Posts

Showing posts from April, 2018

ஊழில் விலகுதல்

Image
ஊழில் விலகுதல்  அத்தனைக்கு எளிமையான காரியமில்லை அது.கடுமையான பிரயத்தனம் உள்ளும் புறமும் இருந்தால் சாத்தியமாகும் காரியம் இது. இருவேறு மனிதர்களாக நாம் இருக்கிறோம் எண்ணம் செயல்கள் வழியே ஊழைப் பின் தொடர்வோராக மட்டுமே இருப்பவர்கள் முதல் வகை.பெரும்பாலும் இவர்களே அதிகம்.எங்கு கொண்டு விட்டாலும் திரும்பி நினைவின் திண்ணையில் வந்து படுத்திருக்கும் நாயைப் போல இவர்கள் ஊழில் புரள்வோர். ஊழில் மட்டுமே புரண்டு கொண்டிருக்கிறோம் என்பதை அறியாதவர்கள் இவர்கள். ஊழில் விலகத் தெரிந்தவன் தன்னைச் சு ற்றி அனைத்தையும் புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறான். யோகம் ஒரு வழிமுறை.படைப்பு மற்றொரு வழிமுறை . குப்பைகளை விலக்குவதற்கு இவையிரண்டும் கற்றுத் தருவதால் இவை ஊழை விலக்குவதற்கும் உதவுகின்றன. பிறவழிகள் இருக்கலாம் எனக்குத் தெரியவில்லை.பின்னாட்களில் உங்களுக்கு உபயோகப்படுவேன் என்கிற பாவனையோடே குப்பைகள் நம்மைப் பற்றிப் பிணிக்கின்றன.உண்மையில் தற்போது உதவாத எதுவுமே பின்னாட்களில் உதவாது .குப்பை இந்த பண்பு கொண்டு நம்மைப் பிணித்து ஊழில் கொண்டிணைக்கிறது. ஊழில் நம்மைப் பற்றி பிணைக்கும் இரண்டு மிருகங்கள்

கோடைகாலக் கவிதைகள்

Image
எட்டு மரப்பலகைகள் கொண்ட கடை நீலவேணி அக்காவுடையது வெற்றிலை பாக்கு ,சர்பத் ,தேன்குழல் மிட்டாய்கள் குளிர்ந்த பானை மோர் சுற்றுப் பீடிகள் சுருட்டு வெம்மை சாலை சிறுக சிறுக உயர்ந்ததில் திண்ணை இரண்டடி பள்ளத்தில் மாட்டிக் கொண்டது நீலவேணி அக்கா பாதி உயரத்தில் நின்று தெரிகிறாள் அவள் காலடிகள் மூன்று தலைமுறைகளுக்கு முந்தைய காலத்தில் புதையுண்டிருக்கிறது கடைக்குள் உள்ள காலம் வெளியில் இல்லை வெளியில் உள்ள காலத்தை உள்ளே அனுப்ப வழிகள் ஏதுமில்லை நீலவேணி அக்காவாக இருக்கும் போது அந்த கடைக்குள் நுழைந்தாள் அவள் முழு உயரம் அறிந்திருந்த காலம் அது இந்த பக்கம் இருந்தால் அந்த பக்கத்திற்குள் நுழைய முடியாது அந்தப் பக்கமிருந்தாலோ இந்த பக்கத்திற்கு வாசல்கள் இல்லை இருவேறு காலங்களுக்கு மத்தியில் வெறுமனே எட்டு பலகைகள் 2 இருபது வருடங்களுக்குப் பிறகு நண்பனை சந்தித்தேன் ஹலோ என்றேன் ஹலோ என்றான் அடையாளம் தெரியாமல் நகர்ந்தான் அடையாளம் தெரியாமல் நகர்வது எவ்வளவு சுகமாயிருக்கிறது ? நகர்ந்தவன் பின் திரும்பி உங்கள் குரலை எங்கோ கேட்டிருக்கிறேன் என்றான் உலகில் ஏழுபேரின் குரல்

அதிகமாக புத்தகங்களை படிக்காதீர்கள்

Image
அதிகமாக புத்தகங்களை படிக்காதீர்கள் அதிகமாக புத்தகங்களை படிக்காதீர்கள்.அதிகமாக உண்ணும் உணவும் , அதிகமான புத்தகங்களை வாசிக்கும் பழக்கமும் ஜீரணமாவதில்லை.புத்தக வாசிப்பு இயல்பானதாக இருக்க வேண்டும்.உங்களை ஒரு புத்தகம் தேடிக் கொண்டிருக்கும்.அந்த புத்தகத்தை நீங்கள் சென்று சேர வேண்டும்.புத்தகங்களில் வியப்புணர்ச்சி கொள்பவர்கள் மிக விரைவாகவே வாசிக்கும் பழக்கத்திலிருந்து வெளியேறி விடுவார்கள்.காரியத்திற்காக வாசிக்கிறவர்களும் வெளியேறுவர்.புத்தகப் பழக்கமே இல்லாத ஜீவராசிகளை எழுச்சி கொள்ளச் செய்வதற்காகவும் நான் இதனைச் சொல்லவில்லை. அதிகம் புத்தகம் படிப்பதால் அறிவு வளர்ந்து விடும் என்பது தலை சிறந்த மூட நம்பிக்கைகளுள் ஒன்று.அதிகமாக சிறந்த சினிமா பார்ப்பவர்கள் சிறந்த திரைப்படங்களை எடுத்து விடுவார்கள் என்பதனைப் போன்ற மூட நம்பிக்கை இது.இது உண்மையானால் திரையரங்குகளில் படங்களை ப்ராஜெக்ட் செய்பவர்கள் எவ்வளவு திரைப்படங்களை தந்திருக்க வேண்டும் ? உங்களுக்குள் இல்லாத ஒன்றை புத்தகங்கள் ஒருபோதும் தருவதில்லை.மொழி வடிவமற்ற நிலையில் உங்களுக்குள் உள்ளடக்கம் ஏற்கனவே இருக்குமேயாயின் புத்தகம் அதனை உயிர்ப்பிக்கும்.

தமிழில் முன்னுதாரணமற்ற படைப்பாளி ஜெயமோகன்

Image
தமிழில் முன்னுதாரணமற்ற படைப்பாளி ஜெயமோகன் நவீனத்துவத்தின் எல்லைகளை ராட்சஷ பலத்துடன்  அவர் கடந்து சென்றிருக்கிறார்.இது ஒரு விஷேச நிகழ்வு . அதற்குரிய பாதைகள் ஏற்கனவே இங்கு அமைக்கப்பட்டிருக்கவில்லை.சில தெறிப்புகள் மட்டுமே இருந்தன.தானாகவே அவர் அப்பாதைகளை உருவாக்கிய வண்ணம் படைப்பு வெளியை அதிகப்படுத்தியிருக்கிறார்.இதனை வெறி கொண்ட சாகசத்தால் சமைத்திருக்கிறார்.வரும் தலைமுறை படைப்பாளி அதனை வெட்டியோ,ஒட்டியோ அதில் கடக்க முடியும் .அவருடைய கண்ணோட்டங்களை ஏற்று வெட்டியோ ஒட்டியோ பயணிக்க அவனுக்கும் வெறி கொண்ட பலம் தேவை.எளிய இலக்கிய காரியங்களை அவருடைய இயக்கமும் எழுத்தும் புறக்கணிக்கின்றன.படைப்பாளி மிக பெரிய கனவுகளைக்  காண்பவனாக உருக்கொள்வதற்கான அரிய முன்னோட்டம் இது.உண்மை அடையும் படைப்பு ரூபம்  .இதனை எய்த வெளிப்படைத்தன்மையும் திறந்த அகமும் அவருக்கு பேருதவி செய்திருக்கின்றன. அவருடைய பிறந்த நாளான இன்று அவருக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவரும் குழந்தைகளும் ,வாழ்க்கைத் துணையும் உடல் நலம் , நீள் ஆயுள் ,நிறை செல்வம் ,உயர் புகழ் ,மெஞ்ஞானம் பெற்று மேலோங்கி வாழ்க வளமுடன் படைப்புகளின

யாரோ ஒருவருக்காக எங்களூரில் ரோடுகள் போடுகிறார்கள்

Image
யாரோ ஒருவருக்காக எங்களூரில் ரோடுகள் போடுகிறார்கள் தினமும் சராசரியாக எழுபது கிலோமீட்டருக்கு குறையாமல் சுற்றுவட்டார பகுதிகளில் பயணிக்கிறேன்.எல்லாஇடங்களிலும் சாலைகள் போடுகிறார்கள்.ராட்ஷச சாலைகள் .இது நாங்கள் பயணிப்பதற்காக இல்லையென்பது நிச்சயமாகத் தெரிகிறது.யாரோ வரவிருக்கிறார்கள்,அவர்களுக்காக இந்த சாலைகள் பண்படுகின்றன.தினமும் ஒன்றோ இரண்டோ சாலை விபத்துக்களைத் தாண்டி நான் பயணிக்க வேண்டியிருக்கிறது.இப்போது விபத்தின் நிகழ் தகவில் வேறு ஒருவர் மாட்டியிருக்கிறார் என்பதால் நான் தப்பித்து விட்டதாக அர்த்தமில்லை.அதே நிகழ்தகவின் ஊடாகத் தான் நானும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.நாய்கள் ,ஆடுகள் அபூர்வமாக மாடுகள் அடிபட்டுக் கிடப்பதெல்லாம் சாதாரணமான நிகழ்வுகள்.இன்று ஓந்தான் ஒன்று அடிபட்டு சாலை விபத்தில் பலியாகிக் கிடந்தது.ஓந்தான் என்பது ஓணானை எங்களூரில் குறிக்கும் வார்த்தை. சிறிய ரக டயனோசர் அது.ஒருவருக்கும் அதனால் ஒரு கெடுப்பலன்களும் கிடையாது.ஏராளம் நன்மைகளைக் கொண்ட அரிய இனம் அது.செம்பருந்தும் ஓணானும் நல்ல நிலையில் கணக்கு கிடைக்கிற இடங்களில் காற்று சுத்தமாக இருக்கிறது என்று பொருள் .செம்பருந்து தீய வா