தமிழ்நாட்டு மாணவர்கள் பரிசோதனை எலிகளா மோடி ?

தமிழ்நாட்டு மாணவர்கள் பரிசோதனை எலிகளா மோடி ?

மார்ச் ஒன்றாம்  தேதியுடன் நீட் நுழைவுத்  தேர்விற்கான விண்ணப்பிக்கும் கால வரையறை ,கெடு  முடிகிறது.இன்னும் மீதம் இருப்பவை ஏறக்குறைய பத்து நாட்கள்.இதுவரையில் மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஒரு பதிலும் சொல்லவில்லை.மாநில அரசாங்கம் சட்டசபையில் நீட் தேர்வை எதிர்த்து மசோதா  நிறைவேற்றியதுடன் அதனை முன்னோக்கிச் செலுத்த ஏதும் காரியங்கள் செய்யவில்லை.மருத்துவப்படிப்பை விரும்பும் தமிழ்நாட்டு கிராமப்புற மாணவர்களும் அவர்தம் பெற்றோரும் அடைந்திருக்கும் குழப்ப நிலைக்கு யார் பொறுப்பு ? இந்த மாணவர்களுக்கு இந்த காலம் மீண்டும் ஒருமுறை திரும்பி வருமா என்னா ?

இரண்டு விபரங்களை அறியத் தருகிறேன்.மருத்துவப் படிப்பில் சேர விரும்புகிற ஒரு தமிழ்நாட்டு மாணவன் நீட் நுழைவுத் தேர்வின் அடைப்படையில் செல்ல வேண்டுமாயின் அதற்கு அவன் படிக்க வேண்டிய ,பயிற்சி எடுக்க வேண்டிய முறை வேறு. மாநில பாடங்களில் அவன் அதிக அக்கறை செலுத்த வேண்டியதில்லை.ஐம்பது விழுக்காடு பெறுவதற்கான உழைப்பை மாநில பாடத்திட்டத்தில் செலுத்தி விட்டு நீட்டுக்கான சி.பி.எஸ் .சி பாடத்திட்டத்தை அவன் பூரண மனனம் செய்யவேண்டும்.கேள்வித்தாள்களில் பயிற்சி பெறவேண்டும் .நீட் இல்லை மாநிலத்தில் ஏற்கனவே உள்ள முறையே பின்பற்றப்படும் எனில் மாநிலபாடத் திட்டத்தில் அவன் அதிக மதிப்பெண் பெற்றே ஆகவேண்டும்.இந்த இரண்டு விதமான பாதைகளும் முற்றிலும் ஒன்றிற்கு ஒன்று முரண்பட்டவை.நீட் தேர்வா ? அல்லது மாநிலத்தில் பின்பற்றப்பட்ட நிலையா ? என்பதில் நீடித்து வருகிற குழப்பம் மருத்துவம்   பயில விரும்புகிற தமிழ்நாட்டு மாணவனுக்கு இந்த ஆண்டில் பெருத்த இடையூறாக நிற்கிறது.

நீட் கிடையாது மாநில முறையையே இனி பின்பற்றப் போகிறார்கள் என்கிற செய்திகள் கிடைக்கிற போது ஏழை மாணவர்கள் மதிப்பெண் பெறுவதற்காக உழைக்கிறார்கள்.அதுவே   "நீட் தான்"  வேறு வழியில்லை என்று திசைமாறும்போது அவர்கள் மாநில பாட திட்டத்தில் கவனம் குறைத்து சி.பி.எஸ்.சி யை கையில் எடுக்கிறார்கள்.இவ்வாறாக அவர்களை திக்கு முக்காடச்  செய்வது என்ன தன்மை என விளங்கவில்லை.எந்த ஒரு நாட்டில் மாணவர்களின் கல்வி விஷயத்தில் இப்படியான முரண்பட்ட குழப்பம் தீர்வு காணப் படாமல் நீடித்துக் கொண்டே   போகுமா ?   இந்த மாணவர்களை எல்லாம் மனிதர்கள் இனத்தில்தான் இன்னும் வைத்திருக்கிறீர்களா ? இல்லை வேறுஏதேனும் வகையில் புரிந்து
கொண்டிருக்கிறீர்களா ? பரிசோதனை எலிகளா அவர்கள் ?

இந்த இரட்டை நிலை இல்லாமல் உயர்ந்தததோ ,தாழ்ந்ததோ  பின்பற்றப்படப் போவது குறிப்பிட்ட ஒரு முறையில் மட்டும்தான் என்பதில் தெளிவு ஆரம்பத்திலிருந்தே இருக்குமேயானால் கூட அவர்கள் அதனைப் பின்பற்றி தயார்பட்டு விடுவார்கள்.

இதுவரையில் ஒரு தெளிவும் இல்லை.செயல்முறைத்  தேர்வுகள் முடிந்து விட்டன.மத்திய அரசு நீட் என்கிறது .மாநில அரசு நீட் தேர்வை எதிர்த்து சட்ட மசோதா நிறைவேற்றியிருக்கிறது.

சிக்கலான அரசியல் சூழ்நிலைகளை பயன்படுத்தி கார்பன் கைதராக்சைடு தமிழ்நாட்டில் உறிஞ்ச ஒப்புதல் வழங்கியிருக்கும் மோடி அரசிற்கு மாணவர்கள் நலனில் கண்பார்க்கத் தான் சமயமேயில்லை போலும் .

1 comment:

  1. கட்டுரையின் கடைசி வரிகள்.. //தமிழ்நாட்டில் உறிஞ்ச ஒப்புதல் வழங்கியிருக்கு// பல வதந்திகள் மக்களிடம் பரவியுள்ளது.. தமிழ் நாட்டில் மட்டுமே இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பது போல.. நிச்சயம் இல்லை.. 31 contract areas in 8 States. Only 2 in TN and Puduchery. குஜராத் (காம்பே), அசாம், மத்திய பிரதேஷ், ஆந்திர, ராஜஸ்தான் என எட்டு மாநிலங்களில் 31 பகுதிகளில் நடைமுறை படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பார்க்க லிங்க்
    https://www.indoasiancommodities.com/.../india-approves.../
    http://petroleum.nic.in/docs/NIO_BOOKLET_21.05.16.pdf

    ReplyDelete

நினைத்தார்கள் நினைத்திருந்தேன் - 62

நினைத்தார்கள் நினைத்திருந்தேன் 1 இடையில் இறந்து விடுவேன் என்றே எல்லோரும் நினைத்தார்கள் நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன் 2 ...