அய்யா வைகுண்டர் இதிகாசம் - 7 இசக்கியர் அகல்

அய்யா வைகுண்டர் இதிகாசம் - 7


இசக்கியர் அகல்

இசக்கியர் அகல் காடுகளை துயில் எழுப்பி, எழும்பி நிற்கிறது.ஒரு சிற்றகல் தூண்டி எரிந்து முன்பு ஏற்றப்பட்ட அத்தனை சுடர்களோடும் இணைகிறது; இனி வரப் போகிற சுடரிலும் இணைகிறது.ஒன்று ஏற்றபட்டால் பின்னர் அணைவதில்லை.நாம் அதனினும் பெரிதான ஒரு சுடரை ஏற்றலாமே ஒளிய அணைக்க இயலாது.அப்படி ஏற்றபடுவதும் சிறிதா,பெரிதா என்பதை சுடர்தான் முடிவு செய்ய முடியுமே தவிர ஏற்றியவன் முடிவு செய்ய இயலாது.
எதனைப் போற்றுகிறோமோ அதை நோக்கி அது நம்மை நகர்த்தும்.பௌர்ணமியை புகழ்வதால் நிலவில் சென்று இணைவோம்.

இசக்கியின் அகல் எரிய அவள் இரவில் காட்டில் நிறைகிறாள்.இரவைத் தன்வசமாக்கிக் கொள்கிறாள்.எவ்வளவு பேசிக் கொண்டாலும் இரவு ஒரு போதும் நம்முடையதாக இருப்பதில்லை.ஒளி விலகியதும் இரவு ;பகல் முழுதும் பதுங்கி இருந்தவர்களுக்கானதாகி விடுகிறது.அது வேறோரு முயக்கம்.மறைந்தவர் எழும்புகிறார்கள்.அழித்து ஒளித்தவை தங்களுக்கான விதையை விதைக்கின்றன.

இசக்கி அகல் எற்றபட்டதும் இருள்மேனி நிறைகிறாள்.உற்று நோக்குகிறாள்.கனிகிறாள்,பின்னர் ஏற்றியவர்களை நன்றி கூறி விடைபெற்றுக் கொள்கிறாள்.தானியம் ஒன்று மேலூறித் துளைப்பது போன்று அவளுக்கு நிறைய வேலைகள் உண்டு.இப்படி நிலமெங்கும் அகல் எனில்,காடெங்கும் அகல் எனில் எத்தனை இசக்கியர் விழித்திருப்பர் ? அவர்கள் இரவில் தாங்கள் அழிந்ததன் தடயங்களை எல்லாம் வேவு பார்க்கிறார்கள். அவர்கள் விளங்கிக் கொள்கிறவரையில் வேவு பார்க்கிறார்கள்.அலைகிறார்கள்.ஏன் அழித்தோம் ? என்று தெரிந்து விட்டால் மட்டுமே சாந்தமாகிறார்கள்.

இசக்கியென்றில்லை தேவியரின் பொது குணம் ,சாந்தம் ஏற்படுவது வரையில் அருகில் இருப்பவரை
பிராண்டி களைப்படைய வைப்பது.உயிரோடு இருந்தாலும் சரி மறைந்து இருந்தாலும் சரி.அவர்கள் நேரடியாக ஒருபோதும் அறிதலை எட்டுவார் இல்லை.உடனிருக்கும் ஆண்கள் வழியே அறிகிறார்கள்.அன்பும் அரவணைப்பும் சூடு குறையும் இடத்திலிருந்து அறிகிறார்கள்.ஏன் அழிந்தோம் என்பது தெரிந்து விடுகிறது.உடனிருப்பவரை அடித்துச் சாப்பிட்டே முன்வினை அறிதலைப் பெறுகிறார்கள் மடச்சியர்கள்.அவள் முன்வினையறிதலைப் பெற என்னை எதற்காக அடித்துத் துவைக்க வேண்டும் ?நல்ல கேள்வியே ஆனால் பதில் விதி என்பதுதான்,அவள் விதியும் உன் விதியும் சேர்ந்து இணையும் செயல் இது.மிகவும் செம்மையாக நிகழ்ச்சி செய்யப்பட்டிருகிறது.உடனிருக்கும் ஆணைக் கொல்வதற்கென்றே அவள் கையில் ஆயுதம் கொடுக்கப்பட்டிருக்கிறது.சாந்தமடைவதற்கு கொலை செய்தே தீர வேண்டும் என்றால் அவள் தயங்குவதில்லை.பெண்ணுக்கு அறங்களும் இல்லை.கள்ளியை பிள்ளையாக்கி மட்டுமல்ல பழிவாங்குவதை பிள்ளையைக் கள்ளியாக்கியும் அவளால் செய்ய முடியும்.தன் பிள்ளையே ஆனாலும் கொல்லமாட்டாள் என்றும் சொல்வதற்கில்லை.

ஆண்கள்தாம் அனைத்தையும் கடைபிடித்தாக வேண்டும்.அனைத்து காரணங்களும் அவளிடமிருந்தாலும் அரவணைப்பும் ,அன்பும் குறைந்தால் பெண் இசக்கியாவாள். அரவணைப்பு தவிர்த்து பிற அனைத்திலும் அலுப்படைவாள்.

மடச்சியரின் அப்பாவித்தன்மையில் ,பண்பில் இசக்கி குடியிருக்கிறாள்.நூறு இசக்கியர் சேர்ந்து ஓலமிட்டால் பெருமாள் திரும்பிப் பார்ப்பார். சிவன் திடுக்கிடுவார்.ஒரு அவதாரத்தை முன்னழைக்க நூறு அப்பாவி தேவியர் போதும்.இல்லையெனில் காடு இடிந்து சிதறும்.

உண்மையில் இசக்கியரிடமிருந்து தப்பிப்பதற்காகவே மனிதன் புதிது புதிதாக கண்டுபிடிக்கிறான்.காரணங்களை,காரியங்களைகண்டுபிடித்துக் கொண்டேயிருக்கிறான்.வணிகம்,அரசு,மதங்கள்,உட்பட அனைத்தும் தப்பிப்பதன் பொருட்டு உருவாக்கபட்டவையே.

2

சண்டாளி இசக்கியை கடைசியாக புலம்பெயர்ந்த தலைப்பாகைக் கட்டி ஒரு அகலாக எடுத்து கையில் வைத்துக் கொண்டான்.உடந்தானேயொரு சுடலையும் அவன் பின்னே நிலம் காடு விட்டு புலம்பெயர்ந்தார் .சண்டாளி இசக்கியுடன் இணைந்து று துணை இசக்கிகள் உடன் நடந்தார்கள்.புலம்பெயர்பவர்களோடு எப்போதுமே காட்டு இசக்கியரும் மாடங்களும் உடன்செல்கிறார்கள்.அவர்கள் விதியின் அடுத்த தளத்தில் மேலேறுவது வரையில் உடன் நிற்கிறார்கள்.

சண்டாளி பறையர் குலத்தைச் சார்ந்தவள்.பள்ளத்தூர் பண்ணையார் வீட்டில் அடிமை வேலை பார்த்து வந்தாள்.வேற்றூரில் இருந்து குழந்தை பிராயத்திலேயே வந்து சேர்ந்தவள்.சிறு பிராயத்தில் இருந்தே சுற்றி பூவரசு மரங்கள் அத்தனையிலும் அவள் தான் பூத்துக் கிடப்பதாக ஊரில் பேச்சு உண்டு.அவ்வளவு சென்னிற அழகு.அரச படைகள் ஊரை நெருங்கி வரும் போது அணிந்த தங்க ஆபரணங்களையெல்லாம் கட்டி கிணற்றில் வீசி ,பண்ணையார் வீட்டில் குழந்தையை காவலுக்கு நிறுத்தி விட்டுப் போய்விட்டார்கள்.ஊர் வெறிச்சு நிற்கிறது.உணவில்லை.மயங்கிய நிலையில் துவண்டு கிடந்த பிள்ளை மேல் ஏறி நின்று கிணற்றில் உற்று நோக்கி தண்ணீரில் மின்னிய பொன்னையெல்லாம் அரசபடையினர் அள்ளிச் சென்றனர்.

வீடு திரும்பிய பண்ணையார் பொன் போனது அறிந்து குழந்தையை,சண்டாளி என்று கூறி,அதே கிணற்றில் எடுத்து வீசுகிறார்.அறம் தாங்காத தலைபாகை கட்டி பண்ணையாரின் கழுத்தை அரிந்து வீசி கிணற்றில் குழந்தையை கரை சேர்க்கிறான்.கரையில் வந்த பெண் மகவு பண்ணையாரை உயிரோடு எழுப்பி,

"அப்பன் என்றல்லோ நினைத்திருந்தேன்
அநியாயம் செய்தாயே
தாயார் என்றல்லோ நினைத்திருந்தேன்
மா நீசம் செய்தாயே"
என்று கூறி அவன் இட்ட சோறு அத்தனையும் வெளியே ரத்தமாகக் கக்கி பின் கிணற்றுள் சாடி தன்னைக் கொலை செய்து நின்றாள்.கிணறு அவ்வாறே மூடப்பட்டது. கிணற்றின் மேலே அகல் கொண்டாள்.பூவரசு பூக்கும் மாதம் கொடை கொண்டாள்

[ தொடரும்...]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"