சந்தோஷ் நம்பிராஜன் கோணம்

சந்தோஷ் நம்பிராஜன் கோணம்
அண்ணாச்சி விக்கிரமாதித்யன் நம்பியின் செல்வம் சந்தோஷ் . பிரேமும் செல்வம்தாம்.இரண்டுமே பகவதியின் அருள் பெற்ற செல்வங்கள். அளப்பெரிய செல்வங்கள்.நாங்கள் உயிர் பெற்றிருப்பதின் அல்லது உயிர் தரித்திருப்பதின் சாட்சியங்கள்.எங்களைக் காட்டிலுமெல்லாம் விளிம்புநிலை என்று சொல்லிக் கொள்ள யார் இருக்கமுடியும் இந்த சமகாலத்தில்?

சந்தோஷை குழந்தையாகப் பார்த்து இப்போதும் அவன் குழந்தைதான் எனும் எண்ணம் மனதை விட்டு அகலமாட்டேன் என்கிறது.அவன் இப்போது சிறந்த திரைப்பட ஒளிப்பதிவாளாராக விளங்குகிறான் .
ஒருமுறை சென்னையில் நம்பியுடன் கூடவே எங்கெங்கோ அலைந்து திரிந்து ஒரு கடையில் சாப்பாட்டுக்குச் சென்றமர நேரம் பிந்திவிட்டது.சந்தோஷ் எப்போதும் உடன் வரும்போது ஏதேனும் பாடல்களை முணுமுணுத்தவாறு ஒரு துள்ளல்நடையில் வருவான்.நாங்கள் அவனது பசியை மறந்திருந்தோம்.பசித்திருக்கும்போதும் அவனது துள்ளல் நடையில் குறையிருக்காது.அதுபோல எங்களுடைய காரியங்களிலும் அவனுக்கு சித்தம் கொள்ளாது.சாப்பாட்டுக்கு உட்கார்ந்த பின்னர்தான் குழந்தையின் பசியைப் பார்க்க சுய உணர்வுக்குத் திரும்பினோம்.இரண்டுபேருக்குமே நான் எப்போதுமே மூத்த அண்ணனைப் போலத்தான்.பிரேமுக்கு இந்த உரிமைஎண்ணம் மனதில் மிக அழுத்தம்.அவன் என்னை கோபிக்கும் வேளைகளில் அதிகம் இதனை உணர்ந்திருக்கிறேன்.
சாப்பாடிற்காக நானும் நம்பியும் அலைந்தபல வேளைகளில் தெய்வங்கள் நேரடியாக வந்து அமுதூட்டி இருக்கின்றன .நீங்கள் நம்பமாட்டீர்கள் ஆனால் இது உண்மை.அப்போதும் சிலவேளைகளில் தெய்வங்களின் சாப்பாட்டுத் தட்டை தட்டி விடுவார் நம்பி . அப்போதுதான் எனக்கும் அவருக்கும் சண்டையாகி விடுவது.தேனியில் ஒரு சமயம் நாட்டுக் கோழியடித்துச் சாப்பாடு.அவர் அப்போது சைவத்தைக் கூறி மறுத்தார்.நான் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டேன். நாட்டுக் கோழியடித்துச் சாப்பாடு பரிமாறியவளோ பத்திரகாளி? பிறகு அவருக்கு சைவம் தந்தார்கள் . என்னுடைய கடிகாரத்தை தேனீ பேருந்து நிலையத்தில் மலிவு விலைக்கு விற்றுக் குடித்துவிட்டுத்தான் சென்றிருக்கிறோம் . குடிப்பதில் அவருக்கு பேதமில்லை.சாப்பாடென வந்தால் பத்திரகாளியே நேரடியாகப் பரிமாறினாலும் சைவம் பார்ப்பார்.
ஒருமுறை கும்பகோணத்தில் ...அது ஊரே ஒரு திருகாணி ஊர்.இரவு 12 மணிக்கும் மேலாக பசியை நடந்து கொண்டிருக்கிறோம் நெடுஞ்சாலையில்...ஒரு கல்யாண மண்டபத்தில் பந்தி பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்.எனக்கோ குடலைக் கொல்லும் பசி.போய் சாப்பிட்டுவிடுவோம் இது தெய்வத்தின் பந்தி நமக்காகத் திறந்திருப்பது என்றேன்.இன்னும் குடிகிடைக்கப் போகிறது என்கிற மப்பாசையில் எனது பசியைக் கடந்து சென்றார்.பிறகு குடி கிடைக்காது என்பது தெரிந்த பின்னர் "அது என்னடா அது 12
மணிக்கு ஒரு பந்தி என்றார்."நான்தான் சொன்னேனே கேட்டீர்களா என்றேன்"
இந்த படங்கள் சந்தோஷ் நான்கைந்து வருடங்களுக்கு முன்னர் சி.மோகன் மகள் மிதிலா [ பெயரை தவறுதலாகச் சொல்கிறேனா தெரியவில்லை ] திருமணத்தின் போது மதுரையில் வைத்து எடுத்தவை.எங்கள் குடும்பப்படங்களில் மிக அழகானவை இந்த படங்கள்தாம்.அவனது கோணம் தனித்துவமானது . மகத்துவமானது.அப்போது சபரிமலைக்கு மாலையிட்டிருந்தேன்.சபரிமலை அய்யப்பனும் உடன் இணைந்தே இந்த படங்களில் இருப்பதாக இந்த படங்களைக் காணும்போது எனக்கொரு எண்ணம் .அது உண்மையும்தான் என்றே கருதுகிறேன்.சந்தோஷுக்கு அய்யப்பன் சகல வளத்தையும் , செல்வத்தையும் வழங்கவேண்டும்.உடனிருப்பவர் நண்பர் T .கண்ணன்

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்