Posts

Showing posts from August, 2021

நான்கு கவிதைகள்

Image
நான்கு கவிதைகள் 1 தனக்கு ஒவ்வாதவர்களைப் பார்த்து தெருவில் இறங்கி மனம் குரைக்கத் தொடங்கியது திருப்பி அழைத்து வந்து அதன் நாற்காலியில் அமர வைத்தேன் தனக்கு இசைவானவர்களை நோக்கி இளிக்கத் தொடங்கியது திருப்பி அழைத்து வந்து அதன் நாற்காலியில் அமர வைத்தேன் இச்சை இனாமென்று ஓடும் அதனை திருப்பித் திருப்பி அழைத்து வந்து அதன் நாற்காலியில் அமர வைத்தேன் ஒருபோதும் நாற்காலியில் நானிருந்தேனில்லை. 2 என்னுடைய அப்பைய்யா என் வழியாகத்தான் பறவைக்குரல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார் எதன் குரல் எதுவென அவர் பிரித்துக் கொள்வார் அவருக்கு அது தெரியும் என்னுடைய அப்பம்மை பொங்கி எழும் கடல் நாதம் காண்பது என் வழியாகவே... அறிந்து கொண்டிருக்கிறாள் அது கேட்பதல்ல காண்பது என்னுடைய தெய்வங்கள் என்னுடைய நாவிலிருந்து பதனீரின் கருப்பட்டியின் ருசியை எடுத்துக் கொள்கின்றன என்னுடைய மூச்சை இழுத்து எடுத்து அமரர் மேடைக்குள் அனுப்பிக் கொண்டிருக்கிறேன் என்னுடைய அன்னை சுவாசித்துக் கொண்டிருக்கிறாள் ஒரு காலத்திற்குள்ளிருந்து வேறொரு காலத்திற்குள் தானியங்களை நீட்டும் நீள் அலகு என்னுடையது 3 தந்த தானியத்தை அங்கு கொண்டுபோய் நட்டீர்கள் அப்போதும் நீங்

ஒரே இரவுக்குள் இருப்பது ஒரே இரவல்ல - எட்டு கவிதைகள் - லக்ஷ்மி மணிவண்ணன்

Image
  எட்டு கவிதைகள் - லக்ஷ்மி மணிவண்ணன் 1 நேற்றைய நாளுக்குள் புக விருப்பம் கொண்ட குருவி நெடுநேரமாக ஜன்னலைத் தட்டிக்கொண்டிருக்கிறது அலகில் ரத்தம் உள்ளத்தில் பதற்றம் நேற்றைய நாள் தானே வாவென ஜன்னலைத் திறந்தேன் கம்பியில் கால்கள் உதைத்து வேண்டாமெனக் கூறி திரும்பி இன்றைக்குள் பறந்தது இன்று எவ்வளவு விரிந்தது என பார்த்துக் கொண்டிருக்கிறேன் விரித்து விரித்து செல்கிறது அது 2 விபத்தில் மண்டை நைய்ந்து பிழைத்த நபர் தெருவில் நுழைந்ததும் புன்னகை செய்கிறார் அரவணைப்பு ததும்பும் புன்னகை வடு ஆழமாக தெரியும் அதனை அப்படியே எடுத்துக் கொள்ளத்தயங்கி பதில் புன்னகை செய்கிறார்கள் பிறர் ஒரு புன்னகையில் இவ்வளவு பாடங்கள் இருக்குமானால் எவரால்தான் அப்படியே எடுத்துக்கொள்ள இயலும்? ஒருவரிடமிருந்து பிதுக்கி எடுத்த புன்னகை போலுமல்லவா இருக்கிறது அது? 3 ஒரே இரவுக்குள் இருப்பது ஒரே இரவல்ல 9 மணி இரவு 10 மணிக்கு மாறிவிடும் 11 மணி இரவு இரவின் நிசப்த நாதம் மூண்டது நள்ளிரவு வேறு இரவு அதன் பின் வேறு உங்கள் நாளின் இறுதியாக ஏடிஎம்மில் பணம் எடுத்துத் திரும்பிய போது காவலாளிக்கு சிறு புன்னகையைத் தந்திருக்கலாம் இரவுக்கு ஒற்றையில் காவலிருப்ப

தீவிரம் வேடிக்கை வேறுபாடு - 13

Image
சுஜாதா பேரில் எனக்குப் பகையொன்றும் இல்லை அது போலவே கிளியோ பாட்ரா பேரிலும் எனக்கு விரோதம் கிடையாது.ஒவ்வொரு காலத்திலும் எவ்வளவோ பிரபலங்கள் பிறக்கிறார்கள்.ஒரு காலத்தில் இருந்து மறு காலத்திற்குள் நுழைய முடியாத எவ்வளவோ பிரயாசைகள் இருக்கின்றன.அதனால் அவையெல்லாம் தவறென்றும் இல்லை.கோவி மணிசேகரனும் ,சாண்டில்யனும் ,ராஜேஷ் குமாரும் புதுமைப்பித்தனைக் காட்டிலும் ,மௌனியைக் காட்டிலும் ,சுந்தர ராமசாமியைக் காட்டிலும் தலை சிறந்தவர்களாகக் கூட இருக்கலாம்.ஆனால் இரண்டும் வேறு வேறே .அதுதான் முக்கியமானது.அமிதாப் பச்சன் பிரபலம்தான் அதனால் ரே க்கு என்ன வந்தது ? ஒரு காலத்தில் மஞ்சு வாரியார் மலையாளத்தில் பிரபலம் .அதன் பொருட்டு அரவிந்தனுக்கு என்ன ? பாலகுமாரனின் ஒரு பத்தியின் அளவிற்கு கூட எழுத வக்கற்ற பலர் தமிழின் தீவிர எழுத்தில் கிடந்தது கத்துவது உண்டு.உண்மை.ஆனால் பாலகுமாரன் அடைய நினைக்கும் இடத்திற்கும் ,இந்த எழுத முடியாதவன் கொண்டு நடக்கும் இடத்திற்கும் வேறுபாடு அதிகம். கனவும் ஒன்று அல்ல. ஒரே தரத்திலானதும் அல்ல. ஒருமுறை தொண்ணுறுகளில் என்று நினைக்கிறேன். ஏதோ ஒரு விருதை நிராகரிக்கும் போது ஜெயமோகன் ஒரு விஷயத்தை வெகுஜன