அய்யா வைகுண்டர் இதிகாசம்-6

அய்யா வைகுண்டர் இதிகாசம்-6

இசக்கியர் வரலாறு

இசக்கியின் பொது கதையே கதை போல ஆயிற்று.செட்டியாரை பழிவாங்க வருகிற நீலனின் சகோதரியான இசக்கி கதை ஒரு இசக்கி கதை அவ்வளவே .வில்லுப்பாட்டில் அது ஒன்றே இசக்கியின் கதை போல பாடப்படுகிறது.ஒவ்வொரு இசக்கியும் ஒவ்வொரு கதை கொண்டவள்.குமரி மாவட்டம் முழுதிலும் சிறு அகல் எரிந்து கொண்டிருப்பவள் அவள்.பல நூறு பேராக இருப்பவள்.பல நூறாகப் பெருகும் வல்லமை கொண்டவள்.பத்துப் பதினைந்து இசக்கிகளுக்கு ஒரு தாய் இசக்கி இருப்பாள்.அவளே மூலம்.அங்கிருந்து ஏதேனும் காரண காரியங்களை முன்னிட்டு ,அவள் யாரையேனும் பின்தொடர்ந்து வந்து எங்கேனும் குடியேறியிருப்பாள்.இசக்கியால் அவ்வாறு பரவ முடியும்.அதற்குரிய சக்தி அவளுக்குண்டு.அதுமட்டுமல்லாமல் இடம்பெயருகிறவளுக்கும் மூலத் தாய் இசக்கியின் அளவிற்கு அதிகாரம் உண்டு.முப்பந்தல் இசக்கி இந்த மாவட்டம் முழுதும் கிளை பரப்பி நிற்பவள்.நடுகாட்டாளுக்கும் இதுபோல நிறைய கிளைகள் உண்டு. நம்பி ஏமாந்து கொலையுண்டிருப்பாள்.ஆனாலும் பின்னரும் நம்பி பின்தொடர்ந்து வருவாள்.அரவணைப்பின் கதகதப்பு அவளுக்கு எப்போதும் வேண்டும்.கன்னியானாலும் வேண்டும்,கிழவியானாலும் வேண்டும்.சண்டையிடலாம் வாக்குவாதம் செய்யலாம்.அன்பில் ஒதுக்கி வைத்துவிடக் கூடாது. பிறர் மீது உரிமை எடுத்துக் கொள்ள இயலவேண்டும்.இல்லாத இடங்களில் இசக்கி அகல் வேண்டாள்.

முப்பந்தல் இசக்கி வேறு ஊர்களுக்கெல்லாம் சென்று சேர்ந்திருக்கிறாள்.பிற மொழிகளுக்கு மா நிலங்களுக்கு சென்றிருக்கிறாளா தெரியவில்லை.அன்பிருந்தால் அவள் சென்றும் விடுபவள்.இப்படியாக வெளியூர்களில் இருந்து வந்து இறங்கிய இசக்கியரும் உண்டு.

மாலைக் கன்னி இசக்கியர் இப்படி பல கன்னி இசக்கிகளுக்குத் தாய்.மூலத் தாய்.நூற்றுக்கும் மேலாக படர்ந்திருப்பாள்.அவர்கலைப் பிரித்து அழைத்துச் செல்ல இயலாது.பேய்மையுற்றுத் திரும்பி விடுவர்.அவர்கள் இருவரும் ஒட்டி இணைந்து கருவுற்று,மீண்டும் ஒட்டி இணைந்து சென்றவர்கள்.இரண்டு இசக்கியராக கையில் பிள்ளை எதுவும் இல்லாமல் நின்று கொண்டிருப்பர்.

சண்டாளி இசக்கி.கிணற்று மேல் இசக்கி கன்னி.அவள் ஒரு தலித் இசக்கி .வரிக்கான சோதனைக்காக திருவிதாங்கூரில் இருந்து படைகள் உள்ளுர் சட்டம்பிகளுடன் குதிரையில் வருகிறார்கள்.டிலனாய்க்குப் பிறகே வரிப்படைகள் குதிரையில் ஏறும் பழக்கம் உண்டாகிறது.ஈத்தாமொழிக்கும் முகிலங்குடியிருப்புக்கும் இடைபட்ட இடங்களில் துரைப்பாண்டி படைகள் அரச விசுவாசிகள்.துரைப்பாண்டியின் தகப்பனார் ஸ்ரீகிருஷ்ண பத்பனாபன் பெரிய பெயர் கொண்டவர்.பெரிய பெயர் என்றால் மகா விஷ்ணுவின் நாமம் இட்டுக் கொள்ளுதலைக் குறிக்கும்.பெரிய நாமம் இட்டுக் கொள்ள அரச விசுவாசத்தால் அனுமதி பெற்றவர்கள்.அவருடைய மகன் துரைப்பாண்டி இடைப்பட்ட இடங்களில் கடைசி வரி வசூலிப்பாளராக இருந்தவர்.அரசபடைக்கு ஆதரவு நிற்பவர்கள்.அறுபத்தினான்கு தலைப்பாகைக் கட்டிகள்.ஒரே குடும்பத்தின் கிளை வாரிசுகள் அரச எதிர்ப்பாளர்கள். இரண்டு தரப்பினருமே நாடார்கள்.அரச விசுவாசிகளை ஒப்பிடுகையில் தலைப்பாகைக் கட்டிகளை சமூக அடுக்கில் சற்றே தாழ்ந்தவர்கள் என்று சொல்லலாம்.வரி வசூலுக்கு வருகிற அரசப்படைகளுக்கும் ,அரச விசுவாசிகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கக் கூடியவர்கள்.வசூலுக்கு வந்த அரச படையினர் பலரை மாடனாக கட்டி எழுப்பியவர்கள் தலைபாகைக் கட்டிகள்.அவர்கள் மீண்டும் திரும்பியவர்களில்லை.இவர்கள் பிடி வர்மத்திலும் தொடுவர்மத்திலும் நிபுணர்கள் எனக் கேட்டிருக்கிறேன்.இவர்களில் ஒரு குடும்பம் மட்டுமே முடிவில் மிஞ்சியது.அரசை சரணடைந்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டார்கள்.மீதமுள்ள அறுபத்திரண்டு தலைபாகைக் கட்டியரும் எங்கெங்கோ திரண்டு பாண்டி நாடு நோக்கி ஓடிவிட்டார்கள்.திருச்செந்தூர் பதியில் சில குடும்பத்தாரும் மதுரையில் சில குடும்பத்தாரும் சென்று ஒளிந்து தலைமறைவாகி விட்டார்கள் என்று கேள்வி.கடைசிவரையில் யாரும் பிடிபட்டதில்லை.துரைப்பாண்டி நாடார் அவர்களுடன் ஒப்பந்தம் பேசி ,விட்டுச் சென்றுவிட்டால் உயிருக்குப் பாதகமில்லை என்று அனுப்பி வைத்ததாகவும் ஒரு துணைப்பிரதி இருக்கிறது.தலைபாகைக் கட்டியர் இந்த நாடு முழுவதும் உள்ள ,காடு முழுதும் உள்ள இசக்கியருக்கு அகல் வைத்திருக்கிறார்கள்.

அரச படையினர் வரிவசூல் காண வருகையில் நான்கைந்து ஊர்களுக்கு முன்னதாகவே செய்தி வரும்.நாலுகெட்டு வீட்டுக் காரர்கள் பெரும்பாலும் பாதையற்ற விளைகளுக்குள் இரண்டு மூன்று நாட்கள் குடும்பத்துடன் தலைமறைவாவார்கள்.இத்தனைக்கும் அரச படையினர் என்று வருபவர்கள் மிகச் சிலரே.ஆனால் வரும் செய்திகள் முதலில் வதந்திகளாக வரும்.நிலம் முழுவதும் பீதி உறையும்.ரத்தம் சிந்தி வழிந்தது போலும் இறுக்கம் இருக்கும்.அரச படையினர் வந்து திரும்பியதன் தடயமாக ஓலைப்பெரைகள் அழிக்கப்பட்டிருக்கும்.தீயிட்டுக் கொளுத்தப்பட்டிருக்கும்.மக்கள் இது முடிந்ததும் திரும்புவார்கள்.நாலுகெட்டு வீட்டுக் காரர்களுக்கு இதற்கென்றே ஒளிப்பதற்குக் காடுகள் உண்டு.எப்போதேனும் சில நேரங்களில் உயிர் பலியும் நேர்வதுண்டு.அது பெரும்பாலும் இந்தபக்கமாகவும்,சிலசமயங்களில் அந்தப் பக்கமாகவும் இருக்கும்.அந்த பக்கமென்றாலும் சரி ,இந்த பக்கமென்றாலும் சரி,அவர்கள் நாடார்களாகவே இருப்பார்கள்.இப்படி அரசபடையினர் அரச விசுவாசிகளுடன் இணைந்து வருவது ஆண்டிற்கு ஒருமுறையோ இருமுறையோ இருக்கும்.ஆனால் வரிவசூலிப்பாளர் துரைப்பாண்டி நாடாருக்கு அதுவே அதிகாரத்தை நிலைப்படுத்தி தரும் .அவர் ஆண்டு முழுவதும் வசூலிப்பதற்கு உதவும்.அவர் வசூலை சுசீந்திரத்திலும்,அபூர்வமாக சில சமயங்களில் பறக்கையிலும் கொண்டு சேர்ப்பித்திருக்கிறார்.பறக்கைக்கு துரைபாண்டி நாடாரைத் தவிர்த்து பிற நாடார்களோ சாணார்களோ செல்ல அனுமதியில்லை.பணி நிமித்தமாக சுசீந்திரத்திற்குக் கூட சென்று திரும்பி விடலாம்.பறக்கை வெள்ளாங்குடி

ஒருசமயம் அரசபடைகள் கீழகிருஷ்ணன் புதூர் வழியாக பள்ளத்தூர் கடந்து பறக்கை திரும்ப ஏற்பாடு.செய்திகள் ஊர் கடந்து விளைகள் கடந்து வரவேண்டும்.ஜனங்கள் பத்து முறை படைகளை எதிர்பார்த்திருந்தால் ஒருதடவையில் படைகள் வருவார்கள்.


ராஜா மார்த்தாண்ட வர்மாவிற்குப் பிறகு ராமவர்மா பொறுப்பேற்று நாற்பதாண்டுகள் ஆட்சி செய்தார்.தவறான அரசியல் நடவடிக்கைகள்,ஆங்கில ஆதிக்கம் ,போர்கள் என அரசாங்கத்திற்கு அதிக நிதிச்சுமை ஏற்பட்டிருந்த காலம்.1788 ஆம் ஆண்டு ஆங்கிலப் படைத் தளபதி ஜார்ஜ் பௌனி திருவிதாங்கூரின் முதல் அரச பிரதி தியாக நியமிக்கப்பட்டார்.அவர் அரசின் சர்வ அதிகாரத்தையும் தன் கையில் எடுத்துக் கொண்டார் என்றும் சொல்கிறார்கள்.அவர் காலத்திலேயே தளவாய் பதவி ,திவான் பதவியாக மாற்றப்படுகிறது.திவான்கள் மூலமாக ஆங்கிலக் கம்பனி தங்கள் ஆதிக்கத்தினை நிலை நிறுத்துகிறது.

தங்கள் நட்புறவு,கூட்டு,துணைப்படை உடன்படிக்கை ஒன்றின் மூலமாக ராமவர்மாவிடம் இருந்து நான்கு லட்சம் ரூபாய் ஆங்கில கம்பனி தன் படைகளுக்காக பெற்றுக் கொண்டது.இந்த உடன்படிக்கை ராமவர்மாவிற்கு பெரிய இக்கட்டாக மாறியது.1799 கேசவதாஸ் திவான்பதவியிலிருந்து நீக்கப்பட்டு குடும்பத்தோடு வேட்டையாடப்பட்டு விஷம் ஊட்டிக் கொல்லப்பட்டார்.


[தொடரும்...]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"