விருதுகளைப் பொறுத்தவரையில் ...

விருதுகளைப் பொறுத்தவரையில் ...
பெறுவதைப் பற்றியோ , தவிர்ப்பதைப் பற்றியோ யாருக்கும் பரிந்துரை செய்ய இயலாது.அது நிச்சயமாக பெறுபவரின் சுயமரியாதையுடனும் ,வாழ்வியல் கண்ணோட்டத்துடனும் தொடர்பு கொண்டது.அதே சமயத்தில் பொதுவான மதிப்பீடுகளை அது புறக்கணிக்காமல் இருப்பதே நல்லது.உதாரணமாக வைரமுத்து விருதை விக்ரமாதித்யன் பெற்றால் அதில் குறை சொல்ல ஏதுமில்லை.பசிக்கும் குழந்தை வழிப்பறி செய்து உண்பதற்கு இணையானது அந்த செயல் . முற்றிலுமாக புறக்கணிப்பிற்குள்ளாகி வருகிற அவருக்கு இதைச் செய்யாதீர்கள் என்று அறிவுரை சொல்லும் தார்மீகம் இங்கே எவருக்குமே கிடையாது.அதே சமயத்தில் கல்யாண்ஜி,கலா ப்ரியா போன்றோர் பெறும்போது இவர்களில் ஒரு சாக்கடைத் தன்மை தோன்றுவதைத் தவிர்க்க இயலாது.ஒருவேளை வைரமுத்து விருதை அசோகமித்திரனோ ,ஞானக்கூத்தனோ பெற்றிருப்பார்களேயாயினும் கூட ஒருகுறையும் ஏற்படாது.இந்த வேறுபாடு என்ன என்பது பற்றி ஒருவர் அறிந்திருப்பாரேயாயின் அவரே விருது பெறுவதில் பொறுப்பேற்பவர் ஆகிறார்.இது முதல் விஷயம்.
இரண்டாவதாக அந்த விருது நமது முன்னோர்களில் எவர் எவரையெல்லாம் சென்று சேர்ந்திருக்கிறது என்பது முக்கியம்.அதையேன் நான் கருத்திற் கொள்ளவேண்டும் ? என்று பெறுபவர் கேட்பாரேயாயின் நல்லதுதான்.அவருடைய பின்நவீனத்துவ ஊழலுக்கு நன்றி கூறலாம்.தேவை புணர்ச்சிதான் என்றான பிறகு நாயுடன் புணர்ந்தாலென்ன ,நரியுடன் புணர்ந்தாலென்ன ? என்று விகடம் பேசுவதற்கு ஒப்பானதுதான் இந்த பின்விகடமும்.உதாரணமாக சந்ரு மாஸ்டர் முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகிற இடத்தில் சென்று மணிவண்ணனுக்கோ ,நடராஜுக்கோ , அபராஜித்துக்கோ ,ராமச்சந்திரனுக்கோ பெற்றுக் கொள்ளும் தைரியம் ஏற்பட வேண்டுமாயின் அதற்கு சில சிறப்பு காரணங்கள் இருந்தே ஆக வேண்டும்.ஆதிமூலம் புறக்கணிக்கப்படுகிற இடத்தில் சென்று அபராஜித் ஒரு பரிசைப் பெறலாம் அதில் தவறேதும் கிடையாது.ஆனால் சந்ரு புறக்கணிக்கப் படுகிற இடத்தில் சென்று அவர் கை நீட்டினால் அது பொறுப்பான ஒரு செயல் இல்லை.இதனையெல்லாம் விலாவாரியாக தர்க்கங்களைக் கொண்டு விளங்க இயலாது.இருதயம் கொண்டு விளங்கவேண்டும்.ஒரு சம்பவத்தை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.ராஜமார்த்தாண்டன் விருதென்று நினைக்கிறேன்.ஷங்கர்ராமசுப்ரமணியனுக்குக் கிடைக்கவிருந்த சமயத்தில் அவர் மறுத்தார்.மறுப்பிற்கான விபரத்தில் லக்ஷ்மி மணிவண்ணனை முற்றிலுமாக புறக்கணிக்கிற ஒரு இடத்தில் எனக்கு கைநீட்டி பரிசைப் பெறுவது என்பது சங்கடத்தைத் தரக்கூடியது என்று தெரிவித்திருந்தார்.அந்த பதில் உண்மையாகவே எனது மனதை நெகிழ வைத்தது.நாம் வாழ்வதற்கான அர்த்தம் எங்கேனும் ஒரு சிற்றிடத்தில் சுடர்விட்டால் போதுமானது என்று தோன்றியது.எனக்கு ஒரு பெருமை நிகழும் அரங்கில் தப்பித் தவறி விக்ரமாதித்யனோ ,வண்ணநிலவனோ ,நகுலனோ , சுந்தர ராமசாமியோ வந்து விடுவார்கள் எனில் அந்த பெறுமதியை அவர்கள் கால்மாட்டில் வைத்து விட்டு ஓடிவிடுவேன் நிச்சயமாக .நானொரு வெற்றுப் பரதேசிதான் ஆனாலும் கூட . இதனையும் தர்க்க ரீதியில் உணர இயலாது.
மூன்றாவதாக முக்கியமானதொரு விஷயம் ; உங்களை ஒரு பெறுமதி வந்தடைந்த பிறகு அதுவே பிற்காலங்களில் மோசமான பன்னாடைகளின் கைகளை சென்று சேராது என்பதற்கான சிறிய உத்திரவாதமேனும் கொடுக்கும் தரப்பில் இருக்கவேண்டும் . இதனை பெறுபவன் நிச்சயமாக உணரமுடியும் .
பல சமயங்களில் பத்து பதினைந்து பன்னாடைகளைக் குளிப்பாட்டுவதன் பொருட்டுத் தான் ஒரு மூதாதைக்கு நெய்யபிஷேகம் நடைபெறுவது.ஒரு உருப்படியை மட்டும் காட்சிப்படுத்தி விட்டு கவரிங் வியாபாரம் செய்வது போலே.பிரான்சிஸ் கிருபாவை முன்வைத்து மிச்சமெல்லாம் தகரமென்றால் அது வெறும் தகர வியாபாரம் தானே ? இனி சாண்டில்யன் விருது ,மெகா ஸ்டார் ராஜேஷ் குமார் விருது என்று நாய்ப்படைகள் கிளம்பினால் எந்த நாடு தாங்கும் ? அம்மை காளி அனைத்தையும் அறிந்துவிடமாட்டாளா என்ன ?

ஐந்து முதலைகளின் கதை - சரவணன் சந்திரன்

ஐந்து முதலைகளின் கதை - சரவணன் சந்திரன்

புதிதாக எழுத வருபவர்களில் நம்பிக்கையை ஏற்படுத்துபவர்கள் மிக மிகக் குறைவு.ஏன் இப்படி என்பதை விளங்கிக் கொள்ள இயலவில்லை.புதிய தலைமுறை எழுத்தில் இயங்க வரும்போது எழுத்து இன்னும் அதிக வேகமும்   ,புதுமையும்  அடைய வேண்டாமா ? உண்மையாகவே எனக்கு முந்தைய தலைமுறையினரை வாசிப்பதில் இருக்கிற ஆர்வம் பிந்தைய தலைமுறையினரை வாசிக்கையில் ஏற்படுவதில்லை.முழுமையான ஈடுபாடு என்பது புதியவர்களிடம் வற்றிப் போயிருப்பதுவும் ஒரு காரணம் .முழுமையான ஈடுபாடு இல்லையெனில் கத்தரிக்காய் வியாபாரம் கூட கைவசப்படாது .எழுத்து எப்படி வசப்படும் ?

புதியவர்கள் சீசன் வியாபாரம் போல எழுத்தை அணுகுகிறார்களோ என்று தோன்றுகிறது.அப்படியானால் அப்படியணுகுவதற்கு தோதான துறைதானா எழுத்து ? புனைகதைகளை பொறுத்தவரையில் முன்னவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதனை அறிந்து வைத்திருத்தல் அத்தியாவசியமானது .அதிலிருந்து சில அடிதூரமெனும் முன்னோக்கி நகர நம்மிடம் என்ன இருக்கிறது என்கிற கேள்வி புனைகதை எழுத்தாளனுக்கு இன்றியமையாதது .இந்த நிலையை பின்னணியாகக் கொண்டு யோசிக்கும் போது அரிதாக ஒருசிலர் நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்கள்.அந்தவகையில் சரவணன் சந்திரனின் எழுத்துக்கள் குறிப்பிடத் தகுந்தவை.வெகுஜன எழுத்திற்கும் ,தீவிர எழுத்திற்கும் இடைப்பட்ட ஒரு தளத்தில் சரவணன் சந்திரனின் எழுத்துக்கள் அமைந்துள்ளன.ஒரு பட்டுக்கோட்டை பிரபாகரும் , பால் சக்கரியாவும் சமவிகிதத்தில் கலந்த கலவை போல இவர் எழுத்துக்கள் இருக்கின்றன.இவரால் பட்டுக்கோட்டை பிரபாகராக இருப்பதையும் தவிர்க்க இயலவில்லை.அது போல இவரால் பால் சக்கரியாவையும் கைவிட முடியவில்லை.இப்படிச் சொல்வதால் பட்டுக்கோட்டை பிரபாகராலும்,பால் சக்கரியாவாலும்  தாக்கத்திற்கு  உள்ளான எழுத்து இவருடையது என்று  அர்த்தமில்லை.இவருடைய எழுத்தின் வகைமையை புரிந்து கொள்வதற்கு வசதியாக மட்டுமே இந்த இருவரின்   பெயர்களையும்  சொல்லிச் செல்கிறேன்.

முந்தைய தலைமுறையினர் வாழ்ந்த காலத்தில் வெகுஜன எழுத்திற்கும் ,தீவிர எழுத்திற்கும் இடைப்பட்ட வேறுபாடு மிகவும் தெளிவாக இருந்தது .ஏனெனில் அப்போது வெகுஜன எழுத்து உக்கிரமாக தமிழில் இருந்தது.மக்கள் அதன் பக்கமாக நின்றார்கள்.வாசகர்களே தீவிர எழுத்தின் பக்கம் இருந்தார்கள்.ஆனால் இப்போது தமிழில் ஒருகாலத்தில் புகழுடம்பெய்தியிருந்த வெகுஜன எழுத்து துப்புரவாக அழிந்து போய்விட்டது.அப்போது பேன்  பார்த்தவர்கள் தொடங்கி புனுகு எடுத்தவர்கள் வரையில் எவரையுமே வாசகர்கள் இப்போது நினைவில் கொண்டிருக்கவில்லை.இப்படி முழுமையாக ஒரு மொழியில் வெகுஜன எழுத்து இறந்து போய்விடுவது நல்லதல்ல என்பதே எனது எண்ணம்.தீவிர எழுத்திற்கும் ,வெகுஜன எழுத்திற்கும் இடைப்பட்ட வேறுபாட்டை சுட்டிக்  காட்டவேனும் அது ஒரு மொழியில் உயிர் வாழ்வதே நல்லது.அப்படியல்லாது   வெகுஜன எழுத்து முற்றிலுமாக தூர்ந்து போயிருக்கும் நிலையில் இப்படி இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு எழுத்து வகைமை உருவாகிறதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

சரவணன் சந்திரனின் ஐந்து முதலைகளின் கதை உள்ளடக்கத்தைப் பொறுத்தவரையில் நவீனகாலத்திற்குப் பிறகான சமகால வாழ்வின் பேராசைகளின் நாடியை அதன் துடிப்பு கெடாமல் தாவிப் பற்ற முயலும் ஒரு நாவல்.இந்த நாவலின் பிரதானமான சிறப்பு என்று இந்தப் பண்பைச் சொல்லலாம்.சமகால வாழ்வின் விர்த்திகேடுகளின் மடியில் இந்த நாவல் புழங்குகிறது.இதுபோல நவீனத்திற்கு பின்னான வாழ்வின் பேராசைகளின் ஸ்தியை பாலைநிலவனின் சிறுகதைகள் பற்ற முயல்வதையும் இங்கே நினையூட்ட முடியும்.பாலை நிலவனின் சிறுகதைகளின் இவ்வளவு தெளிவாக அந்த வாழ்வு வடிவம் பெற்றுத் துலங்குவதில்லை.ஆனால் புகைமூட்டமாக இந்த வாழ்வின் நாடியை அவரும் தொட முயற்சி செய்கிறார்.எனினும் சரவணன் சந்திரனின் எழுத்தில் பாலை நிலவனின் கதைகளில் இருப்பது போன்ற இந்த வாழ்வின் மீதான எதிர்நிலை புகார் எதுவும் இல்லை.சரவணன் சந்திரனின் எழுத்திற்கு உணர்ச்சிகரமான புகார்கள் வாழ்வின் மீது இல்லை என்பது நிறைவை ,சிறப்பை ஏற்படுத்தக் கூடிய விஷயமும் கூட

சரவணன் சந்திரனின் சிக்கல் அவருடைய அவசரத்தில் ஏற்படுகிறது.நாவலில் எங்கெல்லாம் மிகச் சிறந்த உருமாற்றங்கள் எழுத்தில் நிகழ்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுகிறதோ அந்த இடங்களை கைவிட்டு அவர் மிகவும் கீழிறங்கிவிடுகிறார்.இந்த இடத்தில் இருந்து ஒரு பறத்தல் நாவலுக்கு புதிதாக சாத்தியமாகிறது என்று வாசகன் உணருந்தருவாயில் உடனடியாக அவருள் இருந்தியங்கும் பட்டுக்கோட்டை பிரபாகர் வெளியே வந்து வேலையைக் காட்டத்   தொடங்கி விடுகிறார்.ஐந்து முதலைகளின் கதைகள் நாவலில் இதற்கு உதாரணமாகச் சொல்ல பல்வேறு இடங்கள் உள்ளன.மடிப்புகள் உருவாக வேண்டிய இடங்களை எழுத்தாளன் தனது அவசரத்தால் கடந்து சென்று விடுவது துரதிர்ஷ்ட மானதொரு நிலை.இப்படி இவர் தவற  விட்டு ஓடுகிற இடங்களில் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள இந்த நாவலில் இவருக்கு சாத்தியமாகியிருக்குமெனில் ஐந்து முதலைகளின் கதை நாவல் வேறு ஒரு கிரகத்திற்கு மேலெழும்பியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.அவ்வளவு தீவிர சாத்தியப்பாடுகள் கொண்ட உள்ளடக்கம் இந்த நாவல்.மற்றபடி ஒரு வெகுஜன வாசகனுக்குக் கிறக்கத்தை ஏற்படுத்தக் கூடிய மயக்கும் வாக்கியங்கள் இந்த நாவல் முழுதும் பின்தொடர்ந்து வருகின்றன.என்றாலும் மடிப்புகளை எழுத்தில் அனுமதிப்பதும் ,அவை திறக்க எழுதுகிறவன்  தன்னில் இடம் தருதலும் மட்டுமே காலத்தில் ஒரு புனைவை கொண்டு செலுத்துகிற விஷயங்கள் என்பதை சரவணன் சந்திரன் ஏற்றெடுக்க வேண்டும்.அவருடைய புனைவுகளின் அவசரம் மங்கும் இடத்தில் அந்த விநோதப் பறவை எழுந்து பறக்கக் காத்திருக்கிறது அவருடைய எழுத்தில்.

வாழ்த்துகள் 

மேல்சாதி பெண்ணுடலை ராணுவமயமாக்கும் - மணிரத்னம்

மேல்சாதி பெண்ணுடலை ராணுவமயமாக்கும் -  மணிரத்னம்

ஷீலா ஆப்ரஹாம் ,வருண் என இரு ஆண் பெண் இரட்டைகள்.வருண் மேல்தட்டு பிள்ளைவாள்.தந்தைக்கு எதிர்நிலை என்று மணிரத்னத்தால் முன்வைக்கப் படுகிற ஆண்மை.உண்மையில் தந்தைக்கு எதிர்நிலையா வருண் ? ஒரு காட்சியில் மணிரத்னம் இவ்வாறு ஒரு தகவல் சொல்கிறார்.அதற்கு மேல் அதில் ஒன்றுமில்லை.ஷீலா ஆப்ரஹாம் கிறிஸ்தவப் பெயருடன் முன்வைக்கப்படுகிற இந்திய மேல்சாதி இந்து பெண்ணுடலைத் தாங்கி நிற்கிற பெண்மை .ஆனால் பிராமண முற்போக்குத் தன்மை பொருள் பொதிந்த உடல் இந்த பெண்மை .இந்த இருமைக்குள் இந்திய மேல்சாதி பெண்ணுடலைக் கடத்தி ராணுவ ஆண்மையின் பொருளுக்குள் கொண்டு சேர்ப்பித்தலே மணிரத்னத்தின் காற்று வெளியிடை அரசியல்.மேல்சாதி பெண்ணுடலை தேசிய ராணுவத்தில் உடலாக நிரூபணம் செய்கிறார் மணிரத்னம்.

பொதுவாகவே கமர்சியல் படங்களின் பொது குணமே ஆண்குறியையும்,பெண்குறியையும் ஏதேனும் பொருளில்  வைத்து அலங்காரம் செய்வதும் ,பின்னர் அதனை டிஸ்பிளே  செய்வதும்தான்.உலகளாவிய வர்த்தகப் படங்களின் பொது விதியிது.ஆனால் பொருளில் ஒரு இயக்குனர் காட்டுகிற முதிர்ச்சியும் நுட்பமும் ,சமகாலத் தன்மையும் அவற்றை வெகு மக்களோடு இணைக்கும் தன்மையைப் பெறும்.ராம்கோபால் வர்மா போன்றவர்கள் மிகவும் மாறுபட்ட கோணத்தில் இந்த டிஸ்பிளே செய்யும் போது அவை கமர்சியல்  படங்களின் தன்மையையும் கடந்து செல்வதுண்டு.பெண்மை எத்தகைய ஆண்தன்மையில் இணைப்பு பெறுகிறது என்பதே பொருள் எனப்படுவது.மணிரத்னத்திற்கும் பிறருக்கும் உள்ள தெளிவான வேறுபாட்டை சுட்டிக் காட்டவே ராம்கோபால் வர்மா பெயரைச் சொல்கிறேன்.வேறு காரணங்கள் ஏதுமில்லை.

மணிரத்னம் தொடர்ந்து ஒரு பனிரெண்டு வயது ஐயர் பையனின் மனநிலையிலிருந்து சிந்திப்பவராக மட்டும் உள்ளார்.ஐயர் பையன் என்பதைக் காட்டிலும் அதே அளவிற்கான முதிர்ச்சியின்மையோடு தனது கற்பனையால் பிறழ்வு கொண்ட கற்பனையால் சிந்திக்கிற வறட்சி கொண்ட ஐயர் கிழவி போன்று காற்று வெளியிடையில் வெளிப்படுகிறார்.வசனங்கள் நெருடல்.நான் கத்தட்டுமா எனக் கேட்டு விட்டு கத்துகிற பாமரத்தனமான காட்சிகளை போன்று ஐந்து நிமிடத்திற்கு ஒரு நெருடல்.வருண் என்னும் ஆண்மை தனது குறியை யாரேனும் அறுத்தெறிய மாட்டார்களா ? என்கிற அளவிற்கு காமத்தின் இறுக்கத்தை வெளியிடுகிறார்.ஒரு காட்சியில் அவளை கடித்துத் தின்று விடுவானோ என்கிற பயம் உண்டாகிறது.ஷீலா ஆப்ரஹாம் கிறிஸ்தவப் பெயரில் பார்வையாளன் முன்பாக நிறுத்தப் பட்டாலும் கூட அவளுடைய இருப்பிடத்தில் கூட அவள் ஒரு கிறிஸ்தவப் பெண் என்பதற்கான சின்னங்கள் எதுவுமே தென்படவில்லை.இதற்கு சாதுர்யம் என்பதல்ல பெயர்.வெளிப்டையாகச் சொன்னால் இதன் பெயர் பாமர முட்டாள்த்தனம்.   கஷ்டமாக இருக்கிறது.இன்றைய 12  வயது ஐயர் பையன்கள் இவ்வளவு சோடையாக சிந்திக்கிற இடத்தில் நிச்சயம் இருக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்

மணிரத்னத்தின் "காற்று வெளியிடை " பிறழ்வு நிலை கொண்ட ஐயர் கிழவியின் மனோபாவமும் ,அரசியலும் கொண்ட நாலாந்தரமான சினிமா. .தன்சாதிக்கும் மேல்சாதி ஐந்து பெண்ணுடலுக்கும் தெரிந்தோ தெரியாமலோ அவர் இளைத்திருக்கும் துரோகம் இந்த படம்..ராணுவ ஆண்மையில் கவர்ச்சி மூண்டு தெறிக்க இந்திய மேல்சாதி பெண்  மனோபாவம் காத்துக் கிடைக்கிறதா ? என்ன ? பரிதாபகரமான இணைப்பு.முழுமையான மடையர்களால் மட்டுமே சாத்தியப்படக் கூடியது.மணிரத்னத்திற்கு வாழ்த்துகள்.பாகவதர் போல நீங்களும் சீனியர் ஆகிக்கொண்டிருக்கிறீர்கள்.ஆனால் ஒருயொரு வேறுபாடு பாகவதரின் படங்களை இன்றும் கூட என் போன்றவர்களால் பார்க்க முடியும்.

காற்று வெளியிடை சகிக்கலை

அண்ணா சாலையில் ஒரு இடத்தில் தானே திடீர் பள்ளம் ?

அண்ணா சாலையில்  ஒரு இடத்தில் தானே திடீர் பள்ளம் ?

எங்கள் ஊரில் அப்படியல்ல.இப்படியான ஏராளமான பள்ளங்கள் அடங்கியதுதான் எங்களூர் சாலைகள்.அதனால் அண்ணா சாலையில் ஏற்பட்டிருக்கும் பள்ளம் என்னை ஏதும் செய்யவில்லை.திடீர் நோயாளிகள் சில காலம் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய்களை பீற்றிக் கொண்டலைவதை போல சென்னைவாசிகள் நிறைய பொருமுகிறார்களே என்று தோன்றியது.

கழிந்த வாரம் பையனுக்கு ஓ பி சி சான்றிதழ் வாங்க வேண்டியிருந்தது .கிராம நிர்வாக அலுவலகம் ,வருவாய் அலுவலர் அலுவலகம் பின்னர் வட்டாட்சியர் அலுவலகம் எல்லாவற்றிற்கும் செல்ல வேண்டும்.எனக்கு இந்த ஜெ,சி.பி எந்திரங்களைக் கண்டால் பெரும் பயம்.யவனிகா ஸ்ரீராமின் ஒரு கவிதையும் எனது பயத்திற்கு காரணமாக இருக்கலாம்.அவர் கவிதை பொக்லைன் எந்திரம் பற்றியது .பொக்லைனைக் காணும் போதெல்லாம் எனக்கு துர்க்கையின் அடிவயிற்றில் ஒரு வேற்று கிரகத்தின் எந்திர யானை சதா ஏறிக் கொண்டிருப்பது போல தோன்றும்.எங்கள் ஊரைப் பொறுத்தவரையில் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுப் பரப்பிற்குள் குறைந்த பட்சம் நாற்பத்தியெட்டு சுடலை மாடசாமிகள் இருப்பார்கள்.எட்டு சுடலையையும் இரண்டு இசக்கியையும் கடக்காமல் நீங்கள் ஐநூறு மீட்டர் எங்களூரில் செல்ல இயலாது.அப்படியானால் மாவட்டம் முழுவதும் எத்தனை சுடலைகளும் ,இசக்கிகளும் இருப்பார்கள் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.கணக்கு மிகை ஆகாது.அத்தனை பேரிருந்து ஆட்சி செய்கிற இடம்.இந்த இயற்கை காற்று நீர் எல்லாவற்றிற்கும் இன்றும் அவர்கள்தாம் பொறுப்பு.இது பற்றி நீட்டினால் வேறு திக்கிற்குச் சென்று விடுவோம்.

இந்த ஜெ.சி.பி எந்திரங்கள் சில சமயங்களில் சுடலைமாட சாமிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம் நின்று கொண்டிருக்கும்.ஐம்பதடியில் நிற்கும் இரண்டிற்கு நீங்கள் பயந்து ஒரு மாற்று குறுக்குத் தடம் நோக்கி முன்னேறினால் இருபத்தைந்தடியில் அங்கே இருவர் நின்று கொண்டிருப்பார்கள்.ஐம்பதடியில் பொக்லைன் .எனது பையன் சிறுவயதாக இருக்கும் போது ஒரு சமயம் குளக்கரை பாதை வழியே ஒரு கோவிலுக்குச் செல்ல முன்னேறிக் கொண்டிருந்தோம்.பாதிவழி சென்ற பின்னர் குறுக்கே சாலையை ஒரு ஜெ.சி.பி அகட்டி வாரி நூறு நூற்றைம்பதடிக்கு தொடிக் கொண்டிருந்தது.மற்றொன்று முன்னது அகலக் கிழித்த மணலையெல்லாம் சுற்றி நின்ற டிப்பர்களிலும் ,டிராக்டர்களிலும் கொண்டு கொட்டியது.கோபுர தரிசனம் போல இது வேறு வகை அடியாழ தரிசனம்.எங்கள் பகுதியில் பெயர் போன ஒரு பாராயணக்காரர் உண்டு. அவர் இக்காட்சியைக் கண்டிருப்பார் எனில் சிவனின் அடியாழக் காட்சியை  பகவான் இவ்வாறு ஜெ.சி.பி எந்திரங்களின் துணையோடுதான் நோண்டிச் சென்று பார்த்தார் .என்று பின்வரும் காலங்களில் பேசித் திரிந்திருப்பார்.

என்னிடம் அந்த காட்சியைப் பார்த்து என் பையன் என்னிடம் கேட்டதுதான் வினோதமானது .அவர்கள் அப்பாக்கள் அவர்களுக்கு பிள்ளைகளுக்கு மண் தோண்டி விளையாட எவ்வளவு பெரிய சாமான் வாங்கி கொடுத்திருக்கிறார்கள் பார்த்தாயா ? நீயும் இருக்கிறாயே ! இது அவன் .இப்போது அவன் வளர்ந்து பெரியவனாகி விட்டான்.எனது உயரத்தில் இருக்கிறான் என்றார் பிரான்சிஸ் கிருபா .+ 2 தேர்வு முடிந்து மேற்படிப்பிற்கான ஒரு நுழைவுத் தேர்விற்கான படிவத்தில் ஓ.பி.சி. இணைக்க வேண்டும்.அவனிடம்  இந்த காட்சியைக் காட்டிக் கொடுத்து " இவர்களின் தகப்பன் மார்கள் எவ்வளவு பணக்காரர்களாக இருப்பார்கள் என்று பார்த்துக் கொள்.மண் தோண்டி விளையாட எவ்வளவு பெரிய எந்திரங்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் பாரேன் ? என்றேன் .அவன் சிரித்துக் கொண்டான்.அவனுடைய சிரிப்பில் இவனுக்கு இன்னும் சிறிது காலத்திலேயே தள்ளாத முதுமை வந்துவிடும் என்கிற சப்தம் ஒலித்தது.

அவன் சிறுவயதில் இருந்த போது கண்ட காட்சிகள் இப்போதும் அப்படியே இந்த விஷயத்தில் இருக்கிறது.எங்கேனும் இரண்டு ஜெ.சி.பி கள் எதையாவது தோண்டிக் கிளர்த்திக் கொண்டுதானிருக்கிறது.நல்லவேளையாக இந்த காட்சிகளை என்னுடைய அப்பய்யா காணவில்லை .அவர் கடந்து சென்ற பனிலாரிகளுக்கே பயந்தவர்.ஏதோ சூது நடக்கிறது என்று .பார்த்திருப்பாரேயானால் அவருடைய விடைபெறுதல் சுகமரணமாக ஒருவேளை அமைந்திருக்க வாய்ப்பில்லை.

எங்கள் ஊரில் என்னைப் போலவே ஏராளமான சுடலைமாடன்கள் பயந்தார்கள்.பயம் பொய்யில்லை.பயந்த மறுநாட்களிலேயே போய்ச் சேர்ந்தவர்கள் அநேகம் பேர் .தெற்குக் கடற்கரைச் சாலை விஸ்தரிப்பின் போது காலையில் இருப்பார்கள்.நள்ளிரவில் அகற்றப்பட்டு விடுவார்கள்.போராட்டத்தில் இருப்பவர்களை கையும் காலையும் பிடித்திழுத்து அகற்றுவார்களே அப்படித்தான் இதுவும்.  கூட்டங் கூட்டமாக போய்ச் சேர்ந்தார்கள்.நமது மக்களின் மறதியொரு இனிமை.நேற்று இங்கொருவனும் ,இங்கொருத்தியும் இருந்தார்களே விடிந்தால் காணவில்லையே என்று ஒரு பயலும் கேட்கவில்லை.அது வரையில் காத்து ரட்சித்தவர்கள் அவர்கள் இத்தனைக்கும்.

ஐந்தாறு வருடங்களாக சாலைகளே இல்லாத  நகரமாக விளங்குவது எங்கள் தலைநகரம் நாகர்கோயில் மட்டும்தான்.ஒரு மழை நாள் பேருந்தில் உடன்பயணித்தவர் கெட்ட கெட்ட வார்த்தைகளை  எனது காதில் பக்கத்திலிருந்து துப்பிக் கொண்டிருந்தார்.நமக்காகத் தானே ஏதோ பெரிய ஏற்பாடு செய்கிறார்கள் பெரியவரே ? நாம் கொஞ்சம் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று பதில் கேட்டேன்.என்ன ஏற்பாடு செய்யப் போகிறார்கள் ! எல்லோரையும் போட்டு குழி தோண்டி மூடுவதற்கா ? என்று சுட சுட திருப்பியடித்தார் அவர்.அப்போது நான் சகித்துக் கொள்ளச் சொன்னது ரொம்பவும் அதிகம் .நான்கு கிலோமீட்டர் தூரத்தை அந்த பேருந்து மதுரைக்குச் செல்கிற நேரத்தில் கடந்தது.வெளியில் பெய்த மழையைக் காட்டிலும் பெய்த மழை அதிகம் .எல்லோரும் பேயாக நனைந்திருந்தார்கள். எனக்கு அன்றைய தினத்தில் அந்த பயணம் பிடித்திருந்தது அவ்வாறாகச் சொல்லிவிட்டேன்.பெரியவர் சொன்னது உண்மைதான் கூடங்குளம் விஷயங்களை எல்லாம் சேர்த்திணைத்துப் பார்க்கும் போது ; நாகர்கோயில் காரனுக்கு சாலைகளில் ஏன் இவ்வளவு பெரிய பாதாழங்களை ஏற்பாடு செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதில் இப்போது சிரமம் ஏதும் இருக்கவில்லை.சிறிய இடர்பாடுகள் ஏற்பட்டாலும் கூட அணுவுலையின் முதல் சுற்றளவு வளைவிற்குள் தோராயமாக ஆறுலட்சம் பேர் கூடியிருக்கிறோம்.இதில் நான்கு லட்சம் பேர் நாகர்கோவிலை சேர்ந்தவர்கள் .சுடலைமாடன்களையெல்லாம் தூக்கி விட்டு ஏன் சதா குழி தோண்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு அரசாங்கத்தின் தொலை நோக்குப் பார்வைதான் காரணம்.அவர்கள் திருநெல்வேலியையும் கூட இதுபோல விஸ்தரித்து வைத்துக் கொள்வது நல்லது.பேரிடர் காலங்களில் யாரும் குறை சொல்ல வாய்ப்பு உண்டாகாது.

சாலைகளே இல்லாத நகரத்தில் வாழ்வதை இயல்பாகப் பழகிக் கொண்டோம் .தொடர்ந்து யுத்தம் நடைபெறும் நாடுகளில் யுத்தம் பழகி விடுவது மட்டுமல்ல யுத்த வதந்திகளும் ,சுவாரஸ்யங்களும் இல்லையானால் ஏதோ குறைப்படுகிறது என்று வருந்துகிறார்களே அப்படித்தான் இதுவும்.எனக்கு இப்போது சாலைகள் உள்ள ஊர்களுக்குச் செல்லும் போது அவர்களுடைய வாகனங்களை ஓட்ட நேர்ந்தால் ஒரு சுவாரஸ்யமும் இல்லை.என்னடா இது அல்வா போல ரோடு போட்டு வைத்திருக்கிறார்கள் ; இதில் வண்டியோட்டுவதற்குப் பதிலாக உமியள்ளித்  தின்னலாமே என்றுதான் படுகிறது.அதில் என்ன பெருமை இருக்கிறது ? சாலையில்லாத ஊரில் வண்டியோட்டுவதிலுள்ள சுகம் உங்கள் ஊர் அறியுமா ? எங்களூரில் உள்ள எலும்பு முறிப்பு மருத்துவர்கள்தான் இன்னும் சில காலத்தில் இந்தியாவிலேயே பெரிய செல்வந்தர்கள் ஆகப் போகிறவர்கள் ! இருக்கட்டுமே கைகளையும் கால்களையும் முறித்து கொள்ளுகிற எங்களூர் குழந்தைகளுக்கு எவ்வளவு கிளாமர் இருக்கிறது என்பதைச் சொன்னால் புரிந்து கொள்ளவா போகிறீர்கள்.என்னைக் கேட்டால் உங்கள் குடியிருப்புகளில் உள்ள நல்வாழ்வுச் சங்கங்களை அணுகி இன்பத்தின் ருசி தெரிவித்து கொஞ்சம்
கொஞ்சமாகவேனும் சாலைகளில் பழுதுண்டாக்கிக் பாருங்கள்.

மகனுக்கான ஓ.பி.சி .சான்றிதழ் அலைச்சல் எனக்கு இரண்டு விதமான ஆச்சரியங்களை ஏற்படுத்தியது.கிராம நிர்வாக அலுவலர் ,வருவாய் ஆய்வாளர் உட்பட தாசில்தார் ஒருவருமே ஒரு நயா பைசா வாங்கவில்லை. இப்படி எல்லோரும் ஒரு நாளில்  சொல்லாமல் கொள்ளாமல் திருந்திவிட்டால் தாங்க ஒண்ணாத குற்றவுணர்ச்சி எனக்கு ஏற்படுகிறது என்று நான் மகனிடம் சொன்னேன் .இந்த அலுவலகங்களில் எனக்கு இந்த அனுபவம் காண்பது இதுதான் முதல் தடவை.ஒருவேளை என்னை கிண்டல் செய்வதற்காக இப்படி செய்கிறார்களோ என்று கூட தோன்றியது.சான்றிதழும் ஒரேநாளில் பெற்று விட்டேன்.ஒருவேளை ஒரேநாளில் இத்தனையலுவலகங்களுக்கும் வந்து நூற்றைம்பது கிலோ மீட்டர் வண்டியோட்டி சாதிக்க நம்ம மாவட்டத்திலேயே நீ முயற்சிக்கிறாயா ? உனக்கு இன்று சங்கு தாண்டி ! என்று அவர்கள் உள்ளுக்குள் சிரித்திருக்கலாம்.அவர்களுக்குக் வழக்கமாக கொடுத்திருக்க வேண்டியதைக் காட்டிலும் பத்து மடங்கு செலவு .விலா எலும்புகளில் அலுமினிய பானைகள் நொறுங்குவது போன்ற சப்தமும் உடலுக்குள் தீக்குச்சி கொளுத்திப் போடுவது போன்ற வலியும்.முதல் இரண்டு நாட்களில் வைகுண்ட ராஜன் கலக்கி மணல் அள்ளும் கடற்கரைகள் ரத்தாகி சிவப்பில் இரண்டரை கிலோ மீட்டர் வரையில் கலங்கியிருக்குமே அந்த வண்ணத்தில் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் நீர் ஒழுக்கிக் கொண்டிருந்தது.விழுங்கினால்  அதில் என் தாய்மண்ணின் சுவை இருப்பதும் தெரிந்தது.மா,பலா ,வாழை ஆகியவற்றின் சுவைதான் கொஞ்சம் புளிப்பு மட்டும் அதிகம் .பச்சைத் தண்ணீர் குடித்தாலும்  தொண்டையில் ஊசி குத்தல்.

வழக்கமாக நான் செல்கிற உள்ளூர்  வைத்தியரிடம் செல்லவில்லை.ஆறேழு வருடங்கள் ஆயிற்று இன்னும் உன் உடம்புக்குப் பழகலையா என்று சொல்லி திட்டுவார்  .அவர் எனது உடலின் பொறியாளர்.

சாமிக்கு ஏதேனும் கொடுத்தால் மட்டும்தான் அருள் கிடைக்குமா ?

சாமிக்கு ஏதேனும் கொடுத்தால் மட்டும்தான்
அருள் கிடைக்குமா ?
என்று சிலர் அடிக்கடி கேட்கிறார்கள்.நிச்சயமாக அதில் சந்தேகமே கிடையாது.உங்களிடம் சாமிக்குக் கொடுக்கும்படியாக அப்படி என்னதான் விஷேசமாக வைத்திருக்கிறீர்கள் ? போதிய ஞானம் இருக்கிறதா ? இல்லாமை இல்லாத மனம் உண்டா ? வஞ்சம் கீழிறங்கியிருக்கிறதா ? இல்லாமைக்கு இரங்கும் வழி தெரியுமா ? அப்படி என்னதான் பெரிதாக இருக்கிறது உங்களிடம் ? பணம் தவிர்த்து உங்களிடம் ஒன்றுமே இல்லையாயின் பணத்தைத்தான் கொடுத்தாக வேண்டும் வேறு வழி கிடையாது .அம்மை அவ்வையிடம் கவியமுது இருந்தது அதனைக் கொடுத்தாள்.காரைக்கால் அம்மை ஞானத்தை கொடுத்தாள். சாமிக்கு ஆண்டாள் காமத்தைக் கொடுத்தாள் .எதுமே இல்லாதவன் இருப்பதைத் தானே கொடுக்க முடியும் ? உன்னிடம் இருப்பதெல்லாம் பணம் மட்டும்தான்.அப்படியானால் நீ அதனைத் தவிர்த்து வேறு எதனையும் தரயியலாது. ஏதேனும் கொடுத்தால் மட்டும்தான் அருள் கிடைக்குமா ? என்று கேட்கிறவனிடம் கொடுப்பதற்கு இடமற்ற வறிய மனம் மட்டுமே இருக்கிறது என்று பொருள் .பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கவச குடலங்களோடு பிறந்த கர்ணனிடம் அவனுடைய வள்ளல் தன்மையைக் கேட்டார்.அவன் அவனுடைய வள்ளல் தன்மையோடு அகந்தையைப் பொருதி வைத்திருந்தான்.அகந்தையில் பொருதி இருக்கிற அத்தனையும் கழன்று விழுகிற வரையில் அவன் கேட்டுக் கொண்டேயிருப்பான் .ஏனென்றால் அகந்தையில் பொருந்தியிருக்கிற எல்லாவிதமான ; அது நல்லவிதமான அலங்காரங்களாக இருப்பினும் சரி.தீமையின் அலங்காரங்களாக இருப்பினும் சரி அவை அனைத்துமே அகந்தையின் அற்பத்தனங்கள்தான் .அவன் கணக்கு அது.
இதில் சாமிகளுக்கென்றில்லை மனிதர்களிடம்கூட இலவசமாகக் காரியங்கள் நடக்க வேண்டுமென விருப்பம் கொள்ளாதீர்கள்.அது தீங்கின் விருப்பம்.ஒரு வித்தையை கற்றுத் தந்து விட்டு அவன் தோளில் போட்டு மினுக்கியலைந்த தோள்ப்பையை அவனிடம் அனுமதி கேட்காமல் கூட நீங்கள் எடுத்துச் சென்று விடலாம்.எதிராளிக்கு உங்களின் செய்கை முழுவதுமாக புரிய வேண்டும் என்கிற அவசியமில்லை .ஆனால் அவனுக்கு நீங்கள் கற்றுத் தந்த வித்தை அவனுக்கு பயன்படாது எனில் அது திருட்டாகி விடும்.பொன்னை வைத்து விட்டுத்தான் பூவை எடுக்க வேண்டும்.நீங்கள் சாமியைத் திருட வேண்டுமெனில் உங்களில் இருந்து இறங்கி இறங்கி சாமியில் இணைந்து விட வேண்டும்.
சாமிகள் நம்மிடம் நாம் கொண்டுவந்ததாகக் கருதுகிற அனைத்தையும் கேட்டு பிடுங்குவதற்காகத் தானே இருக்கிறார்கள்.அகந்தையின் பெருமிதங்களாக நாம் கொண்டிருக்கும் அனைத்தையும் அவர்கள் பிடுங்கியாக வேண்டுமே ? மரணம் கடைசி பற்று வரவுச் சீட்டை கிழித்தெறியும் போது நடக்கும்.மரணம் நடந்து முடிந்த பின்னரும் வாழமுடியும் என்பதையும் ,அது கடவுளுக்கு இணையானதொரு வாழ்க்கை என்பதும் உணர்ந்தோர் அறிவர்.
ஒரு கவிஞனைச் சந்திக்கிறீர்கள்.நீங்கள் கொண்டு சென்ற வெறுமை அத்தனையையும் அவன் தலையில் சுமத்தி விட்டு ஒரு புட்டி மது ஈடாகாகக் கொடுத்து அவனுடைய ஒரு புத்தகத்தை வாங்காமல் திரும்புகிறவர் நீங்கள் எனில் ; உங்களை அவனுடைய கடும் விதியும் இணைந்து அலைக்கழிக்கும் என்று பொருள் . சாமர்த்தியம் என்றுதான் நினைப்போம்.ஆனால் அதுயொரு வினையின் விபத்து.செய்யக் கூடாதது .பலசமயங்களில் சாமர்த்தியமாகக் கடந்து விட்டோம் என்று நாம் கருதுகிற பல விஷயங்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவை.முப்பது வருடம் கழித்து ஒரு முட்டுச் சந்திற்குள் வந்து நிற்கையில் விளங்கி என்ன பலன் ?
எங்கள் ஊரில் எல்லாசாமிகளும் கேட்கும் .பெரிய சாமிகளை திருப்தி செய்து விட முடியும் .சிறிய சாமிகளிடம் கதையெல்லாம் விட முடியாது .கொண்டு வா மகனே கொண்டு வா அவ்வளவுதான்
ஆடு ,கிடா ,கோழி ,பன்றி அத்தனையும் கொண்டு வா.நீ சாப்பிடுவதில்லையாக இருக்கலாம் சாமிகள் சாப்பிடுவார்கள் கொண்டு போ.அமர்ந்திருந்து தலை குனிந்து சாப்பிடுகிறார்களே ; அத்தனை பயல்களும் சாமிதான் கொண்டு போ
கேள்வி கேட்காதே.

கிறிஸ்தவ அரசியல் என்பது என்ன ?

கிறிஸ்தவ அரசியல் என்பது என்ன ? கிறிஸ்தவ அரசியல் என்ற ஒன்று இருக்கிறது.இருக்கவும் வேண்டும்.அதுபோல நாடார் அரசியல்,தேவர் அரச...