நவீன யுகத்தின் மாபெரும் தீர்க்கதரிசி சார்லி சாப்ளின்

நவீன யுகத்தின் மாபெரும் தீர்க்கதரிசி சார்லி சாப்ளின்
நவீன யுகத்தில் ஏராளமான மறை ஞானிகள் வந்து சென்றிருக்கிறார்கள்.அவர்கள் பங்களிப்பு எதுவும் செய்யவில்லை என்று சொல்ல இயலாது. மனிதனைப் பற்றி, பிரபஞ்சம் பற்றி எல்லாம் அவர்களும் புரிந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறார்கள் . கவிகள்,ஓவியர்கள்,மாபெரும் படைப்பாளிகள் ,கலைஞர்கள் எல்லோருக்கும் மத்தியில் சாப்ளின் உருவாக்கியிருக்கும் தளம் மாபெரும் தீர்க்கதரிசனங்கள் நிறைந்தது.மறை ஞானியர்களுக்கு அகப்படாத விந்தை இது.மறை ஞானியர்களுக்கு புலப்படாத தொலைவு இது.
படைப்பு என்னதான் செய்துவிடும்?என்ற கேள்வியை தன்னிலை அச்சத்தின் நீட்சியாகத் தொடர்வோருக்கு எளிமையான ஆனால் கடுமை நிறைந்த பதிலாக "சாப்ளின் செய்ததை செய்யும்" எனக் கூறிவிட முடியும்.உண்மையிலேயே அக்கறை கொண்ட கேள்வியாக அது இருக்குமானால் சாப்ளினில் இருந்து அது மீட்சி பெற வாய்ப்புக்கள் உண்டு.வேடிக்கை மனிதரைப் போன்ற வெளித்தோற்றத்தை ஏற்படுத்தும் அவர்: மனித மனப்பரப்பிற்குள் ஏற்றியிருக்கும் விந்தையும் ,தீவிரமும் இன்னும் பல தலைமுறைகளைத் தாண்டும் வல்லமை கொண்டது.கலகக்குரல் என்பதை நவீன காலத்தின் முன்பாக உண்மையான பொருளில் பயன்படுத்துவோமெனில் அது சாப்ளின் ஒருவருக்கு மட்டும்தான் பொருந்தும்.
அவரது அனைத்து படைப்புகளுமே கற்கவேண்டியவைதான்.அதில் யாதொரு சந்தேகமும் இல்லை. மீண்டும் மீண்டும் கற்க வேண்டியவையும் ,புதிய புதிய பொருளைத் தொடர்ந்து தரக் கூடியவையும் அவை.அவரது வெளிப்பாடுகள் அனைத்துமே அன்பையும்,காதலையும் உள்ளர்த்தமாகக் கொண்டவையும்தான்.ஆனால் அவை நாம் கொண்டிருக்கும் கற்பனைகளின் பாசிகளில் உருவேறியவை அல்ல.
அவர் அன்பையும் காதலையும் மறைஞானியர் சொல்லிக் கொடுத்த விதத்தில் இருந்து முற்றிலும் வேறொரு தளத்திலிருந்து பரிந்துரைக்கிறார்.அன்பையும் காதலையும் எவ்வித நிபந்தனைகளுக்கும் ஆட்படுத்தவில்லை.அவை வாழ்வின் அவ்வப்போது நிகழும் சிற்சில தருணங்களே என்பதை கண்டறிகிறார்.பிற தருணங்கள் கரடுமுரடானவை.அன்பையும் காதலையும் பொது நியதியாக மாற்ற இயலாது என்பது நவீன மறைஞானியர்களுக்குத் தெரியாத உண்மை.மட்டுமல்ல அவை கரடு முரடுகளுக்கு மத்தியில் இருப்பது என்பதை அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.அவர்கள் பரிந்துரைத்து வந்த நிரந்தர அன்பிற்கு எதிர்நிலை சாப்ளின் கண்டடைந்த உயரம்.
குழந்தைமையில் பேய்மையையும், கடவுளையும் ஒன்று கலந்தவர் அவர் . பாசிசத்தின் உள்ளீடற்ற தன்மையை அவரைப்போல பகடி செய்ய இனி ஒருவன் பிறக்கவே முடியாது.அதை பின்நவீன குணங்களை உள்ளடக்கிய பகடி எனலாம்.ஆகச் சிறந்த பகடியை அதன் மீது அவர் ஆழ்ந்த தரிசனங்களுடன் உருவேற்றியிருக்கிறார் .நமது சகலவிதமான தரப்புகளும் பாசிசமாக உருமாறிவரும் உலகச் சூழ்நிலையில் அவரது பொருள் மிகவும் புதுமையானது.பாசிசத்தின் உருவம் மெருகேறும் போது அது இன்று சாப்ளினைக் கடக்க இயலாமல் தவிக்கிறது.அதைத் தவிர்த்து அதற்கு வேறொரு அச்சம் இல்லை.இன்று சாப்ளினின் பாசிசத்திற்கெதிரான பகடி நம் ஒவ்வொருவரையும் பார்த்து சிரிக்கிறது கண்காணிக்கிறது.அதன் குரல்வளையை நெரிக்கிறது . இதனைத் தவிர்த்துவிட்டு அது முழுமை பெறுவதற்கான வாய்ப்புகளை அவர் வழங்கவே இல்லை.
நரம்பியல் கூறுகளை ,குறைபாடுகளை எதிர் வினையாக்கியவர் சாப்ளின்.நரம்பியலில் இருந்து சிந்திக்க முடியும் என்பதை ஸ்திரப்படுத்தியவர்.சிந்தனை முறைமையின் மரபுவழிப் பார்வைகளுக்கு இது மிகப் பெரிய நன்கொடை.
சாப்ளினின் ' மார்டன் டைம்ஸ் 'மனிதகுலத்திற்கு அவர் செய்திருக்கும் ஆகச் சிறந்த பங்களிப்பு.தொழில் நுட்பத்தை கடவுளாக வழிபடும் இன்றைய நோய் முற்றிய மனிதனை குணமாகும் மகத்துவம் நிறைந்த படைப்பு அது.அவரது தீர்க்கதரிசனங்களின் உன்னத இலக்கை எட்டிய படைப்பும் கூட .
உலகில் எந்தவொரு நபரோடும் பொதுப்பண்பில்லாமல் என்னோடு ஒருவர் உறவு கொள்ளும் சாத்தியங்கள் இருக்குமாயிருக்கலாம்.சாப்ளினோடு பொதுப்பண்பற்றவர்களுக்கு என்னோடு உரையாட , உறவு கொள்ள ஒரு முகாந்திரமும் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"