கல்குதிரை கால் நூற்றாண்டு இதழ்கள் 24 கவிதைகள்

கல்குதிரை கால் நூற்றாண்டு இதழ்கள் 24 கவிதைகள்

1
நான் ஒரு பிசகு.
பின்னர் சரி செய்தேன் அதனினும் பிசகு.
சரி செய்யச்செய்ய பிசகு
பெரும் பிசகாயிற்று.

நானா சரி செய்கிறேன்?
முன்னிருந்து நீங்களல்லோ சரி செய்கிறீர்கள் !
பிசகை சரி செய்ய பிசகு தோன்றும்

பிசகுருண்டையை உருட்டிக் கொண்டே
செல்வேன்
ஒரு நாய்போல
பிசகுருண்டையைத் தின்னத் தருவேன்
பிடிமாவாக...
பிசகுருண்டையைச் சுட்டிக் காட்டுவேன்
நீங்கள் பெருந்துயரில் கண்டு வியந்த
உங்களுக்கேயுரிய
கசந்த ஒரு பௌர்ணமியாக ...

பிசகுருண்டையை
சந்தியில் மாட்டுவேன்
பிசகுருண்டையை
சிபாரிசும் செய்வேன்
சுவைக்கவும் தருவேன்.

பிசகுருண்டை என்னிடம் வந்து சேர்ந்தது
ஒரு வழியில் ...
உங்களிடம் வந்து சேர்வதோ
பிறிதொரு மார்க்கத்தில் ...
எல்லா பிசகும் ஒன்றல்ல
ஒவ்வொரு பிசகும் ஒவ்வொரு கிரகம் .

2
நான் குடிக்கும் தேநீரில்
சர்க்கரை இல்லை,தேயிலை இல்லை
அது அந்தரத்தில் இருக்கிறது
ஆகாசத்தில் இறக்கை .

நான் குடிக்கும் தேநீரில்
சர்க்கரையும் இருக்கிறது,தேயிலையும் இருக்கிறது
ஆனால் அது குவளையில் இல்லை.
நான் குடிக்கும் தேநீரில்
சுடு நீராவி விந்தின் மணம்.

தேநீரில் குதிக்கும் மாயப்பெண்ணைக் காட்சிப்படுத்திய
இட்டுக்கட்டிய கிழவன் மாண்டு ஆண்டுகள் ஆயிரம்
ஆயிற்று என்கிறார்கள்
தேநீரில் குடித்து
புகையிலையில் விடை பெற்றேன்
காலத்தே கடந்து போ அபிராமி...

நான் களிக்கும் சிறுநீரில்
வெளியேறுகிறது
மாதவிடாய் அமுது.

3

இந்த நள்ளிரவின்
பௌர்ணமியைக் கொண்டாடும்
பறவைக்குரல்களை ஒரு மரணத்தின் முன்பாக
நிறுத்துவது நல்லதல்லவென்று
பூஜை மறந்த குலசாமிகளுக்கு அனுப்பிவைக்கிறேன்.

அதில் தனித்து நீட்டி முழங்கும் கூகை
இந்த நள்ளிரவிற்குள் நீ இங்கேயிருப்பது
நல்லதுதான் என்கிறது .
"உன் கழுத்தில் தொங்குகிற
தூக்குக் கயிற்றில் விடுவித்துக் கொண்டு
நீ இப்போதுதானே
நீயாயிருக்கிறாய் !" என நிசப்த ஓலமிடும்
அவற்றை சேகரித்துச்சேகரித்துப்
பகலுக்குத் தருகிறேன்

பகலெல்லாம் பௌர்ணமி
பௌர்ணமியைச் சுற்றிலும் பறவைக்குரல்.
குரலுக்கான பறவைகளை நீயும் அறிய மாட்டாய்
எனக்கும் தெரியவில்லை.
ரகசியமறியாதவன் குரலை மிதித்து
தனது வழித்தடத்தில் துரிதமாகிறான்
பறவைக்குரல் சூழ்
பௌர்ணமி அனாதைத் தூசுப்படலம்.

4
பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம்

அந்த மேடையை முதலில்
கரவொலியின் மைய்யத்தில்
மொட்டை மாடி டாஸ்மாக்கின் உயரத்திலிருந்து
கவனித்தேன்.

பல வண்ண ஒளி மிளிர்.
கட்சிக் கொடிகளின் விறைத்த ஆண்குறிச்சப்தம்.

"நான் கரவொலியை மட்டும்தான்
பதிவு செய்து கொண்டிருக்கிறேன்
என்னைத் தண்டித்து விடாதே ...!"
என்று கேட்டுக் கொண்டது மேடை .

எதிர்தரப்பின் மேடையாக மறுநாள் மினுங்கிய போதும்
இதையேதான் சொன்னது அது.

பழக்கத்தில் அவனுக்கும்,இவனுக்கும்
பவனுக்கும் ,புவனுக்கும்
உவனுக்கும் ,கவனுக்கும்
விறைப்பு முழக்க சபை அதுவெனத்
தெரிந்து கொண்டேன்.

ஜெபக்கூட்டம் ,யோக குருமார் சத் சங் எல்லாம்தான்.
அதுவோ பாவம் கரவொலியைத் தவிர வேறெதையும் பதிவு செய்வதில்லை.

"நீ இந்தக் கரவொலியைப் பதிவு செய்து
என்ன செய்யப் போகிறாய்?"
எனக் கேட்டேன் ஒருமுறை
பதிலில்லை.

அதுவும் இணைந்து டாஸ்மாக்குக்கு
வர விரும்பியதை
நான் தடுக்கவில்லை.

நள்ளிரவின் நிசப்தம்
டாஸ்மாக்கின் உயரத்திலிருந்து
கீழே சரிந்து ஆகாசத்தைத்
தொங்கிய நாளில்

வந்தவழி ராப்பாடி
ஆகாயத்தில் கைகொண்டு
மொத்த பேருந்து நிலையத்திற்கும் மேலே
பேருருவாய் பேயுருவாய் பிடித்தான்.
காதெல்லாம் கிழியும் கரவொலியை
நிசப்தத்தில் எடுத்து விட்டது மேடை.

5

தேவதையின் வயோதிகத்தின் மீதொரு பழம்பாடல்

ஒரு பாடலையும் அழைத்துக் கொண்டு
மரண வீட்டிற்குச் செல்லும்போது
உங்களுடைய பொறுப்பு என்னவாக இருக்கிறது?

சிறு தேவாலயத்தின் சாயுங்கால சங்கீதங்களும்,பிரார்த்தனைகளும்
நீளமாக உறைந்திருந்த தெருவில் ..
பகலில் தேவதையின் மரணம் உறைபனியை பிசிபிசுப்பாக்குகிறது.

உடலிலோ வயோதிகச் சுருக்கம்.முகத்தில் சிறுமியின் புன்னகை
சந்தேகத்தின் கொடுவாள் கூர்முனை
நைலான் தூக்குக் கயிறென பதிந்த கழுத்தில்
நீலகண்டம்.

உடலில் இளமையும் முகத்தில் வயோதிகமும் கொண்ட
வினோதக்கிழவன்
நான் அழைத்துச் சென்றிருந்த பாடலில்
பதற்றமடைகிறான்.

தேவதை உடலின் மீது
கொண்டுவந்த பாடலையும்
சிறுமியின் புன்னகையில் தேவ சங்கீதத்தையும்
போர்த்தி விட்டேன்.
உடல் இளமையை மீள
வயோதிகம் விரையும் தேவனின் சங்கீதம்...

மரண வீட்டில் திருட வந்திருப்பதாய்
பொருமத் தொடங்கியிருந்த
வினோதக்கிழவனின் உடல் முதிர
முகத்தில் பால்யத்தின் புன்னகை ...
எடுத்துக் கொண்டு வந்த அதே பழம்பாடலைத்தான்
விட்டுவிட்டு வந்தேன்
வேறெதுவும் இல்லை.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"