கொஞ்சம் கொஞ்சமாக நல்ல பிராமணன் ஆகிவிட வேண்டும்

கொஞ்சம் கொஞ்சமாக நல்ல பிராமணன் ஆகிவிட வேண்டும்

பிராமணன் ஆதல் என்பது பிராமணன் என்னும் சாதியாக ஆவது அல்ல.நல்ல முஸ்லீம் ஒரு பிராமணன்தான்.நல்ல பவுத்தன் ஒரு பிராமணனே .பிராமணன் ஆதல் என்பது ஒரு விசேஷமான இடத்திற்கு வாழுமிடத்திலிருந்தே சென்று சேருவதைக் குறிப்பது.உடல் கொண்டு அனுபவம் கொண்டு வாழாமல் அந்த இடத்திற்கு வந்து சேர இயலாது. உடலும் அனுபவமும் கொண்டு சேர்க்கும் பாதைகள்.   இசை ஞானி இளையராஜாவை பலரும் அவருடைய ஆன்மீக நகர்தலை குறித்து விமர்சனங்கள் எழுப்பும் போது உண்மையாகவே சங்கடப்பட்டிருக்கிறேன்.ஒருகாலகட்டத்தின் இசையை முழுவதுமாக தன்வயப்படுத்திய ஒரு மேதை அனுபவம் கொண்டு அடைந்த இடம் ; தவறாக இருக்கும் என்று எந்த கருத்தின் ,கொள்கையின் ,அறிவின் அடிப்படையில் கருதுகிறார்கள் ?.அவர் இன்றிருக்கும் இடத்திற்கு நாளை நீங்களும் வந்து சேருவதுதான் நல்லது என்பதை அனுபவத்தால் கண்ட பின்னர்தான் விளங்க இயலும்.

இசையையும் ,மொழியையும் தன்வசப்படுத்தும் ஒருவன் பிராமணன் ஆகாமல் இருக்க இயலுமா என்ன ? ஜேசுதாஸ் சபரிமலையில் மடியுருகி நிற்கிறாரே அந்த பரவசமான இடத்திற்கு இன்றில்லையாயினும் என்றேனும் ஒருவன் வாழ்க்கையில் வந்து சேராமல் இயலாது.அந்த இடம் என்ன என்பதை ஒருவன் அறிந்து பின்னர் ஏதேனும் மாறுபட்டுச் சொல்கிறான் எனில் அவனிடம் பயில மேலும் கூடுதலாக ஏதேனும் இருக்கலாம் .அறியாதவனின் பழிச்சொல் அறியாமை அன்றி வேறொன்றும் இல்லை.பிராமணன் ஆகுமிடத்தில் பரமானந்தம் நிறைந்திருக்கிறது.அது முழுதுமாக ஒருவருக்கு வசப்பட்டு விடும் என்று எனக்கு நம்பிக்கையில்லை.அனுபவத்தில் கண்ட ஞானியரைக் கண்டே இதனைச் சொல்கிறேன். கொஞ்சம் கொஞ்சம் துளித் துளியாக அவ்வப்போது வசப்பட்டாலும் கூட போதுமானது என்றே சொல்வேன்.கிராமங்களில் பிறப்பால்  பிராமணர்கள் அல்லாத சாதாரண மனிதர்கள் பலருக்கு இந்த தன்மைகள் வசப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன்.கிழவிகளிடம் வசீகரம் கொண்டிருக்கிறேன்.அப்படிப் பார்த்தால் என்னிடம் எழுகிற தாயே என்னும் ஒலியில் கன்றின் சாயல் தொனிக்கும் .அந்த அன்னையரை கண்ணசைவிலேயே கண்டறியும் ஞானம் உண்டெனக்கு.

தட்டுங்கள் திறக்கப்படும் என்கிற கூற்று புலப்படுவதற்கு ஒரு மனிதனுக்கு எவ்வளவு   கால அவகாசம் தேவைப்படும் ? என்பதை அறுதியிட்டுச்   சொல்ல இயலாது.எனக்கு வசப்பட்டு விட்டது என்று அறிவித்தாலே அவருக்கு வசமாகவில்லை என்பதுதான் அர்த்தம்.நெருங்கி நெருங்கிச் செல்ல முடியும் அவ்வளவுதான் .உள்ளிலும் வெளியிலும் நிறைந்திருக்கும் ஒன்றோடு இணைப்பு வலுப்படுந்தோறும் வசமாகும் .கவிஞனாக எனக்கு வசப்படுவதற்கு எவ்வளவு இடையூறுகள் இருக்கின்றன என்பது மட்டுமே தெரியும்.

சித்தர் ஒருவரை திருச்செந்தூர் அருகில் பார்க்கச் சென்றிருந்தேன்.பதினைந்து வருடங்களுக்கு முன்னர். அப்போது திமிரை மட்டுமே சொத்தென கொண்டு நடந்த காலம்.இப்போதும் என்ன முன்னேறி விட்டது ? இப்போதும் அதுதான் நிலை.என்றாலும் முன்னதுக்கு இது பரவாயில்லை.உயிரைத் தவிர்த்து அவரிடம் ஒன்றுமே இருக்கவில்லை.துளையிட்டு ஊடுருவும் கண்கள்.இப்போதும் நினைவில் இருக்கிறது.அன்னையின் கண்களை போன்ற கருணையும் கொண்ட கண்கள்."உள்ளுக்குள் எதுவும் யாருக்கும் சரியாகாது.நீ எங்கே உடைந்தாயோ அங்கே குணப்படவேண்டும்.அதுவரையில் போராடிக் கொண்டேதான் இருக்க முடியும் .அதுதான் இயற்கையின் நியதி" என்றார்.அவர் என்னை நிர்வாணமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று தோன்றியது எனக்கு.அவருடன் விடைபெற்றுத் திரும்பி விட்டேன்.இருந்திருந்தால் முன்னது பின்னது இரண்டையும் சொல்லிவிடுவார்  என்று பயமாக இருந்தது.அப்போது அதனைத் தாங்குகிற மனவலிமையிலும் நான் இல்லை.

சற்றைக்கும் முன்பாக   கால இடைவெளிக்கு பின்னர் விக்ரமாதித்யனிடம் பேசினேன்.அவரிடம் எவ்வளவோ பேசியிருக்கிறேன்.அவரது அதிகம் சுற்றியிருக்கிறேன்.இன்று பேசும் போது ஒருகாரியம் பிடிபட்டது.அவரிடம் பேசும் போது எதோ ஒன்று நம்மிடம் குணப்படுகிறது.குணக்கோளாறுகள் அத்தனை  பேரும் சரக்குடன் ஏன் அவருக்காகக் காத்திருக்கிறார்கள் ? அவர் ஒரு கவி என்பதால் மட்டுமல்ல.அவர் ஒரு பிராமணனும் கூட .சைவப் பிள்ளைமார் என்று அவர் கூவித் தீர்வது ஒரு மாறுவேடம்.  அவர் ஒரு சாக்கடை சாமியல்லவா ? என்று எவரேனும் கேட்கலாம்.சாக்கடைச் சாமிதான் ஆனால் அவருள் ஒரு பிராமணன் வசிப்பதை அதனால் தட்டிவிட முடியுமா என்ன ? மாயம்மா இருக்கிறாள்தானே ! உருவத்தால் பிறப்பால் ஆவது ஒன்றுமில்லை.நாளைக்கே விக்ரமாதித்யனைக் காணச் சென்று விட வேண்டும் என்கிற கொதி உண்டாகிவிட்டது.அவர் எதோ ஒன்றினை உள்ளத்தில் கொத்திச் சரிபடுத்துகிறார்.எப்படியென்று எனக்குத் தெரியாது.

கோவில் கோபுரங்களுக்கு இணையான அனுபவத்தை மசூதி அமைப்புகள் எனக்கு ஏற்படுத்துகின்றன.அனந்தபுரத்தில் ஏற்படுகிற அதே பரவசம் எனக்கு எல்லா மசூதி அமைப்புகளைக் காணும் போதும் உண்டு.சுடலையின் ,வாதைகளின் வெட்ட வெளியமைப்புகளிடமும் இதே அனுபவம் எனக்கு உண்டு.அதில் கிடையாது என்பது நம்பிக்கையில் இருந்து புறங்கூறல் .அனுபவத்தில் அது உண்மையல்ல.இதனையெல்லாம் யாரும் வேடிக்கையாகச் செய்து வைக்கவில்லை.காணும் போது காட்சிகள் திறக்கும்.

சமீபத்தில் நான் சந்தித்த தமிழ் அறிஞர் ஒருவர் எல்லோரும் பிராமணனாக முயற்சிக்கிறார்கள் என்று கவலை தெரிவித்தார்.எல்லோரும் பிராமணனாவதுதானே நல்லது.பிராமணனுக்கு சாதியில்லை.மதமில்லை.நிறுவனம் இல்லை.பேதமில்லை.கொள்கையில்லை.இலட்சியங்கள் கிடையாது.எல்லோரும் பிராமணன் ஆவதுதானே நல்லது இல்லையா ? மாணிக்க வாசகரைப் போல ,நம்மாழ்வாரை ஒப்ப , பெரியார் பீரப்பாவைப் போல 

No comments:

Post a Comment

நா.முத்துக்குமார்

நா.முத்துக்குமார் - வெட்டியெறிந்த வலி. சி .மோகன் மூலமாகத்தான் நா.முத்துக்குமார் எனக்கு நண்பரானார்.சி.மோகன் தனது திருவல்லிக்கேணி அறையை ...