கவிதை எனது கர்மா

கவிதை எனது கர்மா
என்னிடம் கவிதையில் ஈடுபாடு கிடையாது என்று கூறுகிறவர்கள் உண்டு.அதில் பாதகம் ஏதுமில்லை.கவிதையில் ஈடுபாடு கொண்டவர்கள் மட்டுமே என்னிடம் பழகவும் பேசவும் முடியும் என்றெல்லாம் கிடையாது.அப்படி ஒரு அவசியமும் இல்லை.கவிதையில் ஈடுபாடில்லாமல் வாழ முடியாது என்பதும் இல்லை.ஈடுபாடு இன்றி சராசரித்தனத்துடன் நிறைவாகவே வாழ முடியும்.எனக்கு நேரடிப்பழக்கத்தில் இருக்கும் பலர் கலை ,
கவிதை , இலக்கிய பரிச்சயமற்றவர்கள்தான்.
கவிதையில் ஈடுபாடு கிடையாது என்பதைப் பெருமைப்பட கூறுகிறவர்களைப் பார்க்கத்தான் பரிதாபமாக இருக்கும் . அதற்குக் காரணம் கவிதையில் ஈடுபாடு இல்லையென்பதில் பெருமைப்பட ஏதும் கிடையாது என்பதனால்தான்.என்னிடம் உள்ள நுண்ணுறுப்பு ஒன்று பழுதுபட்டு விட்டது என்பதில் ஒருவருக்கு என்ன பெருமிதம் இருக்கமுடியும்? கண்ணை இழந்து விட்டேன் ,நாசி கெட்டுவிட்டது என்பது பெருமையா ? நாக்கில் சுவை தெரியவில்லை என்றால் நோய் தீவிரப்பட்டு விட்டது என்று அர்த்தம்.ஆறு மாதங்களுக்கொருமுறையேனும் இப்படி என்னிடம் குறுக்கிடுபவர்களை சந்திக்கிறேன்.இன்றும் ஒருவர் !
இந்த கவிதை தெரியாத ,அதன் பேரில் ஈடுபாடில்லாத பெருமிதத்தை என்னிடம் பகிர்பவர்களுக்கு கவிதையின் லௌகீக செல்வாக்கின்மை ஏற்படுத்துகிற அச்சவுணர்வு மேலோங்கி இருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.ஈடுபாடிருப்பதாக ஒத்துக்கொண்டால் லௌகீகம் சறுக்கி விடுமோ எனும் அச்சம் அது.மேலும் கவியாக வாழ்தலில் உள்ள எனது இருப்பை அவர் ஒத்துக் கொள்ளவில்லை என்பதையும் சேர்த்தே
தெரிவிக்கிறார்கள். அப்படி இருக்க முடியாது ,இருக்கவும் கூடாது என்று நினைக்கிறார்கள் .வாழ்தலுக்கான அத்தகைய கோணமே அவர்களிடம் இல்லை.பிறகு ஏன் இவன் எப்போதும் நம் முன்பாக தென்படுகிறான் என்பதே அவர்களின் கேள்வி.
வாழ்தல் பற்றிய அவர்களின் புரிதலில் கவிஞனாக வாழ்தல் என்பதற்கு இடமில்லை.அதுதான் அவர்கள் பிரச்சனை.கவிஞனாகவே வாழ முடியும் என்கிற நம்பிக்கை இங்கே கவிதை எழுதுகிற பலருக்குமே கூட கிடையாது என்பதே பரிதாபமானது.எப்படி வாழ்கிறீர்கள் ? என்கிற அறியா புதிருடன் என்னை கேள்வி கேட்டு துளைப்பவர்கள் இவர்கள்தான்.
ஒருமுறை வீட்டுக்கு வந்த பெண் கவிஞை திரும்பிச் செல்லும் போது ' சோத்துக்கு என்ன செய்கிறீர்கள் ? என எனது மனைவியிடம் கேட்டுச் சென்றார். நாங்களும் ஊரிலுள்ள எல்லோரையும் போல சோறுதான் சாப்பிடுகிறோம் என்பதை அவரால் நம்ப முடியவில்லை.நம்பிக்கையை விடுங்கள் .நாங்கள் சோறு சாப்பிடுவதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.நான் அப்போது அவர் உருவாகி வந்த முற்போக்குச் சிந்தனைப்பள்ளியை யோசித்துப் பார்த்தேன்.கூடாரத்தின் ஆசான்களில் ஒவ்வொருவரின் நம்பிக்கையையும் அசை போட்டுப் பார்த்தேன்.ஒருவருக்கும் கூட இந்த நம்பிக்கை கிடையாது என்பது தெளிவு.
நான் வாழ்கிற வாழ்க்கை என்பது கடவுளுக்கும் எனக்குமான நேரடித் தொடர்பில் நிகழ்வது .அது அவ்வளவு எளிதில் விளங்காது.எனக்கு ஒரு வேளைப் பட்டினியை இந்த வாழ்வு உருவாக்கும் எனில் அதில் சங்கடப்பட வேண்டியவள் பத்திரகாளிதானே தவிர ,பராசக்திதானே தவிர நானல்ல .எனக்கு லௌகீக மேன்மையுடென்றாலும் அதில் பெருமை கடவுளுக்குதான். சிறுமை என்றால் சீரழிவும் அவர்களுக்குத்தான் எனக்கொன்றுமில்லை.சுகம் எனில் பாராட்டு பெறுவதும் சீரழிவெனில் வசை வாங்குவதும் கர்த்தாதானே அன்றி நானல்ல.கவிதை எனது கர்மா.ஆத்திகர்களும்,நாத்திகர்களும் இருவருமே நாத்திகர்களாக இருக்கும் சூழலில் இவ்வாக்கைப் புரிந்து கொள்ளும் போதம் உண்டா? நான் அறியேன்.
கவிஞனாக மட்டுமே வாழ முடியும் .கவிதையின் பிரதேசத்திற்குள் நுழைகிறவன் அல்லது நுழைகிறவள் இந்த நம்பிக்கையை ஏற்றெடுக்க வேண்டும்.இதனை ஏற்றெடுக்க முடியாதெனில் வேறுபாதைகளுக்குச் சென்று விடவேண்டும்.யாதொரு நிர்பந்தமும் கிடையாது.
விக்கிரமாதித்யன் நம்பி வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.நம்பி அடையாத துன்பங்களையும் ஒருவர் அடைந்திருக்க முடியாது இன்பங்களையும் ஒருவர் அடைந்திருக்க முடியாது.இரண்டும் சமமே .கவிதையை ஏற்றேடுத்தால் அதுதான் பின்னர் பாதை அமைக்குமே ஒழிய யாரும் தீர்மானிக்க முடியாது.ஒரு கவிஞனுக்கு நேர்ந்தவைதான் எல்லா கவிஞனுக்கும் நேரும் என்றும் கிடையாது.அப்படி நேர்வதே இல்லை.ஒருவனுக்கு நேர்வது அந்த ஒருவனுக்கு நேர்ந்தது அவ்வளவுதான்.விக்கிரமாதித்யன் நம்பி சாக்கடையில் கிடந்தாலும் கவிதான்,ஸ்டார் ஹோட்டலில் இருந்தாலும் கவிதான்.

அனுபவத்தில் இரண்டு காரியங்களை எனக்கு உறுதியாகச் சொல்ல முடியும்.நான்கு கவிதைகளை ஒருவன் உருவாக்கி விட்டாலே அவன் எத்தகைய வெம்போக்கிரியாக இருப்பினும் சரி இல்லாத அழகையெல்லாம் உடனடியாகப் பெற்று விடுகிறான்.கொலைகாரனா? வழிப்பறியா? சூதாடியா? தெருத் தேவடியாளா? எதுவும் வேலை செய்வதில்லை.வேலை செய்வதில்லை என்பது மட்டுமல்ல செய்கிற வெம்போக்கிரித்தனங்களையும் சேர்த்தே கவிதை அழகு படுத்திவிடுகிறது.போக்கிரித்தனங்களுக்கு தனியே அழகில்லை , அதனை ஒரு கவிஞன் ஏற்றெடுக்கும் போது அவை உயிர்பெற்று விடும்.பிற சமயங்களில் அது சமூக மதிப்பிலே தங்கும்.மலையாளக் கவி அய்யப்பன் குடித்த கள்ளும் சாராயமும் அழகு பெற்றதைப் போல , உயிர் பெற்றதைப் போல.விக்கிரமாதித்தன் நம்பியின் அத்தனை சூதும் அழகு பெறுவதை ஒப்ப.
இரண்டாவது விஷயம் ஒருவர் எந்த துறை சார்ந்த மேன்மையில் இருப்பவாராக இருப்பினும் சரி கவிதையில் தொடர்பில்லையெனில் அவர் குறைபாடுடையவரே.இது விதி.மாற்ற இயலா விதி.பிரபஞ்ச கணிதம்.அவர் ஆன்மீக செல்வந்தராக இருக்கலாம், தொழில் மேதையாக ,விஞ்ஞானியாக இருக்கலாம்,அரசியல் வல்லுனராக இருக்கலாம்,ஏன் எழுத்தாளராகக் கூட இருக்கலாம்.எந்த துறை சார்ந்தவராக இருப்பினும் கவிதையின் நெடி அறியாதவராயின் அவரது குறைபாடும், அழகின்மையும் அவரைச் சுற்றிலுமுள்ள சகல இடங்களிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.கவிதையில் தொடர்பற்ற எந்த துறை சார்ந்த நிபுணனும் ஒருநாழிகைக்குப் பின்னர் பேசும் வார்த்தைகள் அபத்தமாக உலர ,உளறத் தொடங்கி விடும் என்பதே உண்மை.மனோவிஞ்ஞானிக்கும் இது பொருந்தும். அதுவே கவிதை எனும் கறுத்த மசியின் உள்ளடக்கக் கூறு . வேறொன்றுமில்லை.

No comments:

Post a Comment

நினைத்தார்கள் நினைத்திருந்தேன் - 62

நினைத்தார்கள் நினைத்திருந்தேன் 1 இடையில் இறந்து விடுவேன் என்றே எல்லோரும் நினைத்தார்கள் நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன் 2 ...