அய்யா வைகுண்டர் இதிகாசம் -16 முத்தாரம்மன் கோயில் வகையறா-2

அய்யா வைகுண்டர் இதிகாசம் -16

முத்தாரம்மன் கோயில் வகையறா-2

ஒவ்வொரு தொன்மமும் ஏராளம் அகமடிப்புகளால் ஆனவை.இந்த அகமடிப்புகளெல்லாம் பல்வேறு காலங்களை உள்ளடக்கியவை.அதனால்தான் நாமதன் மடியில் மெய்மறக்கிறோம்.அவை நம்மைச் சுண்டி இழுக்கின்றன.நாம் இவற்றை அண்டவேண்டியதில்லை என நினைத்தாலும் சதா அவை நம்மை அண்டியே நிற்கின்றன.அவை உயிருள்ளவை என்பதை உணர்த்திக் கொண்டே இருக்கின்றன.நம்மிடமிருக்கும் அகம் இதன் சிறு துண்டு.இதனை வைத்து அதனை அளவிடமுடிவதில்லை.நான் அறிவதெல்லாம் நம்முடைய கற்பனைகளை மட்டுமே .இதுவொன்றே நமக்கு சாத்தியப்பட்டது.இது எவ்வளவு ஆழத்திற்கு செல்லும் ? தெரியாது.இறந்த காலத்திற்குள் எவ்வளவு செல்லும் என்பது தெரியாது,அதுபோல எதிர்காலத்திற்குள் எவ்வளவு செல்லும் என்பதும் தெரியாது.இந்த இறந்த காலம் நிகழ் காலம் எதிர்காலம் என்பதெல்லாம் என்ன ? நாம் வகுத்துக் கொண்டிருக்கிறோம்.இப்படி யாருமே ஒரு தார்ரோடு போட்டு வைக்கவில்லை.அது எங்கிருந்தோ தொடங்கி எங்கேயோ செல்வதுபோல.அதுவொரு அலை.காலமற்ற இருப்பு.சேகரமாகி சேகரமாகி ஒரு வற்றாத இடத்தில் சென்று நின்றுகொண்டிருக்கிறது.

முத்தாரம்மன் வழிபாடு குமரிமாவட்ட நாடார்களிடம் உருவாகும் போது அதற்கு முன்னர் அகல் ஏற்றபட்டிருந்த அத்தனை தொன்மங்களும் வந்து இதில் சேர்ந்து கொண்டன.இந்த இணைவு கச்சிதமானது.இதன் அசைவுகள் ஆழுள்ளத்திற்குள் நிகழக் கூடியவை.இவை எங்கே பிடித்து வைத்திருக்கின்றன என்பதை அறிவதற்கில்லை.

நாடார்களிடம் தோன்றிய முத்தாரம்மன் வழிபாட்டு முறையிலும் புரோகிதர்களுக்கு இடமில்லை.யாரும் வந்து மணியாட்டத் தேவையில்லை.நாம் அசைத்தாலே இந்த தொன்மங்களின் தொங்கு மணிச் சதைகள் அத்தனையும் ஆடும் என்பதை இயல்பாக கண்டுபிடித்திருந்தார்கள்.தென் பிராந்தியத்தில் மக்களுக்கு தங்கள் பாரம்பரிய முறைகள் வழியாகவே இது தெரிந்திருந்தது.அதனால் வைகுண்டர் வந்து புதிதாக ஒன்றைச் சொல்கையில் நாராயணகுரு ஒன்றைச் சொல்கையில் எளிதாக இருந்தது.தமிழ் நாட்டின் பொது பண்பிலிருந்து கேரளமும் ,குமரிமாவட்டமும் விலகி நிற்றலுக்கு இது முக்கியமான காரணம்.

நான் ஒன்றினை புதிதாக அறிந்தால்,கற்றால் கூட ,என்னைச் சார்ந்து நிற்கும் தொடர்ந்து வரும் தொன்மங்கள், அகல்கள் ஒன்றைக் கண்டுபிடிப்பு செய்கிறதே அதனையே இயல்பாக பின்பற்றுகிறேன்.அல்லது புதிதாகக் கற்ற அறிவு அதனுடன் எவ்வளவு இயல்பாக இணைகிறது என்று பார்க்கிறேன்.ஏனெனில் முதுகில் மூதாதைகளும் அவர்களின் காடும் அமர்ந்து வருகின்றன..அது அல்லது அவை புதியதொன்றுடன் இணைந்து சரியென்று சொன்னால் மட்டுமே; மனம் சரியென்று உணரும்.இல்லையெனில் இல்லைதான் ஒன்றும் செய்வதற்கில்லை.இவர்கள் காட்டிலிருந்து உதயமானவர்கள்.பல நூறாண்டுகால காடு அவர்களிடம் இருக்கிறது.

முத்தாரம்மன் வழிபாடு நாடார்களிடம் வந்து சேர்ந்த பிற்பாடு அவர்கள் சற்றே காட்டுதெய்வங்கலிடமிருந்து ஆசுவாசப்பட்டார்கள்.முத்தாரம்மன் வழிபாடு வந்த பிறகு முதல் விடுதலை ஏற்பட்டது என்பதே உண்மை.காட்டு தெய்வங்களுக்கு வைத்துக்கொடுத்தால் அகலிட்டால் அவை நம்மை விடாது கேட்டுக் கொண்டேயிருக்கும் என்பதை அறிந்தார்கள்.செய்யவும் வேண்டும்,அதேசமயம் காட்டிடமிருந்து கொஞ்சம் தூரம் நின்று இவற்றைச் செய்ய வேண்டும்.காட்டில் இருந்து விலகத் தெரியாவிடில் துன்பம்.காடும்,காட்டு நிலங்களும், காட்டுதெய்வங்களும் குணங்களைக் குறைக்கும்.

எது உங்களுடைய நிறையோ அதிலிருந்து விலகுதலே பாடம்.உங்கள் குறையிலிருந்தும் அப்போது விலகத் தொடங்குகிறீர்கள்.காடு உங்களுக்கு நிறையென்றால் விலகிவிடவேண்டும்.விலகி விலகி ஓடிவிடவேண்டும்.பனங்கிழங்கும்,பதனீரும் ,பனம்பழமும் தந்து உன்னை அதன் ருசி புரியாமல் கொல்லும்.சரிதான்.சென்றுவிடவேண்டும்.சென்று திரும்பி வந்தால் தான் பனங்கிழங்கு அமிர்தம்,பதனீர் தேவர்களின் ஞானப் பால்,பனம்பழம் பரவெளியின் தித்திப்பு என்பதெல்லாம் விளங்கும்.

தீனிப்பண்டங்களை எப்போதும் கேட்டுக் கொண்டிருப்பதை நிறுத்தினால் மட்டுமே,முன்னேற முடியும் என்பதை அறிந்தார்கள்.ஆனால் முளையில் பதிந்திருக்கும் ஞானமெல்லாம் காடு தந்ததுதான் சந்தேகமே வேண்டாம்.நான் தீனிப் பண்டம் என்று சொல்வதில் பாலியல் உட்பட அடக்கம்.மிகுந்த மனசோர்வுக்குத் தள்ளபட்டவர்களே அதிக பாலுறவிற்கு ஏங்குகிறார்கள்.மற்றபடி புத்துணர்ச்சி பெறுவதற்கு மிதமான பாலுறவே போதுமானது.அதிக இச்சை படுக்கையை விட்டு எழும்பவே சம்மதிப்பதில்லை. கீழே கீழே என்று செல்ல வைக்கும்.ஏனெனில் உங்கள் பாலுணர்ச்சியின் ஒரு பகுதியையே நீங்கள் உங்கள் பணிகளுக்கு கொடுத்தாக வேண்டும்.உங்கள் படைப்பாற்றலுக்குக் கொடுத்தாக வேண்டும் .முழுவதும் இனிப்பு பண்டங்களையே சுற்றி வருவீர்களாயின் சிறைபட்டுக் கிடப்பீர்கள்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"