தேர்தலில் நான் ஆதரவு தெரிவிக்கும் ஆறு வேட்பாளர்கள்

தேர்தலில் நான் ஆதரவு தெரிவிக்கும் ஆறு வேட்பாளர்கள் 

கன்னியாகுமரி - பொன் ராதாகிருஷ்ணன் - பா.ஜ.க 

தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன் - தி.மு.க 

சிதம்பரம் - தொல் திருமாவளவன் - விடுதலை சிறுத்தைகள் 

4  
கரூர் - ஜோதிமணி - காங்கிரஸ் 


விழுப்புரம் - ரவிக்குமார் - விடுதலை சிறுத்தைகள்  


மதுரை - சு.வெங்கடேசன் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  


கன்னியாகுமரி தொகுதியில் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரிக்கிறேன்


கழிந்த முப்பது வருடங்களில் அல்லது அதற்கும் மேலாக இந்த தொகுதியில் நடைபெற்ற ஆக்கப் பணிகளில் பொன் ராதாகிருஷ்ணனின் ஐந்தாண்டுகள் மிகவும் குறிப்பிடத் தகுந்தவை.சாலைகள், பாலங்கள் என ஏராளம் பணிகள் நடைபெற்றிருக்கின்றன.உள்ளம் வெளிப்டையானதாக இருக்குமாயின் இதனை மறுக்கவே முடியாது.அவர் மிகவும் உத்வேகத்துடன் இந்த காரியங்களை செய்து கொண்டிருக்கிறார்.

உள்ளார்ந்த ஈடுபாடு கொண்டு இவற்றைச் செய்து கொண்டிருக்கிறார்.ஒருவர் நினைத்தால் இவ்வளவு காரியங்களை தனது தொகுதிக்குச் செய்து விட முடியும் என்பதற்கு அவர் ஒரு முன் மாதிரி.இனி எவர் இந்த தொகுதியில் வந்தாலும் அவர் அவ்வளவு செய்தார்: நீங்கள் என்ன செய்தீர்கள் ? என்கிற கேள்வி மக்கள் முன்பாக இருந்து கொண்டிருக்கும்.

சாலைகள்,பாலங்கள் வேலை நடைபெறுகிற போது சிரமாக உணர்ந்த காரியங்கள் தாம் அவை.இப்போது அதன் பலனை அனுபவிக்கும் போது பொன்னார் ஆற்றியிருக்கும் காரியங்கள் எவ்வளவு அபாரமானவை என்று தோன்றுகிறது.காமராஜ் ஆட்சி கால காங்கிரசுக்குப் பிற்பாடு இந்த தொகுதியில் இவ்வளவு வேலைகள் நடைபெற்றது பொன்னாரின் இந்த ஐந்து ஆண்டுகளில்தான்.இவை இன்னும் இந்த தொகுதியின் ஐம்பது ஆண்டுகளுடன் தொடர்பு கொண்டவை என்பதில் சந்தேகமே இல்லை.

தி.மு.க வின் ஹெலன் டேவிட்ஸன் அம்மையார் 
என்று ஒருவர் இங்கே எம்பியாக இருந்தார்.பாலங்களே இந்த மாவட்டத்தில் சாத்தியமில்லை என்று சொன்னவர்.தொகுதி மேம்பாட்டு நிதி அத்தனையையும் பிஸ்கட் வாங்கித் தின்றே தீர்க்க முடியும் என நிரூபித்தவர்.அதற்கும் முன்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் திருமண வீடுகளுக்கும் ,துஷ்டி வீடுகளுக்கும் தவறாமல் வந்து செல்பவர்கள்,நாடாளுமன்றத்தை தூங்குவதற்கான ஸ்தாபனமாக பயன்படுத்தியவர்கள்.தங்களுக்கு ஒதுக்கப்படும் ரயில்வே முன்னுரிமை டிக்கட்டுகளை மட்டும் மக்களுக்கு விட்டு தருபவர்கள்.பெரும்பாலும் கிறிஸ்தவ பிரதிநிதிகள்.அவர்களுக்கே பெரும்பாலும் உழைத்தார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் இயல்பிலேயே கிறிஸ்தவ ஆதிக்கம் நிறைந்த மாவட்டம்.இந்த மாவட்டத்தின் காங்கிரஸ் என்பது கிறிஸ்தவ காங்கிரஸ்தான் .அதாவது CSI நாடார்களின் காங்கிரஸ்.இந்து வேட்பாளர் அங்கே நின்றாலும் கூட அது மேலாதிக்கம் மிக்க கிறிஸ்தவ காங்கிரஸுக்கே பயனுடையதாக இருக்கும்.ஏராளமான கிறிஸ்தவ நிறுவனங்கள்.இதில் RC கிறிஸ்தவர்கள் இணக்கமும் அப்பாவித்தனமும் நிறைந்தவர்கள்.அவர்களுக்கும் CSI கிறிஸ்தவம் துணை செய்வதில்லை.தேர்தல் காலங்களில் மத நல்லிணக்கத்தை அவர்களுக்கு பாடம் சொல்லித் தருவதை தவிர.அவர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிற ஒரு தரப்பினர்.பொன் ராதா கிருஷ்ணன் RC கிறிஸ்தவர்களுடனும் இணக்கமான போக்கையே கடைபிடிப்பவர்.RC கிறிஸ்தவர்களிடமும் பொன்னாருக்கு ஒட்டு வங்கி உண்டு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் உட்பட ஏராளம்.அவை மிகுந்த பாரபட்சத்தைக் கடைபிடிப்பவை.கிறிஸ்தவர்களுக்கு அன்பு ஏற்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருப்பதால் அவர்கள் அன்பு ஒழுக பழகுவார்கள் ,பனானா கேக் தருவார்கள்,முற்போக்கு பாவனையில் ஈடுபடுவார்கள் எல்லாமே சரிதான்.நான் பார்த்த அனைத்து கிறிஸ்தவ முற்போக்குகளும் வயது ஏற ஏற முழுமையான அடிப்படைவாத கிறிஸ்தவமாக மாறிவிடக் கூடியவை.விதிவிலக்காக ஒன்றிரெண்டைக் கூட அதற்கு வெளியில் நான் கண்டதில்லை.முற்போக்கு என்பது அவர்களுக்கு ஒரு தொழில் நுட்பம். ஆனால் காரியம் என்று வருகிறபோது ; ஒரு பென்சில் வாங்க வேண்டுமாயினும் ஐந்து கிலோமீட்டர் அலைந்து ஒரு கிறிஸ்தவரிடம் மட்டுமே அவர்களால் வணிகத் தொடர்புகளை பேண முடியும்.அன்பென்பது 
அன்பொழுகப் பேசுவது மட்டும் அல்ல, பாரபட்சம் இல்லாமல் இல்லாமல் இருக்க முயல்வது என்பது அவர்களுடைய பாடத்திட்டத்தில் கிடையாது.

இந்த மாவட்டத்தில் அவர்கள் அதிகாரம் கண்ணுக்குப் புலப்படாதது,ஆனால் வானளவுக்கு உயர்ந்தது.என்னுடைய நண்பர் ஒருவர் இந்த மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அதிகாரியாக சில காலம் பணி புரிந்தார்.அந்த சமயத்தில் தான் ஜெயலலிதா அம்மையார் பள்ளிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சீருடை வண்ணத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தி அரசாணை பிறப்பித்தார்.கிறிஸ்தவப் பள்ளிகள் ஒன்று கூட அந்த ஆணையை இன்றுவரையில் பொருட்படுத்தியதில்லை.நான் அவரிடம் பிற பள்ளிகளில் கறாராக இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்கிற உங்களால் இந்த கிறிஸ்தவப் பள்ளிகளை கண்டிக்கக் கூட முடியவில்லையே ஏன் ? என்று கேட்டேன்.முடியாது என்னென்று நான் உங்களிடம் சொன்னாலும் உங்களுக்குப் புரியாது,யார் மீது நடவடிக்கை எடுக்க முடியும் ,முடியாது என்பதெல்லாம் அதிகாரமட்டங்கள் மட்டுமே உணரக்கூடியவை என்றார்.நாங்கள் மட்டுமே அறிந்த வரம்புகள் அவை என்றார்.

கிறிஸ்தவ அதிகாரிகள் வணிகக்கடன் வழங்கும் பொறுப்புகளில் இருக்கும் போது இந்து வணிகர்கள் நிறைய சிரமங்களை அடைவார்கள்.கடன் வாங்கி ஏன் சிரமத்திற்கு ஆளாகிறீர்கள் ? என்று தெரிந்தவர்களாயினும் அவர்கள் புத்திமதிகள் சொல்லுவார்கள்.அந்த புத்திமதிகள் தவறு என்று நான் சொல்லமாட்டேன்.

பொன்னாரின் இந்த ஐந்து வருட காலத்தில் இந்து வணிகர்கள் முத்ரா வங்கி கடன்கள் போல நிறைய விஷயங்களில் பயன் பெற்றார்கள்.மாடுகள் வளர்ப்போர்,ஆடுகள் வளர்ப்போர் பயனடைந்தார்கள்.எங்களுடைய பஞ்சாயத்திற்கு உட்பட்ட சிறுபகுதியில் மட்டுமே 472 பேர் வீடு கட்டுவதற்காக இரண்டரை லட்சம் உதவி பெற்றிருக்கிறார்கள்.பா .ஜ .க வின் வேல்பாண்டியன் ஆர்வத்துடன் முயன்று இந்த நலத்திட்ட உதவிகள் மக்களை நேரடியாக சென்று சேரும்படி செய்தார்.தேர்தல் நேரத்தில் வந்து இப்படி பயன்பெற்றோருக்கு குண்டி கழுவி விட்டாலும் கூட அவர்கள் பொன்னாரையே ஆதரிப்பார்கள்.எப்போதுமே மக்களின் கண்ணோட்டமும் சீர்திருத்தவாதிகளின் மேலிருந்து நோக்கும் பார்வையும் முற்றிலும் வேறானவை.எனக்கு மக்களின் கண்ணோட்டம் முக்கியமானது.

ஆனால் எனக்கு மேலிடத்தில் மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வருவதில் விருப்பமில்லை.ஆட்சி நடத்த தெரியவில்லை என்பதை மத்தியில் பா.ஜ.க நிரூபித்திருக்கிறது.அவர்களுக்கு தற்போது ஓய்வு தேவை .சில பாடங்களையும் அவர்கள் கற்க வேண்டும்.ஆட்சி நடத்தும் தகுதியினை முதலில் அவர்கள் பெற வேண்டும்.இப்படி நான் சொல்வது முரண்பாடானதுதான்.நிலைமை முரண்பாடாக இருந்தால் என்ன செய்வது ?

பொன்னாரின் குமரியில் இந்த ஐந்தாண்டுகளில் பெரிய சாதி,மதப் பிணக்குகள் ஏற்படவில்லை என்பதே உண்மை.அது ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் சில ஏற்பட்டபோது அதனை தனது திறமையால்,நிர்வாகத்தால் பல தரப்புகளுடனும் பேசி தடுத்தார்

கன்னியாகுமரி தொகுதியில் கிறிஸ்தவ வாக்காளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் , கழிந்த முறை நிலவிய நான்குமுனைப் போட்டியால் பொன் ராதாகிருஷ்ணனுக்கு வெல்வது எளிமையாக இருந்தது.இந்த முறை அப்படியிருக்காது எனினும் நான் பொன்னாரையே ஆதரிக்கிறேன். கழிந்த முப்பது வருடங்களில் குமரி மாவட்டத்திற்கு அமைந்த சிறந்த வேட்பாளர் அவர்.ஒருவர் என்ன பேசுகிறார் என்பதைக் காட்டிலும் முக்கியமானது அவர் என்ன செய்கிறார் என்பதே...


தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன்


வெற்றி பெறுவார் .

தமிழச்சி தங்கபாண்டியன் எங்களை போன்ற உதிரியான,குரலற்ற கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,நாடகக் கலைஞர்கள் போன்றோரின் பக்கமாக எப்போதும் நிற்கக் கூடியவர்.பலகாலமாக இந்த உறவு நீடித்து வரக்கூடியது.எந்த நிலையிலும் எங்களைக் கைவிடாதவர் .தான் ஏற்றுக் கொண்ட பொறுப்புகளுக்கு மிகவும் நேர்மையுடன் இருப்பவர் , அது இலக்கியம் சார்ந்த விஷயங்களோ,பிறவோ எதுவென்றாலும் அதில் அவருடைய நேர்த்தியிருக்கும்.என்னுடைய மிகவும் நெருக்கமான நண்பர்.எனது குழந்தைகளுக்கு அத்தையாக இருப்பவர்.

2005 வாக்கில் என்னுடைய நண்பர் ஒருவர் தமிழச்சி தங்கபாண்டியன் தான் செல்லும் மேடைகளெல்லாம் உங்களுடைய கவிதைகளைக் குறிப்பிட்டு பேசி வருகிறார் என்று சொன்னார்.அப்போது என்னுடைய கவிதைகளை பேசுவோர் கிடையாது.விக்ரமாதித்யன் மட்டும் விதிவிலக்காக ஏதேனும் மூலையில் இருந்து கொண்டு கத்திக் கொண்டிருப்பார்.மற்றபடி யாரும் பேச மாட்டார்கள்.தீட்டு பட்டு விடும்,இவருடைய கவிதைகளை பற்றி பேசினால் நம்மையும் தவறாகப் பேசுவார்கள் என்றிருந்த காலம்.

சிறிது நாட்களுக்கு முன்பு நண்பர் ஸ்டாலின் ராஜாங்கம் இந்து தொகுத்த மலரிலோ என்னவோ அப்படித்தான் நினைவு ,தலித்துகள் முற்றிலுமாக இல்லை என்பதை சுட்டியிருந்தார்.அது குறித்து மதுரையிலும் அவரிடம் பேசினேன்.என்னைப் போன்றோர் இலக்கியத்தில் தலித் போலத்தான்.இலக்கியத்தில் தமிழ்நாட்டில் உள்வட்டம் இன்று வரையில் ஏராளமான பாரபட்சங்களால் ஆனதே.அது என் மட்டில் உச்சத்தில் இருந்த போது எனது கவிதைகள் பற்றி பொதுவில் பேசியவர் தமிழச்சி தங்கபாண்டியன்

எங்கெங்கெல்லாம் அவர் என்னுடைய கவிதைகளை பேசிக் கொண்டிருக்கிறார் என்று நண்பர் தொடர்ந்து தகவல் தெரிவித்துக் கொண்டிருப்பார்.நம்பிக்கைகளே இல்லாதிருந்த காலம் அது.இதனைக் கேட்க கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டது.பின்னர் எதேச்சையாக சென்னை புத்தக விழாவில் சந்தித்தோம்.பலகாலமாக பழகிக் கொண்டேயிருப்பவர்களைப் போலவே அதன் பிறகு எங்கள் நட்பு அமைந்தது.சென்னை சென்றால் அவருடைய வீட்டிற்குச் செல்வேன்.நாகர்கோயில் வந்தால் அவர் எங்கள் வீட்டிற்கு வருவார்.இவை திட்டமிடப்படுபவை எல்லாம் கிடையாது.இப்படித்தான் இருக்கும் இயல்பாகவே .

ஒருமுறை சென்னையில் நடைபெற்ற கவிதை பற்றிய அரங்கில் என்னுடைய கவிதையை மேற்கோள் காட்டி பேசி விட்டு இறங்கவும் காத்திருந்து பத்திரிகையாளர் ஒருவர் "அவரைப் பற்றியெல்லாம் எதற்காக பேசிக் கொண்டிருக்கிறீர்கள்",உங்களையும் தவறுதலாக எடுத்துக் கொள்வார்கள் என்று எச்சரித்திருக்கிறார்.சிரித்த வண்ணம் கடந்து செல்ல முயன்றவரை ,மீண்டும் தடுத்து "நீங்கள் என்ன லக்ஷ்மி மணிவண்ணனுக்கு பி ஆர் ஓவா" என்று சினந்திருக்கிறார் .அதற்கும் உங்களை போன்ற பலர் எங்களுக்கு இருக்கிறீர்கள் ,அவரைப் போன்றோருக்கு எங்களை போன்ற ஒன்றிரண்டு பேர் இருந்து விட்டுப் போகிறோமே அதனால் என்ன ? என பதில் கூறி நகர்ந்திருக்கிறார் தமிழச்சி தங்கபாண்டியன்.இதுவும் நண்பர் மூலமாக அறிந்ததே.தமிழச்சி தங்கபாண்டியன் எப்போதும் கட்சி ,குலம்,கோத்திரம் என எல்லாவேறுபாடுகளையும் கடந்து எங்களுடைய தரப்பினைச் சார்ந்தவர்.அப்படியானால் எங்களுடைய தரப்பு என்றால் என்ன ? மிகவும் கூர்மையான விழிப்புணர்வுடன் புறக்கணிக்கப்படுகிற ஒடுக்கப்படுகிற தரப்பு.என்னைப் போன்ற அனைவரின் குடும்பங்களுக்கும் வேண்டியவர் அவர்.

ஒருசமயம் எங்கள் ஊர் பகுதியில் அவர் கலந்து கொள்ள வேண்டிய மிகவும் முக்கியமானதொரு கூட்டம்.கூட்டம் முடிந்து அவர் எங்களுடைய வீட்டிற்கு வர வேண்டும்.அப்போது அவருக்கு எங்கள் வீட்டின் வழி தெரியாது.என்னைக் கொன்றால் மட்டுமே இந்த ஜீவிதத்திற்கு அர்த்தம் உண்டு என கருதும் ஒரு தரப்பினர் அந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.அழைத்துச் செல்வதற்காக சென்ற என்னை எப்படியோ பார்த்து விட்டார்.மேடையில் இருந்து இறங்கி அப்படியே வந்து விட்டார்.பின்னர் கூட்டத்தை முடித்து விட்டு வீட்டிற்குத் திரும்பினோம்.எப்போதும் நட்பை விட்டு கொடுக்க இயலாதவர் அவர் என்பதற்காகவே இதனைச் சொல்கிறேன்.

அவர் வெற்றிபெறுவது எங்கள் தரப்பிற்கு சக்தி.வெற்றி பெறுவார் நிச்சயமாக சக்திபெறுவோம் .சென்னை வெள்ளத்தின் போது அவர் மக்களுடன் இறங்கி ஆற்றிய பணிகளை அப்பகுதி மக்கள் அனைவரும் அறிவார்கள். எங்கள் குல தெய்வங்கள் அவருக்கு எப்போதும் துணையிருக்கும் .உதய சூரியன் சின்னத்தில் அவர் மிகப் பெரிய வெற்றியை அடைய அந்த பகுதி நண்பர்கள் ஒத்தாசையாக இருங்கள்

வாழ்த்துகள்


சிதம்பரத்தில் தொல்.திருமாவளவன் வெற்றி பெறவேண்டும்


திருமாவளவன் ஒப்பற்ற தலைவர்.அவருக்கு இணையான தலைவர்கள் தற்போது தமிழ்நாட்டில் இல்லை.அவருடன் தர்க்க பூர்வமாக எந்த விஷயத்தைப் பற்றி வேண்டுமானாலும் பேசமுடியும்.அறிவும் தலைமைப் பண்பும் ஒருங்கே அமையப் பெற்றவர் .அவர் ஆற்றி வருகிற பணிகள் தீர்க்க தரிசனங்களும் பற்றுதிகளும் நிறைந்த ஒருவரால் மட்டுமே செய்ய முடிந்தவை.

ஆன்மீகத்தில் ராமானுஜர் செய்ததை , வைகுண்டசாமிகள் செய்ததை ,வள்ளலார் செய்ததை ,நாராயணகுரு செய்ததை ,அய்யங்காளி செய்ததை அரசியலில் செய்து கொண்டிருக்கிறார் திருமாவளவன்.பிற அனைத்து காரியங்களைக் காட்டிலும் இது கடுமையானது .தான் செய்ய வேண்டிய காரியம் என்ன ? என்பதை தீர்க்கமாக ,தெளிவாக உணர்ந்த ஒருவரால் அன்றி வேறு எவராலும் அவர் செய்து வருகிற காரியங்களை செய்ய இயலாது.

ஒடுக்கப்பட்ட தரப்பு மக்களை அரசியல் அதிகாரம் பெற செய்வதும், தாங்கள் எப்படியெல்லாம் ஒடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்த்தி ஒன்று திரட்டுவதும், அவர்களுடைய சமூக விடுதலையில் பங்கேற்பதும் எளிமையான காரியங்கள் அல்ல.

எனக்கு கிருஷ்ணசாமி மீதும் மதிப்புண்டு.அவர் சார்ந்த மக்களின் மனநிலையில் நின்று காரியங்களை ஆற்றிக் கொண்டிருப்பவர் அவர்.அவை மேன்மையான காரியங்களே.வெளியில் நின்று கொண்டு அவருக்கு ஆலோசனைகள் சொல்லிக் கொண்டிருப்போர்,அவர் சார்ந்த மக்களின் மனநிலையையும் ,தேவைகளையும் அறியாதவர்கள் என்பதே உண்மை.ஆனால் கிருஷ்ணசாமி ஆற்றும் காரியங்களை முக்கியமானவை என்று சொல்லும் போதும் கூட அவரை திருமாவளவனைப் போன்ற தலைவர் என்று என்னால் சொல்ல இயலாது.இந்த ஒப்பீடு ஒருவேளை அவசியமற்றதாகக் கூட இருக்கலாம்.திருமாவளவன் எப்படி மிகவும் முக்கியமான தலைவர் என்பதற்கு இந்த ஒப்பீடு அவசியம்.

கிருஷ்ணசாமி அவர் சார்ந்த தரப்பு மக்களோடு மட்டுமே புரிதல் கொண்டவர்.அதுவே அவர் இலக்கு.ஆனால் திருமாவளவன் தமிழ்நாடு முழுமைக்கும் தலைவராகும் தகுதி படைத்தவர்.அனைத்து சாதியினரோடும் இணக்கம் கொள்ளத்தக்க உறவுகளை எப்போதும் பேணி வருபவர்.சாதியை தாண்டி மனித குல பிரச்சனைகளுடன் தொடர்பு கொண்டது அவருடைய மனம்.இதனைச் சொன்னவுடன் அவர் எப்போதோ எதிர்வினைகளாக பேசிய ஒளிப்பதிவுகளை எடுத்துக் கொண்டு ஓடி வராதீர்கள்.அவர் நின்று காக்கும் தரப்பு மக்களுக்காக, அவர் எந்த காரியத்தை செய்தாலும் அது நியாயம் பெற்று விடும் என்பதை அறிந்தவர்களால் உணர்ந்தவர்களால் மட்டுமே அவருடைய இருப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

எங்களுக்கு திருமாவளவன் குடும்பத்தின் சொந்த அண்ணனைப் போன்றவர்.எங்கள் அய்யா வைகுண்டசாமியின் அய்யாவழியில் எங்களுக்கு தலைமூத்த அண்ணனைப் போன்றவர் அவர்.அய்யாவின் ஆறாவது வழித்தோன்றலான பால பிரஜாபதி அடிகளார் அவர்களால் என்னுடைய வளர்ப்பு மகன் என்று அறிவிக்கப்பட்டவர் போற்றப்பட்டவர்.திருமா அடிகளாரை தன்னுடைய வளர்ப்புத் தந்தையாகக் கருதுபவர்.ஏற்றுக் கொண்டவர்.பால பிரஜாபதி அடிகளாரின் அம்மா மறைவின் போது எங்கள் தலைமூத்த அண்ணன் திருமா வந்த பிறகே ,மகன் என்கிற வகையில் அவர் செய்ய வேண்டிய காரியங்களை செய்த பிறகே உடல் அடக்கம் நடைபெற்றது.

இதனையெல்லாம் விட்டு விட்டாலும் கூட தமிழ்நாட்டு அரசியல் தலைவர் ஒருவரை அண்ணன் என நான் தனிப்பட்ட முறையில் அழைக்க விரும்புவேனெனில் அது திருமாவளவன் ஒருவரை மட்டுமே

அண்ணன் திருமா சிதம்பரத்தில் மாபெரும் வெற்றியினை ஈட்ட என்னுடைய நல் வாழ்த்துகள். அவருடைய வெற்றி என்பது ஒருபோதும் அவருடைய தனிப்பட்ட வெற்றி ஆகாது.அது தமிழ்நாட்டுக்கான வெற்றி.


கரூரில் ஜோதிமணி அவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்


சில சிறந்த வேட்பாளர்கள் இந்த தேர்தலில் மக்களின் முன்பாக நின்று கொண்டிருக்கிறார்கள்.அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டியது அவசியம் .நாடாளுமன்றத்தை அர்த்தமுள்ளதாக்க அவர்களால் இயலும் என்கிற என்னுடைய நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களை இந்த தேர்தலில் நான் ஆதரிக்கிறேன்.அவர்களில் ஒருவர் கரூர் தொகுதி வேட்பாளர் ஜோதிமணி அவர்கள்.நேர்மையானவர்.தனித்த சிந்தனையும் குரலும் உடையவர்.ஏதேனும் உருப்படியாகச் செய்யவேண்டும் என்னும் ஆர்வம் கொண்டவர்.காங்கிரஸ் வேட்பாளராகக் கை சின்னத்தில் அவர் களத்தில் இருக்கிறார்.

அல்லக்கைகளையும் , கந்து வட்டிகளையும் ,நிலத் தரகர்களையும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி விட்டு நமது குரல் அங்கே ஒலிக்கவில்லை என ஒதுங்கியிருந்து புலம்புவதில் ஒரு அர்த்தமும் இல்லை.

முதலில் நாம் தேர்வு செய்கிற வேட்பாளர்கள் அவர்கள் தம் மனதிற்கு நேர்மையானவராக இருக்க வேண்டும்.அப்படியானவர் ஜோதி மணி அவர்கள்.

இவரைப் போன்றோர் வெற்றிபெறும் போது ஜனநாயகம் வலிமையடைகிறது.

கரூரில் இவர் வெற்றி பெறுவதே நல்லது

அவருக்கு என்னுடைய நல் வாழ்த்துகள்




விழுப்புரத்தில் ரவிக்குமார் வெற்றி பெறவேண்டும்


ஒரு நவீன எழுத்தாளன் ஒரு இடத்தில் பங்கு பெறும் போது அந்த இடம் நவீனமாகிறது.அதற்காக அமைப்பிற்குள் சதா பாடுபட்டுக் கொண்டேயிருக்கிறான் என்பது பொருள் அல்ல.எந்த அமைப்பினையும் முழுமையாக அவ்வாறு செய்ய இயலாது.அதிலும் வெகுமக்கள் பங்கு பெறுகிற இயக்கங்கள் பல்வேறு வகையான மனோபாவங்களின் கூட்டாக இருப்பவை.ஆனால் நவீன எழுத்தாளனின் இருப்பு அமைப்பை மேம்படுத்தும்.அந்த இருப்பு என்பது ஒரு மேலான விழிப்பு நிலை.

இந்த மேலான விழிப்பு எப்படி பிறருக்கு புரிகிறது என்றால், அதற்கு ஏதேனும் சிறப்பாகச் செய்ய வேண்டுமா என்றால் வேண்டியதில்லை.எந்தவொரு மேலான விழிப்பு நிலையும்,மேலான விழிப்பு நிலை என அறைகூவல் விடுக்கப்படாமலே மேலான விழிப்பு நிலை என்று உணரும் தன்மை கொண்டே இருக்கும்.அதன் இருப்பே அதனால் சிறப்படையும்.பிற கட்சியினரைக் காட்டிலும் விடுதலைச் சிறுத்தைகள் நவீனமாக இருப்பதற்கு ரவிக்குமார்,கௌதம சன்னா போன்றோரின் பங்கு முக்கியமானது.ஒரு புத்தக அலமாரி உள்ள வீட்டில் வளருகின்ற குழந்தைகள் பிறரில் சிறப்பாக இருப்பதை போல .இந்த நவீனம் விடுதலைச் சிறுத்தைகள் என்று பெயரிடப்பட்ட காலத்தில் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

ரவிக்குமாரை தொண்ணுறுகளின் ஆரம்பத்தில் இருந்து எனக்குத் தெரியும் .அப்போது அவர் பாண்டியில் ஒரு வங்கியில் பணி புரிந்து கொண்டிருந்தார்.புதிய விஷயங்களை தேடித் சென்று பார்ப்பது என்னுடைய பழக்கம்.அதிலும் நம்புகிற விஷயங்களுக்கு முரணாக நேர்மையுடன் பேசிக் கொண்டிருப்போரை சென்று பார்ப்பது,சு.ரா ஊட்டிய பாடங்களில் விஷேசமானது.அ.மார்க்ஸும் , ரவிக்குமாரும் இணைந்து அப்போது செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.அவையெல்லாம் காத்திரமான செயல்பாடுகளும் கூட ,தமிழ்ச் சமூகத்தை அவர்கள் இருவருடைய செயல்பாடுகளும் பாதித்தன.பாண்டிச்சேரிக்கு ரவிக்குமாரை பார்ப்பதற்காக போய் இறங்கினேன்.மதியம் விடுப்பு எடுத்துக் கொண்டு அவர் வெளியில் இறங்கி வந்தார்கள்.நிறைய பேசிக் கொண்டிருந்தோம்.அது போல பிற பிற வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாண்டிச்சேரி பிரேம்,ரமேஷ் ,மாலதி மைத்ரி ஆகியோரையும் சென்று பார்த்திருக்கிறேன்.

ரவிக்குமாரின் பங்களிப்பாக நான் கருதுகிற விஷயம் என்று தத்துவவாதிகளை, அதாவது பிற மொழி தத்துவவாதிகளை தமிழில் மொழிபெயர்த்தத்தைச் சொல்வேன்.அந்த காலத்தில் கலாச்சார மேலாதிக்கம் செய்ய விரும்பிய ஒரு சிறு குழு தத்துவவாதிகளை ,மேல் நாட்டு சிந்தனையாளர்களை தப்புத்தப்பாக தமிழில் திருகி மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார்கள்.சல்பாஸ் தின்று வாந்தியெடுப்பதை ஒத்த மொழிபெயர்ப்புகள் அவை.ரவிக்குமார் அத்தகைய இடர்பாடுகள் ஏதுமின்றி சரளமாக ,சிறப்பாக மேல் நாட்டு சிந்தனைகளை தமிழில் மொழிபெயர்த்தார்.அவருடைய "உரையாடல் தொடர்கிறது "மொழிபெயர்ப்பு நூலை வாசித்துப் பார்ப்பவர்களுக்கு நான் சொல்வதில் உள்ள உண்மை விளங்கும்

ரவிக்குமார் நல்ல சிந்தனையாளர் .மக்களோடு நேரடி தொடர்பு கொண்ட சிந்தனையாளர்.அவர் ஒருபோதும் காடு வெட்டி குருவோ,மாடு வெட்டி குருவோ அல்ல.சிந்தனைகளுக்கு விரோதமாக அவரால் செல்ல முடியாது.சிந்திப்பவன் ஒருபோதும் சிந்தனைகளுக்கு விரோதமாக செல்ல முடியாது.சென்றால் சிந்தனைகளே அவனைக் கொல்லும்

ரவிக்குமார் தன்னுடைய சிந்தனைகள் மூலமாக தி.மு.க வின் புதிய இளைஞர்களையும் பாதித்தவர்.நவீனப்படுத்தியவர்.இந்த கூற்று சிறிதும் மிகையில்லை என்பது நெருங்கியோருக்கு நன்றாகத் தெரியும்.

ஏற்கனவே ஒருமுறை சட்டமன்றத்திற்கு மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் ரவிக்குமார்.நாடாளு மன்றத்திற்கு அவர் செல்லும் வாய்ப்பு ஏற்படுமாயின் தமிழ்நாட்டிலிருந்து ஒரு அறிவாளி அங்கே உருப்படியாக வேலை செய்யும் வாய்ப்பு உருவாகும்.தமிழ்நாட்டிற்கு அது பல நன்மைகளை உருவாக்கும்

விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் வெற்றி பெற வேண்டும்.அதுவே என்னுடைய விருப்பம்.


மதுரையில் சு.வெங்கடேசனை ஆதரியுங்கள் வெற்றி பெறச் செய்யுங்கள்


தமிழ்நாட்டு இடதுசாரிகளோடு என் போன்றோருக்கு எவ்வளவோ வேறுபாடுகள்,பிணக்குகள் எல்லாம் உண்டு.அவர்கள் சொல்கிற வரலாறு ,பண்பாடு ,இலக்கியம் எதுவும் எனக்கு ஏற்புடையதல்ல.ஆனால் எப்போதும் அவர்களை மகத்தான எதிரிகள் என்று சொல்லலாம்.சாதி,பெண்கள் தொடர்புடைய பார்வைகளில் பிற தரப்பினர்களைக் காட்டிலும் அவர்கள் முற்போக்கானவர்கள் தாம் என்பதில் சந்தேகமில்லை.

வழக்கமாக தமிழ் நாட்டிலிருந்து தேர்வு செய்யப்படுகிற எம்பிகளிடம் இருப்பது போன்ற ஊர் பண்ணையார்த் தனம் இவர்கள் எவரிடமும் நிச்சயமாக கிடையாது.சம நீதி,சம பங்கேற்பு என்பதெல்லாம் என்ன என்பது இவர்களுக்குத் தெரியும்.நம்மிடமிருந்து இதுகாறும் சென்றவர்களில் பெரும்பான்மையோர் ஊர் பண்ணையார்த் தனம் கொண்டவர்கள் .

ஊர் பண்ணையார்த் தனம் கொண்டவர்கள் நமது பிரதிநிதிகளாக இதுகாறும் அமைந்ததில் நமக்கு மிகப் பெரிய அவமானம் உண்டு.நிச்சயமாக நம்மை பிரதிநிதித்துவம் செய்கிறவர்கள் ஊர் பண்ணையார்த் தனம் கொண்டவர்களாக இருக்கக் கூடாது.ஊர் பண்ணையார்த் தனத்திற்குள் சாதி,மத ,இன மற்றும் கீழ்நிலைக் கச்சவடங்கள் அனைத்தும் உண்டு.ஏகதேசம் அவர்களை சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த இனம் என வரையறை செய்யலாம்.சம காலத்திற்கு அவர்கள் பொருந்த மாட்டார்கள்.

சு.வெங்கடேசனைப் போன்றவர்கள் நவீனமானவர்கள்,புரிதல் கொண்டவர்கள்,எதிரிகளாக இருந்தாலும் நாம் என்ன பேசுகிறோம் என்பதை புரிந்து கொள்ள தெரிந்தவர்கள்.

சு.வெங்கடேசன் மதுரையை பிரதிநித்துவம் செய்தால் மதுரை நவீனமடையும்.தற்போதைய மதுரை ஒரு இருள் நகரம்.சாதியின் விஷம் சதா காற்றில் அலைந்து கொண்டிருக்கும் பண்ணையார்களின் நகரம்.

அரிவாள் சுத்தி நட்சத்திரம் சின்னத்தில் வெங்கடேசனுக்கு உங்கள் வாக்குகளைத் தாருங்கள் .ஏற்கனவே மிக மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஒருமுறை தேர்தலில் நின்று தோல்வியுற்றவர் .தோல்வி என்று சொல்ல முடியாத தோல்வி ஏற்கனவே அவர் அடைந்தது.இளைஞர்கள் ,புதிய வாக்காளர்கள் அவர் மீது திரும்பினாலே எளிதில் வெற்றி பெற்றுவிடுவார் வெங்கடேசன்

வெங்கடேசன் வெல்வதைத்தான் மதுரை மீனாட்சியும் விரும்புவாள்.அவளுக்கும் நவீனமடையும் விருப்பமிருக்காதா என்ன ?

சிறந்த எழுத்தாளர்,சாகித்ய அகாதமி விருது பெற்றவர் மதுரைக்கு அழகு சேர்க்கட்டும்.

வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"