பின்னிருந்து இயக்குபவனின் பெயர்தான் கடவுள்.

பின்னிருந்து இயக்குபவனின் பெயர்தான் கடவுள்.


தூய அரசியல்வாதிகள் பற்றிய கற்பனைகள் எனக்கில்லை.அப்படியொருவர் உளரேயாயின் அவரை நான் விரும்பவில்லை.அவர் பற்றிய புனித உருவங்களை உருவாக்குபவர்களின் , உள்ளீடுகளின் பூதகணங்கள் அச்சுறுத்தக் கூடியவை.ஏனெனில் அப்படியொருவர் இன்று சாத்தியமாயின் அதுபோன்ற பெரும் பொய் ஒன்றிருக்க இயலாது.இன்றைய எதிர்பார்ப்புகள் ஓரளவிற்கு ஐம்பது சதமானம் காலத்தின் தொடர்பில் இருக்கிறாரா என்பதை பற்றியதுதான்.

அப்படியொருவர் இருந்ததாக பலரும் தங்கள் நினைவில்  பேசிக் கொண்டிருக்கிறார்கள்.அவர் நினைவில் இருக்கிறார் என்பதே உண்மை.அவருக்கு கால்கள் கிடையாது. அப்படியொருவர் இருந்தால் எப்படியிருக்கும் ? .அவருக்கு கால்கள் இல்லாதிருக்கும் .அன்றாடத்துடன் தொடர்பற்ற கற்பனைகளை முன்வைக்கும் போது பெரும்பாலும் பிற உருவங்களில் ஒப்படைக்க தயாராகி விடுகிறோம்.பொறுப்பெடுக்க தயாரில்லை என்பதை உணர்த்துகிறோம்.தூய கற்பனைகளை வைத்துப் பூட்டுவதற்கு ஒரு அரசியல் உடல் தேவைப்படுகிறது.இந்த சமர்த்தான கற்பனை என்னுடைய தாத்தா நோயற்றவராக இருந்தார் என்பதைப் போன்றதுதான்.உப்பு சப்பில்லாதது.அப்படியொருவர் வாய்த்தால் நமது பொறுப்புகளை முடக்கிவிட்டு அன்றாடத்திற்குள் அவசரமாகவும் ,கவலையின்றியும் பிரவேசித்து விடமுடியும் .இந்த கற்பனையைத் ஒரு உடலில் திணிக்க காவு கேட்டுக் கொண்டேயிருக்கிறோம்.இந்த போக்கு நமக்கு மட்டும் என்றில்லை.உலகமெங்கும் இருக்கிறது.இதன் பின்னணியில்தான் கோடிகளில் புழங்கும் பி.ஆர்.ஓ கம்பெனிகள் செல்லப்பணியாற்றுகின்றன.

இப்போதைய தூய உரு என்பது மக்களிடம் என்னவாக இருக்கிறது ? என்பதைக் கண்டறிய கடுந்தவசு தேவை .இந்த கடுந்தவசின் நிறம் தெரியுமானால் அவனே சிறந்த பி.ஆர்.ஓ.கம்பெனி.எதனை எப்படி மாற்றவேண்டும்.அதிகாரத்தை எதனைக் கொண்டு அடிக்க வேண்டும் என்பதில் கடும் புலமை அவற்றுக்கு அவசியம்.ஒரு தமிழ் சினிமா எடுப்பதற்கு மக்களின் அலைவரிசையுடன் கூடிய ஒரு சிறுமூளை தேவைப்படுவதை ஒப்ப பி.ஆர்.ஓ.கம்பெனிகளுக்கு ஆயிரம் மடங்கு அவசியம்.

நம்முடைய வார்த்தைகளை ,உரையாடல்களை அவை சிருஷ்டித்துத் தரவேண்டும் .பல்வேறு உரையாடல்களை முன்வைத்து அதிலிருந்து நமது தேர்வு போல தோன்றக் கூடிய ஒரு உரையாடலையும் அது நம்மிலிருந்து பேசத் தொடங்க வேண்டும்  . பி.ஆர்.ஓ கம்பெனிகள் ,
ஊடகங்கள்  இவற்றையெல்லாம் இன்று பிரித்தறிவது என்பது சாதாரணமான காரியங்களில் இல்லை.பத்துப் பதினைந்து தரப்புகள் இருப்பதாக நமது உரையாடலின் முன்பாக உருவங்கள் குவிகின்றன.இவற்றில் எதனை தேர்வு செய்தாலும் அதிகாரத்திற்கு அதனால் ஒரு இடர்பாடும் கிடையாது.

இன்று இதனை விளங்கிக் கொள்ள சிறிய பரிசோதனை செய்து பாருங்கள்.நீங்கள் விரும்பும் தலைவரின் மாதிரியை முதலில் எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் எதிரியின் மாதிரியை எடுங்கள் .யோசித்துப் பார்த்தால் இரண்டுமே அவர்களுக்குச் சொந்தமானவை அல்ல விளங்கிவிடும்.சினிமா நட்சத்திரங்களை திரையில் கண்டு நாம் உருவாக்கிக் கொள்கிற உருவங்களுக்கு நிகரானவைதான் இவை.இரண்டிற்குமே நாமும் பொறுப்பில்லை ,அவர்களும் பொறுப்பில்லை.பின்னர் யார்தான் இவற்றுக்குப் பொறுப்பு என்று கேட்டால் அதுதான் மந்திரம்.சூக்குமம்.கண்ணில் நேரடியாக புலப்பட மறுக்கும் பொருள்.

எங்கள் ஊரில் ஒரு வழக்கு நடைபெற்றது.முதலில் ஒருவர் குறிப்பிட்ட சொத்து தனக்கு உடமைப்பட்டது என்று ஒரு பராதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார் உரிய ஆவணங்களுடன் .வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இடையில் ஒருவர் உட்புகுந்து இல்லை ,குறிப்பிட்ட சொத்து தனக்குப் பாத்தியப்பட்டது என்று கூறி உள்ளே புகுந்து அடிக்கிறார்.வழக்கின் திசையில் புதிய வெளிச்சம் ஏற்பட்டு விட்டதாக எல்லோரும் நம்புகிறார்கள்.வழக்கு போய்க் கொண்டிருக்கிறது.முடிவில் இந்த இரண்டு தரப்புகளும் தாங்கள் வழக்காட விருப்பவில்லை .சமாதானமாக நாங்களே பிரிவினை செய்து கொள்கிறோம் என்கிறார்கள்.நீதிமன்றம் இருவரையும் மெச்சி வழக்கை சமாதானப்படுத்தி விடுகிறது.மேற்கொண்டு இதில் காரியமில்லை.வாதியும் பிரதியும் இணைந்து தங்களுக்குள் சொத்தைப் பிரித்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பு சொல்கிறது.நீதிமன்றத்  தீர்ப்பை அரசு உத்தரவாக எடுத்துக் கொண்டு மேற்படி சொத்தை இவர்களே கொண்டு நிலைநாட்டிய ஆவணங்களின் அடிப்படையில் அறுபத்தேழு பேருக்கு விற்பனை செய்து பத்திர பதிவும் செய்து முடிக்கிறார்கள்.இவர்கள் தங்கள் தங்கள் தரப்பில் ஆவணங்களுடன் நின்று வாதாடிய சொத்து இருவருக்கும் உரியது அல்ல.அரசுக்கு உரியது என்று தெரிய வர பின்னர் பத்தாண்டுகள் ஆயிற்று.

ஆடை நமதில்லை,உருவம் நமதில்லை.நிறம் நமதில்லை.பின்னிருந்து இயக்குபவனின் பெயர்தான் கடவுள்.   

No comments:

Post a Comment

கடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன.

கடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன. இன்று காலையிலேயே வழக்கத்திற்கு மாறாக கன்னியாகுமரி மாவட்டம் விடிந்தது.கடற்கரைகளில் இருந்து ...