புலன்கள் அழிந்த நிழல்கள் - நெடுங்கதை
புலன்கள் அழிந்த நிழல்கள் என் படுக்கையைப் பார்க்கிற எவருக்கும் என் படுக்கை ஒரு நோயாளியின் படுக்கை என்கிற மாதிரியான உணர்வைக் கொடுத்துவிடும்.கடைசி காலத்தில் என் பாட்டி அவளுடைய படுக்கையை இப்படித்தான் அலங்கோலப்படுத்தி வைத்திருந்தாள். அவளது படுக்கையைப் பார்த்துக் கொண்டிருப்பதுகூட மனசை சிதறடித்துவிடும். அல்லது எரிச்சல் உண்டாக்கிவிடும். அப்படியிருக்கும் அவள் படுக்கை வயோதிகத்துக்கும் படுக்கைக்குமுள்ள சம்பந்தம்போல இருக்காது. அது அதற்கும் உள்ளே ஏதோ ஒன்று ஊடாடிக் கொண்டிருக்கும். சில நள்ளிரவுகளில் அவளது ஊளைகளும் அர்த்தப்படுத்த முடியாத ஒலிச்சிதறல்களும் அவள் படுக்கையின் அலங்கோலத்திலிருந்து கிளம்புவது போலவே எனக்குத் தோன்றும். என்னுடைய படுக்கையும் மூன்று வருடங்களாய் இப்படியாகிப் போனது உள்ளூர பெரிய துக்கத்தை உண்டாக்கியிருப்பது யாருக்கும் அநேகமாய் வெளியில் தெரியாது என்றே நினைக்கிறேன். பாட்டியின் படுக்கையோடு என்னுடைய படுக்கை ஒத்துப்போகிற மாதிரியான பல தடயங்களை மறைத்துவிட நான் மேற்கொள்கிற முயற்சிகளில் என்னை நானே தூக்கி நிறுத்திக் கொள்வது மாதிரியான மகிழ்ச்சியிருக்கிறது. ஆனாலும் இப்படியான ...