படைப்பாளியின் இருத்தல் சு.வேணுகோபால்.

படைப்பாளியின் இருத்தல் சு.வேணுகோபால்.


எழுத்தாளர் சு .வேணுகோபால்  நாகர்கோவிலில் நடைபெற்ற "அனக்கம்" கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.நெடுநாட்களுக்குப் பிறகு அரசியல் வாடையற்ற படைப்பாளியின் மாறுபட்ட கண்ணோட்டத்தை மட்டுமே வெளிப்படுத்திய உரையாக அது இருந்தது.இதுதான் இங்கே பற்றாக்குறையாகவும் இருப்பது.

ஒரு பொது அரங்கில் இது போன்ற உரையைக் கேட்டு வெகு நாட்களாயிற்று.படைப்புக் கண்ணோட்டம் அற்ற நாலாந்தரமான நபர்கள் பெரும்பாலும் தங்கள் குறுகிய கால அரசியல் கருத்துக்களால் சூழலை முடக்குகிறார்கள்.படைப்புக் கண்ணோட்டம் அற்றவர்களுக்கு அரசியல் கருத்துக்கள் புகலிடங்களாக அமைந்து விடுகின்றன.அவற்றுக்கும் படைப்புக் கண்ணோட்டத்திற்கும் தொடர்பேதும் கிடையாது என்பதை வாழ்வு முழுதும் அவர்கள் அறிவதுமில்லை.

படைப்பாளி இந்த அரசியல் தற்காலிகத்தில் சற்று மங்கி தெரிந்தாலும் கூட அவனுடைய கண்ணோட்டமே ஜீவனுள்ளது என்பதை உணர்த்தியது அவருடைய  உரை.தன் படைப்பின் தருணங்கள் எவ்வாறு உருக்கொள்கின்றன என்பவற்றை அவர் ஒரு குழந்தையைப் போல விவரித்த விதம் வசீகரிப்பு மிக்கதாக இருந்தது .

சமகாலத்தில் சில படைப்பாளிகளின் மீது ஏனோ சரியாகக் கவனம் குவிவதில்லை.ஆனால் பின்னாட்களில் சமகாலத்தில் மறையும் அதன் இருப்பு எவ்வளவு முக்கியமானது என்பது புலப்படும்.இப்படியான படைப்பாளிகளுக்குத் தமிழில் நிறைய முன் உதாரணங்கள் உண்டு.அது போன்ற ஒரு இருப்பு சு.வேணுகோபாலுடையது . அரசியல் சூறாவழிகளில் அடித்துச் செல்லப்படாமல் கரையேறும் வழியறிந்தவர்.இவரைப் போன்றவர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு பாக்கியம் நிறைந்தவர்கள்.அவரை படித்து அறிந்த, உணர்ந்த வாசகர் ஒருவர்  அரங்கில் அமர்ந்து அவரிடம் கேள்விகளை நெருக்கமுற முன்வைத்ததே அவர் எழுத்தின் பாக்கியம். காலம் படைப்பாளிக்குச் செய்யும் பரிகாரம் இதுதான்.

இளைஞர்கள் இவரிடமிருந்து கற்க பல விஷயங்கள் உண்டு.அவற்றில் முதன்மையானது எழுத்தின் மீதான தீராத வைராக்கியம்.கனவு.அவரை பத்துப்பதினைந்து வருடங்களுக்கு முன்பு பார்த்தது.முன்னைக் காட்டிலும் அபாரமான கூருணர்ச்சி , தெளிவு ,உந்துதல் .காண மகிழ்ச்சியாக இருந்தது. சந்தோசம்

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"