அய்யா வைகுண்டர் இதிகாசம் -18 முத்தாரம்மன் கோயில் வகையறா-4

அய்யா வைகுண்டர் இதிகாசம் -18

முத்தாரம்மன் கோயில் வகையறா-4

பெரும்பாலும் நாடார்கள் கண்டடைந்த சமய நெறிகள் காட்டிலிருந்து பெற்ற ஞானத்தின் நீட்சியாக எழக் கூடியவை.கீழிருந்து மேலாக எழக் கூடியவை.பெருந்தெய்வங்களும் பெரு நெறிகளும் பின்னர் வந்து இதில் இணையும் .அதில் எந்த நெறி வேண்டுமாயினும் வரலாம்.சிவனாக,விஷ்ணுவாக ,அய்யா வைகுண்டராக யார் வேண்டுமாயினும் வரலாம்.கிறிஸ்தவமும் மேல் நெறியாகவே வந்தது.அப்படி வருவதற்காகவே அது இந்து உயர் நெறிகளைத் தாக்கிற்று.

ஆனால் இந்து நாடார்கள் காட்டிலிருந்து பெற்ற அறிவில் உரசியே எதன் உள்ளேயும் செல்வார்கள்.அல்லது வெளியில் நிற்பார்கள்.ஆரம்பகால கிறிஸ்தவம் இந்த தொடர்ச்சியில் இருந்து வெளியேற கடுமையான விரதமும் பயிற்சியும் மேற்கொள்ள வேண்டியிருந்தது.. அய்யா வைகுண்டரின் உயர்
நெறியும் உயர் சமயமும் இவர்களுக்கு உகந்ததாக இருப்பதற்கு தொடர்ச்சியே முக்கியமான காரணம். சைவம்,வைணவம் இரண்டிலும் கூட இதற்கான தொடர்ச்சி இல்லை.அந்த நெறி காட்டிலிருந்தே பெற்ற ஞானத்துடன் சரியாக பொருந்த வேண்டும்.இல்லையெனின் ஏற்பிற்கு வாய்பில்லை.

சிவனை முழுமுதற்கடவுளாக வழிபடக் கூடியவர்கள் உண்டு.அவர்கள் சமயங்களில் முழுமையான சைவ நெறிகளையே கூட பின்பற்றுகிறார்கள்.ஆனால் அது சுடலைமாடன் சம்பந்தப்பட்ட சிவம்.சிவ சுடலை ஆகிவந்த சிவம்.சுடலை எங்கிருந்து தோன்றிற்றோ அந்த சிவம்.இதற்காக சுடலையிருக்கும் சிவத்தையே நாடிச் செல்வார்கள்.நாடார்களுக்கு உகந்த சிவஸ்தலம் உவரி சுயம்பு லிங்கசாமியே.நெல்லையப்பருக்குப் போகமாட்டார்களா போவார்கள்.ஆனால் அதில் ஈடுபாடு இருக்காது.உவரி சுயம்பு லிங்கத்திடம் உருகி நிற்பது போல அது வராது.அடியவர்கள் பாடிய இடங்கள் அல்லவோ அவை ? உண்மைதான் ஆனால் இவர்கள் ஏறி வருகிற பாதை வேறாயிற்றே..அப்படியானால் அது சிவம்தானா ...சிவம்தான் ஆனால் அவர்கள் தன்னிச்சையாகக் கண்டடைந்த சிவம்.அதனால் அடியார்கள் பாடிய சிவத்தை,ஆழ்வார்களின் வைணவத்தை மறுப்பார்களா ? கிடையாது .தாங்கள் அறிந்த அறிவிற்கு அப்பால் அது இருக்கிறது.அவ்வளவே.அது அங்கே இருக்கட்டும்.அதுவும் அர்த்தமில்லாததாக இருக்க இயலாது.அது ஆழ்வார்களும் ,நாயன்மாரும் கண்டது.அதுவும் உண்மையே.நான் கண்டடைந்ததில்லை.அது மட்டுமே வேறுபாடு.

நாடார்களிடம் கிறிஸ்தவம் உருவாக்கிய பிராமண எதிர்ப்பு கிறிஸ்தவ நாடார்களிடம் கூட வேலை செய்யவில்லை.பிராமணன் உயர்ந்தவன் என்பதில் நாடார்களுக்கு அவ்வளவு உறுதியான நம்பிக்கை.அவன் தலைமுறை தலைமுறையாகப் படித்தவன்.வேதம் அறிந்தவன்,உயர் நெறிகள் தெரிந்தவன்.உயர் நெறிகள் உதாசீனம் செய்தால் கூட கொஞ்சமேனும் ஒட்டிக் கொண்டுதான் நிற்கும்.இதனை நான் சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.எளிய இந்து நாடார் ஒருவரிடம் கேட்டுப் பாருங்கள் ,நான் சொல்வதிலுள்ள உண்மை விளங்கும்.அவர்களாகத் தானே மாறியாக வேண்டும்? பின்னர் அவர்களை எதற்காக எதிர்க்க வேண்டும் என்று எளிமையாகச் சொல்லிவிடுவார்கள்.

ஒட்டுமொத்த பிராமண எதிர்ப்பிற்கு மத்தியில் நாடார்களின் பிராமண எற்பு மிகவும் முக்கியமானது.செல்வந்தர்களான நாடார்கள் நம்பகமான பணிகளுக்கு ,நிர்வாகப் பணிகளுக்கு பிராமணர்களையே நியமிக்கிறார்கள்.பிராமணர்களிடம் ஆலோசனை பெறுகிறார்கள்.தாங்கள் செல்வத்தின் சிறுபகுதியேனும் பிராமணர்களைச் சென்றடைய வேண்டும் என நினைக்கிற நாடார்கள் இருக்கிறார்கள்..பிராமணர்களைக் குறித்து அவதூறு சொல்லப்பட்டால் அது நோக்கமுடையது கதைக்கு உதவாதது என்பது நாடார்களுக்கு நன்றாகத் தெரியும்.தனக்கோ தனது சந்ததியினருக்கோ உதவக் கூடிய எதையும் எதிர்க்கலாகாது என்பது நாடார்கள் தன்னிச்சையாகவே தெரிந்து வைத்திருக்கும் உண்மை.அதேசமயம் பிராமணர்களை அதிகாரத்தில் நாடார்கள் ஏற்பார்களா என்பது சந்தேகமே.இரண்டு பிராமணர்கள் ஒன்று சேர்ந்தால் ஒரு சதிவேலை தொடங்கிவிடும் என்பது ஒரு காட்டுக் கணக்கு.மற்றொன்று தலைமை கிடைத்தால் சடங்குகளை வைத்து அவர்கள் கருப்பொருளை மறைத்து விடக் கூடியவர்கள்.ஆதிக்கத்தில் அவர்களுக்கு இயல்பிலேயே இன்பம் இருக்கிறது.ஆனால் பிற எந்தசாதியினரைக் காட்டிலும் பிராமணர்களை இசைவானவர்கள் என்றே கருதுவார்கள்.வெள்ளாளர்கள் பேரில் அவ்வளவு நம்பிக்கை கிடையாது.நாடார்கள் பெற்றுக் கொண்ட சுய நலப்பாங்கு அத்தனையும் வெள்ளாளர்கள் மூலமாகப் பெற்றுக் கொண்டதே ஆகும்.

முதல் தலைமுறையாக படித்துயர்ந்து பதவிகள் பெற்ற நாடார்கள்,ஐந்து தலைமுறை பக்குவம் கொண்ட வெள்ளாளர்களை அப்படியே பிரதிபலித்தார்கள்.ஆனால் வெள்ளாளர்களின் பிராமண எதிர்ப்பு வெறும் வேஷம்.உள்ளீடற்றது,அதிகாரப் போட்டி தொடர்பானது ,அது கட்சி அரசியல் தொடர்பானது,ஒருபோதும் பிராமணர்களிடம் உள்ள விசாலம் வெள்ளாளர்களுக்கு கிடையாது என்பதை நாடார்கள் அறிவார்கள்.அமைதியான சதிவேலைகள் நிறைந்தவர்கள் வெள்ளாளர்கள் ,அமைதியான வெகு நீண்ட பழியுணர்ச்சி கொண்டவர்கள் என்னும் எண்ணம் இப்போதுவரையில் நாடார்களின் நனவிலியில் பதிந்திருப்பது. ஏன் ஏன் என்றால் அனுபவங்களே பாடம் என்பதே விடை.அவர்களால் வெள்ளந்தியாக இருக்கமுடிவதில்லை,ஆனால் அப்படி நடிப்பார்கள்.நேரடியாக அன்பாக இருப்பார்கள்,புறம் வேறு பேசுவார்கள்.பிற சாதிகளை ஏற்பதில் இன்னும் பெரிய தடைகள் அவர்களுக்குண்டு.பிராமணர்கள் எல்லாரையும் ஏற்றுக் கொள்வார்கள்,அடிப்படையில் பெண்களை சமதளத்தில் ஏற்க அது அனுபவத்தில் சற்றே கடினமானதே ஆயினும் அவர்களுக்கு இயலுகிறது.வெள்ளாளர்கள் பெண்ணை பசுவிலும் மேம்பட்ட ஒரு விலங்கு என்றே பராமரிக்கிறார்கள்.மிகச் சிறந்த பராமரிப்பு அது.குறையே சொல்லமுடியாத பெருங்குறைப் பண்பு அது.பெண்ணை பராமரிக்க அதனினும் மேம்பட்ட ஒரு வழி இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல முடியும்.ஆனால் பெண் விஷயத்தில் அவர்களுடைய குலக் கொள்கையே அவர்கள் வம்சவீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது . உண்மையாக பிராமணப் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முதல் நிலை நோக்கி பயணிக்கிறார்கள்.தனித்து எவருடைய கண்காணிப்பும் இன்றி ஆண்களிடம் இருந்து தங்களை த் தற்காத்துக் கொள்ளும் அறிவு கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.அதே சமயம் பகைமையை ஏற்படுத்தாவண்ணம்,ஆண்கள் அணுக இயலாப்பண்பை பிராமணப் பெண்களே கொண்டிருக்கிறார்கள்.இந்த தகைமைப் பண்பை பிறசாதிப் பெண்கள் அடைவதற்கு இன்னும் ஐந்து தலைமுறைகள் கடக்க வேண்டும்.

இப்படி சாதிரீதியாக நோக்க முடியுமா என்றால் இப்படித்தான் நோக்கியாக வேண்டும்.பெண்ணுக்கு ஒரு பரிணாமம் இருக்கிறது.ஆணுக்கும் அப்படியே.ஒருவர் சாதிப் பண்புகளின் படிதான் இருப்பாரா ? தொண்ணூற்று ஒன்பது சதமானம் அப்படித்தானிருப்பார்.மிஞ்சிய ஒரு சதமானம் அப்படி இல்லாமல் இருப்பாரே ஆனால் அவரை மிகவும் மேன்மை பொருந்திய மனிதர் எனலாம்.நமக்கு பெரும்பாலும் சாதியை கடக்கும் தேவைகளே இன்னும் ஏற்படவில்லை.

வணங்கும் தெய்வம் ஒரு பண்பைத் தரும்.முத்தாரம்மை இரண்டு தலைமுறைகளுக்கு முன்பாக தனது தாய்மைப் பண்பை,அதாவது பெருந்தாய்மைப் பண்பை தனது பெண்டிருக்கும் தந்தாள்.கூட்டுக் குடும்பங்கள் அவர் கருணை மிகுந்த வயிற்றால் பாதுகாக்கப் பட்டவை.சோறு இல்லை என்ற வார்த்தை அவளிடமிருந்து வராது.எத்தனைபேர் வந்தாலும் சரி தான்.இருக்கச் சொல்லிவிட்டுப் பொங்கி வடித்து விடுவாள்.அதற்கும் அவசியம் இருக்காது .இருக்கும்,எப்படியேனும் இருக்கும்.பழையதில் புதிது,புதியதில் பழையது இப்படி கலந்து உடனடியாக கொடுக்க முத்தாரம்மையிடம் எப்போதும் இருக்கும்.வைத்திருப்பாள்.அவள் மீண்டும் அடுப்பு கூட்டி அண்டை பற்ற வைத்து,பேசிக் கொண்டிருப்பதற்குள் வடிக்கிறாள் என்றால் அதற்கு முன்பாக ஒருபெருங்கூட்டம் வந்து சென்றிருக்கிறார்கள் என்று பொருள்.முத்தாரம்மை வந்திருக்கவில்லையானால் நாடார் குலமே அழிந்திருக்கும்.ஒன்றி இருந்திருக்காது.உடைந்திருக்கும்.அண்ணன் தம்பி பகை மூண்டிருக்கும்.அடித்தட்டிலிருந்து எழுந்து கைபிடித்து எழுந்து வர வேண்டிய சாதியில் முத்தாரம்மை இல்லையென்றால் என்னவாகும் ?கூட்டுக் குடும்பகளுக்கு அதன் நெறிகளுக்கு சோறூட்டியவள் முத்தாரம்மை.முதலில் சீர்திருத்த கிறிஸ்தவ பெண்களிடம் தான்,அவள் இல்லாமலானாள்.அவர்கள் அவளை தங்களில் சூடப்படுவதை அவர்கள் விரும்பவும் இல்லை.இப்போது அந்த அம்மை யாரிடமும் இல்லை.கடற்கரை கிராமத்துப் பெண்டிரிடம் இப்போதும் தெளிவுபட தெரிகிறாளே ஒருத்தி அவள் தான் எங்கள் முத்தாரம்மை.

[ தொடரும் ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"