நினைத்தார்கள் நினைத்திருந்தேன் - 62

நினைத்தார்கள் நினைத்திருந்தேன்

1

இடையில் இறந்து விடுவேன்
என்றே எல்லோரும்
நினைத்தார்கள்
நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன்

2

போலியான அன்பில்
வலிந்து
வழியனுப்ப
வாகனத்தில் என்னை ஏற்றிக் கொண்ட நண்பன்
வழியில் வருவோர் போவோரையெல்லாம்
திட்டி கொண்டே வந்தான்
ஏன் இந்த அளவிற்கு
என்னைத் திட்டிக் கொண்டே வருகிறாய் ?

இறக்கி விடச்
சொல்லிவிட்டேன்

3

அவன் என்னைத் திட்ட
அது என்னுள்
வந்தமர்கிறது
நான் மற்றொருவனை திட்ட
அவன் மற்றொருவரிடம்
கொண்டு சேர்கிறான்

யாரின் அகத்தளம் இது என்றே தெரியவில்லை
நடந்து முடிந்த
விபத்திற்கு

4

நல்லபடியாகப் பேசினால்
நல்லபடியாக நினைத்துக் கொள்கிறார்கள்
மற்றபடி நடத்தையில் ஒன்றுமில்லை

5

கூப்பிடும் தூரத்திலே
எல்லாமே இருக்கின்றன
துயரத்தை அழைப்பவனிடம்
துயர் வந்து சேருகிறது

என்னை எப்படி நீ அடையாளம் கொண்டு
கொண்டாய் என
அவன் கேட்கிறான்
நீதானப்பா அழைத்தாய் என
அது
திருப்பிக்
கேட்கிறது

6

தூய அன்பு
நரபலி
கேட்கும்

பலியானவன் மீதே
அன்பெனக் கதறும்

7

மதிக்கத் தெரியாதவனுக்கு
செயல் இல்லை

8

ஒரு வயல் உருவாவதற்குத் தேவையான
சோறு
உன் தட்டில் இருக்கிறது

எத்தனை பேர் சேர்ந்து இழுத்து
வந்து சேர்த்திருக்கிறார்கள்
ஒரு நேரத்திற்கான மதிய உணவை

நீ என்ன நினைத்து கொண்டு சாப்பிடுகிறாயோ

9

வார்த்தைகள்
அப்படியப்படியே முளைக்கின்றன
பொய் சொன்னால் பொய்யாக
மெய் சொன்னால் மெய்யாக

10

உண்மை என்பது
ஏராளம்
கதாபாத்திரங்களால்
ஆனது


கண்களுக்கு நன்றாகத் தெரியும்

1

எனது பாதைகளை அறிவது
கடினமானது
ஒவ்வொரு அடி முன்னோக்கி வைக்கும் போதும்
ஒவ்வொரு அடியாக
பின்னோக்கி
மூடி
மறைந்து விடுகின்றன

2

எனக்குத் தரப்பட்ட தனிமையை
அமுதமென விழுங்கினேன்

3

எடுத்ததும் ஆலோசனை
சொல்பவனின் ஆலோசனையை
எடுத்து புறத்தே
வைத்து விடுங்கள்
அதில் புளிப்பதிகம்

எடுத்ததற்கெல்லாம்
ஆலோசனை சொல்பவனை
மறுத்து விடுங்கள்
விஷமதிகம்

முடித்த காரியத்தில்
ஆலோசனை சொல்பவனிடம்
சும்மா இருந்து விடுங்கள்
பதில் பேச வஞ்சம் பெருகும்

இந்த மூன்றுபேருக்கும் பிறகு
ஒருவன் வருகிறான் பாருங்கள்
அவனிடம்
இருக்கிறது
உங்களுக்கான
ஆலோசனை
கைக்கருகில் வைத்துக் கொள்ளுங்கள்


4

ஆபத்தின் போது
கடவுள் வருவது
கண்களுக்கு
நன்றாகத் தெரியும்

5

முட்டுச் சந்திற்குள்
மாட்டிக் கொண்டால்
எழும்பிச் சாடுகிறாயா
என
பரிசோதிக்கப்படுகிறாய்
என்பது
பொருள்

6

தேவதூதன்
உன்னைத் தேடிவரக் கூடாது
அதற்குள்
உன் வேலை
முடிக்கப்பட்டிருக்க வேண்டும்

7

பகவான் உன்னிடம்தான் இருக்கிறார்
உனக்குத்தான்
அவரைப் பார்க்க
நேரமில்லை

8

நன்றாக இருந்தால்
நன்றாகக் இருந்தது
என்று சொல்லிவிட வேண்டும்

9

ஆலோசனையும் கவிதையாகும்
யார் சொல்கிறார்கள் என்பதைப்
பொறுத்திருக்கிறது
அது

10

நெட்டை மனிதருக்கு ஒரு வசதி
குட்டை மனிதருக்கு
வேறொரு வசதி

11

பொதுப் பண்பு என்பது
காரியம் தானே அன்றி
நீயோ
நானோ
அல்ல

12

அழகிகளுக்கெல்லாம்
ஐந்தறிவே
ஆறாவது உடல் கொண்டவள்
காரைக்கால்
அம்மை

13

பணிய மறுத்தால்
முறியப்போகிறாய்

அடக்கம் என்பது
துணிவென்றுணர்தல்

14

எல்லா சொல்லும்
உயிர் கொண்டதுவே


மழைக்கான அறிகுறி

1

நாம் எல்லோருமே
மிகுந்த உயரத்தில் தான்
இருக்கிறோம்
பரவெளியில்
தரணி மிதக்கும்
உயரம் அது

புத்தியால்
தவறும் போதெல்லாம்
கீழே விழுகிறோம்

2

பக்தி இல்லையானால்
ஒரு பெலனும் இல்லை

3

என்னுடைய மன அழுத்தத்தை எடுத்து
என்னுடைய மன எழுச்சியிடம்
தின்னக் கொடுத்து விடுகிறேன்

4

கட்டெறும்பு ஒன்று
நேருக்கு நேராக வந்த போது
வழிவிட்டொதுங்கினேன்

5

நான் என்று நீ சொல்ல வேண்டுமானால்
நான் பொருள் விளங்கும்படி
நீ எதையேனும் செய்திருக்க
வேண்டும்
ஒரு கைப்பிடி மணலை எடுத்து
கடலுக்குள்
போட்டிருந்தால் கூட
போதும்

6

இரண்டுபேருக்குப் பகிர்ந்தளிக்கத் தெரிந்தவன்
இரண்டாயிரம் பேரென்றாலும்
உணவூட்டுவான்

7

நீ கருமியாய்
இருக்கையில் கடவுளையும்
கருமியாக்கி விடுகிறாய்
பிறகெப்படி
உனக்கருள்வான் ?

நீ தந்திரசாலி என நினைத்துச் செய்கையில்
பகவான்
மகா தந்திரசாலியாகி விடுகிறான்

வேறொருவருமில்லை
நீயே உனக்கு
அவனுடைய
கதாபாத்திரம்

8

இன்றைய நாளின் மகிழ்ச்சியின் நிமித்தம்
நான்
ஒவ்வொரு நாளும்
வாழ்கிறேன்

9

எதைக் கொன்றால் நீ இருப்பாய்
என்பதை நீ சரியாக அடைந்து விட்டால்
உன்னிடம் அதன் பிறகு
எனக்கு
பேசுவதற்கு
ஒன்றுமில்லை

10

ஒன்றுமில்லாததை
இப்படி விரித்து பகுத்துப் பேசுதற்கு
எம்மாம் பெரிய
மனிதன்

11

ஒன்றுமில்லாததற்குள்
ஏராளம் உண்டு

12

மூன்று கர்ப்பிணிகள்
நேரில் நடந்து வருவதை காணும் போது
உனக்கு என்ன தோன்றுகிறதோ
அதுவே
எனக்கும் தோன்றுகிறது

13

அப்பட்டமான வெய்யில்
மழைக்கான
அறிகுறி

14

பனைமரம் அளவிற்கு
உயரமேனும்
வளர வேண்டும்
இல்லையானால்
சராசரி

15

சராசரியென்றாலும்
சராசரிக்குண்டானதெல்லாம்
கிடைக்கத்தான்
செய்யும்

16

பத்திரகாளி யாரையும்
பட்டினி போடுவதில்லை
கிடந்தால்தான் உண்டு


மொத்த உலகமும் மாபெரும் போதை

1

கர்த்தரோ
சீயோனிலிருந்து
அழைக்கிறார்

ஆதி சிவன்
கைலாயத்திலிருந்து
அழைக்கிறார்

மகா விஷ்ணு
வைகுண்டத்திலிருந்து
அழைக்கிறார்

அண்டை வீட்டுக்காரன்
மட்டுமே
அருகிலிருந்து கொண்டு
அழைக்கிறான்

2

உண்மையில்
அண்டை வீட்டுக்காரன் உங்களிலிருந்து
வெகுதூரத்திலேயே
இருக்கிறான்

வெகுதூரத்திலிருப்பதை
வெகுதூரத்தில் இருந்து அறிந்து கொண்டால்
அவன்
அண்டை வீட்டுக்காரன்

அண்டை வீட்டுக்காரனெல்லாம்
அண்டை வீட்டுக்காரனல்ல

3

வெகுதூரம் என்பதே
மிகவும் பக்கம்

4

பக்கத்தில் இருப்பதெல்லாம்
பக்கத்தில் இருப்பதில்லை

5

தரப்படுவது அத்தனையும்
ஆசிர்வதிக்கப்பட்டே தரப்படுகிறது
நாம்தான் தரப்படாத அத்தனையையும்
ஆசிர்வதிக்கப்பட்டதாகக்
கருதுகிறோம்

6

ஏளனம் செய்தவனை
நிச்சயமாக
மீண்டும் சந்திக்க வேண்டியதிருக்கும்

7

திருவள்ளுவன்
அனைவரிலும் பெரியவன்
நான்
மாணிக்க வாசகரிலும்
சிறியவன்

8

முருகன் சுற்றி வந்ததும் சரிதான்
விநாயகன் சுற்றி வந்ததும் சரிதான்

9

குறைத்து மதிப்பிட்டால் நீயே
குறைபாடுடையவன்

10

அருகாமையில் சென்று பார்
எது சாதாரணமாகத் தோன்றுகிறதோ
அது
அமிர்தம்

11

மொத்தமாக
கூட்டிக் கழித்துப் பார்க்க
நீ யாரென்பது
தெரிந்து விடும்

12

தென்னாடுடைய சிவனுக்கும்
அன்னபூரணி அவசியம்

13

எங்கெங்கும் சென்றாலும்
எங்கேயும் செல்வதில்லை

அகம் திறக்காதவனுக்கு
போதி மரம் கிடையாது

14

மொத்த உலகமும்
மாபெரும்
போதை


வைகுண்டப்பதவி

1

எங்கே நின்றாலும்
சரி தவறு என
சப்தமிட்டுக் கொண்டேயிருக்கிற
மனமது
குப்பை

2

குழம்பிய மனம்
காலம்
பிடிக்கும்

குழம்பிய மனம்
குட்டையில்
உருளும்

3

வைகுண்டப்பதவி
வாழ்வதில்
உள்ளது

4

எடுத்துக் கொள்ளத்
தெரியாதவன்
ஏமாற்றமடைகிறான்

5

எப்படி வாழ்வது
எனத் தெரியாதவனுக்கு
வாழவும் தெரியாது

6

அடியாரை இகழ்தல்
ஆயிரம்
பசுவைக் கொல்லுதல்
அடியார் என்பதில்
யவனிகாவும்
அடங்குவார்

7

சொல்லித் தருவதற்கெல்லாம்
ஒன்றும்
இல்லை

தன் முனைப்பில்
நிற்பவனுக்கு
ஏதும்
ஏறாது

8

விலங்கைக் கரைக்க
வேதம்
தேவை

painting - kesav venkataragavan

எவ்வளவு ஆச்சரியமானவை

எவ்வளவு ஆச்சரியமானவை

1

அவளைத் தொடுவது ஒன்றும் பெரிய
காரியமல்ல
அவள் வளர்க்கும் அத்தனை பேய்களுக்கும்
சேர்த்து நீ
பொறுப்பெடுக்க
வேண்டும்

2

ஆதியிலே தொடங்கி
அவள் மீது
ஏறி அமர்ந்து வருகிற பேய்கள்
அவை
சுலபத்தில் அடங்காது

3

கண்கள்
ஆயிரம்
ஒளியாண்டுகளை அறியும்

4

அவளுடைய வயிறு
ஆதி நட்சத்திரமும்
ஆதி மிருகமும்
இணைந்தது

5

சாந்தமாயிரு
அது ஒன்றே
உனக்கு
அருளப்பட்டது

6

நான் இருக்கிறேன்
எனது குழந்தைகள் இருக்கிறார்கள்
உறவுகள் நட்புகள்
இருக்கிறார்கள்
காகங்கள் இருக்கின்றன
எல்லாவற்றையும் காண
கண்கள் இருக்கின்றன
இவையெல்லாம்
எவ்வளவு ஆச்சரியமானவை

7

கிடந்து துயிலும் நாய்
பதட்டத்தின் திசைகளில் எல்லாம்
கண்களைத்
திருப்புகிறது

8

இப்பொழுதில் வாழ்பவனை
இறந்த காலத்தில் வாழ்பவன்
பார்த்துக் கொண்டிருக்கிறான்
எதிர்காலத்தில் இருப்பவன்
பொறாமைப்படுகிறான்

9

எதையும் சரிப்படுத்த இயலாது
வேண்டுமானால்
நீ சரியாக
இரு

10

தேங்கிய நீர்
ஓடும் நீரை
விஷமாக்கும்

11

ஏன் மாயா

அவனை அறிந்து கொண்டேன் என
இவனை அறிந்து கொண்டேன் என
தன்னை அறிந்து கொண்டானா
இந்த
தான்

ஏன் மாயா
ஊர் முழுதும்
ஓராயிரம் மனம்
சுபாவங்களைப் புதைத்து வைக்க
காப்பியம் தேவை
காப்பியத்தைப் புதைக்க
மாமிசம் தேவை

ஏன் மாயா
பேரழகியை மீன் சந்தையில்
சந்தித்தது
அவளது தப்பா
எனது தவறா
ஞாபகமெங்கும்
மீன் நாற்றம்

ஏன் மாயா
தோல் பதனிடும்
ஆலையில்
மாட்டிச் சீரழிகிறான்
மனிதன்

ஏன் மாயா
பிசிறும் போது வெளியேற
வாசல் திறந்திருக்கிறது
கண்டறியத் தெரிந்தவனுக்கு

சும்மாயிருக்கும் சிந்தையில்
நூறு ஓட்டைகள்

பெரியாரியர்களின் தேவை

பெரியாரியர்களின்  தேவை


கௌசல்யா ,சக்தி திருமணத்தை முன்வைத்து பல்வேறு விதங்களில் யோசித்துப் பார்த்தேன்.ஒவ்வொரு திருமணத்திற்கும் பின்னால் ஒரு சமூகம் இந்திய வாழ்வில் அவசியப்படுகிறது.கௌசல்யா போல பெருந்துயருள் நுழைந்து விடும் குழந்தைகளுக்கு ஆதரவாக நிற்கும் பொதுச் சமூகங்கள் எவையேனும் நம்மிடத்தில் இருக்கிறதா ? இந்த திருமணத்தில் பல்வேறு தரப்பினர் நின்று கொண்டிருந்தாலும் கூட பெரியாரியர்களே சூழ்ந்து நின்று காக்கிறார்கள் என்பது வெளிப்படை .பெரியாரியர்களின் தேவை இன்னும் முடிவடையவில்லை என்பதனையே இது காட்டுகிறது.

பெரியாரியர்களின் சித்தாந்தங்கள்,கொள்கைகள் ,பிரகடனங்கள் எவற்றின் பேரிலும் எனக்கு நம்பிக்கையில்லை.அதற்கு காரணம் அவர்களை திட்டமிட்டு மறுப்பதும் அல்ல.அதற்கான ஒரு அவசியமும் எனக்கு இல்லை.அவர்களின் முழக்கங்கள் பலதும் தட்டையான புரிதல்களில் இருந்து வெளிவரக்கூடியவை .வாழ்வைப் பற்றிய மிகவும் எளிமையான முன்முடிவுகளை ஏற்படுத்துபவை என்பதனால் தான்.ஆனால் அவர்களுக்கும் இங்கே ஒரு சமுகமிருக்கிறது,அறவுணர்ச்சியிருக்கிறது.கலாச்சாரம் இருக்கிறது.பிறருடைய போலியான நீதியுணர்ச்சியைக் காட்டிலும் செயல்பாடுகளில் அவர்களுடைய நீதியுணர்ச்சி மேன்மை பொருந்தியதாக இருக்கிறது என்பதனை கௌசல்யா ,சக்தி திருமணம் உணர்த்துகிறது.இது பிற இதர தரப்புகளாலோ,சமூகங்களாலோ இயல கூடிய காரியமல்ல.

எந்தவொரு குழுவும் சமூகத்தில் இல்லாத தேவைகளின் மீது நின்று கொண்டிருக்கவே இயலாது.முற்றிலும் தனிமைக்கும்,சமுகமின்மைக்கும் தள்ளப்படுபவர்களுக்கு இலக்கியம் கலை எல்லாம் இருக்கின்றன.தற்செயலாக சமூக வாழ்விலிருந்து புறந்தள்ளப்பட்டு ,மீண்டும் வாழ்வில் இணைய விரும்பும் கௌசல்யா போன்றோருக்கு இங்கே என்ன இருக்கின்றன ? இந்த காரியத்தில் நண்பர் எவிடன்ஸ் கதிர்  மீதும் மதிப்பு அதிகரித்திருக்கிறது.

இந்த திருமணத்திற்கு எதிரான எதிர்ப்புக் குரல்கள் மிகவும் ஆபாசமானவை.அவர் ஏன் தன்னை காதலிக்கவில்லை என்பது போன்ற லோபர் லெவல் கீழ்தரங்களிடம் இருந்து வெளிப்படுபவை ஒருவகை என்றால்,அவருக்கு சம்பந்தம் தாங்கள்தான் பார்க்க வேண்டும் என்பது போல தன்னிச்சையான அப்பா ஸ்தானம் எடுத்து கொள்பவர்களின் பரிதாபகரமான வகை மற்றொன்று.

தீர்க்கமான முக்கியமான  செயல்களுக்கு எழக்கூடிய  தீய எதிர்ப்புகள் ,அவதூறுகள் அத்தனையும் இந்த செயலிலும் எழுகின்றன.இந்த காரியம் ஒரு அருங்காரியம் என்பதற்கான சான்றுகள் அவை.

இவற்றிற்கெல்லாம்  இந்த தம்பதிகள் மிகச் சிறப்பாக வாழ்வதன் மூலம் மட்டுமே பதில் சொல்ல முடியும்.ஏராளம் இடர்கள் வந்தாலும் எதிர்கொண்டு வாழுங்கள்.வாழ்க்கை பல சமயங்களில் பதிலாக மாறிவிடும்.பொறுமை,விட்டுக் கொடுத்தல் போன்ற பண்புகள் பிறரைக் காட்டிலும் உங்களுக்கு அதிகமாக தேவைப்படும்.

தைரியத்துடன் எதிர்கொண்டு வாழுங்கள்.வாழ்த்துக்கள்,வாழ்க வளமுடன் 

நடக்க வராத குழந்தைக்கு நீந்த வரும்

நடக்க வராத குழந்தைக்கு நீந்த வரும்

1

நீங்கள் கருணையுள்ளம்
கொண்டவராக இருக்கலாம்
அதற்காக இந்த வாழ்வை
கருணையோடு வாழ்ந்து விடுவீர்கள்
என்று
சொல்ல முடியாது

2

எதை சம்பாதித்தீர்களோ
அதுவே
கடைசியில்
எஞ்சி நிற்கிறது

3

பொறாமையால் ஒருவனைத்
தாக்கும் போது
இதற்காகவே காத்திருந்தவனைப் போல
அவன்
ஒருபடி
மேலேறிச் செல்கிறான்
இல்லையானால்
இந்த காரியம்
நடந்திருக்காது

4

நீங்கள் வைத்திருக்கும் 15தையும்
இழந்து பெற்றதந்த 16 .
16 அவன் கைலிருக்கிறது என்று
ஆதங்கப்படுகிறீர்கள்
15தையும்
அவன் பாதத்தில் கொண்டு போய்
வைத்து விடுங்கள்
16றை அவனிடமிருந்து திருடியேனும்
உங்களிடம்
ஒப்படைத்து
விடுகிறேன்

5

நடக்க வராத குழந்தைக்கு
நீந்த வரும்

6

வாழ்க்கை எதை செய்யச் சொல்கிறதோ
அதை மட்டும் செய்
உன் இஷ்டப்படி
எதையாவது
செய்து வைக்காதே
அது வாழ்கைக்குப்
பிடிப்பதில்லை

7

எல்லோரும் வெளிச்சத்தில் இருந்தால்
இருட்டில் வேலை தேடு

8

சுத்தமாக துடைக்கப்பட்ட
தரையில்
படித்த புத்தகங்களில் சில
பயன்முடிந்த பொருட்களில் சில
சிந்திக் கிடக்கட்டும்
சரிப்படுத்தாதே

9

தீக்குளிக்க விரும்புவோரில்
பெரும்பாலோர்
இறந்தகாலத்தையே
தேர்வு செய்கிறார்கள்

10

கணவனைக் கண்காணித்துக்
கொண்டேயிருப்பவள்
பருவம் தவறியதும்
மெதுவாக இடம் மாறி
மகனின் மனைவியைக்
கண்காணிக்கத்
தொடங்குகிறாள்

கணவன்
இப்போது மெதுவாக
அவளை
ஆமோதிக்கத் தொடங்குகிறான்

இருவரும்
ஓருயிர் ஆகிறார்கள்
காலம்
கடந்த பின்பு

11

புத்தி கொண்டு
சரிப்படுத்த முடியாத
ஏராளம் விஷயங்களால்
ஆனது
இவ்வுலகு

12

பெண்ணுக்கு வயது
பல கோடி
வருடங்கள்

எவ்வளவு செலவு ?

கேட்கவே மாட்டான் கவிதைகள் - 18

1

என்னைப் போலிருப்பவனை
பிடிக்கமாட்டேன் என்கிறது
பயந்து
முகம் திருப்பி
விடைபெற்று விரைகிறேன்
என்னைப் போலிருப்பவனிடம்
இருந்து

என்னைப் போலிருப்பவனிடமிருந்து
எவ்வளவு தூரம் கடந்து
வந்திருக்கிறேன்
அவ்வளவு இடைவெளி இருக்கிறது
பராபரமே
இருவருக்கும்

என்னைப் போலிருப்பவன்
என்னைப் போலவே இருக்கிறான்

இன்னும் எவ்வளவு தூரம்
கடந்து
கல்லும் முள்ளும் சவுட்டி
என்னிடம் வந்து சேர வேண்டும்
இந்த
என்னைப் போலிருப்பவன் ?

2

என்னையே எவ்வளவு நேரம்
உள்ளேயிருந்து
பார்த்துக் கொண்டிருப்பது ?
அதனால்தான்
வெளியே வந்து ஒருமுறை
வானத்தைப் பார்த்தேன்
ஆச்சரியம்
வானம் நான் ஆனது
இப்போது

3

ஒரு ரயில் நிலையம் ஒரு போதும்
ஒரு
ரயில் நிலையமாக இருப்பதில்லை
அதற்கு
ஆயிரம் முகங்கள்
அதில் ஒன்று
அனாதை பையனுடையது

4

கண்டு வெறுக்கும் தன்மையில்
இங்கே தெருவில் நடக்கிறார்கள் பாருங்கள்
சாலையில் திரிகிறார்கள் பாருங்கள்
கண்டு வியக்கும் அத்தனைபேரும்
இப்படித்தான்
இருந்தார்கள்

5

பேராசை அவனுக்கில்லை
இரண்டு பிடி சோறு
தேவை
ஒன்றை எடுத்து அவனுக்கு கொடு
பேராசையும் பெருந்துயரும்
உன்னிடமே
இருக்கட்டும்
கேட்கவே மாட்டான்

--------------------------------

இசைதல்

1

யாரை எதிர்த்து கொண்டிருக்கிறேன்
என்றே தெரியவில்லை
இருந்தாலும்
எதிர்த்துக் கொண்டுதான் இருப்பேன் போலிருக்கிறது
இறுதிவரையில்

2

வாழ்க்கை விட்டுச் செல்கிறது
என்று சதா
கரகரக்கும் கிழவி
பேரக் குழந்தையிடம் மட்டும் எப்படியோ
இனிக்கிறாள்

3

ஒருபோதும் ஏதும் விட்டுப் போவதில்லை
என்பதை அறிந்தவனின்
கைக்கருகில்
நிற்கிறது
கள்ளம் கபடம் அற்ற
வாழ்க்கை

4

பயந்தவனை துரத்தியோடுகிற
ஊழின் நாய்
பயப்படாதவனின் படகில் ஏறியமர்ந்து
கரையைக்
கடக்கிறது
இருவரும் கரை சேருகிறார்கள்

5

பசியின் அளவிற்கு சரியாக
தட்டில் சோறு எடுக்கத் தெரிந்தவன்
பலபேர் தன்னைக் காதலிப்பதாக
பொய் பேசித் திரிவதில்லை

6

கரகரக்கும் கிழவி
மொண்டு வரும்
பால் சொம்பு முழுதும்
வயோதிகச் சளி
இன்மையை எப்போதும் கையில்
ஏந்தி வரும் மீனாட்சி
அதை அடுப்பில் பற்ற வைத்து
மீண்டும்
பாலாக்குகிறாள்

7

சாகத் தயார் சாகத் தயார்
என சொல்லிக் கொண்டிருப்பவன்
ஒருபோதும் தயாராக மாட்டான்
என்பதை அறிந்த
சாவு
வலிந்து சென்று
அவனிடம்
சாவியைப்
பிடுங்கிக் கொள்கிறது

8

எத்தனை கம்பளம் விரித்தாலும்
அதற்குள்
வெற்றுடல் கொண்டுதான்
தூங்க முடியும்

9

நாய்க்கு கிடைப்பதுதான்
நமக்கும் கிடைக்கிறது
வேறு ஒரு பாத்திரத்தில்

10

நாலுபேரை சம்பாதிக்கத் தெரியாதவன்
நாய்க்குட்டி
மேய்க்கிறான்

விலங்கு அனுதாபி
மனித விரோதி

---------------------------------

எவ்வளவு செலவு

1

இன்றைய நாளைத் தொலைத்தவனுக்கு
ஏராளம்
கவலைகள்

2

என்னைத் தவிர பிறர்
எல்லோரும் அதி மேதாவிகள்
என நினைத்து நெடுங்காலம்
ஏமாந்து போய் விட்டேன்

என்னைப் போன்றே
எல்லோரும்
அடி முட்டாள்கள்
என்பதை இப்போது
தெரிந்து கொண்டேன்

இதற்கு எவ்வளவு செலவு

3

நாராயணன்
உன்னைக் காப்பாற்றி விடுவானா
என்று கேட்கும் குரலில்
ஒரு நிமிடம்
வந்து தோன்றுகிறான்
காலந்தோறும்
ஹிரணியன்

பொடிப்பொடி பொடி கவிதைகள் பத்து

பொடிப்பொடி பொடி  கவிதைகள் பத்து 

1

ஏராளம் ஈசல்கள் வந்து நிறைகின்றன 
அதற்குத் தக்க பல்லிகள்
எல்லா ஈசல்களும் ஒரு ஈசல் தான் என்பது போல 
தொட்டு நக்கி 
எல்லா பல்லிகளும் 
சுவரிலிருந்து காணாமற் போகின்றன 
நாங்கள் அத்தனை பல்லியும் ஒரே பல்லி தான் என்பது போல

2

அடித்துப் பெய்கிறது பேய்மழை 
அனைத்தும் நிறைகிறது 
ஊற்றின் தாய்மடி நிறைகிறது 
ஊருணி நிறைகிறது 
எண்ணங்கள் நனைகிறது
அடுத்து எறும்புப் புற்றுக்குள் 
காலடி எடுத்து நனைக்கையில் 
மொத்த மழையையும்
தடுத்து நிறுத்துகிறது 
சிறிய எறும்பு 
புற்றின் வாயிலில்

3

அசுரர்கள் எப்படி அசுரர்கள் ஆனார்களோ 
அப்படியே 
தேவர்களும் தேவர்கள் ஆகிறார்கள் 
அனுபவம் கிளர்ந்து
அடிக்க அடிக்க அசுரனாகிக் கொண்டே இருக்கிறான் அசுரன் 
வலிக்க வலிக்க தேவனாகிக் கொண்டேயிருக்கிறான் தேவன்

4

நானொரு கைப்பிடியளவு சாம்பல் பேசுகிறேன் 
வாழ்க்கையென்பது தித்திக்க தித்திக்க தேன் .
நானொரு துளி தேன் பேசுகிறேன் 
கைப்பிடியளவு சாம்பலின்
வயிற்றுக்குள் 
எவ்வளவு ருசி

5

கடைசியாகத் திரும்பிய பல்லியிடம் 
நான் கேட்டேன் 
இப்போது நீங்கள் எடுத்துக் கொண்ட ஈசல்களையெல்லாம் 
எவ்வளவு நாட்களாக வைத்துச் சாப்பிடுவீர்கள் 
வயிற்றுக்குள் ?

அடுத்த முறை இவர்கள் 
வருவது வரைக்கும் 
பதில் சொல்லிற்று 
பல்லி 
அவ்வளவு பசிப்பதில்லை 
பசி

6

விவாதம் தானே 
இப்படியும் வாதாடலாம் 
அப்படியும் வாதாடலாம் 
மத்தியிலும் வாதாடலாம் 
உங்கள் 
வசதியைப் பொறுத்து

மற்றபடி 
அதில் ஒன்றும் இல்லை

7

முரண்பட்டுக் கொண்டே 
இருப்பவன்
கூரிய கத்தியால் 
தன்னை அறுக்கத் தொடங்குகிறான் 
கத்திக்கு அவனை அறுப்பது 
பிடித்துப் போகிறது 
இப்படி மொத்த உடலையும் 
யார் தான் ஈர ஈரமாகத் 
தின்னத் தருவார்கள் தானமாக 
என

8

தன்னை எளிமையாக்கிக் கொண்டிருப்பவனிடம் 
முளைக்கக் கீறி 
எத்தனிக்கின்றன தானியங்கள் 
கடுமையாக்கிக் கொண்டிருப்பவனிடம் 
கணந்தோறும் 
இறக்கின்றன பறவைகள்

9

எடுத்துக் கொடுக்குந்தோறும் 
எதுவுமே குறைவதில்லை 
பரிமாறப்படாதவிடத்தே 
பதுங்கி நிற்கிறது 
விஷம்

10

எனது துயரத்தைப் பாருங்கள் 
என்று பொதுவில் 
தனது புண்ணை எடுத்து காண்பிப்பவளின் 
தோளில் இரண்டு விதவையர்
ஏறி அமர்ந்து கொள்கிறார்கள் 
அவளோ பாவம் 
ஆசையின் தேவதைகள் என 
அவர்களை 
நினைத்து விடுகிறாள்

foto - rishi nanthan

எவ்வாறு இன்றைய சிந்தனை முறை உருவாகி வந்தது ?

எவ்வாறு இன்றைய சிந்தனை முறை உருவாகி வந்தது ?
திருநெல்வேலியில் ஜெயமோகன் ஆற்றிய உரை மிகச் சிறந்த உரை.சு.ராவின் மொழியில் சொன்னால் ஆகச் சிறந்த உரை எனலாம்.எளிமையான வடிவத்தின் பால் அமைந்திருந்த அந்த உரை ஏராளம் கிளை வாயில்களை கொண்டு அமைந்திருந்தது.அதிலிருந்து கிளைத்து எந்த பக்கம் வேண்டுமானாலும் திரும்பலாம்.திரும்பும் ஒவ்வொரு திசைகளிலும் கண்டடைய பல விஷயங்கள் உண்டு. பன்முகத்தன்மையை தன் முழுமையில் நிறைத்திருந்த உரை அது.நவீனத்தின் குறுகிய சந்தில் இருந்து விடுபட்டு வெகுதூரம் பயணித்த உரை.பெரும் தரிசனம் என்றால் அதில் பிழையில்லை.இரண்டு மணிநேரம் அந்த உரையை கேட்டவர்கள் இருபது வருடங்கள் செலவு செய்தாலும் அடைய முடியாத தரிசனத்தைப் பெற்றிருப்பார்கள் .இதனை ஒரு அடிப்படை தரிசனம் என்பேன்.இதனை உணரும் ,காணும் தன்மை பெறாதவர்களின் விமர்சனங்கள் ,எதிர்வினைகள் ,செயல்கள் அனைத்தையும் வீணானவை அல்லது பொறுப்படுத்த லாயக்கற்றவை என்று சொல்லி விடலாம்.
சு .ராவின் பெரும்பாலான உரைகளை கேட்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன்.கச்சிதத்தன்மையோடு , தான் கொண்ட பொருளில் விலகாத தன்மையுடன்; அவருடைய கட்டுரைகளுக்கு இணையாக நிற்கும் உரைகள் அவை.அது போல நாடகத்துறை பேராசிரியர் ராமானுஜம் ,பாதல் சர்க்கார் ஆகியோருடைய உரைகளும் கலை பற்றிய நவீன கண்ணோட்டங்கள் கொண்டவை.தெளிவானவை.நமது பார்வைகளை விரிவுபடுத்தக் கூடியவை.அவ்வுரைகள் எல்லாம் என்னை மிகவும் கவர்ந்திழுத்திருக்கின்றன.ஆனால் நான் இதுவரையில் கேட்ட உரைகளிலேயே கேட்டு வியப்படைந்த உரை ;திருநெல்வேலியில் ஜெயமோகன் ஆற்றிய உரை .சற்றும் மிகையாக நான் இதனைச் சொல்லவில்லை.இரண்டு மணிநேர உரைமூலமாக, தான் கண்ட தரிசனங்களை ஒருவர் இவ்வளவு கச்சிதமாக பிசிறின்றி முன்வைக்க முடியுமா ? என வியந்து போயிருந்தேன்.அவருடைய உரைகளையும் ஏற்கனவே கேட்டிருக்கிறேன்.உள்ளடக்கத்திற்கு ஏற்ற வடிவ ஒழுங்கு அவருடைய உரைகளில் எப்போதுமே இருக்கும்.இதுவரை அவர் ஆற்றிய உரைகளிலும் இது தலை சிறந்த உரை என்பதே என்னுடைய எண்ணம்.
இருநூறு வருட பழைமையான வீடு பற்றிய உருவகத்திலிருந்து அவர் தன்னுடைய உரையைத் தொடங்கினார்.இருநூறு வருட பழைய வீட்டில் வசிப்பவர் ,அதற்கு வெளியில் வாழும் தகுதியை இழந்தவராகவும் இருக்கலாம்.ஏனெனில் வீடு என்பது ஒரு சிந்தனையின் வடிவமைப்பு கொண்டது.ஒவ்வொரு வீட்டிலும் ஒருவித சிந்தனை புழங்குகிறது.பின் வந்த ஐரோப்பிய வீடுகள் வேறு விதமான சிந்தனையுடன் வருகின்றன.சமையல் அறை கூடத்திற்கு அருகில் வருகிறது.பழைய வீட்டில்,அது வீட்டின் முன்பக்கத்திலிருந்து வெகுதூரத்தில் கொல்லையில் வைக்கப்பட்டிருந்தது.பின்பக்கம் சந்தடியென்றால் முன்பக்கம் ஆணதிகாரம் .சந்தடியின்மை.தேநீர் விருந்தினர்களுக்குத் தருகிற பெண்கள் கூடத்திற்குப் பின்னால் அமைந்த கதவுகளின் பின்னிருந்து கைகளை நீட்டுகிற பழைய வீடுகள்.இவையெல்லாம் அவருடைய உரையில் இருந்தவை.எவ்வளவு புதியவராக இருந்தாலும் ஒருவரை பழைய வீட்டில் சில காலம் அடைத்து வைப்போமெனில் அவர் அப்படியே அந்த காலத்திற்குரியவராக மெல்ல மெல்ல முரண்டு பிடித்து பின்னர் மாறிவிடுவார் என என்னால் சொல்லி விட முடியும் .இருநூறு வருட பழைமையான வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் போது நூறு நூறு ஆண்டுகளாக பின்னகர்ந்து செல்வது போலிருந்தது என்றார் உரையில் ஜெயமோகன்.
அந்த இருநூறு வருட பழைமையான வீடு மூவாயிரம் ஆண்டுகள் திரண்டு நம்மிடம் வந்து சேர்ந்தது.ஒரு உயிருள்ள ஜீவனுக்கு ஒப்பான பரிணாமம் கொண்டது.இதனை மரபான நம்முடைய மனதின் உருவகமாக நம் முன் நிறுத்தினார் ஜெயமோகன் .அது நம்முடைய மனம் ஏற்றெடுத்திருக்கும் சாராம்சம்.அது நம்முள் இருக்கிறது.இருக்கும்.
இந்த வீட்டில் பல்வேறு உணரப்படாத பிரச்சனைகளும் இருந்தன.தனி மனிதனுக்கு இங்கே வேலையில்லை.இந்த வீடுகள் தனி மனிதனுக்குரியவையும் அல்ல.குழுக்களுக்குரியவை.கூட்டங்களுக்குரியவை.சாதிகளுக்குரியவை.ஐரோப்பிய வீடுகள் தனி மனிதனுக்குரிய முக்கியத்துடன் இங்கே வந்து சேருகின்றன.நமது கலாச்சாரத்தின் மேலாடை போல அவை முதலில் வந்து சேருகின்றன.இன்று தவிர்க்க முடியாத உலகளாவிய குளோபல் வீடுகளாக அவை நம்முடைய மன அடுக்கில் ஏறி அமர்ந்திருக்கின்றன.இவ்வாறாக வீட்டினை ஒரு உருவகமாக கொண்டு நகர்ந்த படைப்பூக்கம் மிகுந்த அந்த உரை பேசியது என்ன ? அவற்றை எப்படி தொகுத்துக் கொள்வது ?
1
இந்திய சிந்தனை மரபுகள் பெரிய மரபு சிறிய மரபு என பிரிக்க இயலாதவாறு ஒன்றுடன் ஒன்று கலந்தவை .சிறிய மரபுகள் பெரிய மரபுடனும் ,பெரிய மரபுகள் சிறு மரபுக்களுடனும் இருவழிப்பாதைகளால் கலந்தவை.ஐரோப்பிய கருத்தாக்கங்கள் ,இவற்றையே எனது மொழியில் நான் பல சமயங்களில் கிறிஸ்தவ கருத்தாக்கங்கள் என்கிறேன்.ஐரோப்பிய கருத்தாக்கங்கள் இவற்றை இருநிலை கருத்தாக்கங்களாகப் பிரித்து உள் முரண்பாட்டை ஏற்படுத்தி ஒன்றிற்கொன்று முரணானவை என்பது போல நிறுத்த முயல்கின்றன.
2
ஜைனம் .பவுத்தம் போன்ற பெரு மரபுகள் கூட இந்து பண்பாட்டிலும் அவற்றிலும் கலந்தே இருக்கின்றன.விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக புத்தர் அமைக்கப்பட்டுள்ள கோயில்களையும் ஜெயமோகன் தனது பேச்சில் குறிப்பிட்டார்.அது போல ஜைன கோயில்களில் உள்ள இந்து அடையாளங்கள் என்ன என்பதனையும் அவர் குறிப்பிட்டு பேசினார்.
3
மதங்களுக்கு அடிப்படையாக ஒரு தரிசனம் அமைந்திருப்பதும் பின்னர் அவை சடங்கியலாக உருமாற்றம் அடைந்து அன்றாட வழிபாட்டிற்குள் எவ்வண்ணம் பிரவேசிக்கிறது என்பதனை ஜெயமோகன் பேசிய விதம் வியப்பிற்குரியது.பௌத்தத்தின் மஹா தம்மம் எல்லா பிரபஞ்ச இயக்கத்திலும் ஒரேவிதமான ஒழுங்கு இருப்பதை ; அவ்வொழுங்கில் கோர்க்கப்பட்டிருப்பதை தரிசனமாக முன்வைத்தது. ஜெயமோகன் அதனை விவரித்த விதம் கவித்துவத்துடன் அமைந்திருந்தது.மழை கீழ் நோக்கி வருவதும் ,தீ மேல் நோக்கியெழுவதும் ஒரேவிதமான செயல்களே .அவை இரண்டுமே ஒரேவிதமான ஒழுங்கின் விளைவுகளே .நமது பார்வையில் இரண்டாக தெரிகின்றன.
4
ஐரோப்பிய சிந்தனைகளின் தாக்கம் குறிப்பாக தாராளவாதத்தின் தாக்கம் ; நம்மிடம் கொண்டு செலுத்தியுள்ள பங்களிப்புகள் என்ன என்ன ? அவற்றின் குறுகலான தன்மைகள் எப்படியேற்படுகின்றன ! அவற்றிற்கான காரணங்கள் என்ன ? இவற்றைப் பற்றி உரையில் நிறைய தெளிவுகள் இடம்பெற்று இருந்தன.
5
முடிவாக இங்கே ஒருங்கிணைக்கிற ஒரு தரப்பாரும் ,பிளவு படுத்துகிற ஒரு தரப்பாரும் தொடர்ந்து தொழிற்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.விவேகானந்தர் முதல் வள்ளலார்,நாராயண குரு வரையில் தாராளவாதத்தின் ஏற்கக் கூடிய கூறுகளை ஏற்றுக் கொண்டு ஒருங்கிணைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் .வரலாறு முழுதும் இவர்கள் சிந்தனை மரபில் தொடர்ந்து இருந்து வருகிறார்கள் பணியாற்றுகிறார்கள்.பா.ஜ .க இந்திய மரபுகளை ஒற்றைச் சட்டகத்திற்குள் அடைத்து அரசியல் அதிகாரமாக மாற்ற விளைகிறது.ஐரோப்பிய வாதத்தை நம்பி நடப்போரும் ,அதன் பயனாளிகளான மார்க்சியர்களும் இருமை நிலையை பண்பாட்டின் அனைத்து தளங்களிலும் ஏற்படுத்துவதன் மூலமாக அதிகாரத்தை பெற முயற்சிக்கிறார்கள்
###
உரையை நேரில் கேட்டவர்களுக்கு நான் இங்கே எழுதியிருப்பதிலும் அதிகமாக தெளிவு உண்டாகியிருக்கும்.இருபது வருடங்கள் செலவழித்து தீவிரமாகத் தேடி அடைய முடியாத தெளிவு.நேரமின்மை காரணமாக இவ்வுரையை பற்றி மிகவும் சுருக்கமாக என்னுடைய மனப்பதிவை இங்கே எழுதியிருக்கிறேன்.இந்த உரை பற்றி பேச பல்வேறு விஷயங்கள் உண்டு.
உரையை கேட்காதவர்கள் மீண்டும் பழைய குதிரைகளிலேயே ஏறி அமர்ந்து கேள்விகளையும் கேட்கக் கூடும்.அதனை பரிதாபமான ஒரு நிலை என்றே என்னால் சொல்ல முடியும்

அதற்காகத்தான் இத்தனை நடனமா ?விபத்திற்குப் பின்னர் ஓடுகிற கார்

ஊருக்குப் புறத்தே சாலையோரத்தில்
நீண்ட நாட்களாக நின்று கொண்டிருக்கிறது
விபத்தில் பழுதடைந்த கார்
சுற்றி செடிகொடிகள் முளைத்து ...
ஓட்டுனரின் ஜன்னல் வழியே பிரண்டைக் கொடி
தளிர் நீட்டி வெயில் பார்க்கிறது

பின்னிருக்கையில் பால அரசு
பாலாம்பிகை கோலம்

நீங்கள் தூரத்திலிருந்து பார்த்து விட்டு
கடந்து சென்று கொண்டேயிருக்கிறீர்கள்

காட்டுக்குள் நின்று கொண்டிருப்பது போல
நினைவுகள் மூடிக் காத்திருக்கிறது அது

நீங்கள் ஊர் பைத்தியம் என நினைத்து ஒருவனை
விரட்டியனுப்பினீர்களே
அவன்தான் இத்தனை தாவரங்களையும்
அழைத்துக் கொண்டு
தினமும் அந்த வண்டியை
விபத்திற்குப் பிறகு
ஓட்டிக் கொண்டிருக்கிறான்

பின்னிருக்கையிலிருந்து பயணம் செய்கிறார்கள்
விபத்தில் இறந்தவர்கள்

அதுவொன்றும் சும்மா நின்று கொண்டிருக்க
வில்லை
நினைப்பது போல

2

"பத்மா டீச்சர்"

எப்படி இங்கு வந்து சேர்ந்தார் ?
வீட்டிலிருந்து இந்த வெட்டவெளியை
வந்தடைய
எவ்வளவு தூர பிரயாணம்
தேவைப்பட்டிருக்கும் ?

வெளியூர் பேருந்து நிலையத்தின்
ஓரத்தில்
மாநகராட்சி குப்பைத் தொட்டி அருகில்
படுக்கை அமைத்திருக்கிறார்
நான்கைந்து சேலைகள் தலையணை
அருகில் தண்ணீர் பாட்டில்

காலையில் ஆங்கில வகுப்பு
வழக்கம் போல தொடங்குகிறது
"இப்பவுள்ள குட்டிகளுக்கு பாடத்தில்
கவனமே இல்லை
எப்படித்தான்
வர போகுதுகளோ "
அதே கணீரென்ற குரல்

குரல் தவிர்த்து பழைய அடையாளங்கள்
அத்தனையும்
கைவிட்டு போய்விட்டன
மதியத்தில் தனது பைரவரிடம்
எப்படி என் பின்மதிய
முற்றம்
எத்தனை பேருந்துகள்
ஓடுகின்றன பார்த்தாயா ?
என பெருமை பேசுகிறார்

மாலையில் வந்து இணைகிறார்
ராமன் குட்டி
பேருந்து நிலைய நாய்க்குட்டிகள்
அத்தனைக்கும்
தந்தை அவர்

மாராப்பை சீராக்கி
பாண்ட்ஸ் பௌடர் பூசிய
முகத்துடன்
"உமக்கு எப்போதுமே
சந்தேகம்தான்
நேற்று அதைச் சொன்னேனே செய்தீரா ?
அறிவு எப்போது உமக்கு வரும் ?
வாய்க்கு வந்தபடி தாக்கி
முரண்படுகிறார்
வயதை
வெல்ல முடியாத
பத்மா டீச்சர்
சிறுமி உள்ளத்திலிருந்து குதிக்க

தலைகுனிந்து ராமன் குட்டி இத்தனை வயதில்
எப்போதாவது நிம்மதியாக இருக்க விட்டிருக்காயா ?
எனக் கேட்டுத் தேம்பி தேம்பி
அழுது கொண்டிருக்கிறார்
ஒவ்வொரு நாளின் மாலையிலும்

இருவரும் கணவன் மனைவியாக இருப்பார்களோ ?
என கேட்கிறான்
உடன் வந்த நண்பன் .
அப்படியில்லையாயினும்
அப்படித்தானே இருக்கவேண்டும் ?
என பதில் கூறி

நான்

மாயை விட்டகன்று
வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன்

3

கழுத்தில் புழுக்கள் நெளியும்
பெரிய புண்ணுடன்
சாவை எடுத்துக் கொண்டு
ஒரு நாய்
இந்த சந்தியில்
வளைய வளைய வருகிறது
நெருங்கி வரும் வாகனங்கள்
மோதாமல்
வழிவிட்டு
ஒதுங்கிச் செல்கின்றன
அது வளைய வருகிறது தலையை
கவிழ்த்திய வண்ணம்
தலையை மேலும் கீழுமாக அசைக்கிறது
எல்லோருடைய நினைவுகளிலும்
அது இருளை நிரப்புகிறது
மொத்த வலியையும்
அது முச்சந்திக்குக் கடத்துகிறது

அது வருவதற்கு முன்பிருந்த சந்தி
வரும் போது இருக்கும் சந்தி
சென்ற பின் உதிக்கும் அந்தி
என சந்தி
பலவாறு ஆயிற்று

மறுநாளில் அந்த நாய் அங்கிருக்குமோ
என நினைத்து சந்தியைக் கடக்கையில்
எனது தேகமெங்கும் வெண் புழுக்கள்
ஊர்வது போலும் பிரேமை

அந்த நாய் அப்போது அங்கில்லை
அது
எனக்குள்ளிருந்தது
புழுக்கள் நெளிய

எங்கே இறக்கி வைப்பதென்று
இன்னும்
விளங்கவில்லை

4

உங்கள் மனக்கோளாறுகளை நீங்களே
வைத்துக் கொள்ளுங்கள்
அவை அனைத்தும் உங்களுக்குரியவை

அவற்றிற்குள்ளாகத்தான்
புதிதாய்ப் பிறந்த குழந்தையின்
பாத கமலத்தில்
வைப்பதற்கான
ஒரு மலரும் இருக்கிறது

எடுத்து பாத கமலத்தில்
வைத்துப் பாருங்கள்
மனக்கோளாறுக்கு ஒரு வாய்ப்பு
மணம்
வீசுதற்கு

எல்லா மலர்களும்
உங்களுக்கு ஒரு வாய்ப்பை
கொண்டிருக்கின்றன
அது உங்களில் மலர்வதற்கானதொரு
வாய்ப்பை

வாய்ப்பு தரப்படவில்லையெனில்
அவை நோவதில்லை
மறுபடியும் புத்துணர்ச்சியுடன்
அடுத்த வாய்ப்புடன்
வந்து நிற்கின்றன

பிரச்சனை
நீங்கள் எப்போது பாத கமலத்தில்
மலரைக் கொண்டு சேர்க்கப் போகிறீர்கள்
என்பதே

5

சந்தையில் வந்து சத்தமிட்டு
பின்னர் திரும்புவது அங்கு தான்

படுக்கையிலேறி புணர்ந்து விட்டு
திரும்புவதும் அங்கு தான்

ஊருக்குள் நுழைந்து சண்டையிட்டு
ஒதுங்கிக் கொள்வதும் அங்கு தான்

பேருந்தேறி யாத்திரை முடித்து
வந்து சேருவதும் அங்கேயே தான்

நாழிக்கிணற்றின் ஆழம்
அங்கே நினைப்பது போல
விஷ ஜந்துகள் ஏதுமில்லை
என்னைத் தவிர

எனக்குள் அது இருக்கிறது
அதற்குள்
நான் இருக்கிறேன்

தாமரை பூ இதழ்கள் விரித்து
அங்கே படுத்துக் கொள்வேன்

சட்டைகள் அணிந்து வெளியில்
பொதுவில் பேசிக் கொண்டிருப்பதெல்லாம்
நடிப்பு
பெரு நடிப்பு
தேர்வீதித் திருவிழா
வெற்றலங்காரம்

6

நீ கேப்டனாக இல்லாதவிடத்தே
கேப்டன் போலும் பாவனை செய்தால்
போலிச் சிப்பாய்களிடம்
மாட்டிச் சரிவாய்
சிப்பாய்களுக்கெல்லாம் தீனி நீ
அவை உனக்கு கொள்ளி வைத்து மீளும்

நீ தளபதியாயிருக்குமிடத்தே
தீனி போட மறுத்தால்
அரண்மனை உன்னை வெளியேறச் சொல்லும்
சிப்பாய்கள் உன்னைச் சீயென ...
நகைக்கும்

நீ சில இடங்களில் கேப்டன்
சில இடங்களில் சிப்பாய்

முந்தாதே

முந்தினால் நீ தளபதியாயிருந்தாலும்
சிப்பாய்கள் கூட்டத்தில்
சேர்த்துவிடுவார்கள்
நீ அனைத்து சிப்பாய்களுக்கும்
குண்டி கழுவ
நேர்ந்து விடும்

சிப்பாயா
தளபதியா
கண்டுபிடி
சிப்பாயினிடத்தே சிப்பாயாக
தளபதியினிடத்தே தளபதியாக

7

கயிறென்று தெளிந்த பாம்பு
திரிந்து தோன்றும்
நெடுஞ்சாலை
மாயை தெளிவதற்குள்
அசந்தர்ப்பத்தில்
கடக்கும் நாய்க்குட்டி மீது
ஏறி இறங்குகிறது
வாகனம்
தூய அன்பு வெதுவெதுப்பில் இரத்தம் கசிய

எப்படியேனும் இதனைத் தவிர்த்திருக்க முடியுமா
என மனம் கொந்தளிக்கையில்
உடன் வந்த நண்பன்
வேறொரு பேச்சைத் தொடங்குகிறான்
நானும் வேறொரு பேச்சைத் தொடங்குகிறேன்
கொந்தளிப்பு விலகிற்று
விலக எத்தனித்தே
வேறொரு பேச்சு உருவாயிற்று

ஏறியிறங்கிய
நாய்க்குட்டிக்கருகில்
ஏறி இறங்கிய மனம் மட்டும்
அமர்ந்திருக்கிறது
வெகுநேரமாக
தூய அன்பென்ற
துயருடன்

8

நெடுஞ்சாலையின் இந்த பக்கத்திலிருந்து அந்தப் பக்கமாக
ஆயிரங்கால் அட்டைப் பூச்சி
கடந்து செல்கிறது

அதற்கு அது
யுக யாத்திரை

சீறிப் பாய்ந்து நெருங்கி
அகலும்
அதிவிரைவு டிப்பர் லாரிகள்
ஓம்னி பேருந்துகள்
சரக் என அணிப்பிள்ளைகளை
அடித்து நகரும்
மகிழ்வுந்துகள்
சுனாமி எச்சரிக்கை எதும் விடப்படாமலேயே
தனது யுகப்பயணத்தில் இருக்கிறது
அட்டைப் புழு

மலை சரிந்து விழுவது போலும்
தலைக்கருகில் கடக்கும்
நேஷனல் பெர்மிட் லாரியின்
டயரில் ஒரு கணம் துடித்து
அந்தப் பக்கமாக சென்று
கொண்டிருக்கிறது
எந்த புகாருமின்றி

கடைசியில் இருசக்கரவாகனத்தில் வந்தவன்
கணநேரத்தில்
அட்டைப் புழுவைக் கண்டு திகைத்து
வளைந்து நெளிந்து
பிரேக் போட்டு நிறுத்துகிறான்
இருவரும்
நேருக்கு நேராக
பார்த்துக் கொள்ளும்
அக்கணத்தில்
இருவருக்கும்
கூடுகிறது இறைக்கலவி

மீண்டும் அட்டைப் புழு
இந்தப் பக்கம் திரும்பி
யாத்திரையைத்
தொடங்குகிறது

இனிய
பனிக்காலைப் பொழுது

9

இறந்த நண்பனின் தொலைபேசி எண்ணை
என்ன செய்வது என்று
தெரியவில்லை
தேடுதலின் போது
நின்று பார்த்து கடந்து செல்கிறான்
ஏதோ சொல்ல வருகிறான் போல

பனையேறி முக்குப்பீறி பாட்டா
வீட்டுக்குச் செல்லும் வழியில்
குழந்தையாய் கடந்த
நாழிக்கிணறு
நீருக்குள் நடுங்கும் விழிகள்
அதனைக் கொண்டே
இன்று வரையில்
எல்லா கிணறுகளையும்
அளந்து கொண்டிருக்கிறேன்

எது உள்ளே எட்டிப் பார்த்து
விழுந்ததோ
எந்த விதையையும்
எடுத்து
வெளியே
போடமுடியவில்லை

அதனதன் திக்கில்
அவையவை வளருகின்றன

பால்யத்தில் முதன் முதலில்
நெளிந்து கைகாட்டி
கைப்பந்து மைதானத்திற்குள் நுழைந்தாளே ஒருத்தி
அவள் வளர்ந்து
பெரியவளாகிக் கொண்டேயிருக்கிறாள்
எனது
வயதையும் கடந்து

யார் வந்தாலும் போனாலும்
அவர்களில்
அவள் இருக்கிறாளோ
என்றே
பார்க்கிறேன்

இருந்தால் தேன்
இல்லையென்றால்
தேன் கூடு

10

நீ காயா பழமா என்னிடம் கேட்டால் எனக்குத் தெரியாது
எவ்வளவு சுற்றளவு
அறிய மாட்டேன்
விட்டம் தெரியாது
அறிந்தது கொஞ்சம்
தெரிந்தது சொற்பம்

உன்னைக் கேட்டுப் பார்
உனக்குத்தான்
துல்லியமாகத் தெரியும்
உன்னைப் பற்றி
நீ யார் என்பது பற்றி

நான் தெரிந்து வைத்திருப்பதெல்லாம்
நீ அணிந்து நடக்கும் ரெடிமேட்
ஆடைகளின்
வண்ணங்கள்தான்

உன்னிடமே கேள்
அவனுக்குதான் தெரியும்
உன்னைப் பற்றிய
அத்தனையும்

நீ கேட்டுப் பார்க்கவில்லை என்றால்
அவனும்
சொல்லித் தரமாட்டான்
கவனம்

11

சந்திப்பின் முதல் பார்வையிலேயே
நீ யார் என்பது எனக்கும்
நான் யார் என்பது உனக்கும்
நன்றாக
விளங்கிவிட்டது
நமது விரோதத்திற்கு
வேறு ஒரு காரணங்களும் இல்லை

முதல் சொல்லில்
உன்னைத் தந்து
என்னை எடுத்துக் கொண்டாய்
அந்த அன்பிற்கும்
வேறு ஒரு
காரணங்களும் இல்லை

12

அதற்காகத்தான் இத்தனை நடனமா ?

என் பேரில் ஒருவன் என்னென்னவோ
செய்து கொண்டிருக்கிறான் பாருங்கள்

அதுவெல்லாம் அவனாகச் செய்கிறானா
வேறு யாரேனும்
உள்ளிருந்து
செய்கிறார்களா ?
சில நேரம் சந்தேகமாயிருக்கிறது .

அப்படியானால்
இவனுக்கு
என்ன பொருள் ?
அவற்றால் இவனுக்கென்ன ?

மழைச்சாரல்
முருங்கையில் தூவி
முதலில் தன் கைவைத்தெடுத்து
முதிய இலைகளையெல்லாம்
கீழே
ஒவ்வொன்றாய்
போடுகிறது
மஞ்சள் ஒளியாக கீழிறங்குகின்றன
மஞ்சள் இலைகள் .
எடுத்துப் போட்டவற்றை
மீண்டும் சாரல் கை கொண்டெடுத்து
பூமியில்
மூடுகிறது

மழையின் வேலையா இது
இப்படி எத்தனை எத்தனை வேலைகள் மழைக்கு

அப்படியானால்
மழையின்
உண்மைப் பொருள்தான் என்ன ?
மழை தானா அது ?

காலையில் பூவிட்டுத் தளிர்க்கும்
முருங்கையின் பிரகாசம்
யார் விட்டுச் சென்ற பொருள் ?

13

விதவையான தாய்
தனது இரண்டு மகள்களுக்கும்
விதவைக் கணவனை
பங்கு வைத்துக் கொடுத்தாள்

பிறகும் பற்றாது என
ஒவ்வொரு கைச் சோறாக
வாரிவாரிக் கொடுத்தாள்

கசந்தெடுத்து உண்டு
பெரியவர்கள் ஆனார்கள்

அவர்களில் அப்பன்
சமாதியாகி
அழுத்தம் இருவர் முகத்திலும்
வாள் கொண்டுக் கீறி காய்ந்த வடுவாகத்
தெரிந்தான்

உயிர் மகனுக்குள் ஒடுங்கியது
மகனுக்குள்ளிருந்து
"இந்த சாப்பாட்டை சரியாகச் செய்யக் கூடாதா ?
எந்நேரமும் சொல்லணுமா ? "
என்று நித்தம் கிடந்து அரற்றுகிறான்
அவன்

"இங்கன எங்கேயோதான்
மனுசன் குரல் கேக்கு ..."
என தேடி கொண்டிருக்கிறாள்
அவள்

பத்து வருடமாச்சு காரியம் முடிந்து

14

மலையைச் சென்று பார்த்தேன்
மழை சுரப்பு மேனி நிறைய
சூரிய பதற்றத்தில்
வெளிர் பச்சை நிழல்கள்
அழகாகத்தான் இருக்கிறாய் ஆனால் என் உணர்வுக்கு இடம் எங்கிருக்கிறது
உன்னிடம் ?
என்று
கேட்டேன்
அருகிலுள்ள
சந்தனக்காட்டை கை காட்டியது மலை

அது மணக்கும்
அதனுடைய இடம்
என்னுடைத்து எங்கே?

நீட்டி முறுவலித்துத் திரும்பி
மார் சீராக்கி
நிமிர்ந்து பார்த்தது மலை
நான் என் தேவதையை அடையாளம் கண்டு
திரும்பிக் கொண்டிருக்கிறேன்

நீ மலையாயிருப்பதும் சிறப்பே
நீ தேவதையாதல் அதனினும்
சிறப்பு

15

உணர்வெழுச்சியில்லாமல் பெய்யுமா மழை ?
ஹோவென இரைந்து விழுவது ஒரு தளம்
பின்னர் சொட்டுச் சொட்டாக
வெதும்புதல் மற்றொரு தளம்
உணர் நரம்புகளின் அனைத்து பாதையையும்
நனைக்கும் தூறல்
அத்தனையும் வசப்படா சொற்கள்

சிறைக்குள்ளிருந்து
மழை பார்ப்பது போலிருக்கிறது
எனது உடலுக்குள்
நானிப்போது
வசிப்பது

இத்தனை சொற்களில் எத்தனை
சினையுறும் ?

கதவடைத்து கால்விரித்து
பயந்து நிற்கிறாள்
மழையில்
ஓர் அம்மன்

மனமெங்கும்
உணர்வுச் சகதி

16

காலத்தில் இல்லாதவள்

அலங்காரமிட்டுக் காத்திருக்கிறாள்
ஒருவரும் அழைக்கவில்லை
ஒருவரும் புன்னகைக்கவில்லை
ஒருவரும் காதலிக்கவில்லை

அவளிருப்பை ஒருவரும் அறியவே இல்லை

பின்னரும் அலங்கரிக்கிறாள்
கண்களில் இருபக்கமும் மையிட்டுக் கொம்பு வரைகிறாள்
உதட்டில் ஒரு ரத்தப் புள்ளி
யாரோவிட்ட முத்தம் என
தனக்குத் தானே பேசிக் கொள்கிறாள்

ஒருநாளில்
அலங்காரம் அப்படியே நிலைத்து நின்றது
இனி நீ செய்து கொள்ள வேண்டியதில்லை
அப்படியே இருக்குமென
நிலைக் கண்ணாடி அவளிடம்
பேசிற்று

முதலில் ஒரு தெய்வம்
தெய்வத்தின் பின்னே
நிழல் பேயின் ஸ்வரூபம்
தோன்ற

திகைத்து நோக்கியவளின்
முகமெங்கும்
தேய்த்து அகற்ற இயலாத
சாமிக் களிம்பு

17

நீள் நெடுங்காலமாக உன்னை நான் அறிவேன்
உனதிருப்பின் இடம் நோக்கியிருக்கிறது எனது திசை
நீ பார்க்கும் போது
மழை நின்றபின்
ஊறும் ஊற்றாகிறது உள்ளுடல்
உடல் ஊற்றாகும் போது
நீதான் வந்திருக்கிறாய் என்பது
அவ்வளவு
வெளிப்படையாகத் தெரிந்து விடுகிறது
அதுவே நீ ஏற்படுத்தும் சமிக்சை
பிறரால் ஏற்படுத்த ஒண்ணா அடையாளம்

வேறு எதனாலும் ஊற மறுக்கும் இவ்வுடல்
ஊறிய நீரில் மிதக்க தொடங்குகிறது

நீயும் எவ்வளவு பெயர்களில்
அழைக்கப்பட்டிருக்கிறாய் ?
நானும் எவ்வளவு பேர்களாய்
இருந்திருக்கிறேன் ?

நாம் எப்போதும் ஊற்றின் இரண்டு கரைகளில்
நின்று கொண்டிருக்கிறோம்
மூடிக் கொள்வதும் திறப்பதுவும் என
சதா முனகி காத்திருக்கிறது
இறவா மிருகம்

தன்வந்திரி பகவான் ஜெயந்தி நாள் இன்று

தன்வந்திரி பகவான் ஜெயந்தி நாள் இன்று

" ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வாமய விநாசனாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணுவே நம "

தீராத நோய்களில் உழல்பவர்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்.குணமாகும்.மந்திரங்களை எப்படி முறையோடு உச்சரிக்க வேண்டுமோ அப்படி,விரதம் மேற்கொண்டு உச்சரித்தால் பலன் அதிகம்.சில விஷயங்களை காரணம் கேட்காமல் கடைப்பிடித்து பலன் தெரிந்து கொள்வதே நல்லது.கடைபிடிப்போருக்கு காரணங்கள் கொஞ்சம்
கொஞ்சமாக ;  மெல்ல மெல்ல விளங்கி விடும்.

தன்வந்திரியை மறந்தால் தன்வந்திரியும் உங்களை மறந்து விடுவார்.தன்வந்திரி என்றில்லை யாரானாலும் இப்படித்தான்.நினைக்க மறப்பதை அடையவும் முடியாது.தன்வந்திரி மஹா விஷ்ணுவின் அவதாரம்.அவருடைய அம்சம்.எதுவெல்லாம் உயரியதாக உள்ளதோ,அருங்காரியமாக அமைகிறதோ அவையெல்லாமே மஹா விஷ்ணுவின் அம்சங்களே.நம்மிடமும் மஹா விஷ்ணுவின் அம்சம் உண்டு.சதானந்தமே அது.சதானந்தத்தில் இருந்து கீழிறங்கும் போது நோய்கள் மிக எளிதில் தாக்குகின்றன.

எவர் ஒருவருக்கும் வேண்டாத நோய்கள் ஏற்படுவதில்லை.நம்முடைய வேண்டுதல்கள் ஒவ்வொன்றிலும் தீராத பல நோய்களும் அடங்கியிருக்கின்றன.எனக்கு பாயாசம் மட்டும் போதும் அதனோடு ஒட்டியிருக்கும் நோய் வேண்டாம் என்றால் நடவாது.அழுத்தம் கொண்ட பெண்களை உறவிற்கு தேர்வு செய்வேன்,அதன் எதிர்விளைவுகள் வேண்டாம் என்றால் நடவாது.அழுத்தம் நிறைந்த பெண் எளிது என்று எண்ணி தேர்வு செய்வீர்களேயானால் அவள் உங்கள் மகிழ்ச்சி அத்தனையையும் சுரண்டி அவளுடைய நோய் மண்டலத்திற்கு உங்களை தரையிறக்கி விடுவாள்.

ஒரு காரியம் எளிமையானதா இல்லை கடுமையானதா என்பது புறத் தோற்றத்திலோ , அணுக எளிமையானது என்பதிலோ நிச்சயமாக இல்லை.அதன் எதிர்மறை விளைவுகளிலேயே அதன் தன்மை அடங்கி இருக்கிறது.வேண்டுதல் ஒவ்வொன்றுமே பிசாசினையும் நிரப்பி வைத்திருக்கிறது.

"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல" என்று நம்முடைய மூத்த புலவன் ஒருவன் சொல்லியிருக்கிறான் அதனை நீங்கள் இரண்டு விதமாக வாசிக்கலாம்.வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன் இறைவன் ;அவன் காலடியில் சேர்ந்தார்க்குத் துன்பமில்லை.எனவும் வாசிக்கலாம் இது ஒரு சாதாரண வாசிப்பு.வேண்டும் வேண்டாம் என்கிற இரு நிலைகளும் இல்லாமல் அவனடி சேர்ந்தார்க்கு ஒரு துன்பமும் இல்லை என்றும் வாசிக்கலாம்.இந்த இரண்டாவது வாசிப்பு மிகவும் கடுமை நிறைந்த தவம்.

பல்வேறு நோய்கள் நாம் வருத்தி வேண்டி பெற்றுக் கொள்ளுவதே ஆகும்.ஒருவர் தன்னை மிகவும் சிக்கலானவர் என கற்பனை செய்து கொண்டே இருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள் ; சிக்கலானவை சார்ந்த நோய்கள் அனைத்தும் இவரை நோக்கி வேகமெடுத்து வந்து கொண்டிருக்கும்.நமக்கு ஒரு உடல் கிடைத்து விட்டது என்று வேகமெடுத்து இவரை நோக்கி விரைவுப் பயணம் மேற்கொள்ளும்.

தன்னிரக்கம் கொண்டு நடப்போரை கொள்வதற்கு கொல்வதற்கு ஏராளம் வியாதிகள் இருக்கின்றன.சுய நரகத்தை ஸ்தாபிப்பவர்கள் அவர்கள்.அதில் பிரச்சனை என்னவென்றால் அவர்கள் தங்களை சார்ந்தவர்களுக்கும் சுய நரகத்தை ஸ்தாபித்து விடுகிறார்கள் என்பதுதான்.இவர்கள் பல நோய்களின் கொள்முதல்காரர்கள்.

நோய் கொண்டிருப்பதில் உங்களுக்கு நிறைய பெருமிதங்கள் இருக்குமேயாயின் சந்தேகமே வேண்டாம் நீங்கள் கேட்கும் நோய்கள் அத்தனையும் உங்களுக்கு கிடைத்து விடும்.ஒரு மோட்டார் சைக்கிள் கேட்டால் எப்படி அது கிடைக்கிறதோ அப்படித்தான் நீங்கள் பைபோலார் டிஸ்ஆடர் கேட்டாலும் கிடைப்பது.ஒவ்வொரு நோயும் ஒவ்வொரு மனோபாவம்.விஷ்ணுவுக்கு எதிரான மனோபாவம்.

இவையெல்லாம் இருக்கட்டும் .இவை இருக்கும் . இருந்தாலும் இறைவுணர்வால் இது குறையவும் கூடும்.ஆனால் இறைவுணர்விற்கே எதிரான சில பொது குணங்கள் இருக்கின்றன.நீங்கள் எத்தனை சாமிகளை கும்பிட்டாலும் இறையருள் கிடைக்காத பாப குணங்கள் இவை

பொறாமை ,நீதியுணர்வின்மை ,அவதூறு,கோள் மூட்டுதல் ,பழிவாங்குதல் இந்த ஐவகை குணங்களும் இறையருளிலிருந்து விலக்கி வைக்கின்றன. பிறரை கண்காணிப்பவர்களாக அன்பற்றவர்களாக உங்களை மாற்றுகின்றன.அனைத்து நோய்களையும் பரிசளிக்கின்றன.

பொறாமை என்பது பிறர் தங்களுடைய அருங்காரியங்களால் அல்லது தங்களுடைய உழைப்பால் அல்லது தங்களுக்கு உரியவற்றை செய்ததிலிலிருந்து பெற்ற பெருமைகள் ,புகழ் , செல்வங்கள் ,மேன்மைகள் ஆகியவற்றை செயலின்மையில் இருந்து அவதானித்து ; அவற்றை பெறவோ,அழிக்கவோ விளையும் மனோ எண்ணத்தைக் குறிப்பது...பொறாமை. ஒவ்வொரு உண்மையான செயலுக்குப் பின்னரும் நிறைவானதொரு பெருமை இருக்கிறது.செயலில் தொடர்பு இல்லாமல் பெருமையை மட்டும் கவரும் எண்ணமே அது.

அறியாமையிலிருந்து ,இப்படிச் செய்கிறேன்,இப்படியிருக்கிறேன் ,ஏன் இப்படியென்று விளங்கவில்லை என்று சொல்பவராக இருந்தால் அவருடைய பெயரே பாவி . நோய்களின் தோற்றுவாய் பாபம்

நீதியுணர்வின்மையும் ,அவதூறும் கொண்டவர்கள் பாவிகள்.நீதியுணர்வின்மை என்பது அதிகாரத்தின் பக்கமாக அல்லது தனக்கு சாதகமானது என கருதுகிற தரப்பில் நின்ற வண்ணம்,பிற தரப்பை அணுகுதலைக் குறிப்பது.அவதூறு என்பது நீதியின்மை பெற்றடுத்த குழந்தையை மடியில் எடுத்துக் போட்டு கொஞ்சுவது.

இந்த ஐவகை குணங்களிலும் மன்னிப்பே இல்லாதவை என்பது நீதியுணர்வின்மையும் , அவதூறும் ஆகும்.இறைவுணர்வால் ஏற்கவே இயலாத பாபங்கள் இவையிரண்டும்.சிலர் யோசிப்பார்கள் நாமும் கோவில் குளங்கள் அனைத்திற்கும் செல்கிறோம் ஒன்றும் நடைபெறுவதில்லை.ஆனால் அவனுக்கு கொடுக்கிறான்,இவனுக்கு வாரி வழங்குகிறான் என்றெல்லாம் சொல்வார்கள்.அடிப்படையில் இவ்விரு குணங்களையும் கொண்டிருப்பார்கள்.இந்த இரண்டு பாப குணங்களும் இல்லாமல் பிற எல்லாவித அசுத்தங்களையும் வைத்திருந்தாலும் கூட இறைவன் அவனை மன்னிப்பதற்கு தயாராகவே இருப்பான்.இருக்கிறான்.இவ்விரண்டிற்கும் மீட்சியே இல்லை

தன்வந்திரியை வணக்கம் செய்ய வேண்டும் எனில் உண்மையில் மனத்தின் கண் மாசிலாதவனாக இருந்தாலே போதும்.அவர் கடைந்தெடுத்த அமுது அத்தனையும் உங்களுக்கே சொந்தமாகும்.நன்று💖


DHANVANTRI

[ Thanjavur painting, guilded and gemset, Gouache on board, 15" X 18", 2012 ,படம் -artist   balaji  srinivasan சேகரிப்பிலிருந்து ...]

கவிஞன் பிறரில் மேன்மையானவன்

தன்னை மாறுதலுக்குட்படுத்திக் கொண்டிருக்கும்  கவிஞன் பிறரில் மேன்மையானவன்

தொடர்ந்து தன்னை மாறுதலுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கும் கவிஞனே பிறரில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்கிறான்.மேம்பட்டவனாகிறான்.தன்னுடைய மனதளமாகவே கவிதை அமைய பெற்ற கவிஞனுக்கு மட்டுமே இந்த பண்பு சாத்தியம்.பெரும்பாலும் எங்கு தொடங்குகிறார்களோ ,அங்கேயே சுற்றி வட்டமடித்துக் கொண்டிருப்பார்கள்.சிறந்த கவிக்கு பண்பு இதுவல்ல.அவனுடைய சில கவிதைகளை படித்து விட்டு அவனுடைய விதியைப் பற்றி தீர்மானம் செய்து விடாத உயரிய பண்பை  அவன் கொண்டிருப்பான்.அவன் வாழ்வின் மீது இயற்றுகிற சலனங்கள் தொடர்ந்து மாறுதலைடைந்து கொண்டே இருக்க வல்லவை.அத்தகைய கவிகளில் ஒருவர் தேவதச்சன்

கல்குதிரை இதழில் வெளிவந்திருக்கும் தேவதச்சனின் கவிதைகள் அவர் ஏற்கனவே தன்னை நிறுவிய விதத்திலிருந்து வேறுவிதமாக அமைந்திருக்கின்றன.சரஸ்வதியை மையமாகக் கொண்டு நெடுங்கவிதையின் தோற்றத்திலிருக்கும் இந்த கவிதைகள் தனித்தனியாகவும் சிறப்புடன் உள்ளன.

தேவதச்சன் கவிதைகள் சிறப்பு தருணங்களையும் கொண்டிருப்பவையே ஆனாலும் கூட அதற்காக காத்திருப்பவை என்று சொல்வதற்கில்லை.பல சந்தர்ப்பங்களில் அவை வெறுமனே ஒரு பேச்சை உருவாக்க முயல்பவை .அந்த பேச்சை வாசகனின் அனுபவத்தின் பல உண்மைகளோடு மோதச் செய்கிறார் தேவதச்சன். எந்த உண்மையையும் தாழ்வுபடுத்தி விடாமல் அவர் கவிதைகளில் மேற்கொள்ளும் இந்த மோதல் அவர் கவிதைகளில் மேலான நிலை நோக்கி செல்லக் கூடியவை.இதனை அவருடைய சிறப்பம்சமாகக் கருதலாம்.

கல்குதிரை இதழில் வெளிவந்திருக்கும் அவருடைய இந்த கவிதை பேச்சு போலவே, மிகவும் சாதாரணமான பேச்சாகத் தொடங்கி இருவேறு  உண்மைகளுடன் மோதலை நிகழ்த்தி அர்த்த பரிமாணத்தை அதிகப்படுத்தி நிற்கிறது .இது வெறும் சாதாரணமான பேச்சுதான்.அதனை கவிதையின் இடத்திற்கு நுட்பமாக நகர்த்துகிறார் தேவதச்சன்.

"தெருமுனை
வலிமையானவர்களால் ஆனது
வலிமையில்லாதவர்களாலும் ஆனது
யாரையோ துரத்தியபடி வந்த ஒருவன்
கம்பீரமாய் பெஞ்சில் அமர்ந்து
தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறான்
வேறு யாராலோ துரத்தப்படும் ஓரமாய்
ஒதுங்கியபடி
அவசரமாய் தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறான்
தேநீர்க் கடைக்காரனின்
கல்லாப் பெட்டி மேல்
கடிகாரத்திற்கு அருகில்
தொங்கும் சரஸ்வதியே
தீயை மீறும் புகையினால்
உன் வெண்ணிற ஆடை
கருமையாகி விட்டது
உன் வெள்ளை அன்னம்
கருப்பு நிறமாகித் திகைக்கிறது
புகை மூடும் உன் நான்கு கைகளால்
உன்னைத்
துடைத்துக் கொள்ள முடியுமா
சரஸ்வதி  "

இந்த கவிதை  "தெருமுனை வலிமையானவர்களால் ஆனது" என்கிற பேச்சில் தொடங்குகிறது.அடுத்து வருகிற வரியால் முதல் வரியின் இருப்பு  மூடப்பட்டு விடுகிறது.இரண்டு வேறு வேறு உண்மைகளின் நிழல் படிந்து நிற்கும் கரிப்படிந்த சரஸ்வதி மூன்றாவதாக நிகர் உண்மையாக வந்து தோன்றுகிறாள்.கரிப்படிந்த சரஸ்வதி என்கிற பதம் நம்மைத் தீண்டியதும் நம்மிடம் ஒரு பெண்ணின் சாயையை நாம் அடைகிறோம்.அதிலிருந்து மேல் வரிகளுக்கு நகரத் தொடங்கி பல்வேறு உண்மைகளின் மாறுபட்ட புதிர் உலகம் அனுபவமாகிறது.

கவிஞன் கவிதையின் தன்மையை தொடர்ந்து மாற்றிக் கொண்டிருக்கும் போது; வாசகனுக்கு வாழ்வின் தளத்தை எவ்வாறு தொடந்து மாற்றி புதுமையடைவது என்னும் பேரிலக்கு வசமாகிறது

தேவதச்சன்  அடுத்த காலகட்டத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் ஓசை இந்த கவிதைகளில் கேட்கிறது

அந்த குழந்தைக்கு வயது ஐம்பது

கல்குதிரை இதழில் வெளிவந்துள்ள எனது கவிதைகள்

அந்த குழந்தைக்கு வயது ஐம்பது
( 15  கவிதைகளின் தொகுப்பு ) - லக்ஷ்மி மணிவண்ணன்

1

அவளிடம் அம்மனைப் போல
இருக்கிறாய் என்று சொன்னபோது உண்மையாகவே
அம்மனைப் போலவே இருந்தாள்
குனிந்து கீழே பார்த்தவள்
கீழே கிடந்த அவள் அம்மனை எடுத்து
இடுப்பில் வைத்துக் கொண்டு
நகர்ந்தாள்

எம்மாடி எப்போதடி எடுத்துக் கொள்வாய்
என்றிருந்தேன்
என்றாள்
அவள் எடுத்து சூடிக் கொண்ட
அம்மன்

2

நேற்றைய காலையில் என தொடங்கினாள்
அது ஏன் இன்றைய காலையில் வந்து அமர்ந்திருக்கிறது என்றேன்
வேறொன்றுமில்லை
இன்றைய காலையை
நேற்றைக்குள் தள்ளி விட முடியுமா
என முயல்கிறேன் என்கிறாள்
இரண்டு காலைகளை வைத்திருக்கும் கனம்
இருவரிடமும்
மண்டியிட்டு
அமர்ந்து கொள்கிறது
பொழுதிற்கு
ஒரு பொழுது என்பதெல்லாம்
ஒரு அர்த்தமாகுமா என்ன ?

3

வேகமாக வந்து மோதிய
பட்டாம்பூச்சியை
அடிக்க ஓங்கிய கையைத் தடுத்து
மெல்ல இறக்கினேன்
மார்பில் சிறிது நேரம்
இருந்த அது பின் பறந்து சென்றது
மார்பில் தேன் ஊறி ஒழுகுவதை
இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது
ஓங்கிய கை

காம்பை நீட்டி சுவைக்கத் தருகிறேன்
தித்திக்கின்றன
விரல்கள்

4

முதலில் அந்த யுவதி
சுவருக்கு வெளியில் வந்து
பிச்சிப் பூக்களை ஒவ்வொன்றாக பறித்துக் கொண்டிருந்தவள்
அப்போது எல்லாமே
சரியாகவே இருந்தன

திடீரென சுவரின் உள்பக்கம் நகர்ந்து
பிச்சிகளுக்கு மத்தியில்
பறிக்கத் தொடங்கினாள்

தோளுக்கு கீழே முழுதும் பிச்சிக்காடு

அதன் பின்
எல்லாவற்றையும் குழப்பி விட்டது
இந்த அந்தி.

அவளோ
இப்போது அகாலத்தில் நிற்கிறாள்
நானோ
தரையில்
அகப்பட்டுக் கொண்டேன்

இப்போது யார் அவள்
மற்றும் எதன் சாயை ?

5

பறவையை ஏன் வணங்குகிறீர்கள்
எனக் கேட்டார் ஒருவர்
பறவை எனக்கு பகவான்

சரி
தீயை ?
சூக்கும சரீரம்

நீர் ?
மாமிசமானது
பஞ்சபூதங்கள்

விலங்குகளை பூஜிக்கிறீர்கள் ?
அவை ஊர்ந்து நகரும்
எண்ணங்கள்

கல்லை ஏன் வணங்குகிறீர்கள் ?
பகவான்
பிறப்பற்று போய்
முடியும்
இடம்

எல்லாம் இருக்கட்டும்
அப்படியானால் என்னை எதற்காக
வணங்குகிறீர்கள் ?
நீங்கள் தானே அன்பே
பகவானின்
பரிசோதனைக்
கூடம் ?

6

குரு துறந்து
தந்தையை பார்த்தால்
அவர்
வெறும்
அதிகாரி
ஆவார்

புனிதமின்றி புணர்வீராயின்
புணர்ச்சி முடிவு
பீக்குழியாகும்

ஒன்பது துளையிலும்
பீளை

அன்பை அகற்றி
உலகை கண்டால்
காண்பதெல்லாம் போர்களமாகும்
முகமெங்கும்
ஆயுத பிரயோகம்
காணக் கிடைக்கும்

உள்ளும் புறமும்
ஒரே
தளம்

எதை எடுத்துக் கொள்கிறாயோ
அப்படி அப்படி

எந்த அகப்பையில்
வாரியெடுத்தாலும் என்ன ?
வருவதெல்லாம்
உனது
மாமிசம்

ஈர்ப்பு அகன்று போகுமிடத்தே
தாயொரு
முதுமை
நோயாளி

எனக்கு அன்னை பகவதி பிரஜாபதி
பூப்பு ரசம்

உனக்கு சுதைச் சிற்பம்

7

எனக்குள் ஒரு கடவுள் இருக்கிறார்
மனம் அவரை மெல்ல
படிப்படியாக இறக்கி
கீழே தள்ளி
கதவை
சாத்திக் கொள்கிறது

மீண்டும் மெல்லத் தவழ்ந்து
மேலேறி வருகிறார்
கடவுள்
மீண்டும்
அவரை
வெளியேற்றி
அடைக்கிறது மனம்

இருவரையும்
ஒரேயுரலில்
கட்டிப் போட்டேன்
உரலை இழுத்து கொண்டு
ஓடுகிறது
உடல்
இரண்டாக
வளைந்து

8

அந்தக் குழந்தைக்கு இதுவரையில்
இரண்டு ஆப்ரேஷன்ஸ் நடந்திருக்கின்றன
ஒன்று மேஜர்
மற்றொன்று மைனர்

பிங்க் கலர் மாத்திரைகள் இப்போது தினமும் இரண்டு சாப்பிடவேண்டும்

வெள்ளை மாத்திரைகள் இரண்டால்
சர்க்கரை சமநிலையில் இருக்கிறது

தூக்கத்திற்கு சன் ரைஸ் கலர் மாத்திரை ஒன்று

பெருநகரின் ரயில் நிலையத்தின் மீதுதான்
எவ்வளவு வளைகின்ற இடுப்புகள் என ஏங்கும் அதற்கு
இப்போது
வயது ஜம்பது

9

பெருந்தொழிலில்
வெட்டி வீழ்த்தப்படுகிற ஒருவனின் தலை
தகாத புணர்ச்சியில் ஈடுபட்டு
நிலைகுலைந்தவனின்
கண்களால் பார்த்துக் கொண்டே
இறந்து கிடக்கிறது

போக்குவரத்துப் பாதைகள்
கொஞ்ச நேரம் அந்த கண்களைப்
பார்த்தவாறு
வளைந்து செல்கின்றன

10

கருணைக் குழந்தை
கடந்து போன
காலத்தை நினைவுபடுத்தி
தாத்தா என அழைக்கையில்
உள்ளிருக்கும் சிறுவன்
தடுமாறுகிறான்
"அவ்வளவு விரைவாகச் சென்றுவிட்டதா இந்த காலமென"
குழந்தை அவனை வெளியிலிருந்து கண்டு
தாத்தா என்கிறது
அவனோ உள்ளிலிருந்து அவனைக் கண்டு
தடுமாறுகிறான்

அங்கிள் என அழைக்கும்
பெண் குழந்தைகள்
ஏற்பட்ட காயத்தின்
அருமருந்து

பின்னர் அவனை சற்றே நேரம்
வெளியிலிருந்தே
பார்க்கத் தொடங்குகின்றன
அனைத்து காட்சிகளும்

11

கொட்டாரத்து அம்மன்
பகவதி
ஒதுக்குப்புற அரசமரத்தடியில்
வாசம்
ஐயப்பனும்
விநாயகரும்
காவல்

குறைவில்லா
கம்பீரம் கட்டு
அபூர்வ பக்தன்
பட்டரின் அபிராமி அவள்

தாய்
மூலத்தாய்

பன்னீரபிஷேகத்தில்
முந்தானை
விலகிய கணத்தில்
நித்திய யுவதி ஒருத்தி
முன் தோன்றி நிற்க
பிரார்த்தனை மறந்து
பரஸ்பரம் புன்னகைத்துக் கொண்டோம்

முந்தானையை சரி செய்து விடுவாளோ இவள்
என்னும்
பதற்றம் பற்றிக் கொண்டிருக்கையில்

நானுன் தாயென்று அவள் மிரட்ட
கண்கள் மூடி
நிறுத்திய பிரார்த்தனையை
மீண்டும் சொல்லிவிட்டுத்
திரும்பிவிட்டேன்

ஒரேயிடத்தில் இரண்டுபேராய்
இருப்பதை
நானின்றுதான் பார்த்தேன்

தாயென்றாலும் தனம்
வேறொன்றாகத்தான்
இருக்கிறது
பராபரமே

12

ஒரு கைதியை போலீஸ்கார்
விலங்கு பூட்டி அழைத்துச் செல்லும் போது
நானும் கைதிதானோ என சந்தேகமாயிருக்கிறது

ஒரு பிணத்தை ஊரார் அழைத்துச் செல்கையில்
நானும் பிணம்தானோ என சந்தேகமாயிருக்கிறது

கண்ணாடியில் யுவதி முகம் பார்க்கத் தொடங்கினால் போதும்
என்னை காதலிக்கத் தொடங்கிவிட்டாள்
என எடுத்துக் கொள்கிறேன்

போட்ட விதை சாரலில் துளிர்த்து முளைக்கிறதே
இனி
வசந்த காலம்
என
நினைத்துக் கொள்கிறேன்

வேறு எவ்வண்ணமாக
என்னால்
சிந்திக்க முடியும்
யோசித்துப் பாருங்கள் ?

13

பூவரச மரத்தடியில்
நிற்கையில்
எனது திருமேனியெங்கும் பூவரசின் காலம்

நெடுஞ்சாலையில் பயணிக்கையில்
தவறாக நினைக்காதீர்கள்
நெடுஞ்சாலையின் காலத்தில் செல்கிறேன்

ஆனால் பாருங்கள் எங்கே
சென்றாலும்
திருமேனியில் பூவரசு முளைப்பதை
எதுவுமே
செய்ய முடியவில்லை

14

மனம் கீழே கீழே கிடக்கிறது
என்ன செய்வீர்கள் ?

முதலில் ஒரு துண்டு இனிப்பு கொடுத்துப் பார்ப்பேன்

ம் ஹும் என்றால் மடியில் எடுத்தது வைத்து
கொஞ்சுவேன்

முடியவில்லையெனில்
குஞ்சாமணியை எடுத்து முத்துவேன்

வெற்றிடத்தில் பம்ப் பண்ணுவேன்

ஒன்றிலும் முடியவில்லை எனில்
என்ன செய்வீர்கள் ?

எத்தனை பௌடர் பூசினாலும்
அது இருக்குமிடத்தில் சரியாகத்தானே இருக்கிறது என்று
நானெழும்பி
கிளம்பிவிடுவேன்

நீங்களும் கிளம்பிப் பாருங்கள்
ஒருவேளை அது எழும்பி
உங்கள் பின்னால்
வரக் கூடும்

15

சின்ன ரயில் அது
இடமில்லையென
இறக்கி விட்டார்கள்
பல ஊர் பயணம் செய்து
சேர்ந்த இடத்தில்
நின்று கொண்டிருந்தேன்
நீ எப்படி இங்கேயென
கேட்கிறார்கள்

நீங்கள் ரயிலுக்கு உள்ளேயிருந்தபடி
வந்து சேர்ந்தீர்கள்
நான் வெளியே அமர்ந்தபடி
வந்து சேர்ந்தேன்

எனது பயணம்
அருமையோ அருமை
நீங்கள் பார்த்ததை மட்டுமே பார்த்தீர்கள்
நான் பார்க்காததையும் பார்த்தேன்


குடும்ப தெய்வங்கள், குல தெய்வங்கள், கிராம தெய்வங்கள் ?

குடும்ப தெய்வங்கள், குல தெய்வங்கள், கிராம தெய்வங்கள் ,காவல் தெய்வங்கள்மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குடும்பத்தை அளத்தங்கரை குடும்பம் என்பார்கள்.பொன்னார் குடும்பம் பெண் வழி உறவின் நிமித்தம் இங்கே வந்தவர்கள்.ராஜாக்கமங்கலம் உப்பளத்தை திருவிதாங்கூர் ராஜாக்கள் காலத்தில் உரிமையாளராக வைத்து நடத்தியவர்களின் குடும்பம் அது .பெரிய குடும்பம் .இன்றும் பெரிய குடும்பமே. எங்களுடைய குடும்பத்திற்கும் அவர்களுக்கும் உறவு உண்டு.அவர்களுடைய குடும்ப தெய்வத்தின் பெயர் மனோன்மணி .இன்று வரையில் அவர்கள் குடும்பத்தின் ரகசிய தெய்வமாக மனோன்மணி திகழ்கிறாள்.குடும்பத்தினர் எங்கெங்கோ பரந்து விரிந்து பரவியிருந்தாலும் ஆண்டின் எல்லா நாட்களிலும் மனோன்மணிக்கு விளக்கு போட வேண்டும்.ஒவ்வொரு நாளும் குடும்ப அங்கத்தினர் யாரேனும் ஒருவர் எங்கிருந்தாலும் வந்து செய்ய வேணும்.ஒவ்வொரு நாளுமென ஆண்டு முழுவதற்கும் யார்யார் செய்ய வேண்டும் என்பதனை அவர்கள் பகுத்து வைத்திருக்கிறார்கள்.தவறாமல் செய்து வருகிறார்கள்.
உங்கள் உயிருக்கும் உடமைக்கும் இந்த குடும்ப தெய்வங்களே அரண் .உடலுக்கோ உடமைக்கோ இடர்பாடு ஏற்படுகிறதெனில் மனோன்மணி முன்னின்று காப்பாள்.அவளை செய்ய விடாமல் தடுக்கும் சக்தி எந்த பேய்களானாலும் சரி நோய்களானாலும் சரி கிடையாது.இதுதான் அவளுடைய லிமிடேஷன் .அதற்கு மேலுள்ள காரியங்களுக்கு அவள் பொறுப்புதாரி அல்ல.அதற்கு மேலுள்ள காரியங்களுக்கு அவளை வேண்டினால் அவள் மேலுள்ள கர்த்தாக்களிடம் செல்ல வழி காட்டுவாள்.எப்படி என்பது உணர்ந்தவர்களுக்கு நன்றாக தெரியும்.பெரும்பாலும் குடும்ப கன்னி தெய்வங்களே குடும்ப பிரஜாபதி உடல்களாக, குடும்ப தெய்வங்களாகக் கருதப்படுகின்றன. இந்த வழிபாடுகளில் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர்த்து பிறருக்கு பிரதிநித்துவம் இல்லை
எனது நெருங்கிய நண்பர் ஒருவரின் குடும்ப தெய்வம் மாலைப் பிள்ளை கன்னி.திருவிதாங்கூர் மகா ராஜா ஊர்வலம் போகும் சமயத்தில் இந்த சகோதரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள்.மகா ராஜா திரும்பி வருவதற்குள் இந்த சகோதரிகளை புறப்பாடு செய்து வைத்திருக்க வேண்டும் என்று ராஜாவின் ஏவல் ஆட்கள் குடும்பத்தினரிடம் கட்டளையிட்டு கடந்து செல்கிறார்கள்.சரி என்று ஒத்துக் கொண்ட குடும்பத்தினர் ;அவர்கள் படை திரும்புவதற்குள் வீட்டிற்குள்ளேயே சமாது அமைத்து இரண்டு சகோதரிகளையும் உள்ளொடுக்கி விடுகிறார்கள்.சகோதரிகளில் ஒருத்தி "ராஜா எங்களை விரும்பினால் நீங்கள் ராஜாவை அல்லவே கேட்க வேண்டும் ? விட்டு விட்டு எங்களை எதற்காக கொல்கிறீர்கள்,நாங்கள் என்ன தவறு
செய்தோம் ? "எனக் கேட்டு உயிர் போகும் வாதையில் வலித்துக் கதறுகிறாள் .உங்கள் குடும்பத்தில் பெண்மகவுகள் எதுவும் உருப்படாது என்று சபித்து செல்கிறாள் மற்றொருத்தி.இன்று வரையில் ஆண் மகவுகளுக்கு பிரச்சனைகள் கிடையாது.பெண் வழி வாரிசுகள் அல்லல்படுகிறார்கள்.அவர்களுக்கு அவளே நின்று அருளும் செய்கிறாள்.வெகு காலம் அவர்கள் குடும்பத்திற்குள் வைத்தே அந்த கன்னியரை வழிபட்டார்கள்.இப்போதுதான் பொதுவில் கட்டி வைத்திருக்கிறார்கள்.
கன்னிக்கு வைத்துக் கொடுப்பது என்பது ஆண்டிற்கு ஒருமுறை குடும்ப கன்னியை குடும்பத்துக்குள் வரவழைக்கும் ஒரு பூஜை முறை.இப்போதும் குமரி மாவட்டத்தில் குடும்பங்களுக்குள் நடந்து வருவது.நீங்கள் குடும்ப கன்னியரை கவனியாது புறக்கணித்து வந்தால் அவள் வெளியேறிவிடுகிறாள்.பேய்களோடும் தெய்வங்களோடும் கலந்து பெருவெளியில் உலவுகிறாள்.கன்னிக்கு வைத்துக் கொடுப்பதற்கு வீட்டிற்கு முன் வாசலும் பின்வாசலும் தேவை .ஒரு நூலை முன்வாசலில் இருந்து பின்வாசலுக்கு கட்டுவார்கள்.தென்மேற்கில் அவளுக்கு பூஜை அமைத்து படுக்கையிடுவார்கள்.அவளுடன் இருக்கும் பேய்களும் தெய்வங்களும் உன்னை உள்ளே வைத்துப் பூட்டி விடுவார்கள்,அதனால் போய் சிக்கிக் கொள்ளாதே என எச்சரிப்பார்கள்.தடுப்பார்கள்.
ஆனால் அவர்களின் எச்சரிக்கையை அவள் புறக்கணித்து விடுவாள்.என்னை என்னுடைய உறவினர்கள் தேடும் போது நான் செல்லாமலிருந்தால் அது எப்படி ? என்று அவர்களை நோக்கிக் கேள்வி கேட்டு விட்டு பூஜையை நோக்கி வரத் தொடங்குவாள்.அவர்களும் உடன் தானே வருவார்கள்.ஆனால் கன்னி மட்டுமே வீட்டிற்குள் நுழைய வேண்டும்.பிற அரூபங்கள் நுழைதல் ஆகாது.ஒரு வீட்டில் கன்னிக்கு வைத்துக் கொடுக்கும் போது பிறர் இதனை அறியக் கூடாது என்பது நிபந்தனை.அவளை வர விடாமல் அவர்கள் கோள் மூட்டி விட்டால் பின்னர் அவள் வருவது தாமதமாகும்.கன்னியைப் பொறுத்தவரையில் யார் கோள் மூட்டினாலும் நிற்க மாட்டாள் ,உறவுகளிடம் வந்தே தீருவாள்.கன்னி வீட்டிற்குள் நுழைந்ததும் நூலில் வித்தியாசம் தெரியும் .பிறர் அந்த நூலில் ஏறி வருவதற்குள் நூலினைத் துண்டித்து பின்வாசல் வழியே உள்நுழைந்து கதவினை அடைத்து விடுவார்கள்.கன்னி அந்த குடும்பத்திற்கு மட்டுமே முழு விசுவாசமாக இருக்கத் தகுந்தவள்.ஆனால் குடும்பம் அவளை புறக்கணிக்கும் போது பிறர் கன்னியை குடும்பத்திற்கு எதிராக பயன்படுத்த முடியும் என்பது நம்பிக்கை.
கிராம தெய்வங்கள் ஊரில் எல்லோருக்கும் பொதுவானவை.சொந்தங்களைத் தவிர்த்து இதிலும் பிறருக்கு இடமில்லை.பிரதிநித்துவம் இல்லை.வழிபடலாம் ஆனால் பெரிதாக அது சட்டை செய்யாது."உனக்கு உரிமைப்பட்டவர்களிடம் போய் கேள்" என்று சொல்லும். பொதுவான கதைகளுக்கு வாய்ப்பற்ற ,தனித்த கதைகள் கொண்ட
தெய்வங்கள் . ஆனால் இவை அனைத்திற்கும் பொதுக்கதைகள் அமைத்து விட்டன.முத்தாரம்மன் , சுடலை மாடன் ,இசக்கி போன்றவை கிராம தெய்வங்கள்
குல தெய்வங்கள் எனப்படுபவை உங்கள் குலத்தின் மூத்த பிரஜாபதியை சுட்டுவது.நீங்கள் அதன் மூல உடலில் இருந்து உதித்து புறப்பட்டு வந்த
கைக்கிளை . சில ஜாதகர்களுக்கு குல தெய்வப்பகை அமையும்.மூத்த பிரஜாபதியை இழிவு படுத்தியிருப்பார்கள்.ஆனால் குலசாமி எதுவென தெரியாமல் மங்கிப் போயிருப்பார்கள்.அவர்களுக்கு திருச்செந்தூர் முருகனே குல தெய்வம்.குல சாமியை மறந்து போனவர்கள் அதே முறையீடை முருகனிடம் கொண்டு செல்லலாம்.காப்பான் .பத்திர காளி,சாஸ்தா போன்றவை குல தெய்வங்களாக ஒருவருக்கு இருக்க முடியும்
குடும்பத்திற்காகவோ,ஊருக்காகவோ,பொது நியதிகளைக் காப்பதன் பொருட்டோ உயிர் நீத்த முன்னோரே காவல் தெய்வங்கள்.
பூர்வகுடி நிலையிலிருந்து நாகரீக சமூகமாக மாறும்போது இந்த தெய்வங்கள் அனைத்தும் உங்களை பெரிய தெய்வங்களிடம் செல்லமாறு வழிநடத்தும்.பூர்வீகம் மறந்த மமதை நிலையை நீங்கள் காலத்தில் பெற்றால் பெருந்தெய்வங்கள் என்னால் முடியாது முதலில் அவர்களின் கணக்கை முடித்து விட்டு வா ... என்று திருப்பி இவர்களிடம் அனுப்பி வைக்கும்.
குல தெய்வங்களிடம் நின்று விட்டால் வெளியில் வர முடியாது.வெளியிலேயே சுற்றிக் கொண்டிருந்தால் முடக்கப்படுவீர்கள்.இங்கும் அங்குமான வாழ்தலுக்கான சமச்சீரான பாதைகள் இவை.
இவையெல்லாம் மூடத்தனங்கள் அல்ல.வாழ்வின் சாராம்சம் நிறைந்த பாதைகள்.நீங்கள் யாரையும் விட்டு விட்டு எங்குமே செல்ல முடியாது.இதன் சாராம்சங்கள் உங்களுக்கு விளங்கவில்லையெனில் உங்களுடைய அடுத்த தலைமுறையில் ஒருவன் இங்கு நோக்கி ஓட வேண்டியிருக்கும்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

வெயிலாள்  டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

ஜெயமோகனும் ,அருண்மொழி நங்கையும் திறந்து வைக்கிறார்கள்


காமராஜ் சிலை தெற்கு பக்கம் ,தெங்கம்புதூர்
நாள் 19 -10 - 2018  காலை 9  - 10 


இருபது வருடங்களுக்கு முன்பு நான் கடுமையாக தோல்வியடைந்த தொழில் இது.மீண்டும் ஒரு சுற்று சுற்றி திரும்பி இந்த இடத்திற்கு வந்து சேர இருபது வருடங்கள் ஆகியிருக்கின்றன.அப்போது தொழில் பற்றியெல்லாம் எதுவுமே எனக்குத் தெரியாது.இப்போது ஏதேனும் தெரியுமா ? என்று கேட்டால் தெரியாது என்பதே எனது பதிலாக இருக்கும் .தெரிவதால் எல்லாம் சிறப்பாகி விடும் என்றும் இல்லை.அவன் நினைக்க வேண்டும்.அவள் அருள் செய்ய வேண்டும் . பகவானை நம்பி அவனுடைய வேலைக்காரனாக மீண்டும் முயற்சிக்கிறேன்.பகவான் இந்த தொழிலின் உரிமையாளன்.நான் அவனுடைய பணியாள்

எங்கும் விற்பதைக் காட்டிலும் குறைவான விலையில் எனக்கு பொருட்களை தர முடியும் என்பதை மட்டுமே உத்திரவாதமாகச் சொல்ல முடியும்.கடன் கொடுப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.பழைய அனுபத்திலிருந்து பட்ட வடு அது

அருகாமையில் உள்ளோர் இதனையே அழைப்பாக ஏற்று வந்து உங்கள் வாழ்த்துகளை சொல்லுங்கள்.நீங்கள் வருகை தர முடிந்தால் அதுவே வாழ்த்துதான்

36  A  பள்ளம் , 37  மணக்குடி பேருந்துகளில் வர முடியும்.நாகர்கோயிலில் இருந்து பேருந்தில் முப்பது நிமிட பயண நேரம்


உங்கள் ஒத்துழைப்பும்,வாழ்த்தும் இச்செயல் சிறக்க உதவும்

அய்யா துணை
சிவ சிவா  தான் ஆனோம் தானானோம்
சிவ சிவா  நான் ஆனோம் நானானோம்

வாழ்க வளமுடன்

வசியம் அல்லது செட்யூஸ்

வசியம் அல்லது செட்யூஸ்


இந்த பிரபஞ்சத்தில் ஆண் என்கிற உயிரி உள்ளளவும்,பெண் என்கிற விலங்கு உள்ளளவும் ஒருவரையொருவர் வசியம் செய்ய முயன்று கொண்டுதான் இருப்பார்கள்.இப்படி இதனை இல்லாமலாக்குவதற்கான ஒரு மந்திரமும் ஒருவரிடம் கிடையாது .அடிப்படை அன்பும் காதலும், உறவும் கலவியும் இதன் பாற்பட்டவையே.வயதோ நெறிகளோ அதற்கு ஒருபோதும் பொருட்டாவதில்லை.
இந்த ஆதாரமான அடிப்படை உணர்ச்சியை கைவிட்டு விட்டது போன்று பாசாங்கு செய்ய முடியுமே தவிர அனைத்து ஆற்றல்களுக்கும் அடிநாதமாக விளங்குவது இது.ஆண் எப்போதும் வசியம் செய்ய முயன்று கொண்டிருப்பதையும் பெண் ஆணை வசியம் செய்ய முயன்று கொண்டிருப்பதையும் ஒன்றுமே செய்வதற்கில்லை.அவர் இப்படி செய்யலாமா என்றால் ? அவள் இப்படி செய்யலாமா என்றால் ? அதற்கு விடையேதும் கிடையாது.
சக்தியும் சிவனும் மேற்கொண்டிருக்கும் திருவிளையாடல் இது.அனைத்து மாயையும் புகைமூட்டத்துடன் கிளம்புகிற தாய் நதி இது.இந்த ஆதார உணர்ச்சியிலிருந்து விலகும் எவர் ஒருவரும் அவர் தம் அளவில் வன்முறையாளர்களாக இருக்கிறார்கள்.அவர்கள் நாளடைவில் அன்பற்றவர்களாகச் சுருங்கி விடுகிறார்கள்.இதற்கு அர்த்தம் ; காண்போர் அத்தனை பேரையும் கூடிக் கலப்பது என்பதல்ல .அப்படி இதனைப் புரிந்து கொள்வோருக்கு இந்த அடிப்படை உணர்ச்சியின் பெருமதிப்பு எதுவுமே விளங்காது.
கடல் அடியில் கோலமிட்டு, வசீகர கோலங்களை வரைந்து தொடர்ந்து தனது இணையை செட்யூஸ் செய்கிற மீன் இனம் ஒன்றிருக்கிறது.அது வரைந்த கோலங்கள் எதுவும் மனிதர்களால் வரையும் சாத்தியங்கள் கொண்டதல்ல என்று சொல்கிறார்கள்.ஒரு கோலத்தை அழித்து மீண்டும் அது மறுகோலத்தை உண்டு பண்ணுகிறது.கோலம் சரியில்லாமல் போனால் ; இணை அதனை நிராகரிக்கிறது.நிராகரிப்பு மேலும் சிறந்த கோலத்தை வரைந்து காட்டு என்கிற கோரிக்கையே.மீண்டும் அது வரைகிறது.கடலடியில் சதா இவ்வாறான விளையாட்டு ஒன்று நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.இது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான விளையாட்டு.சாதாரண கோலத்தை ஏன் இணை மீன் நிராகரிக்கிறது ? நமது பார்வைக்கு நிராகரிக்கப்பட்ட கோலமும் அழகாகத்தான் தெரிகிறது.ஆனால் இணை அதில் அன்பின் தீவிரக் குறைவைக் கண்டுபிடித்து விடுகிறது.அன்பின், காமத்தின் தீவிரக் குறைவில் வரையப்படும் கோலம் நிராகரிப்பிற்குரியது.அந்த தீவிர நிலையை அங்கே அந்த இருவர் மட்டுமே உணரவும் பரிமாறிக் கொள்ளவும் முடியும் .பிறருக்கு அதில் பொறுப்பேதும் கிடையாது.இந்த விஷயத்தில் யாருக்கும் யாரும் முதன் மந்திரிகள் இல்லை.ஒவ்வொரு தீவிர கதி நிலைக்கும் அதே தீவிர நிலையில் வேறொரு இணை காத்திருக்கிறது
எனக்கு ஆர்வமூட்டிய பாலியல் வழக்கு ஒன்று ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் செய்தி ஊடகங்களில் பிரபலமானது.ஒரு ஆண் நல்லவன் கதாபாத்திரம் .கடுமையான பாலியல் புதரில் சிக்கிக் கொண்ட ஒரு பெண்ணை மீட்கிறான்.இருவரும் இணைந்து ஊடகங்களுக்கு எத்தனை பேர் புதரின் பின்னணியில் இருந்து அந்த பெண்ணின் கறியை பச்சையாகத் தின்றார்கள் என்பதனை வெளியுலகிற்கு அம்பலப்படுத்துகிறார்கள்.அந்த நல்லவன் கதாபாத்திரம் அந்த பெண்ணை தனது என்ஜிவோ விடுதியில் வைத்து பாதுகாக்கிறான் . அவன் ஊடகங்களில் பேசும் போது அவனுடைய ரத்த நாளங்கள் அனைத்தும் விடைக்கின்றன.பெண்களுக்கெதிரான அனைத்து பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றியும் அவன் மிகவும் நன்றாக பேசினான்.அவன் பேசிய அனைத்துமே புறக்கணிக்க இயலாத உண்மைகள் நிறைந்தவை .ஒரு வாரத்தில் அவனுடைய விடுதியில் இருந்து மீண்டும் தப்பித்துச் சென்ற அந்த பெண் ; தன்னை அவன் எப்படி மாமிசமாக புசித்தான்; பின்னர் எத்தனை பேருக்குப் பகிர்ந்தான் என்பதை ஊடகத்தில் பேசிக் கொண்டிருந்தாள்.நமது அத்தனை பேருடைய நல்லவன் கதாபாத்திரங்களும் இந்த அளவிற்கு பரிதாபமானவையே இந்த விஷயத்தில் . இதில் மேதையென்றோ ,ஞானியென்றோ ஒரு வேறுபாடுகளும் இல்லை.
பாலியலும் காமமும் மனித சமூகத்தில் மிகவும் சிக்கலான விஷயங்கள்.பொது நெறிகளில் வைத்து உரையாட விளையும் போது ஒவ்வொருவரும் பிறருக்கு போலீஸ்கார் ஆகிறோம் .
எங்கள் பகுதியில் பேர்பெற்ற ஒரு மூத்திர சந்து உண்டு.மூத்திர சந்து என்றால் மூத்திர சந்து தான்.சாதாரணமானவர்களும் அங்கே வந்து செல்வார்கள்.அவர்கள் யாருக்கும் அந்த மூத்திர சந்தின் பிற உருப்படிகளை அது கண்ணில் காட்டாது.அப்படி வருகிறவர்கள் யவருக்கும் அது தேவையுமில்லை.அவர்கள் வந்து கடந்து செல்வார்கள்.ரகசிய உலகத்திற்கும் அவர்கள் பொருட்டல்ல.பொருட்படுத்துகிறவனுக்கு மட்டுமே அது பொருட்டு.ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை வந்து அங்கே பிராந்தி பாட்டிலில் தன்னுடைய சிறுநீரை பிடித்து வைத்து விட்டுப் போகிறவர்கள் உண்டு.அது எதற்கான குறியீடு என்பதை தேவையற்றவர்கள் அறிய கூட தேவையில்லை.ஆனால் அவனே அந்த முத்திரச் சந்தின் எஜமானன் .அவனிடம் பேச்சு கொடுக்க வேண்டும் ,எதிர்வினையாற்ற வேண்டும் என்கிற தூண்டுதல் உங்களுக்கு ஏற்படுமாயின் மெல்ல அவனுடைய மாயலோகத்திற்குள் சரிந்து விழத் தொடங்குகிறீர்கள் என்று அர்த்தம்.
இந்த உலகத்தில் ஏராளமான விஷயங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.நடந்து கொண்டே இருக்கும்.இவற்றை நல்லவை தீயவை என நீங்கள் பிரித்துக் கொள்ளலாம்.அது உங்களுடைய சவுகரியம்.ஆனால் இங்கே நடக்கும் அனைத்திற்கும் மிகவும் வலுவான காரண காரியங்கள் இருக்கின்றன.எதுவும் சாதாரணமாக வந்து அல்லல்படுவதில்லை.தீமையாவதும் இல்லை.உங்கள் தேர்வில் உங்கள் மகிழ்ச்சியில் தெளிவு இருக்குமாயின் ஒரு துன்பமும் இல்லை.உங்கள் தெருவில் ஒரு கொலை நடக்கிறது பட்டப்பகலில் என்று வைத்துக் கொள்ளுங்கள்,அதற்காக மறுநாளில் நீங்கள் கொலை செய்யப்படுவீர்கள் என்று அர்த்தமில்லை.ஒரு போதும் நீங்கள் கொலை செய்யப்பட மாட்டீர்கள்.அதன் இலக்கு வேறு . எலலாவற்றிற்கும் இலக்கு உண்டு.அந்த உலகிற்குள் வலிய நுழைந்து குடைச்சல் தராத வரையில் இலக்கு உங்களிடம் தன் முகத்தைக் காட்டுவதில்லை.
அரச மரங்களையும் ஆலமரங்களையும் கவனித்துப் பாருங்கள்.அவை மிகப்பெரிய கட்டுமானங்களை தின்று செரித்து மண்ணாக்கி துப்புவதற்குப் பிறந்தவை.வாழ்க்கை உருவாக்காத நிர்பந்திக்காத எந்த இருளுக்குள்ளும் மயக்கம் கருதி செல்ல முயலாதீர்கள்.அதுவே மிகவும் ஆபத்தானது .இது பாலியலுக்கும் பொருந்தும்.
பாலியல் வழக்குகள் ஒருவிதத்தில் கஞ்சா வழக்குகளுக்கு நிகரானவை.சமயங்களில் அவை சரியாகவும் இருக்கக் கூடும்.ஏமாற்றங்களில் , பழிவாக்குதல்களில் இருந்தும் வெளிப்படக் கூடும்
காதலில் காமத்தில் பெண் ஆணை பொறுப்புணர்ச்சிக்குள் நகர்த்த விருப்புபவள்.அதில் அடையும் ஏமாற்றங்கள் அவளை பழிவாங்குதலுக்கும் தூண்டும்.
சமூகத்தில் முன்பாக நடிப்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இருவருக்குமே கைவந்த கலை.தீராது.
இதில் விஷேசம் என்னவெனில் ஒருவர் மீது ஆணோ ,பெண்ணோ ; பாலியல் பழி சுமத்தப்படும் போது ,அந்த தீவிரம் தேவைப்படுகிற மற்றொரு எதிர் இணை இனம் கண்டு அவரை நோக்கி வேகம் வரத் தொடங்கி விடுகிறது.புதிய கிளாமரோடு புறப்படுகிறது அந்த புதிய விலங்கு மீண்டும் 🤣

முற்போக்கர்கள் பிளவுஸ் அணிந்த வரலாறு

முற்போக்கர்கள் பிளவுஸ் அணிந்த வரலாறு

கிறிஸ்தவ மதம் வேறு கிறிஸ்தவக் கருத்தாக்கம் என்பது வேறு .கிறிஸ்தவ மதம் என்பது கிறிஸ்தவராக மதம் மாறியவர்களை பராமரிக்கும் வேலையை மட்டுமே செய்யக் கூடியது.கிறிஸ்தவக் கருத்தாக்கம் என்பது அனைத்து துறைகளையும் தன்னுடைய கருவிகளால் மேலாண்மை செய்யவும் ,மூழ்கடிக்கவும் திறன் கொண்டது.இந்திய முற்போக்குகள் பெரும்பாலும் அருந்ததி ராய் உட்பட ,ரொமீலா தாப்பர் உட்பட கிறிஸ்தவக் கருத்தாக்கங்களை தங்களுடைய உள்ளடக்கமாகக் கொண்டவர்கள்.இந்திய இடதுசாரிகள்,பகுத்தறிவுவாதிகள் அனைவரும் இந்த கருத்தாக்கத்திற்குள் சிக்கியிருப்பவர்களே.அதிலும் குறைந்த பட்ச விசாரணை கூட இல்லாமல் சிக்கியிருப்பவர்கள் என்று கூறுவதே சரியானதாக இருக்கும்.இங்குள்ள அதிரடி முற்போக்குகள் பலருக்கும் இப்படித்தான் சிக்கியிருக்கிறோம் என்பது கூட விளங்குவதில்லை.
பிராங்பர்ட் மார்க்சியர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை.உதாரணமாக இந்தியாவில் அஜீஸ் நந்தி , டி.ஆர் .நாகராஜ் போன்றோரைக் குறிப்பிடலாம்.துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இங்கே மார்க்சியர்களாகவே கருதப்படுவதில்லை.அஜீஸ் நந்தி ஓரிடத்தில் வெளிப்படையாகவே இந்த குறையை சுட்டிக் காட்டுகிறார்.பெரியார் போன்ற நாலாந்தரமான எதிர்வினையாளர்கள் கிறிஸ்தவக் கருத்தாக்கங்கள் அனைத்தையும் அவ்வாறே உள்வாங்கி சந்தேகத்திற்கிடமின்றி நம்பிய மூடர்கள்
கிறிஸ்தவம் இந்தியாவில் நுழையும் ஆரம்ப காலங்களிலேயே சைவம்,வைணவம் போன்ற தத்துவார்த்த ,அறிவு சார்ந்த விவாதங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்த பெரிய மதங்களைச் சார்ந்த மக்களிடம் தங்களுக்கு வேலையில்லை என்பதில் மிகத் தெளிவாக இருந்தது .அவற்றுக்கு எதிரான தர்க்கங்களை உருவாக்கவும் ,இழிவு செய்யவும் மாபெரும் தொழிற்பேட்டை அவசியம் என்று உணர்ந்தது.இந்திய பெருமதங்களுக்கு எதிரான பல சிறு குழுக்கள் வேலை செய்ய தொடங்கின.இந்திய முற்போக்கர்கள் தாம் இந்த தொழிற்பேட்டையை நிர்வாகம் செய்து வருபவர்கள்.இந்திய பெருமதங்களுக்கு எதிரான சிறு சிறு குழுக்களை ஒருங்கிணைத்து அதனை அரசியல் அதிகாரமாக மாற்ற இன்றளவும் அவர்கள் முயற்சி செய்து கொண்டும் இருக்கிறார்கள்.மக்களிடம் இருந்து அவர்கள் அந்நியப்பட்டுப் போனதற்கும் இது பிரதானமாக காரணம்.
கேரளமும் ,மேற்கு வங்கமும் விதிவிலக்குகள்.படைப்புப் பார்வைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதால் கிறிஸ்தவக் கருத்தாக்கங்களில் இருந்து ஓரளவிற்கு அவர்கள் விடுதலை பெற்றார்கள்.
ஒவ்வொரு பாரம்பரிய சமூகமும் தங்களுடைய சமூகவியல் பயணத்தில் பெரிய தத்துவார்த்த சமயங்களுக்குள் ,அதன் நெறிகளுக்குள் சென்றே ஆக வேண்டும் என்பது தவிர்க்கவே இயலாத விதி.அப்படியில்லாத இந்திய சமூகங்கள் ஒன்று கூட கிடையாது.அப்படி அவர்கள் தேர்வு செய்யும் மதங்கள் கிறிஸ்தவமாகவோ இஸ்லாமாகவோ கூட இருக்கலாம்.அவையும் தத்துவார்த்த தளங்கள் கொண்ட ,நீண்ட அறிவுத் தொடர்ச்சியின் விளைவில் உருவான மதங்கள் தான்.அப்படியிருக்கும் போது இந்திய சமயங்களை மக்கள் தேர்வு செய்யாமல் இருக்க வேண்டுமாயின் சமூகவியல் காரணிகளை உருவாக்கி இந்திய சமயங்கள் உடைக்கப்பட வேண்டும்.அந்த பணியை கிறிஸ்தவ தொழிற்பேட்டைகள் செய்யும்.சமூக உண்மைகளை சிதறச் செய்வதன் வாயிலாக மட்டுமே இதனை சாத்தியமாக்க முடியும்.இந்த தொழிற்பேட்டையில் பாதுகாவலர்களாக முற்போக்குகள் கண்ணுக்குத் தெரிகிற மற்றும் தெரியாத நுட்பமான பிளவுகளை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.அதற்கான கருவிகளை கிறிஸ்தவக் கருத்தாக்கம் உருவாக்கித் தந்து கொண்டே இருக்கும்.ஏராளமான சொல்லாடல்கள் உருவாக்கப்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஏற்கனவே சைவம் சார்ந்தோ , அல்லது வைணவம் சார்ந்தோ தங்கள் சமூகவியல் நிலைகளை மாற்றியமைத்துக் கொண்ட மக்களிடம் பெரும்பாலும் கிறிஸ்தவத்தால் செல்வாக்கு செலுத்த முடியவில்லை.அது கடினம் என்பது அவர்களுக்கும் தெரியும்.சாதி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ,போலியான வரலாற்று வாதங்கள் மூலம் இந்திய பெருமதங்களை சாராத மக்களிடம் தங்கள் கருவிகளை கொட்டுகிறார்கள்.ஒவ்வொரு சாதிக்கு ஒவ்வொரு கிறிஸ்தவம் என்று பாதிக்கு மேல் மக்கள் கிறிஸ்தவத்திற்கு மாறுகிறார்கள்.இந்த சந்தர்ப்பத்தில்தான் வைகுண்டசாமி வருகிறார்.அவர்களுடைய அத்தனை கருவிகளும் சோர்ந்து சரிகின்றன.வைகுண்டசாமிகளுக்கு எதிராக நூற்றுக்கணக்கில் துண்டு பிரசுரங்கள் கிறிஸ்தவர்களால் விநியோகிக்கப்படுகின்றன.அவற்றில் ஒன்றுக்கு கூட வைகுண்டசாமி பதில் சொன்னதில்லை.பொருட்படுத்தியதில்லை.அவர் இந்திய சமயங்களின் உயர் விழுமியங்களை மக்களிடம் கொண்டு சென்றார்.பாதிக்கும் மேல் மக்களை கிறிஸ்தவத்திடம் இருந்து காத்த வரலாறு இது.
"மோச முன்னுரைத்தல் " என்கிற தலைப்பில் கிறிஸ்தவக் குருக்கள் எழுதிய வைகுண்ட சாமிகளை அவதூறு செய்கிற நூல் ஒன்றும் எழுதப்பட்டது.இன்றுவரையில் வைகுண்டசாமியை இப்போது எடுத்து கொஞ்சுகிற முற்போக்குகள் கிறிஸ்தவர்களால் அவர் கடுமையான எதிர்ப்புக்குள்ளானதை பற்றி ஒரு வரி பேசி நான் கேட்டதில்லை
இந்த கிறிஸ்தவக் கருத்தாக்கத்திற்கும் முற்போக்குகளுக்கும் பகுத்தறிவுவாதிகளுக்கும் இடையிலான உறவு என்பது வெறும் கள்ள உறவு மட்டுமல்ல.இப்படியான வெளிப்படையான சமூகவியல் கண்ணோட்டங்களை அவதூறுகள் மூலம் கொலை செய்யும் பயிற்சியும் பெற்றவர்கள் இந்த மூவர் கூட்டணி.வெளிப்படையான பேச்சுக்கள்,விவாதங்கள் உருவாகி விடாமல் பிளவிலும் மோதலிலும் தொடர்ந்து குணமூட்டி வைத்திருப்பவர்கள்.மரபு என பேசத் தொடங்குவோரிடம் கொஞ்ச காலம் சமணத்திற்கு செல்லுங்கள் என அனுமதி தருவார்கள்,பிறிது குலதெய்வங்களில் பிரச்சனையில்லை என்பார்கள்.மேலாண்மை உத்தி இவையெல்லாம். அறிவின் பணி என்பதே முதலில் இதிலிருந்து விழித்துக் கொள்ளுதலே ஆகும்.அல்தூசர் போன்ற மார்க்சிய தத்துவவாதிகள் "கிறித்தவத்தின் நவீன வடிவமே பகுத்தறிவு" என்பதைக் கண்டு சொல்லியிருக்கிறார்கள்.அது குறித்தெல்லாம் இந்த நாலாந்தர கழிசடை முற்போக்குகளிடம் பேச்சு மூச்சே இருக்காது.
நான் எங்கள் ஊரிலுள்ள முற்போக்கு ஆசான் ஒருவரிடம் ஒருசமயம்
" ஐயா ...எங்களை போன்று சிறுவயதில் அநீதிகளுக்கும்,துன்புறுத்தலுக்கும் ஆளாகி தொந்தரவுக்கு ஆட்பட்ட ஆன்மாக்கள் தான் உங்களிடம் வந்து சேருகிறோம்.அப்பாவியான எதையும் நம்புகிற குணத்துடன்,நிறைய குழப்பங்களுடன்...
"எங்களிடம் சாமி கும்பிட போகாதே... என்கிறீர்கள்.ஆனால் உங்கள் வீட்டுக் குழந்தைகள் பிள்ளையாரைக் கும்பிடுகிறார்கள்,முருகனை வழிபடுகிறார்கள்,
சிவனைக் காண பிரதோஷம் தவறுவதில்லை.புரட்டாசியில் திவ்ய தேசம் எங்கிருக்கிறது என்று தேடுகிறார்கள்.நன்றாகவும் படிக்கிறார்கள் .நல்ல வேலை என வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். நல்ல அழகான பெண்களை மணமுடித்து அழகான குழந்தைகளை பெற்றெடுக்கிறார்கள்.எங்களை போன்றோரை சுவரொட்டி ஒட்டுவதற்காகத்தான் பயிற்சி கொடுத்து நிரந்தரப்பணியில் வைத்திருக்கிறீர்களா ? நீங்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தவற்றில் உங்களுக்கு உண்மையான நம்பிக்கை இருந்திருக்குமேயானால் நீங்கள் உங்கள் வீட்டுக் குழந்தைகளிடம் இருந்தல்லவா உங்களுடைய பிரசாரத்தைத் தொடங்கியிருக்க வேண்டும் ? என்று கேட்டேன்."
யார் சொல்லித் தந்து இதனை நீ என்னிடம் கேட்கிறாய் ? என்று சாடினார்.ரத்த அழுத்தம் அதிகமாகி அவர் மனைவி அதற்கு மாத்திரையும் நீரும் அருளினார்.ஆசான் சாந்தமானார்.ஆசானிடம் இது போன்ற கேள்விகளை கேட்கக் கூடாது என்று மனைவியிடமிருந்து பதில் வந்தது
நீங்கள் குழப்பத்தில் இருக்கும் வரையில் தான் இவர்களுக்கு இருப்பு ; தெளிவாகி விட்டீர்கள் என்றால் தலைதெறிக்க ஓடிவிடுவார்கள்.
ஒரு இஸ்லாமியரோ,கிறிஸ்தவரோ இந்து பெருமதங்களை ஏற்றுக் கொள்பவராக இருந்தால் மட்டுமே அவர்கள் நல்லிணக்கம் கொண்டவர்கள்.அப்படியான நண்பர்களும் உண்டு.மற்றதெல்லாம் முற்போக்கு கிறிஸ்தவக் கருத்தாக்கத்தின் போலிகள் .
அப்படியில்லாதவர்கள் நீங்கள் தெளிவானால் உங்களை கடந்து செல்வார்கள் அனுபவத்தில் காண்பீர்கள் .சைவ சித்தாந்தமும் இஸ்லாமும் ஏறக்குறைய ஒன்றுதான் என்பது எனக்குத் தெரியும்.ஆனால் முற்போக்குகளால் இதனை ஏற்க இயலாது.அவர்களின் நோக்கம் பிளவு.முற்போக்குகளைக் கட்டுடைக்காமல் நம்மால் சமூக நல்லிணக்கத்தையும் காக்கவே இயலாது
   

கிறிஸ்தவ அரசியல் என்பது என்ன ?

கிறிஸ்தவ அரசியல் என்பது என்ன ? கிறிஸ்தவ அரசியல் என்ற ஒன்று இருக்கிறது.இருக்கவும் வேண்டும்.அதுபோல நாடார் அரசியல்,தேவர் அரச...