கலை சோறு போடுமா ?

கலை சோறு போடுமா ?

கலைஞர்களை நோக்கி தமிழ்ச் சமூகம் திரும்பத்திரும்ப கேட்கும் கேள்வி  கலை சோறு போடுமா ? என்ன செய்கிறீர்கள்  நீங்கள் ? என்கிற கேள்வி தொடர்பானது அது .இந்த வயது வரையில் இந்த கேள்விக்கு விடைகாண முடியவில்லை . என்னதான் செய்து கொண்டிருக்கிறோம் நாம் ? நாம் செய்பவற்றின் அர்த்தம் எப்போதேனும் விளங்குமா? தெரியவில்லை .ஒரு நல்ல சட்டையை போட்டு விட்டு வந்தால் யார் எடுத்துத் தந்தார்கள் ? என கேட்கும் நண்பர்கள் கூடவே இருக்கிறார்கள்.தமிழ்ச் சமூகம் பிற செயல்களைச் செய்யாமல் கலையின் வேலையை மட்டும் செய்து கொண்டு வாழ்பவர்களை சந்தேகிக்கிறது.அப்படி இருப்பதைக் காண அச்சப்படுகிறது . எப்படி முடியும்? அப்படி வாழமுடியாது என்கிற பாடத்தை தானே உறுதியாக நம்பிக் கொண்டிருக்கிறோம்?

இளைஞர்களுக்கு உறுதியாக நான் சொல்லிக் கொள்வது ,நீங்கள் பிடிவாதமாக கலையின் மனம் கொண்டு தீவிரப்படுவீர்களேயானால் வாழமுடியும் . நம்பிக்கையை மட்டும் விடாமலிருக்கவேண்டும் . விக்கிரமாத்தியன் நம்பி ,கோணங்கி ,நான் உட்பட சிலர் உதாரணங்கள் தமிழ் சூழலில் உண்டு.

நான் நாளிதழ்களில் செய்தி ஆசிரியரிலிருந்து , கட்டிட வேலையில் கையாள்,கழிவறை துப்புரவுத் தொழிலாளி , தொழிற்சாலைகளில் பெரிய எந்திரங்களில் போர்மன் வேலை , மும்பையில் எனது கல்லூரி வாழ்க்கை முடித்து சில காலம் கணக்காளராக ,தமிழ் சினிமாவில் ஸ்கிரிப்ட் ரைட்டராக , இணைய தளங்களில் உதவி ஆசிரியராக , இப்படி எத்தனையோ வேலைகளை செய்து பார்த்து விட்டேன் . வியாபாரத்தில் விட்ட சொத்துக்களின் இன்றைய பொருள் மதிப்பு ஒன்றரை கோடிக்கு அதிகம் .ஒன்றரை ஏக்கர் நஞ்சை நிலத்தை வியாபாரம் அடித்து சென்றது . பின்னர் அதுபோல ஒரு மடங்குக்குக் குடித்து அழித்திருப்பேன்.என்னோடு உடன் சேர்ந்து குடித்து செத்தவர்கள் மட்டும் இருபத்திரண்டு பேர்.கொலை,தற்கொலை ,மன வியாதி,மின்கம்பத்தில் ஏறி மாய்த்துக்கொண்டவன் என.இவை மிகையின் கொட்டு மேளச் சத்தத்திற்காக சொல்பவை அல்ல .

சமீபத்தில் ஒரு எலிக்குஞ்சு எங்களோடெல்லாம் சேர்ந்து நீங்கள் குடிக்க மாட்டீர்களா எனக் கேட்டதற்கு "இறந்து விடுவாய் என பதில் சொன்னேன் " . நாங்கள் செய்த காரியங்களுக்கு இப்போது எப்படி உயிரோடிருக்கிறோம் என்பதே தெரியவில்லை.எனது சுயசரிதை தமிழில் எழுதப்பட வேண்டுமாயின் தள்ளாத முதுமை வந்து சேரவேண்டும் . தள்ளாத முதுமையிடம்தான் அது மசியும்.செய்த காரியங்கள் ஒன்றுமே விளங்கவில்லை.நாம் செய்ய வேண்டிய வேலைகளை மட்டும்தான் செய்யவேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்குள் நடுவயது வந்து விட்டது . கலைஞன் எவ்வளவு போராட்டங்கள் இருந்தாலும் கூட செய்ய வேண்டிய வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டியதுதான் .எல்லோரும் புறா பிடிக்கச் செல்கிறார்கள் என்பதற்காக அவனும் உடன் செல்லவேண்டியதில்லை . எனது நாற்பது வயதில்தான் கடமையைச் செய் ,பலனை எதிர்பாராதே எனும் கீதை வாக்கியத்தின் பொருள் என்ன எனபது விளங்கிற்று .ஊழ்வினை விரட்டும் போது புகை ரதத்திலிருந்து குதித்து விடக்கூடாது . படைப்பில் கடுத்த வண்ணத்தைப் பலமாக அடர்த்தி ஏற்றவேண்டும் . செய்த வேலைகளில் கழிவறை துப்புரவு வேலை மட்டுமே ,குறைந்த நேரத்தில் அதிக சம்பளம் கொண்ட வேலையாகவும் ,மனதுக்கு ஆறுதல் தருகிற வேலையாகவும் அமைந்தது .

"கவிதை சோறு போடுமா ? ,இலக்கியம் வாழவைக்குமா ? கலை வேலைக்காகுமா ? சிறு வயது முதற்கொண்டு இன்றுவரையில் எதிர்கொண்டுவரும் கேள்விகள் இவை .இக்கேள்விகளுக்கு இன்றுவரையில் என்னைப் பின்தொடர்வதில் சலிக்கவும் இல்லை . குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகிக் கொண்டிருக்கிறார்கள் . பேரன் பேத்திகள் கண்டாலும் இந்த கேள்விகள் என்னிடம் நிலுவையில்தான் இருந்து கொண்டிருக்கும் போல .ஏழாவது வகுப்பு படிக்கும்போது ,லெனின் சங்கர் என்னை தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றத்திற்கு அழைத்துச் சென்றான்.குடும்ப அநீதிகளில் அல்லாடிக் கொண்டிருந்த என்னை நெறிக்குக் கொண்டுவந்த வழிகாட்டி, முதல் குரு எல்லாம் அவன்தான் .எட்டாவது படிக்கும்போது வீட்டைவிட்டு வெளியேற முயன்றேன் .சிறு வயதில் அப்பா தொடங்கி வைத்த கேள்விகள் இவை .பின்தொடர்ந்தவர்கள் உறவினர்கள் .அவர்களிடமிருந்தெல்லாம் தப்பித்தேன் . அவையெல்லாம் ஒன்றுமே எளிமையான காரியங்கள் இல்லை .

எப்படித்தான் தப்பித்தாலும் ,எங்குதான் சென்றாலும் அங்கே ஒருவர் இந்த கேள்விகளைக் கேட்பதற்கென்றே இருந்து கொண்டே இருக்கிறார் .அப்பாக்கள் தொடங்கி வைக்கிற கேள்விகள் , கொடுக்கிற சாபங்கள் அவ்வளவு எளிமையானவை அல்ல .கடக்கக் கடுமையானவை . சாகும்வரையில் பின்தொடர்பவை .நீங்கள் ஒரு நல்ல தந்தையாக இருக்க விரும்புபவர் எனில் தயவு செய்து குழந்தைகளைச் சபிக்காமலிருங்கள்.

ஒரு நல்ல உடை உடுக்க முடியாது ! நல்ல உணவு உண்ண முடியாது ! . குடும்பத்தோடு ஒரு நல்ல சொகுசுப்பயணம் செல்ல முடியாது . எப்படி வாழ்கிறீர்கள் ? என அதிசய வெறுப்புடன் கேட்க அங்கே ஒருவர் வந்துவிடுகிறார்.நாம் இடம் கொடுத்தால் அப்பா தொடங்கி வைத்த அனைத்து கேள்விகளையும் நம்மிடம் கேட்டுவிட்டுத் தான் அவர் நகர்ந்து செல்வார்.

அறிந்தவரையில் தத்தா ,பாட்டிகளிடம் இக்கேள்விகள் இல்லை அவர்களுக்கு எப்படியிருந்தாலும் சரிதான் .இருக்கவேண்டும் அவ்வளவுதான் .அதற்கு மேல் ஒன்றும் இல்லை .அள்ளி முடித்து அமுதூட்ட ,வாரி அணைத்துக்கொள்ள ....

வயல் வெளிகளில் எலிகளும்,தவளைகளும் செத்து மிதப்பதைக் கண்டு அஞ்சி நடுங்கியவர்கள் அவர்கள்.அவற்றையெல்லாம் அபசகுனமாய்ப் பார்த்தவர்கள் ! விஷம் வைத்தவர்கள் இவர்கள் .

அப்பைய்யா கட்டியணைக்கும் போதுள்ள உடல் வாசனையும்,அப்பம்மையின் மடியில் புரளும் மணமும் என்னிடம் தீருவதே இல்லை .அது தீர்ந்தால் போய்ச் சேர வேண்டியதுதான் . இக்கேள்விகளுக்கு இடையூறாக அவர்களும் பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறார்கள் . அவர்கள்தான் இந்த ஜென்மத்திற்கான சத்து . எனது எளிமை,பேரலங்காரம் ,அபூர்வம் எல்லாம் . அவர்களது கோபமும் ,கவலைகளும் எனது உள்ளீடு .தீரா அன்பும் அதுதான் . அவர்களின் வாசனையற்ற சிறு பொருளும் என்னிடம் இல்லை .

நவீன அப்பாக்களும் அம்மாக்களும் அஞ்சிப் பிறந்தவர்கள் .தனிமனித அச்சம் அவர்கள் கொண்டது . இக்கேள்விகளும் இந்த அச்சத்திலிருந்து பிறப்பவைதாம்.தானென்றும்,தனதென்றும் கொண்டவர்கள் .

இக்கேள்விகளை எனது கவிதைகளும்,புனைவெழுத்துக்களும் எதிர்கொண்டவிதமே எனது வாழ்க்கை .இக்கேள்விகளின் கொடுவாள் கூர்முனையை , எனது எழுத்துக்கள் ஓடித்தெறிந்தன .உதாசீனம் செய்தன. வெளிப்படுத்துதலில் சகல சுதந்திரத்தையும் பயனுறுத்தி முடுக்கி திக்கு முக்காடச் செய்தன . ரத்தம் சொட்டாமல் கூடாத காரியம்தான் அது .ரத்தம் சொட்டித்தான் கூடவும் செய்தது . இக்கேள்விகளுக்கான சமாதானத்தை ஒருபோதும் எனது படைப்புகள் தருவதே இல்லை . அவற்றை நிலை குலையச் செய்கின்றன.இக்கேள்விகளின் மீது எனது படைப்புகள் நிகழ்த்தும் அச்சமே , என் மீதான அச்சமாகவும் இருக்கிறது .

ராமகிருஷ்ண பரமஹம்சர் தலைமுடியால் தேய்த்து கழிப்பறைகளைச் சுத்தம் செய்த போது கண்ட திகைப்பும் அச்சமும் அது .உண்மையில் இக்கேள்விகள் எனது படைப்புகளின் பேரன்பை ஸ்பரிசிக்க இயலாத தொலைவில் இருப்பவை .நெருங்கினால் கபாலம் நொறுங்கி விடக் கூடியவையும் கூட .

painting  - karthik  meka  

No comments:

Post a Comment

நினைத்தார்கள் நினைத்திருந்தேன் - 62

நினைத்தார்கள் நினைத்திருந்தேன் 1 இடையில் இறந்து விடுவேன் என்றே எல்லோரும் நினைத்தார்கள் நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன் 2 ...