"நாரைகள் போலும் மறைதல்".

ஒரு தேநீர் குடிக்கும் பொருட்டோ அல்லது சிறு வணிக தேவைகளுக்கோ , சவரத்திற்கோ நம்மைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் என்ன இருக்கிறது என்று பார்ப்பேன்.அதில் சிறந்தது , மனதுக்குச் சௌகரியமானதைத் தேர்வு செய்வேன்.
இதைக் காட்டிலும் சிறந்த கடைகள் பல நகர மத்தியில் மேலும் சிறப்பாக உள்ளதே என பரிந்துரைக்கும் நண்பர்கள் உண்டு.புதிய புதிய கடைகளை அவர்கள் அறிமுகம் செய்யவும்,அறிமுகப்படுத்தவும் தயங்குவதில்லை.இருக்கட்டும் அவற்றை சுற்றியுள்ளவர்கள் பயன்படுத்தட்டும்.எனக்கு வாங்கும் பொருளோ ,வேண்டிய தேவையோ மட்டும் விஷயங்களைத் தேர்வு செய்வதில்லை.உறவும் முக்கியம்.
ஒரு சமயம் வழக்கமாக அருந்துகிற கடையில் தேநீர் கொஞ்சம் அம்சப் பிழையோடு கூட இருக்கலாம்.பரவாயில்லை .உறவும் உரையாடலும் அதனைச் சமன் செய்து விடும்.அருந்தும் தேநீரில் அமையும் உள்ளிறைச்சி முக்கியம். உறவற்ற இருப்பு பலனற்றது.உறவென நான் சுட்டுவது சாதி,மத ,ரத்த பந்த பரிவாரங்களையல்ல.ரத்த பந்தங்களும் இருக்கலாம்.ரத்த பந்தத்தை மட்டுமே சுட்டி அவர்கள் இருப்பார்களேயாயின் அவர்கள் உறவுகளல்லர் .
ஒரு உறவு ஸ்திரப்பட இரண்டு பொது அம்சங்கள் தேவை .உங்கள் சாதியா ? இருக்கட்டும்,உங்கள் மதமா? நல்லதுதான்,உங்கள் மொழியா? சிறப்பு,உங்கள் ரத்தமா உத்தமம்தான் .ஆனால் உறவென்பதற்கு அர்த்தம் பெற இது மட்டும் போதாது .ஏதேனும் உங்கள் மனதோடு தொடர்பு பெற மற்றொன்று வேண்டும்.இரண்டு காரியங்கள் தொடுக்கப்பட்டால் மட்டும் உறவு.இல்லையெனில் அது விதி.உறவென்பதை அறிய இயலாததின் விதி.பலர் ஒரு பொது அம்சத்தைத் தான் உறவென்று கங்கணம் கட்டுகிறார்கள்.அவர்களே உறவென்பதை கடைசிவரையில் என்ன என்று கண்டடைய முடியாமல் உயிர் மூச்செறிகிறார்கள் .
ஒரு தேநீரைக் குடிக்கும் போது வெறுமனே அதன் தேவைக்காக மட்டும் குடிப்பதில்லை.குடிக்க இயலுவதில்லை .காலையில் அருகாமையில் கடையில் சென்று குடிக்கும் தேநீரில் உறவு மட்டுமல்ல அந்த நாளைக் கடத்துகிற ஒரு கதையும் அதில் அடங்கியிருக்கிறது.நீங்கள் விட்டுப் போன வேலையை நினைவுபடுத்த அங்கொருவர் நின்று கொண்டிருப்பார்.நெடுநாளாய் அல்லல்படும் தீராத விஷயத்திற்கு தீர்வளிக்கும் ஒற்றைச்சொல் மந்திரத்தை அதுவரையில் நீங்கள் பக்கி என கருதிக் கொண்டிருந்த ஒருவன் அருளிவிட்டுச் செல்வான்.ஆபத்தில் கரை சேர்ந்த ஒருவனின் தொழில் நுட்பம் உங்களுக்கு அறிமுகமாகக் கூடும்.
தானே எல்லாம் ...எனக் கருதும் அகந்தையே பல சமயங்களில் ஆபத்தை விளைவிப்பதும் என்பது விளங்கும்.இப்படி எவ்வளவோ உண்டு.பேராபத்துக்களில் சிக்கி ஆவி பிழைத்தவர்கள் முதலில் உறவென்பது என்ன என்பதை கண்டு கண்பார்த்த பின்னர்தான் உயிர் பிழைத்திருப்பார்கள் .மறுஜென்மம் என்பது உறவின் ரேகையைக் கண்ணில் காட்டுவது . தரிசனமாக்குவது.
அதனால் எல்லோரையும் காலையில் வீட்டை விட்டு தேநீர் கடை தேடி ஓடுங்கள் சொல்லவதாக அர்த்தமில்லை.
ஒருமுறை மோசமான நெருக்கடி ஒன்றில் உயிர்பிழைத்து வீட்டிற்குக் கூட தகவல் தெரிவிக்காமல் வெளியூருக்குச் செல்லவேண்டிய நிலை.என் உடல் முழுதும் ரத்த காயங்கள்.கையில் எண்பத்தைந்து ரூபாய் மட்டுமே இருந்தது.என் உடமை என்று சொல்லிக் கொள்ள விலையுயர்ந்த ஒரு பொருள் கையில் கிடையாது .கடிகாரம் உடைந்து கைக்குள் நுழைந்திருந்தது.
ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது.உடலில் உள்ள காயத்திற்குப் பொருள் கூறிக் கேட்டு ஒருவருமே உடன் சேர்க்க மாட்டார்கள் .சேர்க்கவில்லை.எப்படியோ திருநெல்வேலி வரையில் சென்று சேர்ந்து விட்டேன்.தாங்கொணா பசியை தின்று உணவகத்திலிருந்து வெளியேறும்போது ஒரு சிறு நாணயம் கூட மிஞ்சவில்லை.அங்கிருந்து நான் செல்ல வேண்டிய இடத்திற்கு லாரிகளை வழிமறித்துக் கொண்டே நின்றேன்.கவனம் கொள்பவர்கள் தோற்றத்தில் மிரண்டு நகர்ந்தார்கள் .
இறுதியில் நின்று நிறுத்திய வாகனம் முருகனின் மயில் வாகனத்திற்கு நிகரானது போல ஆசுவாசமாயிருந்தது .வாகனம் அது முன் செய்த தவம்போல வந்து நின்றது.அது எப்போதோ சுவாசித்த உறவின் ஒரு மெல்லிய கீற்று வேறொன்றுமில்லை . ஆசுவாசப்பட்டு வண்டியில் ஏறியமர்ந்தால் அவர்கள் கவனிக்காமல் வந்த ஒரு ஓசையை உணர்ந்து நிறுத்தினேன்.
வண்டியின் சக்கரம் கவிழும் நிலையில் இருந்தது .இன்னும் பத்தடி தூரம் வண்டி பாய்ந்திருக்குமேயானால் முருகன் அழைத்த இடத்திற்கு போய் சேர்ந்திருப்போம் என்று அவர்கள் சொன்னார்கள்.வந்து நின்ற வாகனத்தை நான் மயில்வாகனம் என்று கருத ,அவர்களோ வந்து நின்றவன்தான் முருகன் என்றார்கள்.உறவென்பது இரண்டு பக்கமும் விபத்துக் காப்பு. கவசம்.பிறகு அவர்களே செல்லவேண்டிய இடத்திற்கு எனக்கு தனி ஏற்பாடு செய்து அனுப்பினார்கள்.கடவுள் வந்து முன்வந்துதிப்பது என்பதெல்லாம் இப்படித்தானேயன்றி வேறுமுகமாக அல்ல.
எது உறவாகும் என்பதைத் தீர்மானிக்கவே முடியாது.ஒரு சமயம் பேருந்தில் நீங்கள் கசிந்துருகி ஒரு நோயாளிக்கு விட்டுக் கொடுத்த சிற்றிடமாகக் கூட இருக்கலாம் உங்களை ஆபத்தில் காக்க முன்வந்துதிக்கும் முருகன்.
இதையெல்லாம் பலன் கருதி செய்யத் தொடங்கினால் செய்த மறுகணமே சவமாகிவிடும் உறவின் நியதிகள் . தன் போக்கில் அமையவேண்டும்.பண்பாக வேண்டும்.தன் போக்கில்தான் அமையும்.அவ்வளவுதான்.சுற்றியிருப்பவற்றைக் கவனியாமல் வெளியேறிச் செல்லுதல் உண்ணும் உணவை எட்டி எறிதலுக்குச் சமமான செயல் . உங்களின் அருகாமையில் தகுதியுடன் பசித்திருக்கும் ஒரு பலகாரக்கடையை தாண்டிச் செல்லுதல் பாதுகாப்பானதும் இல்லை.தர்மமும் இல்லை.
அப்படியானால் ஒரு நெய்தோசையை வாழ்நாளில் ஒரு நல்ல கடையில் பார்த்து விடவே கூடாதா எனக் கேட்காதீர்கள்.தாய் மணம் மாறாமல் அருகிலேயே குட்டை தோசை சுட்டுப் போடும் குணக்குன்றை குறைவு பட்டாலும் வெறுத்து விடாதீர்கள் என்று சொல்கிறேன்.அவனை அலட்சியம் செய்யாமலிருங்கள்.அவன் அழிந்து நொடிக்கும் நாள்தான் நமக்கும் நாளைக் குறிப்பது என்பது புரிந்தவர்களுக்கு இவையெல்லாமே புரியும்.இது நெய்தோசை சாப்பிடுகிற பிரச்சனை மட்டுமல்ல என்பதும் விளங்கும்.
குலசாமியைச் சென்று பாருங்கள் என்று இப்போதெல்லாம் பரிகாரம் சொல்லத் தொடங்கியிருக்கிறார்களே ! அதன் அர்த்தம் வேறொன்றுமில்லை.இதுதான்.நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்.பறந்து சிறகடியுங்கள் தவறில்லை.சுற்றியிருப்பவர்களை கவனியாமல் எங்கு சென்றும் பயனில்லை என்பதுதான்.
நானறிய பல சிறு உணவகங்கள் ருசியறிய பசி தீர்ப்பவை . இப்படியான கடைகள் நமது மாவட்டம் முழுதும் நிறைய உண்டு.ஏராளமானவர்களுக்கு குறைந்த விலையில் சேவை புரிந்து வருகின்றன .நானறிந்த சில சிறிய உணவகங்கள் ஒவ்வொன்றும் தினமும்  ஐம்பது பேரை ஐம்பது ரூபாயில் உயிரைத் தக்கவைத்துக் கொள்ள உதவி செய்து கொண்டிருப்பவை.எந்த சிறு உணவகத்தில் எது சிறப்பு என கண்டறிய ஒரு சிறப்பம்சம் தேவை.தேடித் தேடி அவற்றைக் கண்டுபிடித்தால் அவை உயிர் வாழ்வது வெறும் வணிகத்திற்காக மட்டும் இல்லை என்பது புரிபடும்.
நாகர்கோயிலில் வெப்பமூடு சந்திப்பில் காலையில் அசைவம் சாப்பிட விரும்பும் நண்பர்களை பாய் கடைக்கு அழைத்துச் செல்வதுண்டு.மாடானாலும் ஆடானாலும் சுவைக்குப் பஞ்சமில்லை .காலையில் பாய்கடை சூடான ஆப்பமும் ஆட்டுக் குழம்பும் சொர்க்கதிலேனும் கிடைக்குமா என்பது சந்தேகமே .
நண்பரும் பாடலாசிரியருமான நா.முத்துக்குமார் ஒரு சமயம் திருச்செந்தூரில் நடந்த படப்பிடிப்புத் தளத்திலிருந்து மீன் உணவிற்காகஇங்கு வந்தார்.ஏதேனும் மெஸ் போன்ற மீன் கடையில் விரும்பினார் .பெரிய கடைகளுக்கு அவரை அழைத்துச் செல்லவில்லை.மிகவும் சாதாரணமான கடையில் அன்றைய மதிய அமுது .
மேலானவற்றை வெறுத்தொதுக்க வேண்டியதில்லை.அதன் நிமித்தம் சாதாரணமானவை மடிந்து விடக் கூடாது.என்னுடைய அப்பாவழி தாத்தா , அப்பையா என அழைப்போம் . விவசாயியும்கூட.அவர் வயல்வெளியில் நண்டுகள் , தவளைகள் செத்து ஒதுங்குவதைக் கண்டால் அபசகுனமாய் உணர்ந்து புலம்புவதை சிறுவயதில் கண்டிருக்கிறேன்.நாரைகள் எண்ணம் குறைவது நல்லதல்ல என்பதை அவர் மனம் உணரும்போது , விவசாய நிலமெல்லாம் விஷமாகி ; ஊருணிகள் வற்றி ; நிலத்தில் கீழ் கண்ணியில் உப்பு வடியப் போகிறது என்பதனை எங்கள் ஊரில் படித்த வர்க்கம் எவரும் எதிர்பார்க்க வில்லை.நவீன விஞ்ஞானம் அவருக்குத் தெரியாததின் புலப்பம் என்றே நினைத்தார்கள்.ஆனால் பின்னாட்களில் அவரது உணர்வே பலித்தது.நாரைகள் பறந்து சென்றால் நல்லதல்ல என்பது உறைத்தது.ஆனால் அதற்குத் தேவைப்பட்ட காலமோ சுமார் அறுபது வருடங்கள் .
நாம் வாழுமிடத்தை சேர்ந்த நண்டோ,நத்தையொ,நாரையோ,அழிந்தால் அது அவற்றுக்கன்று.

[கன்னியாகுமரி மாவட்டம் பிரஸ் கிளப் - 2015 மலரில் வெளிவந்துள்ள எனது கட்டுரை-
நன்றி-லாசர் ஜோசப்

No comments:

Post a Comment

நினைத்தார்கள் நினைத்திருந்தேன் - 62

நினைத்தார்கள் நினைத்திருந்தேன் 1 இடையில் இறந்து விடுவேன் என்றே எல்லோரும் நினைத்தார்கள் நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன் 2 ...