ஒரு மழைக்கும் அடுத்த மழைக்கும் இடையில்

ஒரு மழைக்கும்
அடுத்த மழைக்கும் இடையில்

1

ஒரு மழைக்கும்
அடுத்த மழைக்கும் இடையில்
சில தூரம் சென்று திரும்பினேன்

இப்போது இடைப்பட்ட தூரத்தை இணைத்து
மறுமழை
பெய்து கொண்டிருக்கிறது

இடைப்பட்ட தூரத்தை மேலுமொருமுறை
மழை விலக்கிப் பார்க்கிறேன்
பெய்யென பெய்கிறது
மாமழை

இது நேற்றும் இருந்த மழைதான்
நாளையும் இருக்கப்போகிற மழைதான்
இரண்டு மழைகளுக்கு
இடைப்பட்ட தூரத்தையும் இணைத்து
பெய்யவிருக்கிற மழையும்தான்

ஆனால் இன்று நான் எனது இன்மையின் மீது
பெய்து கொண்டிருந்த மழையை
நெடுநேரம் நின்று
பார்த்துக் கொண்டிருந்தேன்
அப்போதும் அது
பெய்து கொண்டுதானிருந்தது

2

போராளி தயாராகத் தானிருக்கிறார்
கொலையாளியும் தயாராகத் தானிருக்கிறார்
போலீஸ்கார் தயாராகத் தானிருக்கிறார்
பிரதான் மந்த்ரி தயாராகத் தானிருக்கிறார்
நீதிபதிகள்
தயார் தான்
காரணங்கள்தான்
தேவைப்படுகின்றன
எல்லோருக்கும்

மன நல மருத்துவரும் தயார் தான்
நோயாளியும் தயார் தான்

நான் எதற்கும் தயாராக இல்லை
கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்

காரணங்கள் கேட்பீரேல்
பின்னர் வருத்தம் கொள்ளாதீர்கள்
எழும்பிச் சென்று விடுவேன்

3

மழையில் நனைந்த நிலையத்தின்
கிளைகள் பிரியும் இருப்புப்பாதைகளை
நீங்கள் மேம்பாலத்தின் உயரத்தில் இருந்து காணவேண்டும் முதலில்

பாதைகள் புழுக்களாக நெளிகின்றன
அவை இந்த மழைத் துளிகளுக்காகவே
காத்திருந்தவை

பின்னர் மேம்பாலத்தில்
இறங்கி
பெருமரம் கடந்து
நிலையத்திற்குள் நுழைந்து
இருப்புப்பாதைகளை மீண்டும் காணவேண்டும்

மழை வந்து நிற்பதுவரையில்
வெறும் இருப்புப் பாதைகளாக இருந்தவை
இப்போது மூச்சு விடுகின்றன

இனி டீசல் வண்டியில் ஏறி
பெருமரத்தை அது சுழற்றிக் காட்டுவதைப்
பார்த்து விட்டு
இறங்கி விடுங்கள்

இதற்குப் பெயர்தான் ரயில் வண்டிப் பயணம்
என்று உங்கள் குழந்தைக்கு
காதோரம் சொல்லிக் கொடுங்கள்
அதன் ரயில் வண்டிப்பயணம்
வேறு விதமாக இருந்தது அதற்கு
உடனடியாக நினைவுக்கு வந்து விடும்

இதோடு பணி நிறைவடைய வில்லை
நிலையத்திற்கு வெளியே ஒருவன்
எங்கே சென்று திரும்புகிறீர்கள் ?
எனக்கேட்க வாயிலில் நிற்கிறான்

"குழந்தையின் ஊருக்கு" என பதில் சொல்லிவிட்டு
பரிசோதகரிடம் டிக்கட்டை ஒப்படைத்து விடுங்கள்

இப்போது நீங்கள் கைவீசி நடக்கையில்
உங்கள் பின்னே புன்னகையுடன்
வந்து கொண்டிருப்பதுதான்
குழந்தையின் ஊர்
போய்ச் சேருங்கள்
திரும்பி விட வேணாம்

4

அந்த பறவைக்கு
நீலத்தில் வண்ணம்
தங்க வண்ணத்தில் நடுமுதுகில் ஒரு கோடு
கூரிய அலகு
ஓரிறகு வால்
மேலுயர்ந்து நிற்கிறது

இத்தனையும் அதன் மேனி
என்றாலும்
ஒரு கைக்குள்
அடங்கும்
சலனம்

மூன்று நாட்களாக
தெப்பக்குளத்தின் அந்தியில்
நடைப்படிக்கு வந்து அமர்கிறது

ஆரவாரங்கள் ஏதுமில்லை
அதனைக் காண வருகிற மீனுக்கு
தாமதங்கள் இல்லை
இதுவந்து அமர அது வந்து சேருகிறது

பறவையின் வண்ணம் தெப்பத்து நீரில் அசைய
அது கண்டு அது திரும்ப
இது கண்டு இது திரும்ப
இவர்களைக் காண நான் சென்றமர்கிறேன்

மூன்றாவது நபர் என்னும் எண்ணமின்றி
அவர்கள் திரும்பியதும்
நான் திரும்பிக்
கொள்கிறது
உள்பக்கமாக

வேறு ஒரு காரியமும் கிடையாது
எங்கள் மூவரையும் காண
இந்தக் கவிதை
நாலாவது மிருகமாக
வந்து சேருவதைத் தவிர்த்து

இப்படித்தான் இந்த அந்தி இவ்வளவு ஆரவாரத்துடனும்
ஆடம்பரத்துடனும் இருக்கிறது
இந்த மூன்று நாட்களாக

நாங்கள் நான்குபேரும் விட்டுச் சென்று வந்தோமே
அந்த இடத்தில்
நள்ளிரவில் அமர்ந்து கொள்கிற
இந்தக் காட்சியை
காண வாய்ப்புள்ளோர் போய்
காணுங்கள்

5

பழைய காதலி விட்டுச் சென்ற
சோப்பின் வாசம்
முதல் நாளில்
பேரிரைச்சலோடு
வீசிக் கொண்டிருந்தது

அறையை வெளிக்கிளம்புகையில்
உடன் வரத் தொடங்கியது பின்னர்

ஒருமுறை வனத்துக்குள் நுழைய
அட்டை கடித்திழுத்த இடது தொடையிலிருந்து
எங்கும் பரவி
காட்டுச் சேவலின் பறத்தலில்
ஓடி மறைந்தது

நெடுங்காலத்திற்குப் பின்பு
ஓடும் ரயிலில் சந்தித்த மூதாட்டியிடம்
கொடுத்து விட்டுத் திரும்பினேன்
முகர்ந்து நோக்கிய மூதாட்டி
பழைய காதலன் விட்டு விட்டு போன
சோப்பின் நறுமணம் இது
என்றாள்

இன்றைய குளியலறையில்
அதன் பூஞ்சை அகற்றிப் பார்த்தேன்
பின் பூஞ்சை மூடி வைத்து விட்டேன்
எனதுடலில்
புதைந்து கொண்டது
காதலியின் மூலிகையுடல்

"இந்த சாண்டல் சோப் ஓகே
அந்த பெண்ணிய சோப்பை
என்ன செய்தேன் என்றுதானே கேட்க வருகிறீர்கள்" ?

முதல் நாளில்
இதன் நறுமணத்தைக் குறைத்த
அதனை டாய்லெட்டில் போட்டு
அப்போதே
மூழ்கிய ரகசியம்
உங்களுக்குத்
தெரியவே தெரியாதா
இன்னும் ?

6

கண்களை மூடித் திறக்க
முன்நின்றது பௌர்ணமி
கருவளையங்கள் சூழ நிலா முற்றம்
தாவர இருள் கடந்து பிரயாணம்

பின்னர் கண் மூடித் திறக்கையில்
மீண்டும் பௌர்ணமி
போக்குவரத்து நெரிசல் தாண்டி ஓரமாக
ஒதுங்கிச் சென்று கொண்டிருந்தது
சிக்கித் தவித்த வலி

பின்னர் கண்களை மூடிக் கொண்டேன்
அதே பௌர்ணமிதான்
உள்ளே உள்ளே
நிச்சலனம் மேலே பிரயாணம்

இப்போது பௌர்ணமியோடு கூடவே
உங்கள் முன்னால்
நின்று கொண்டிருக்கிறேன்
தெரிகிறதா
உங்களுக்கு ?

7

ராவணன் பத்து தலையுடன்
ரதத்தில் ஏறி அமர்ந்திருக்கிறார்
முதற்தூணில்

இந்திரஜித் பின் வளைந்து எய்யும் அம்பு
மண்டபத்திற்கு வெளியில் சென்று விழும்
உயரத்திற்குச் செல்கிறது

இடது கால் தூக்கி
சிவலிங்கத்தில் அழுத்தி
கண்ணைப் பிடுங்கி
ஐயனுக்கு பொருந்துகிறார்
கண்ணப்ப நாயனார்

ஆலிலைக் கண்ணன்
ஏறி அமர்ந்திருக்கிறான்
உச்சியில்
உடைகளை இழந்த கன்னிகள்
களி கொண்டாட
கிருஷ்ணன் மகா லீலை

செய்தி சொல்லும் அனுமனை
நெருக்கி உற்றுப் பார்த்தேன்

எல்லா பயல்களும் வாங்கடா...
பிஸ்கட் சாப்பிடலாம் என்ற சந்ரு மாஸ்டர்
குரலில்
பிரகார சுற்று மண்டபம்
விட்டிறங்கி
எல்லோரும்
டீ கடையில்
போய் அமர்ந்து கொண்டோம்

நான்கு காலங்களுக்கு
ஒரே சமயத்தில்
தன் கையால்
டீ
ஆற்றிக் கொடுத்த
நண்பன் சுப்பிரமணியனுக்கு
என்னே ஒரு ராஜ கம்பீரம்

ராவணனுக்கு ஒரு கோப்பை
அனுமனுக்கு மறு கோப்பை
கிருஷ்ணனுக்கு ஒரு கோப்பை
இந்திரஜித்துக்கு மறு கோப்பை
கண்ணப்ப நாயனாருக்கு ஒரு கோப்பை
எங்களுக்கெல்லாம் ஒரு கோப்பை
நாங்கள் இறந்தகாலத்தில் சுவைக்க
அவர்கள் அருந்தினார்கள்
நிகழ் காலத்தின் ருசியை

எத்தனை காலங்கள் தனித்தனியே
அமர்ந்திங்கே
டீ குடிக்கிறீர்கள் ? என வியந்து
டாட்டா காட்டி ஆசி கூறி
மூலஸ்தானம் நோக்கி
நடக்கத் தொடங்கினார்
மிஸ்டர் தாணுமாலயன்
இன்றைய தினத்தில்

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"