Posts

Showing posts from August, 2020

படைப்பு மின்னிதழில்- லக்ஷ்மி மணிவண்ணன் நேர்காணல்

Image
  லக்ஷ்மி மணிவண்ணன் நேர்காணல் முகமது மதார் 1 கவிதையை முதன்முதலில் எங்கு சந்தித்தீர்கள் ? முதல் கவிதையை கண்டடைந்த அனுபவம் எனில் "ஆடும் முகங்களின் நகரம் " என்ற தலைப்பில் தொண்ணூறுகளில் என நினைவு "இன்டியா டுடே "இலக்கியச் சிறப்பிதழில் வெளிவந்த கவிதையைச் சொல்வேன்.பெரு நகருக்குச் சென்று திரும்பும் வழியில், நகர் கடந்ததும் சாலையிலும் அதன் ஓரங்களிலும் பெருகிய தனிமையைக் கண்டடைந்த கவிதையைச் சொல்லலாம்.சுந்தர ராமசாமியும்,தோப்பில் முகம்மது மீரானும் சிலாகித்த கவிதை அது.இவ்வளவு சிறிய வயதில் இப்படி எழுத முடிவது ஆச்சரியமானது என்று தோப்பில் நண்பர்கள் மத்தியில் வைத்து அந்த கவிதை பற்றி பேசினார்.நெருங்கிய நண்பர்கள் பலரிடம் அந்தக் கவிதையைப் படித்தீர்களா என்று சுரா கேட்டுக் கொண்டிருந்தார். 2 ஒரு கவிஞனால் கவிதையை வைத்துக் கொண்டு என்ன செய்து விட முடியும்? குடும்ப அநீதிகளில் துயருற்று வாடிய காலங்களில் ,சிறு பிராயத்திலேயே கவிஞர்கள் எனக்கு உவப்பானவர்களாக ,ஏதோ ஒருவிதத்தில் தர்மத்தை நிலை நிறுத்துபவர்களாகத் தெரிந்தார்கள்.அல்லது அவ்வாறு புரிந்து கொண்டேன்.அதனை அவ்வளவு சரி என்று சொல்வதற்கில்லை.பாரபட்ச

அய்யா வைகுண்டர் இதிகாசம்-46 மருந்துவாழ் மலை 5

Image
அய்யா வைகுண்டர் இதிகாசம்-46 மருந்துவாழ் மலை 5 குகைமேல் முனி ,குகைக்கு மேல் உருவாக்கியுள்ள படுக்கை நூதனமானது.மழை வெள்ளம் ஒழுகாது.மெல்லிய சாரல் விழும். ஆனால் படுத்த வண்ணம் வெளி காண முடியும்.குகைக்கு மேலே முனி அமைத்திருக்கும் படுக்கைக்கும் மேலே ஒரு பாறை முகடு நீண்டிருந்தது.குகையை தகப்பனாரின் வீடு என்று சொன்னார் .அப்படித்தான் முனி கருதிற்று.அதனால் அங்கே குகை மேல் முனி படுக்கச் செல்வதில்லை.அங்கே பிற முனிகளும் கால் வைப்பதில்லை.பிற முனிகள் குகைமேல் முனியின் தகப்பன் சிவன் என்றன.தானாகவே அதிகம் பேசிக் கொள்கிற முனி குகைமேல் முனி.பிறர் எவரிடமும் பேசுவதில்லை.பேசும்.கேட்டால் பதில் கூறும்.ஆனால் அந்த பதில் கேட்ட கேள்விக்குரியதுதானா என்றால் இருக்காது.எப்போதும் வேறு ஏதோ போதம்.அது சிவ போதமாகத் தானிருக்க வேண்டும் என்பதில்லை.ஆனால் வேறு ஏதோ போதத்தில் சிவ போதம் ஒளிந்திருக்கிறது என்பதும் ஒரு உண்மைதானே... முத்துவிற்கு இவர்கள் அனைவரிடமும் ஈர்ப்பு அதிகப்பட்டுக் கொண்டே இருந்தது.சில விஷயங்களை நாம் பொருள் கொள்ள முயலாமல் இருக்கவேண்டும்,நாம் இத்தகைய முனிகளிடம் கடைபிடிக்க வேண்டிய நெறி இது ஒன்றுதான்.என்று அரியிடம் சொன்

அய்யா வைகுண்டர் இதிகாசம்-45 மருந்துவாழ் மலை 4

Image
  அய்யா வைகுண்டர் இதிகாசம்-45 மருந்துவாழ் மலை 4 மருந்துவாழ் மலையில் இடையர்களின் மறிகள் கூட்டமாக இருப்பதில்லை.சிதறி மேயும்.ஆங்காங்கே இஷ்டம் போல நின்றுகொண்டிருக்கும்.இடையர்கள் கவனிப்பில் இருப்பது போலவே தோன்றுவதில்லை.தன்னிச்சையாக மேயும் போது அவற்றுக்கு தனி மிடுக்கு உண்டாகிறது.கண்கானிப்பில் இருந்து வெளியேறியதும் அவற்றுக்கு காட்டின் நிறம் உண்டாகிறது.ஒரு கணத்தில் கண்காணிப்பிற்கு வெளியில் வந்ததும் சுயேட்சையான மிருக சாயல்.எப்படி இது உண்டாகிறது என்று தெரியவில்லை.உண்டாகிறது அவ்வளவுதான்.மீண்டும் இடையர்களின் கண்காணிப்பில் மலையிறங்கும் போது பழைய மந்தைத் தன்மை உருவாக்கிவிடும்.முட்டி உடல் ஒடுக்கி நெரித்து பிதுங்கி அவர்கள் சொல்பேச்சில் நடந்து செல்லும்.இப்படி நடந்து செல்லும் ஆடுகளும் மலையில் தன்னிச்சையாக நின்று கொண்டிருந்த மறிகளும் ஒன்றேதான்,ஆனால் ஒன்றல்ல தென்னைகள் அபூர்வமாக வரத் தொடங்கியிருந்தன.வசதியானவர்களும்,தைரியமானவர்களும் முதலில் பாசன வயல் ஓரங்களில் வைத்தார்கள்.தென்னைக்கும் பின்னைக்கும் வரி அதிகம்.திருத்திய காடுகளில் சிலர் தென்னம்பிள்ளை நடவு செய்தார்கள்.தென்னைப் பாத்திகளுக்கு ஆட்டாம்புளுக்கை போலஅ

அய்யா வைகுண்டர் இதிகாசம்-44 மருந்துவாழ் மலை 3

Image
  அய்யா வைகுண்டர் இதிகாசம்-44 மருந்துவாழ் மலை 3 மலையின் அடியில் நின்ற ஆலம் விழுதுகள் பொய்கைக்கு வருகிற பாதையில் இடைவெளியில் குறுகி ,மலையின் திரட்டில் பாதம் வரையில் ஊன்றி நின்றன.அந்த திரடு காண்பதற்கும் மலையின் பாதம் போலவே இருந்தது.யாரோ ஒருவரின் பாதம் போல.அந்த பாதம் வளரும் திரட்டை கவனித்தால்,அது இந்த பாதம் கொண்டவரின் மடி போலும் காட்சியளித்தது.அதுவொரு சரிவுப் பகுதி.அதன் மேலே ஒட்டிய பாறையில் ஒரு குகை.குகைமேல் முனி அந்த குகையின் மேலே உருளைக் கற்களைக் கொண்டு தானுண்டாக்கிய படுக்கை ஒன்றினை அமைத்திருந்தார்.அதன் மேலே அவர் படுத்திருப்பார்,அதன் பொருட்டே அவர் பெயரும் குகைமேல் முனி என்றாயிற்று.இடையர்களே இவர்களுக்கு பெயர் கண்டார்கள்.கேரள முனி,பண்டார முனி ,பிராந்து முனி,பேசா முனி ,நாயுருவி முனி,நாராயண முனி,முற்றிய முனி,குணக் கோளாறு கொண்ட அரச முனி,அடங்கா முனி ,பாவைக்காய் முனி,நன்னாரி முனி,பாச முனி,அடி முனி,நடு முனி ,உச்சி முனி,தோன்றா முனி ,பறவை முனி,புது முனி எப்படி பதினெட்டுக்கும் குறையாத முனிமார்கள் மலையில் இருந்தார்கள்.அதில் பலரும் கடுந்தவத்தோர்கள்.ஆனாலும் அவர்களுக்கும் ஒவ்வொரு விதமான வீட்டை உருவாக்

அய்யா வைகுண்டர் இதிகாசம்-43 மருந்துவாழ் மலை 2

Image
  அய்யா வைகுண்டர் இதிகாசம்-43 மருந்துவாழ் மலை 2 அரியும் ,முத்துவும் மலையடிவாரத்தில் அமர்ந்திருந்தார்கள்.பொய்கையில் கரையேறினால் ஆலமரப்பந்தல்.அதன் கீழே அமர்ந்திருந்தார்கள்.அது அவர்களுடைய வழக்கமான இடமும் கூட. அந்த ஆலமரம் முதலில் பூமி துளைத்த இடத்தின் அடையாளம் இல்லை.மலையின் தாள்வாரத்தை ஒருபக்கமாக பந்தலிட்டு மூடியவாறு அது நின்றுகொண்டிருக்கிறது.ஒரு யுகமாக அது நின்று கொண்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.இப்பொத்து நின்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்து ,முதல் முளைக்கு காலம் அங்குமிங்குமாக அசைவதே அதன் மொழி.அது திரும்பத் திரும்ப பேச விரும்பும் மொழி.அது இங்கிருப்பது போலவே அதன் முதன்முளை வரையில் பரவியிருப்பது.நாம் அதனைத் தொடும்போது அது ஆதி முளை வரையில் அதிரும்.ஒரு தொடுகை எவ்வளவு காலம் வரையில் சேருகிறது ? ஆச்சரியம்தான்.ஒரு சிங்கத்தின் பிடரியில் கைவத்தால் அதன் ஆதி பிடரி அதிராமல் இருக்க முடியுமா? முடியாது.உறவு என்பது இதுதானே? ஒன்றைத் தொடுகையில் அதன் ஆதி வடிவு நம்மை உணரும்.அது தொடுகையால் சாந்தமடையவில்லையெனில் உறவற்ற தொடுகையாக அது வீணாகும் இல்லையா ? ஒவ்வொன்றுமே இங்கு இருப்பது போலவே இன்மையிலும் இருப்பவை.ஒன

அய்யா வைகுண்டர் இதிகாசம்-42 மருந்துவாழ் மலை 1

Image
  அய்யா வைகுண்டர் இதிகாசம்-42 மருந்துவாழ் மலை 1 மருந்துவாழ் மலையடிவாரப் பொய்கை தணுப்பு உடையது.மலையில் ஆழடிக் கண்களிலிருந்து ஊற்றுக்கள் அந்த பொய்கையில் கூடுகின்றன.அது மருந்தின் சாரம் போல மலையை திரவமாக வடித்து நிற்கும் .எவ்வலவு ஊற்றுக்கள் இங்கே வந்து சேருகின்றன என்று கணக்கில்லை.திரண்ட ஊற்றுக்கள் பொய்கையில் கூடி மறுகால் ஓடும்.கிழக்கே பாசனமாகும் பச்சையெல்லாம் இந்த அடிவார ஊற்றுக்கள் திறந்து காணும் பச்சையே. கல்லின் தணுப்பு இதன் வெள்ளத்திற்கு.எத்தனையோ கல் பாதைகள் வழியாக ஊறிச் சுரந்து அடிமணல் ஓடி இங்கே வந்து நிறைகிறது.தவசிகளுக்கு இந்த வெள்ளம் மாமருந்து.வீட்டில் குளித்துப் பழகியவனுக்கு இதன் குணத்தை அது அறியத்தருவதில்லை.அவனுக்கு வெறும் வெள்ளம்.தவசிகள் இதன் தணுப்பில் சிவம் அறிகிறார்கள்.சிவம் உடலில் பற்றவைக்கும் சக்தியை அறிகிறார்கள்.இதன் தணுப்பறிந்தவனை அது தன்னகத்தே வைத்துக் கொள்ள விரும்புகிறது.இந்த தணுப்பு ஒருவகையான நெருப்பு .சிவத்தில் பற்றவைத்துக் கொள்ளும் திறப்பு இது.இதனை நாடி அனுபவித்தவன் பின்னர் வேறு இடம் செல்லல் ஆகாது.செல்ல இயலாது.மருந்துவாழ் மலை வளர்ந்து நிற்கும் சிவ லிங்கம்.சிவ யோக ஸ்தலம்.

அய்யா வைகுண்டர் இதிகாசம்-41

Image
  அய்யா வைகுண்டர் இதிகாசம்-41 மருங்கூரிலிருந்து திரும்பி சுசீந்திரத்தைக் கடக்கும் போது தத்தாத்ரேயர் அவதரித்த ஸ்தலம் சுசீந்திரம் என்றான் முத்து.மும்மூர்த்திகளும் ஒன்றான அவதாரம் அவர்.பல்வேறு வழிகாட்டிகளால் குரு அவருக்கு உபதேசம் செய்தார்.கேட்கும் திறனால் மட்டுமே குரு வெளிப்படுகிறார்.அது இல்லாத போதில் அவர் மௌனமாக இருக்கிறார்.அவர் இருப்பு அறியப்படாததாக இருக்கிறது.பரசுராமரின் குருவாகத் திகழ்ந்த தத்தாத்ரேயர் தன் குருவாக அனுபவங்களை,பட்சிகளை,மனிதர்களை என பலவற்றை வரித்து கொண்டவர். நாம் அறிய வேண்டியவை என்ன ? என்று அரி முத்துவைக் கேட்டான் அவை குருவுடன் இணையாக நிகழ்கின்றன.தனித்து நடப்பவை அல்ல அவை.ஆகவே எதனை அறியவேண்டியிருக்கிறது என்பதும் உடன் நிகழ்வு வழியாகவே அறியப்படுகிறது.முன்கூட்டி எந்த உத்தேசமும் இல்லை என்றான் முத்து. முன்கூட்டி உள்ள உத்தேசம், தேடிக் கொண்டிருத்தல் மாத்திரமே.பாத்திரத்தில் எது வந்து விழ வேண்டியிருகிறதோ அது வந்து விழுவது வரையில் தேடிக் கொண்டிருப்பது மாத்திரமே நாம் செய்ய உகந்தது. தட்டில் வெள்ளம் வைத்தால் சிட்டு வருகிறது.பானையில் வைத்தால் காகம் இல்லையா ? சிட்டும் காகமும் வர இவற்றை அற

அய்யா வைகுண்டர் இதிகாசம்-40

Image
  அய்யா வைகுண்டர் இதிகாசம்-40  அந்தி அடைகையில் அரி இருந்த முடுக்கு அறைக்கு வெளியில் பேச்சரவம் கேட்டது.காலையில் அடைத்தவர்களின் குரல்களே அவை.ஒருவன் தடியன் பேச்சு கீச்சுக் குரலில் உள்ள தடியன்.வயது ஐம்பதுக்கும் மேலே இருக்கும்.அவனும் மனிதனே என்பதற்கான ஒரு தன்மை கூட அவனிடம் இருந்தது போல இல்லை.தாணுமாலயன் கோபுர சுதைச் சிற்பங்களில் காணப்பட்ட பூதகணங்களைப் போல இருந்தான்.அவன் பிடியில் ஒரு கடுமையை அரி காலையிலேயே உணர்ந்தான். அவனுடைய குரல் துல்லியமாக அரிக்குக் கேட்டது.இப்போது அவர்கள் கள்ளோ சாராயமோ கூடுதலாக அருந்தியிருக்கக் கூடும்.அவர்களுடைய அனைவருடைய குரல்களிலும் தற்காலிக உற்சாகம் தொனித்தது.அந்த உற்சாகக் குரல்களில் நெருங்கிய ஒருவருடைய குரலும் இருப்பதை மிகவும் துல்லியமாக உணர்ந்தான்.பதற்றத்தில் குரலை தனித்து நினைவுக்கு கொண்டுவர இயலவில்லை.அந்த ஒரு குரலில் மட்டும் கவனம் குவித்து அந்த குரலுக்குரியவனை நினைவில் ஏற்ற அரி தொடர்ந்து முயன்றான்.புதிய ஒவியம் ஒன்றினை வரைந்து பார்க்கும் முயற்சி போல அது இருந்தது.இனி குரல் தெளிந்து உருவம் புலபட்டுவிடும் என்கிற நிலையில் உருவம் சரிந்து விடும்.மீண்டும் முயற்சி எடுப்பான்

அய்யா வைகுண்டர் இதிகாசம்-39

Image
  அய்யா வைகுண்டர் இதிகாசம்-39 ஏன் இந்த இடுக்கு முறிக்குள் வந்து மாட்டிக் கொண்டிருக்கிறோம் ? எந்த விதி நம்மை இங்கு கொண்டு வந்து பூட்டியிருக்கிறது ? அப்படி நாம் என்ன தவறு செய்துவிட்டோம் என்று கேள்விகள் மூளையை பலமாகத் தாக்கிக் கொண்டிருந்தன.தப்பிச் செல்லவே இயலாதவாறு அறை அமைந்திருந்தது.இரண்டொரு நாட்கள் பூட்டபட்டால் புத்தி பேதலித்து விடும்.எதற்காக அடைத்து வைத்திருக்கிறார்கள் ? என்ன செய்வார்கள் ? என்ன செய்யப் போகிறார்கள் ? உணர்ச்சிகள் கொந்தளித்த வண்ணம் இருந்தன.காலையில் வந்து அடைபட்டவன் நேரம் மெதுவாக கணம் கணமாக நகர்ந்து கொண்டிருந்தது.முதலில் இன்னும் சிறிது நேரத்தில் விட்டு விடுவார்கள் என்று தோன்றிக் கொண்டிருந்தது.சமயம் ஆக ஆக அந்த நம்பிக்கை பொய்த்தது.எச்சரித்து அனுப்பி விடுவார்களாயின் எதிர்த்து வாய் திறக்காமல் சென்று விடவேண்டும்.அம்மை தடையாக இருக்கிறது பொறுத்துப் போ ...என்றுகூட சொன்னாள்.வசமாக மாட்டிக் கொண்டிருக்கிறோம். மதியம் வரையில் அப்படியே இருந்து விட்டான் அரி.ஆனால் அது மத்தியானம் தானா என்பது விளங்கவில்லை.வெறும் யூகமே.பசிக்கவில்லை.ஆனால் உடல் முழுதும் வதக்கினால் எப்படி இருக்கும் அப்படி இருந்த

அய்யா வைகுண்டர் இதிகாசம்-38 மருங்கூர் ,சுசீந்திரம் 1

Image
  அய்யா வைகுண்டர் இதிகாசம்-38 மருங்கூர் ,சுசீந்திரம் 1 திரும்பும் வழி நெடுக வெண் மேகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பாய்ந்து சென்று கொண்டிருந்தன.அவை மனதின் ஆழத்தில் சென்று விழுவது போல இருந்தது.ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வடிவம் .தொடர்சியாக அவற்றைப் பார்ப்பது கடுமையாக இருந்தது.கொஞ்சம் பார்க்காமலிருந்து விட்டு விட்டு மீண்டும் பார்த்தான்.வெளி என்பது விடுதலை.வெளியில் வாவெனென அழைப்பு விடுப்பதும் போலும் அசைவுகள்.அவை மகா மண்டலத்தின் அசைவுகள் போல எதையோ நீந்திக் கடக்கின்றன.வரும் வழியெல்லாம் அவை நீந்துகின்றன.நீரிலும் நீந்து கின்றன.பழையாற்றின் கரையில் வந்து சேருகையில் உச்சி.நண்பகல்.பழையாற்றுக்குள் அவை நீந்திக் கொண்டிருந்தன. கற்பதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன.ஒருவர் வழியில் தான் கல்வி உருவாகும் என்றில்லை.சிதறியும் உருவாகலாம்.குரு சிலருக்கு சிதறிய நிலையில் அமைகிறார்.எந்தெந்த வடிவங்களிலெல்லாமோ வந்து நம்மை அடைகிறார்.குரு ஒருவரே என்றில்லை,பலரால் இணைந்து ஒரு குருவாக ஆகவும் கூடும்.ஏக குருவாகத் திகள்பவர் சிதறியும் இருக்க முடியாதா என்ன ? ஏழைகளுக்கு அவர் ஒரே இடத்தில் அமைய முடியுமா ? அலைந்து அலைந்தே தெரிந்து கொள்ளவேண்

அய்யா வைகுண்டர் இதிகாசம்-37 மருங்கூர் செல்லல்

Image
  அய்யா வைகுண்டர் இதிகாசம்-37 குன்றில் ஏறி அமர்ந்திருந்தார் முருகன்.அது எழிலின் மீது ஏறி அமர்ந்து கொள்வது.குன்றின் உச்சியில் முருகன்.தனித்திருக்கும் முருகன்.சுற்றிலும் பேரெழில்.கிழக்கு வாசல் திறந்தால் பார்வை இரண்டு பக்கம் சுற்றி நிற்கும் மலைகளின் மீது படும்.தாளே குளங்கள்.காலமற்ற காட்சி.எப்போதும் அப்படியே உறந்து நிற்கும் காட்சி.அங்கிருந்து நோக்கும் போது பூமியின் பிரம்மாண்டம் தெரிகிறது.கடலை போல வேறு வகையான பிரம்மாண்டம் .அது காண குன்றின் மீதேறிச் செல்லாமல் முடியாது. சிறு குன்று .இரண்டு மூன்று பாறைகள் மடிந்து மடிந்து படுத்திருக்கும் குன்று.அந்த பாறைகளைத் தொட்டுணர்ந்தால் அவை உயிருணர்ச்சியுடன் படுத்திருப்பது விளங்கும்.அவற்றின் மீது வெள்ளாடுகள் மேய்கின்றன.எப்போதும் மேய்கின்றன.மேயாத போதும் மேய்கின்றன.அவை இல்லாத போது அவற்றின் மூச்சொலி கேட்கும் குன்று.அந்த வெள்ளாடுகள் ,ஆடுகள் அந்த பாறை மடிப்புகளின் பிள்ளைகள்.முருகன் இவற்றின் நளினம் காண அவை மேய்ந்து கொண்டிருக்கின்றன.மேயாத வேளைகளில் முருகனின் கனவில் அவை மேய்ந்து கொண்டிருக்கின்றன.நின்ற கோலத்தில் முருகன் அந்த கனவை காண்கிறான்.முருகன் காணும் கனவு மேயு

அய்யா வைகுண்டர் இதிகாசம்-36

Image
  அய்யா வைகுண்டர் இதிகாசம்-36 புலரிக்கு முன்பாகவே முளிப்பு தட்டி விட்டது.தூங்கினோமா இல்லையா என யூகித்துப் பார்த்தான் முத்து.கனவு உடலில் வலித்தது.உடல் நிலை கடினமாக இருந்தாலும் மூளைக்குள் சுள்ளென்று ஏதோ எரிவது போல இருந்தது.அது எங்கேனும் என்னை இழுத்துச் சென்று காட்டு என்பது போல .கொல்லைக்குச் சென்று கோரி வைக்கப்பட்ட மண்பானைத் தண்ணீரில் குளித்தான்.குளிக்காதவரையில் உள்ளுக்குள் சுள்ளென்று எரிவது அணையாது.குளித்து முடித்த பின்னர் அந்த எரிச்சல் உணர்ச்சி மூளை விட்டு கண்களில் நின்றது. அரியின் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தான்.அதுவொருவித வேகநடை.அதில் வேறு யாரோ நடந்து செல்வதைப் போன்ற வித்தியாசம் இருப்பதை உணர்ந்தான்.ஜனங்கள் நடமாடத் தொடங்க இன்னும் இரண்டு நாழிகை ஆகும்.விடிந்து உதயத்திற்கும் முன்பாக வெளிச்சம் தோன்றுகையில் அவர்கள் நடமாடத் தொடங்குவார்கள்.காடு திருத்தச் செல்பவர்களுக்கு காலை வேளையே மிகவும் உவக்கும்.வெயில் வெளியேறச் சொல்லும் முன்பாகவே நினைத்ததில் பாதி வேலையை முடித்திருப்பார்கள்.அப்புறம் மீதி வேலைகள் அங்கன இங்கன நின்னு கத பேசி அந்திவரை ஆகும்.அவர்கள் இன்னும் எழும்பியிருக்கவில்லை.செல்லும் இடமெங