"பொன்பரப்பி"எழுத்தாளர்கள்,கலைஞர்கள் கண்டனக்கூட்டம்

பொன்பரப்பி தலித்துகள் மீதான தாக்குதலை கண்டித்து
எழுத்தாளர்கள் ,கவிஞர்கள் ,ஓவியர்கள் கண்டனக்கூட்டம்

வருகிற சனிக்கிழமை 27  - 04  -2019  சென்னை தமிழர் திடலில் தலித்துகள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து எழுத்தாளர்கள்,ஓவியர்கள் ,கவிஞர்கள் பங்கேற்கிற கண்டனக் கூட்டம் நடைபெற உள்ளது.அனைத்து தரப்பு எழுத்தாளர்களும்,கலைஞர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று இது போன்ற நாகரீகமற்ற தாக்குதல்கள் ,மேலும் நடைபெறா வண்ணம் இருக்க தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.இதுபோன்ற மனித விரோத தாக்குதல்களுக்கு துணை நிற்கும் அரசு அமைப்புகள்,காவல் துறை ஆகியவற்றின் காதுகளில் நமது ஒருமித்த குரல் சென்று சேர இந்நிகழ்வு உதவும்.இந்த நிகழ்வு நம்முடைய மனச்சாட்சியின் குரலே அன்றி யாதொரு நிறுவன பின்புலமும் இல்லாதது.தன்னிச்சையானது.தன்னிச்சையான எழுத்தாளர்களுடைய குரல்கள் ,கலைஞர்களின் வெளிப்பாடுகள் இது போன்ற இக்கட்டான தருணங்களில் முக்கியமானது.நமக்குள் உள்ள வேறுபாடுகளை கைவிட்டு இது போன்ற சந்தர்ப்பங்களில் உடன் நிற்கும் தேவை தற்போது அதிகரித்து வருகிறது.தன்னிச்சையான சார்பு நிலையற்ற குரல்களை இதனை முன்னிட்டு ஒருங்கிணைகிறோம்.

பொன்பரப்பியிலும் அதனை ஒட்டி பிற இடங்களிலும் நடைபெற்றிருக்கும் தலித்துகள் மீதான திட்டமிட்ட சாதீய தாக்குதல்கள் நாம் வாழ்வது ஒரு நாகரீக சமூகத்தில் தானா என்கிற ஐயத்தை ஏற்படுத்துகின்றன .வீடுகளை கூட்டமாகச் சென்று சாதீய வெறியர்கள் தாக்கும் காணொளிகள் தலை குனிவை ஏற்படுத்துகின்றன.போலீசும் ,அரசும் சாதீய வெறியர்களுக்கு சாதமாக நிற்கிற துர்பாக்கியமான நிலை நாம் இன்று பொதுவில் அடைந்திருக்கும் வீழ்ச்சியினைக் குறிப்பதே.எத்தகைய சந்தர்ப்பங்களிலும் நாம் நாகரீகமான சமூகமாக முன்னேறுதலையே குறிக்கோளாகக் கொண்டிருத்தல் வேண்டும்.ஒருமித்த குரல் மூலம் நாம் இந்த சமூகத்திற்கும் ,அரசிற்கும் அதற்காக அழுத்தம் ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.இது நமது கடமை .நம்முடைய எதிர்கால சந்ததிகளை மீண்டும் காட்டுமிராண்டிகள் கரங்களில் ஒருபோதும் விட்டுத் தந்து விடக் கூடாது.

இந்த நிகழ்விற்கு

ஜெயமோகன்
கோணங்கி
எஸ்.ராமகிருஷ்ணன்
சோ.தர்மன்
ராமானுஜம்

ஆகியோர்  கலந்து கொண்டு தங்களுடைய கண்டனத்தை தெரிவிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.கவிஞர்கள் ஷங்கர் ராம்சுப்ரமணியன் ,கண்டராதித்தன் இந்நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.பிறரையும் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்

இந்த நிகழ்வினை குறைந்த கால அவகாசத்தில் நடத்த வேண்டிய தேவை இருப்பதால் அனைத்து விதமான தரப்பு எழுத்தாளர்களையும் ,கலைஞர்களையும் தொடர்பு கொண்டு வருகிறோம்.தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரையும் இந்த நிகழ்வில் பங்கேற்க அழைக்க வேண்டும் என்பதே எங்களுடைய அவா .எனினும் காலமின்மையை மனமேற்கொண்டு இதனையே அழைப்பாக ஏற்று அனைத்து தரப்பினரும் பெருந்திரளாகக் கலந்து  நம்முடைய குரலை ஓங்கி முன்வைக்க வேண்டும்.நம்மாலும் பெருந்திரலாகத் திரண்டு மனச்சாட்சியின் குறையை முன்வைக்க முடியும் என்பதனை தீய சக்திகள் உணரவேண்டும் .

இந்த நிகழ்வு ஓவியர் சந்ரு அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.அசதா ,லிபி ஆரண்யாயுடன் நானும் இணைந்து மூவரும் ஒருங்கிணைகிறோம்

அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள் .தங்கள் வருகையை இந்த பக்கத்திலேயே பதிவு செய்யலாம்.நண்பர்களுக்கு இந்த நிகழ்வு செய்தியினை பகிரலாம் 

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அவசியம் முன்னெடுக்க வேண்டிய கண்டனக்கூட்டம். இதற்கு என் மனப்பூர்வமான ஆதரவை இங்கே பதிகிறேன். ஊரில் இல்லாததால் என்னால் பங்கேற்க முடியவில்லை. அதற்காக வருந்துகிறேன். பெருந்தேவி

    ReplyDelete
  3. நிகழ்வு 1: 'நூறு மீட்டருக்குள் பானை உடைப்பு'

    சிதம்பரம் நாடாளுமன்றத்துக்கு உட்பட்ட குன்னம் சட்டமன்றத் தொகுதியின் 281 முதல் 284 வரையிலான வாக்குச்சாவடிகள் பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடியில் இருந்து சுமார் 60 மீட்டர் தொலைவில் இருக்கும் செல்வ விநாயகர் திருக்கோவில் முன்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவர்களது கட்சி சின்னமான பானையை வைத்து சட்டவிரோதமாக ஓட்டுக்கேட்டனர்.

    தேர்தல் நாளில் வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் வாக்கு சேகரிப்பது குற்றம் என்கிற நிலையில், வாக்காளர்களுக்கு பானையில் மோர் வைத்து கொடுக்கிற சாக்கில், பானைச் சின்னத்தில் வாக்களியுங்கள் என கேட்டுள்ளனர்.

    இதனை காலை 11 மணியளவில் தட்டிக்கேட்ட அதிமுக கூட்டணியினர் அந்தப் பானையை சாலையில் போட்டு உடைத்துள்ளனர். உடைக்கப்பட்ட பானையின் ஓடுகள் இன்னமும் அதே இடத்தில் தான் கிடக்கின்றன (காண்க படம்).

    நிகழ்வு 2: 'மாற்றுத் திறனாளி மீது தாக்குதல்'

    மதியம் சுமார் 2.30 மணியளவில் - பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள கடையில் வேலை செய்யும் மாற்றுத்திறானாளி வீரபாண்டியன் என்பவர் அங்கு சென்ற போது, பானை உடைக்கப்பட நிகழ்வை கூறி, வீரபாண்டியனை விசிகவினர் தாக்கினர். அவருக்கு தலையில் அடிப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேட்டில் வேலை செய்யும் விசிகவினர் தேர்தலுக்காக பொன்பரப்பிக்கு வந்துள்ள நிலையில் அவர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். குணசீலன் மற்றும் சங்கர் உள்ளிட்டவர்கள் இதில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

    நிகழ்வு 3: 'வன்னியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்'

    'மாற்றுத்திறானாளியை ஏன் அடித்தீர்கள்' என வன்னியர்கள் சிலர் பொன்பரப்பி அரசு மாணவியர் விடுதிக்கு முன்பாக விடுதலை சிறுத்தைகளை சேர்ந்தவர்களிடம் நியாயம் கேட்டனர். இந்த இடமும் வீரபாண்டியன் தாக்கப்பட்ட இடமும் அருகருகே இருக்கிறது.

    இதனைத் தொடர்ந்து நியாயம் கேட்ட வன்னியர்கள் மீது கற்களாலும் பீர் பாட்டிலை உடைத்தும் தாக்கினர். சுப்பிரமணியன், கமலக்கண்ணன் ஆகியோர் கடும் காயமடைந்தனர். மண்டை உடைக்கப்பட்டது. வயிற்றில் பீர் பாட்டிலால் குத்தப்பட்டது (காண்க படம்).

    நிகழ்வு 4: 'பெண்கள் மீது ஆபாச வன்முறை'

    மேற்கண்ட தாகுதல் நடத்தப்பட்ட அதே நேரத்தில் அங்கு கூடியிருந்த பெண்களிடம், விசிகவை சேர்ந்த கந்தன் மகன் கருணாநிதி எனும் நபர் 'அடுத்து எங்கள் தலைவர் திருமாவளவன் தான் எம்.பி., அதன் பிறகு வன்னிய பெண்கள் யாரும் நிம்மதியாக வாழ முடியாது. ஒவ்வொரு வன்னியர் பெண் வயிற்றிலும் சிறுத்தைகளின் கரு உருவாக்குவோம்' என்று சொல்லி ஆபாசமாக திட்டினார்.

    நிகழ்வு 5: 'விசிக வன்முறையாளர்களின் தாக்குதல்'

    மேற்கண்ட வன்முறை நடந்த இடத்திலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவுக்குள் தேர்தலுக்காக இளைஞர்கள் கூடியிருந்தனர். இரத்தம் வழிந்த நிலையில் சுப்பரமணியன், கமலக்கண்ணன் உள்ளிட்டோர் இருப்பதை பார்த்த அவர்கள் அடிப்பட்டோரை காப்பாற்ற ஓடி வந்தனர். அப்போது காலனியில் கூடியிருந்த விசிகவினர் இளைஞர்களை நோக்கி கற்களை வீசினர்.

    நிகழ்வு 6: 'வன்முறையாளர்கள் மீது எதிர்த்தாக்குதல்'

    தம்மை நோக்கிய கற்களை வீசிய வன்முறையாளர்களை இளைஞர்கள் துரத்திக்கொண்டு சென்றனர். விசிக வன்முறையாளர்கள் அங்குள்ள காலனி குடியிருப்புக்குள் ஓடியதும், அவர்களை துரத்தி சென்றவர்கள் அங்குள்ள வீடுகளை தாக்கினர்.

    நிகழ்வு 7: 'காவல்துறை வருகை'

    பொன்பரப்பியில் மோதல் நடப்பதாக அப்பகுதியில் உள்ளவர்கள் சிலர் உடனடியாக பாமக துணைப் பொதுச்செயலாளர் வைத்தி அவர்களுக்கு தகவல் அளித்தனர். அவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் அளித்தார். உடனடியாக அருகிலுள்ள பகுதிகளில் இருந்து காவல்துறையினர் அங்கு அனுப்பப்பட்டனர். மோதல் நிகழ்வு தொடங்கிய சுமார் 15 நிமிடத்தில் காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்துவிட்டனர். மோதல் சூழல் கட்டுப்படுத்தப்பட்டது.

    -----------------
    "இது என்ன விதமான நீதி?"

    இவ்வாறாக, நூறு மீட்டருக்குள் சட்டவிரோதமாக ஓட்டு கேட்டவர்கள் விசிகவினர். மாற்றுத்திறனாளியை தாக்கியவர்கள் விசிகவினர். நியாயம் கேட்டவர்களை மண்டையை உடைத்து, பாட்டிலால் குத்தியவர்கள் விசிகவினர். திருமாவளவன் வெற்றிபெற்றால் வன்னியர் பெண்களின் வயிற்றில் தங்கள் கருவை உருவாக்குவோம் என ஆபாசமாக பேசியவர்கள் விசிகவினர். அடிப்பட்டவர்களை காப்பாற்ற ஓடிவந்தவர்கள் மீது கற்களை வீசி தாக்கியவர்கள் விசிகவினர்.

    இத்தனை நிகழ்வுகளும் தமிழக ஊடகங்களின், கட்சிகளின், இயக்கங்களின், அமைப்புகளின் கண்களுக்கு தெரியவில்லை. ஆனால், தம்மை கல்வீசி தாக்கியவர்களை துரத்திச் சென்று, அவர்கள் வீடுகளின் ஓடுகளை உடைத்தது மட்டும் தான் தெரிகிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"