அய்யா வைகுண்டர் இதிகாசம் -13 சிவாய்மார் மேடை

அய்யா வைகுண்டர் இதிகாசம் -13

சிவாய்மார் மேடை

பூதகணங்கள் புடைசூழ இருந்தால் மட்டுமே அவை இந்துப் பெருந்தெய்வங்கள்.இது பிற மதங்களுக்கு இல்லை.பிறவற்றுக்கு ஏற்பில்லை என்பதே இதன் பொருள்.திருவட்டார் ஆதிகேசவபெருமாளுக்கு எத்தனையோ பூதகணங்கள் உண்டு.அது தவிர இரண்டு கேசிகள் மேலே பெருமாள் படுத்திருப்பதாக ஜெயமோகன் சொல்கிறார்.பேய்கள்,தெய்வங்கள்,தேவர்கள் நூலில் இந்த கேசியர் கதையும் வருகிறது.கேசிகளை பெருமாளே படைக்கிறார்.கட்டுகடங்காமல் போக அவரே அதன் மீது படுத்திறங்க வேண்டியிருக்கிறது.கேசியரின் கேசம் திருவட்டார் நிலத்தின் ஆழ்நிலை வரை நெடிது படர்ந்து அலையடிக்கிறது.

அய்யா வைகுண்டர் நான் ஏற்கனவே சொல்லியிருக்கும் அத்தனைத் தேவதைகள் புடை சூழ இருக்கிறார்.அத்தனைக்கும் இடம் அளித்திருக்கிறார்.அவர் அனைவரையும் பிரதி நிதித்துவம் செய்கிறார்.இந்த ஒவ்வொரு தேவதைகளின் பின்பும் பெரும் மக்கள் இருக்கிறார்கள்.இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மக்களைக் கொண்டவர்கள்.ஒரு சாதிக்குள்ளாகவே பல பிரிவினரை,பல குணாதிசயங்களைக் கொண்டவர்கள்.வெளியில் இருந்து காண்கையில் எல்லாமே ஒன்று போல தோன்றும்.கருப்பாகத்தானே இருக்கிறது.காகங்கள் மட்டுமாகத்தான் இருக்கும் என்று நினைப்போம்.நெருங்கியதும் இல்லை எல்லாம் வேறுவேறு என்பது புரியும்.பின்னர் எல்லாம் ஒன்றுதான் விளங்கும்.இந்த மயக்கம் மாறி மாறி ஏற்படக் கூடியது.

இந்த முன்தேவதைகளையே அய்யா வைகுண்டர் சிவாய்மார்கள் என்கிறார்.சிவனுகுகந்தவர்கள் என்பது இதன் பொருள்.மூலம் சிவமானவர்கள் என்று பொருள்.சிவமும் இவர்களும் வேறில்லை என்பதும் இதன் பொருளே.அய்யா வைகுண்டர் நம்மைப் பார்த்தும் போதிப்பது; சிவ சிவா உன்னில் தானாகியிருக்கிறது என்பதனையே.

சிவாய்மார்களுகென்று எல்லா பதிகளிலும் ,தாங்கல்களிலும் மேடையுண்டு.அய்யா மக்களிடமிருந்து எதையெல்லாம் ஏற்றுக் கொள்கிறாரோ அத்தனையையும் அவர்களுக்கும் தருகிறார்.அவர்கள் அய்யா வைகுண்டரை நாடி வரும் பக்தர்கள்.அவர்களிடம் தேவதைகள் தனியே பண்டங்கள் வாங்குதற்கு ,கேட்பதற்குச் சட்டமில்லை.அய்யா வைகுண்டசாமியைத் தேடி வருகிறவர்களுக்கு அவர்கள் உறுதுணையும் காவலும் செய்கிறார்களே அன்றி தனித்து எதுவும் கேட்பதில்லை.அய்யா அதற்குப் பதிலாகத் தருவதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அய்யாவழியில் அதற்கென ஒரு ஏற்பாட்டை அய்யா வைகுண்டசாமிகள் செய்து வைத்திருக்கிறார்.இந்த ஏற்பாடு மஹா ரகஸ்யமானது.அரிகோபாலன் சீடர் இயற்றிய அகிலத் திரட்டம்மானை நூலில் இதற்கான விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது.அரிகோபாலன் அய்யா வைகுண்டசாமியின் முதற்சீடர்.மாபெரும் அறிஞன்.அய்யா வைகுண்டசாமியுடன் வாழ்ந்து அறிந்து மெய்ஞான தரிசனம் அடைந்தவர்.அய்யாவைப் பற்றிய முதல் புராணத்தை இயற்றும் பாக்கியத்தை அய்யா அவருக்கே உவந்தளித்திருக்கிறார்.பனிரண்டு தினங்களில் தெற்குத் தாமரைக்குளம் பதியில் வைத்து திருஏடு அவர் கைபட எழுதி முடித்த நூலே அகிலதிரட்டம்மானை ஆகமம்.தெற்கு தாமரைக்குளம் பதியின் வரலாற்றுச் சிறப்பு இது.சாமிதோப்பிற்கு மிக அருகாமையில் உள்ள பதி இது.ஆகமம் கண்ட பதி என்பது இதன் சிறப்பு.அரிகோபாலர் அவதரித்த ஊரும் இதுவே.

சிவாய்மார் மேடை அய்யாபதிகள் அத்தனையிலும் அய்யாவுக்கு வலதுபக்கமாக இருக்கும்..மூலஸ்தானம் கண்ணாடி,வலது பக்கம் சிவாய்மார் மேடை இவை இவ்வாறே இருந்தாக வேண்டும்.இல்லையெனில் அது வைகுண்ட பதியாகாது.கண்ணாடியின்றி எது செய்தாலும் தவறு.கண்ணாடி இல்லையெனில் அது அய்யா பதி ஆவதில்லை.சில இடங்களில் குதிரைவைத்து கண்ணாடி இல்லாமல் நாட்டியிருப்பார்கள்.அது அய்யா வைகுண்டசாமிகள் கிடையாது.அப்படியிருந்தால் அது கருப்பசாமி.இங்கே எந்த உருவமும் ஏற்பு இல்லை.

அய்யாபதியென்றால் கருப்பசாமி சிவாய்மார் மேடையில் ஒடுங்கியிருப்பார்.ஒடுக்கம் அது.தாழ்வு கிடையாது.முன்தேவதைகளின் பள்ளி இப்படி அழகாக ,இவ்வளவு பொறுப்பாக இருப்பது அய்யா வைகுண்டசாமியின் பெரு நெறி தவிர்த்து வேறு எங்கும் காணமுடியாதது.இருப்பார்கள்.இன்றுவரையில் சுடலை வெளியில் தான் பிற பெரு நெறிகளில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.உள் அனுமதி இல்லை.

சுடலை சிவனின் அம்சமே.ஆனால் சுடலையுடன் இணைந்து அனைத்து முன்தேவதைகளும் அய்யாவின் அருகிலேயே இருக்கிறார்கள்.இதனை எவ்வாறு அய்யா சாத்தியமாக்கினார் என்பது இறை ரகசியமே.அவர்களை அவ்வாறே அவர் ஏற்கவில்லை.முன்தேவதைகளிடம் சில நிபந்தனைகளை விதித்து,நிபந்தனைகளை ஏற்காதபட்சத்தில் அழித்துவிடுவேன் என்றுகூறி அவர்களை ஏற்க வைத்து அருகில் அமர்த்தியிருகிறார்.இரண்டு நிபந்தனைகள் மிகவும் முக்கியமானவை.தன்னைத் தேடும் பக்தர்களிடம் எத்தகைய ஆயுதத்தையும் பிரயோகிக்கக் கூடாது.ஆயுதங்கள் அத்தனையையும் சரண் செய்ய வேண்டும்.தந்திரவேலைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.பண்டத்திற்கு ஆசைபட்டு மாயமந்திரங்கள் ஏதும் செய்யலாகாது.இரண்டாவதாக பலி ஏற்கக் கூடாது.அதிலும் நாடி வருவோரிடம் பலி கேட்கும் உரிமையில்லை.தான் எடுத்துக் கொள்ளும் மரக்கறி அன்னம்,தவனைப்பால் கஞ்சி,பால் அன்னம்,பழங்கள்,வெற்றிலை,எலுமிச்சைக்கனி,தேங்காய் இவையே அவர்களுக்கும். இவையே அய்யாவின் வழியில் முன் தெய்வங்களுக்கும் உணவு.

நேர் நெறி காண ஆயுதங்கள் அனைத்தும் விடுத்து முன் தெய்வங்கள் சரண் கண்ட இடமே சிவாய்மார் மேடை.ஐந்து பதிகளில் அம்பலப்பதியில் மட்டும் வடக்கு வாசலில் பத்திரகாளி அம்மையும் ,கிழக்கு நோக்கி அய்யாவும் சிவாய்மார்களும் காட்சியளிக்கிறார்கள்.

அடிப்படையில் ஆயுதங்களைக் கைவிடுதல் சரண் செய்தல் என்பது அகந்தையைக் கைவிடுதலே.முன் தெய்வங்களின் அகந்தையை அவர்களிடமிருந்து பிடுங்கி ஏறிந்து விட்டு அப்படியே அவர்களை தன்படைகளாக ,சிவாய்மார்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.அப்படியானால் அகந்தையைக் கைவிடுதல் என்பதுதான் என்ன ?

[ தொடரும் ...]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"