இன்று சில காரியங்கள் பொருள் தராது

இன்று  சில காரியங்கள் பொருள் தராது

அதனால் இன்று பொருள் தராதவையெல்லாம் பொருளற்றவை ஆவதில்லை.சுப்ரமணிய பாரதியார் காலத்தில் சோமசுந்தர பாரதியார் பெரிய ஆகிருதி.அவர் வைப்பதுதான் இலக்கியச் சட்டம்.செய்யுளைக் கவிதையென்று நம்பிய கூட்டத்தாருக்கு முன்னோடியவர்.பாரதியார் என்றால் அவரைத் தான் குறிக்கும்.இன்று பாரதியென்றால் நம்முடைய சுப்ரமணிய பாரதி ஒருவனையே அது குறிக்கும்.காலம் பவிசையெல்லாம் மேலும் கீழுமாகத் தட்டி வேறு ஒரு திக்கில் அடுக்கக் கூடியது.அது யார் யார் ? யார் யார் ? என்றெல்லாம் பார்ப்பதில்லை.யோசித்துப் பார்த்தால் இன்று சோமசுந்தர பாரதியாரை அறிந்து வைத்திருப்பவர்கள் மிக சொற்பம் பேர் இருக்கலாம்.

பியோதர்  தாஸ்தாவெஸ்கி அவருடைய சமகாலத்தில் அஞ்சி நடுங்கிய சில ரஷ்ய எழுத்தாளர்கள் இன்று மிகவும் சாதாரணமானவர்கள் அவரோடு ஒப்பிடும் போது .  சாதாரணமான எழுத்தாளர்களின் பெயர்களை சொல்லி சில படைப்பு சார்ந்த விஷயங்களை அவர்களிடம் கேட்டுப் பார்த்தால் தெரியும் என்பது போல சில இடங்களில் சொல்லி வைத்திருக்கிறார்.சமகாலம் என்பது எப்போதுமே கைக்கடக்கம் .சுருக்கம்.சமகாலத்தைக் காட்டிலும் பிரமாண்டமானது அதற்கு வெளியில் விரிந்திருக்கும் காலம் .

பா.வெங்கடேசனோடு பேசிக் கொண்டிருக்கும் போது ;சமகால புரிதலை மட்டுமே கணக்கில் கொண்டு பரவலான வாசக கவனம் பெறுபவற்றை மட்டுமே படைப்பாகக் கருதும் போக்கு ; சமீபகால தமிழ் இலக்கியத்தில் உருவாகியிருப்பது நல்லதல்ல என்றார்.அதற்காக சமகாலத்தில் அது புரிதலில் சிரமம் கொண்டே இருந்தாக வேண்டும் என்பதில்லை.சமகால வாசகனை மட்டுமே கருத்திற் கொண்டு ஒரு படைப்பு உருவாவதில்லை என்பதே இதன் பொருள் .  படைப்பு சமகாலத்தில் மட்டுமே புழங்க கூடியதாக இருப்பதில்லை .பத்து பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் அப்போது வருகிற வாசகனிடத்தில் படைப்பு  செல்வாக்கு பெற்றிருத்தல் அவசியம் என்று சொன்னார்.தற்போதைய தமிழ் சூழலில் பிரபலம் பெறும் எழுத்துக்களுக்கு அத்தகைய வன்மை இருக்குமா என்பது அவருடைய சந்தேகம். பல படைப்புகள் சமகாலத்தில் எழுதப்படுபவையே தவிர சமகாலத்திற்காக எழுதப்படுவதில்லை என்பதனையும் அவர் நினைவுபடுத்தினார்.

எல்லா மொழிகளிலும் கவிதைகளே மொழியின் முதல் பாய்ச்சலை நிகழ்த்துகின்றன.புனைகதைகள் அவற்றை வளர்த்து வளர்த்து உருவம் தந்த பின்னரே கவிதைகள் உள் மொழியில் துலங்கும்.நவீன காலகட்டத்தில் தமிழில் கவிதைகள் உருவாக்கிய பாதிப்புகள் இன்றுவரையில் புனைகதைகளை இழுத்துக் கொண்டிருப்பதை  வாசகன் கவனித்தால் விளங்க முடியும்.ஒரு ஐம்பதாண்டு காலத்தை தமிழில் நவீன கவிதைகள் கைவசப்படுத்தியிருக்கின்றன. நவீன காலக்கட்டத்திற்குப் பிந்தைய கவிதைகள் இன்னும் புனைகதைகளில் எட்டவில்லை.புனைகதைகள்  தமிழில் ஒருபக்கமாக இழுத்துக் கொண்டு நடப்பதற்கு வேறு ஒரு காரணமும் இல்லை.இன்றைய தமிழ் புனைகதையாளனுக்கு இன்றைய தமிழ் கவிதை என்ன சொல்கிறது என்பது விளங்கவில்லை.அது விளங்குமேயானால் அடுத்த ஐம்பதாண்டு கால தமிழ் மனவெளியின் சாராம்சம் அதுதான்.

விளங்குவது என்பதற்கு இன்று விளங்குவது என்கிற அர்த்தம் இல்லை.இன்று விளங்காதவை அத்தனையும் நாளை விளங்குவதற்கானவை என்பதும் இதன் அர்த்தம் இல்லை.படைப்பு - காலம் -  மக்கள் இந்த மூன்று தரப்பும் ஒன்றில் ஒன்று முயங்க வாசகர்களே ஊடகம்.மக்களும் வாசகர்களும் ஒன்றுபோலிருக்கும் வேறு வேறு.மக்கள்தான் சமகாலத்தில் நிற்பவர்கள்.வாசகனுக்கு காலம் இல்லை.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"