமங்களில் அந்தந்த குடும்ப நலம்கருதி மக்கள் அரசியல்வாதிகளுடன் இணைந்து ஆற்றுகின்ற காரியங்கள் இவை.அதனால் தற்கொலைகள் அனைத்துமே இவ்வாறானவை என்று சொல்ல
வரவில்லை.இப்படியான சாவு புள்ளிவிபரங்கள் திடமானவை அல்ல. இடதுசாரிகளை நம்ப முடியும் என்று தோன்றக் கூடிய சிறிய காரியங்களைக் கூட அவர்கள் சமீபகாலங்களில் செய்யவில்லை.ரஷ்யாவின் கார்ப்பரேட்டுகள் எனில் அவர்கள் உள்ளூரிலேயே ஆதரிக்கக் கூடியவர்கள்தான்.கூடங்குளம் அணுஉலைகளை அவ்வாறுதான் ஆதரித்தார்கள். அவர்களுக்கு காரியங்களைக் காட்டிலும் யார் செய்கிறார்கள்
என்பதே பிரச்சனை.அவர்களை இவ்விஷயத்தில் நம்புவதற்கு ஏதுமில்லை.இந்த திட்டத்தை மோடி அறிவிப்பதற்கு சற்றைக்கு முன்னர்தான் ஜப்பானோடு அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்.அது பற்றிய ஒரு கருத்தைக் கூட தமிழ்நாட்டுக் கம்யூனிஸ்டுகள்  இதுவரையில் தெரிவிக்கவில்லை.இவர்களின் மக்கள் நல வேட்கை அதிகாரமற்றவனின் வெற்று நாடகம்.வருடக்கணக்கில் நடந்த ஒரு முக்கியமான மக்கள் போராட்டத்தில் மக்களுக்கு எதிராக இருந்தவர்கள்.அச்சுத்தானந்தனை களியக்காவிளையிலிருந்தே திருப்பி ஊருக்கு அனுப்பியவர்கள்.

மூன்றாவது வகையினர் பெருமுதலாளிகளையும் அதாவது கார்ப்பரேட்ஸ்யும் சாமானியனையும் சேர்த்து குழம்பமடைகிறவர்கள்.இதனை ஜோடித்து உருவாக்கியவர்களில் பலர் கடைநிலை இடதுசாரிகள்தான்.கார்ப்பரேட் தரப்பு என்பது அரசாங்கத்தின் பெரிய அங்கமாக உருமாறி உலகெங்கும் கால்நூற்றாண்டுகளுக்கும் மேல் ஆகப் போகிறது.அது உலகெங்கும் உறுதிப்பட்டே கால்நூற்றாண்டுகளுக்கும் மேலாகிறது என்கிற விஷயம் கூட தெரியாமலா இன்று
இவர்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள் ? ரஷ்ய ,சீனா உட்பட நிலைமை
இதுதான்.மேற்குவங்கமும்,கேரளமும் கூட இவற்றிலிருந்து விலக்கு பெற்றவை ஒன்றும்  அல்ல.தொழில்துறைகள் முழுவதுமாக பெருநிறுவனங்களைச் சார்ந்தவையாக
மாறிவிட்டன.பெருநிறுவனங்கள் இன்று அரசின் முக்கிய அங்கம் .அவற்றின்
ஏற்றத்திலும் சரி தாழ்விலும் அரசாங்கம் முக்கிய பங்கெடுப்பது என்பது
இந்தியாவில் மட்டுமே நடைபெறுகிற காரியங்கள் இல்லை.ரஷ்யாவிலும்
,சீனாவிலும் இதுதான் நிலை.பெருநிறுவனங்களை சாமானியனோடு ஒப்பிட்டு
இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகள் மேடைகளில் மட்டுமொரு கருத்தியல் பாசாங்கு செய்கிறார்கள் . டாடா விழும்போது டாட்டா குழுமத்துடன் உள்ள அத்தனை மக்கள் இணைப்பும் இணைந்துதான் விழும் .டாடாவையோ ,ரிலையன்ஸையோ அல்லது இதுபோன்ற பிற நிறுவனங்களையோ சாமானியனுடன்  ஒப்பிட்டு பேசுவது  வெற்றுக் குழப்பத்தை
ஏற்படுத்துவதற்குத்தானே அன்றி அவற்றில் காரியமில்லை.டாடாவிற்கோ பிற நிறுவனங்களுக்கோ  ஏற்படுகிற இழப்பு   என்பது தனிநபர் இழப்பு
அல்ல.நாட்டின் இழப்பையும் உள்ளடக்கியது அது. அப்படியொருவர் விஷயங்களை புரிந்து கொண்டிருப்பார் எனில் அவர் தனது பாடத்தை ஆராய்ந்து கொள்ளவேண்டும்.இங்கே ஏற்கனேவே வருமான வரியை செலுத்திக் கொண்டிருக்கிற ஒரு தரப்பு உயிருடன் இருந்து கொண்டிருக்கிறது.இப்போது நடைபெறுகிற சங்கதிகள்
அனைத்து தரப்பினரையும் அதன் வளையத்திற்குள் கொண்டுவர
முயற்சிக்கின்றன.கார்ப்பரேட்டுகளில் பணிபுரியும் , அதிகபட்ச ஊதியம்
பெறும் ஊழியர்களில் பலர் தங்கள் மூன்றுமாத கால சம்பளத்தை வரியாகக்
கட்டுபவர்களாகத்தான் இருப்பார்கள்.அதுபோல அரசாங்கப் பணியாளர்களும்
ஏற்கனவே இந்த வளையத்திற்குள் இருப்பவர்கள்.அவர்களில் உயர் அதிகாரிகள் பெறுகிற லஞ்சம் மட்டுமே இதுவரையில் இந்த  வளையத்திற்குள் இல்லை.

இவர்களிலேயே இவ்விஷயத்தை மக்களுக்கெதிரானதாக மாற்ற முயலும் தி.மு.க போன்ற கட்சிகள் கார்ப்பரேட்ஸ்க்கு எதிரானவர்கள் இல்லை.இவர்கள் அம்பானியையும் சாமானியனையும் ஒன்றாகக் கருதுவது போல மக்களிடம் ஒரு முகத்தை காட்டுவது முழுமையான பாசாங்கு.கனிமொழி , ராஜா போன்றோர் முன்வைக்கும் பாதுகாப்பு வாதங்கள்  பெருமுதலாளிகளின் வாதங்கள்தான். .ராஜா தன் தரப்பிற்கு முன்வைத்திருக்கும் வாதங்கள் அனைத்துமே கார்ப்பரேட் வாதங்கள் தான் என்பது நினைவில் இருந்தால் நல்லது .இல்லையெனில் இந்த விஷயத்தை வைத்து
மட்டுமே வைத்து  வாதிடுவது போல அது ஆகாது.தங்களுக்கு  எதிராக தாங்களே வாதிடுவது போலாகி விடும்.சாம்ஸ்கி .அமர்த்தியா சென் போன்ற நிபுணர்களின் வாதங்கள் எதுவுமே இவர்களுக்கு உதவாது.அவர்கள் முற்றிலுமாக இந்த கார்ப்பரேட் தரப்பு அரசு அதிகாரத்தையே
ஐயங்கொள்பவர்கள்.மறுப்பவர்கள்.அவர்களும் இவர்களும் ஒன்று அல்ல. தி.மு.க கார்பட்ரேட்ஸ்க்கு துணை நிற்கும் உதவும் கட்சி.கார்ப்பரேட் பெருமூலதன அரசாங்கத்தை ஜனநாயகமாகக் கருதும் நிலஉடமைப் பண்பு கொண்ட கட்சியும் கூட.

நான்காவது வகை இந்த இக்கட்டில் உண்மையாகவே மாட்டிக் கொள்வோம் என்று கருதுகிற பல கட்சிகளை சேர்ந்த  வருமான மறைப்பில் இதுநாள் வரையில் காலங்கடத்திய புதிய உள்ளூர் செல்வந்தர்கள் .இப்படி பாதிப்படைந்தவர்கள் அல்லது பாதிக்கப்படுவோம் என்று கருதுகிறவர்கள் அனைத்து கட்சிகளிலும் இருக்கிறார்கள்  .கட்சிக்காரர்களாகவும் பெரும்பாலும்  இவர்கள்தான் இருக்கிறார்கள்.இவர்களில் பல கட்சிகளிலும் எனக்கு நண்பர்களாக இருப்பவர்களும் உண்டு.இவர்களில் பா.ஜ.கவினரும்  உண்டு. கழிந்த இருபது வருடகால தமிழ்நாட்டு  அரசியலில் முறைகேடாக பணம் வளர்த்தவர்கள் தரப்பில் , கல்விநிலையங்கள்,தனியார் தொலைக்காட்சிகள்  இதில் சிறப்பிடம் பெறுபவை. கல்குவாரிகள் மணல் மாபியாக்கள் ,கந்து வட்டிக்காரர்கள் ,நிலத்தரகர்கள் இவர்கள் மட்டுமே அரசியலில் ஜொலிக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டது என்பது எதோ மறைமுகமாக நிகழ்ந்ததல்ல .பொதுமக்கள் அறிய அனைவர் முன்னிலையில் நடந்தது.குறிப்பிட்ட வரம்பிற்கு அப்பால் பணம் சம்பாதித்து விட்டாலே அதனைப் பாதுகாக்க  ஏதேனும் அரசியல் கட்சியில் இருந்தாக வேண்டும் என்கிற
நிர்பந்தம் ஏற்பட்டு தமிழ்நாட்டில்  நிறைய காலம் ஆயிற்று .மணல்
மாபியாக்கள் கல்விக்கூடங்கள்,தொலைக்காட்சிகள் நடத்துகிறார்கள்
.முற்போக்கர்கள் அவர்களுக்கு ஊழியம் செய்கிறார்கள். இவ்வகையினர்  கவலை  கொள்வதில் அவர்களுக்கு அர்த்தம்   இருக்கவே செய்கிறது. தி.மு.க;
அ.தி.மு.க என இரண்டு தமிழ்நாட்டுக் கட்சிகளுமே தங்களுடைய சட்டமன்ற
,நாடாளுமன்ற பதவிகளை பல கோடிகளில் விற்பனை செய்யத்தொடங்கி பல்லாண்டுகள் கடந்ததை மக்கள் அறிவார்கள்.இவர்களால் இப்போது மக்களை வைத்தும் பரிமாற்றம் செய்ய இயலவில்லை.கான்டராக்ட் கமிஷன் தொகைகளை புதிய பணத்தில் கேட்கும் அரசியல்வாதிகள் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள். மக்களை வைத்து அனைத்து காரியங்களையும் சாதித்துப் பழகியவர்கள் இந்த விஷயத்தில் அது பலிக்கவில்லை என்பதால் மக்களின் பிரச்சனையாக இதனை மாற்ற முயற்சிக்கிறார்கள் .நமது தோல்மினுக்கீ தமிழ்நாட்டு போதமற்ற அறிவுஜீவிகள் ,பத்திரிகையாளர்கள் இவர்களுக்குத் துணை.

ஐந்தாவது தரப்பினர் நடைமுறை உருவாக்கியிருக்கும் சிரமங்களில் இருந்து
இந்த விஷயத்தைப் பார்ப்பவர்கள்.அப்பா வெளியூரில் இருக்கிறார் ,நான்
இங்கிருந்து அவருக்கு அனுப்பி வைத்தால் தான் அம்மா சாப்பிடமுடியும் என்ன செய்வதென்று தெரியவில்லை என்கிற  ரீதியில் பத்திற்கும் மேற்பட்ட நடைமுறை சிரமங்கள் மோடியின் இந்த "செல்லாது " அறிவிப்பால்
ஏற்பட்டிருக்கின்றன.கணக்கு வைத்திருப்பவர்களில் பெரும்பான்மையோர்
சேமிப்புக் கணக்குதான் வைத்திருக்கிறார்கள்.தொழில் கணக்குகளையும்
அதில்தான் பற்று வைத்துக் கொள்கிறார்கள்.அரசும் ,வங்கியும் அதில்
வைக்கப்படும் அனைத்தும்  வருமானமே என சொல்லிக் கொண்டிருக்கிறது.பலருடைய கணக்குகளில் அதில் பதிவாகும் பணத்தில் பத்து சதமானம் கூட வருமானமாகாது.இந்த தரப்பினரின் கவலைகள் ஏற்புடையாகவே உள்ளன.இவர்கள் முன்தீர்மானங்களின் அடிப்படையில் பேசவில்லை . நடைமுறையிலிருந்து பேசுகிறார்கள்.வருமான வரியின் தன்மையும் ,செலுத்தும் தன்மையும் குழப்பமற்றதாக எளிமையானதாக இருக்கவேண்டும் என்கிற கருத்தும் ஏற்புடையதே .வரியின் அளவு குறையும் பட்சத்தில் மறைக்கும் அவசியமும் குறையும்.

மற்றபடி எங்கள் ஊரில் ஒரு திருமணமண்டபத்தில் கூட ஏற்பாடு செய்த
திருமணங்கள் மோடியால் நிறுத்தி வைக்கப்படவில்லை.முன்னரே வரதட்சணை பேசி முடிக்கப்பட்ட நிச்சயதார்த்தங்களில் கூட வரதட்சிணை பாதியாக சில இடங்களில் குறைக்கப்பட்டிருக்கிறது. பல காலங்களுக்கு முன்னர் வரதட்சனைகளுக்கு எதிராக நீங்கள் பேசிக் கொண்டிருந்தது போல எனக்கு நினைவிருக்கிறது தோழர்களே ! அது நடைமுறையாகிறது இப்போது.மோடிக்கு நன்றி.

2 comments:

  1. உங்கள் கட்டுரையை முழுமையாக வாசித்தேன். உங்களின் பெருமளவு கருத்துக்களில் நானும் உடன்படுகிறேன். நீங்கள் குறிப்பிடும் பாதிப்படைந்த ஐந்தாம் வகையினர் தான் இங்கு அதிகம். ஒரு திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து அதற்கான தேவைகளை நிறைவேற்றிய பின்பு அல்லவா அதற்கு செயல்வடிவம் கொடுத்திருக்க வேண்டும். 2000ரூ. கரன்சிகளை முதலிலேயே கொண்டு வந்தவர்கள் 500ரூ.கரன்சிகளை குறைந்தபட்சம் ரிசர்வ் வங்கிகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு திட்டத்தை அறிவித்திருந்தால் அனைவராலும் பாராட்டுப் பெற்றிருக்கும். இன்றுவரை 500ரூ. புதிய கரன்சிகள் புழக்கத்தில் வரவில்லை. 2000ரூ.யைக் கையில் வைத்துக் கொண்டு சில்லரை செலவுகளைச் செய்ய முடியாமல் நானே அல்லாடிக் கொண்டிருக்கிறேன். நான் என்னிடமிருந்த பழைய 500 ரூ. மற்றும் 1000ரூ. கரன்சிகளை வங்கியில் கட்டிய தினத்தில் - மணிக்கணக்கில் வரிசையில் நின்று கட்டினேன் (ரூ.15000/) - வங்கியிடமிருந்து ஒரு பைசா கூடப் பெற முடியவில்லை. ஏனேன்றால் தங்களின் வங்கியில் கையிருப்பு மொத்தமும் காலியாகிவிட்டது என்று சொல்லி விட்டார்கள். அடுத்தடுத்த நாட்களிலும் 2000ரூ. கரன்சி தவிர்த்து வேறு எதுவ்ம் இல்லை என்று சொல்லி விட்டார்கள். சரி அதையாவது எடுத்துக் கொள்ளலாம் என்றால் அதற்கும் 10000ரூ.க்கு மேல் எந்த வங்கியும் தருவதில்லை. என்னுடைய மாதச் செலவிற்கு ரூ.25000/ தேவைப்பட்டால் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் வேலை மெனக்கெட்டு வங்கி வரிசையில் நின்று வேலை இழக்க வேண்டும். அப்புறம் 2000ரூ.யைக் கையில் வைத்துக் கொண்டு சில்லரை கிடைக்காமல் அல்லாட வேண்டும். நான் டெபிட் கார்டை உபயோகிப்பதே இல்லை - ஏடிஎம் மெசின்களில் தவிர்த்து. ஏனென்றால் கார்டைப் பிரதி எடுத்து பின்னால் பயன் படுத்தி விடுவார்களோ என்ற பயம் தான். ஆனால் இப்பொழுது வேறு வழியில்லாமல் இரண்டு மூன்று சமயங்களில் டெபிட் கார்டைப் பயன்படுத்தினேன் - மளிகைக் கடையிலும் மற்றும் டூவீலர் டயர் டியூப் மாற்றுவதற்காகவும். இரண்டுமே அதிகவிலை வைத்து விற்கும் கடைகள். அதுமட்டுமில்லாமல் 2% வரை சர்வீஸ் டேக்ஸ் என்று அதிகப்படியாக பணத்தைப் பெற்றுக் கொண்டார்கள். அரசாங்கத்தின் அள்ளித் தெளித்த அவசரச் சட்டத்திற்காக நான் ஏன் என்னுடைய அதிகப் பணத்தை இழக்க வேண்டும்? என்னுடைய பணத்தை தருவதற்கு வங்கிகள் ஏன் லிமிட் வைத்திருக்க வேண்டும்!

    ReplyDelete
  2. இன்னொன்றையும் சொல்ல மறந்து விட்டேன். தபால்நிலைய வங்கிகளில் நவம்பர் இறுதியிலிருந்து டிசம்பர் முதல் வாரம் வரை யாருக்குமே பணம் தரவில்லை. ஏனென்றால் தங்களிடம் கையிருப்பு மொத்தமும் தீர்ந்து விட்டது என்று சொல்லி விட்டார்கள். முதல் வாரத்திற்கு அப்புறமும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 6000ரூ. மட்டுமே கொடுத்தார்கள். பெரும்பாலான சாமான்யமக்கள் தபால்நிலைய வங்கிகளில் தான் சேமிப்புக் கணக்கை வைத்திருக்கிறார்கள். பணப்புழக்கம் இல்லாததால் சிறு தொழில்கள் மொத்தமும் முடங்கிக் கிடக்கிறது. நேர்மையான முறையில் இழப்புகளைக் கணக்கிட்டு கறுப்புப் பணத்தின் மூலம் அரசாங்கத்தைற்குக் கிடைத்த வரிவகை முதலான லாபங்களையும் கணக்கிட்டால் இழப்புகள் தான் அதிகமிருக்கும் என்பது என்னுடைய தீர்மானம்.

    ReplyDelete

கடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன.

கடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன. இன்று காலையிலேயே வழக்கத்திற்கு மாறாக கன்னியாகுமரி மாவட்டம் விடிந்தது.கடற்கரைகளில் இருந்து ...