நிழற்தாங்கலில் "ஜெயமோகனுடன் ஒரு நாள் " மார்ச் 26 ஞாயிறு

நிழற்தாங்கலில் "ஜெயமோகனுடன் ஒரு நாள் "
மார்ச் 26 ஞாயிறு

நாகர்கோயில் "நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளியின்" சிறப்பு நிகழ்வாக மார்ச் 26 ஞாயிறு "ஜெயமோகனுடன் ஒரு நாள் " சந்திப்பு நடைபெற உள்ளது.காலை அமர்வு 8 மணிக்கு கவிஞர் பா.தேவேந்திரபூபதி Devendhira Poopathy Bhaskarasethupathy கவிதைகள் வாசித்து இந்நிகழ்வைத் தொடங்கி வைப்பார்.மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் என்னுடைய Lakshmi Manivannan சில கவிதைகள் வாசிப்புடன் மதிய அமர்வு தொடங்கும்.

நாங்கள் ஏற்பாடு செய்த சில நிகழ்வுகளில் ஜெயமோகனுடன் சரியாக உரையாட இயலவில்லை என்கிற குறை வாசகர்களுக்கும் ,சக படைப்பாளிகளுக்கும் உள்ளது.அவர்கள் பலமுறை இதுகுறித்துத் எங்களிடம் தெரிவித்து விட்டார்கள்.அக்குறையை அகற்றும் விதமாகவும் நிழற்தாங்கல் இந்நிகழ்வை ஏற்பாடு செய்து வருகிறது.

ஆசை பலமடங்கு இருப்பினும் கூட ஐம்பது பேருக்கும் அதிகமாக இப்போது இந்நிகழ்வில் பங்கேற்பாளர்களை அனுமதிக்கும் சூழ்நிலை இல்லை.ஐம்பது பேருக்கு உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கு கட்டணங்கள் ஏதும் கிடையாது.வருகை தர விரும்புபவர்கள் காலையுணவை முடித்து விட்டு வாருங்கள்.மதியம் சிறப்பான சைவ உணவிற்கு நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம்.அதுபோல இருவேளைகள் தேநீருக்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம்.வருகை தர விரும்புபவர்கள் தங்கள் வருகையை முன்கூட்டி எங்களுக்கு உறுதி செய்து தெரிவிக்க இயலுமேயானால் ஏற்பாடுகளை கூடுமானவரையில் குறைவின்றி செய்ய அது எங்களுக்கு உதவியாக இருக்கும்.

இலக்கியம் ,கலை,தத்துவம் ,அறிவு ,பின்நவீனத்துவம் என்று எது பற்றி வேண்டுமாயினும் இந்நிகழ்வில் ஜெயமோகனுடன் மனம் திறந்து உரையாடலாம்.

ஜெயமோகனுக்கும் எனக்குமான உறவு தொண்ணூறுகளில் தொடங்கியது.இருவருக்கும் மையமாக அப்போது சுந்தர ராமசாமி வாழ்ந்த காலம் அது.இப்போது நினைத்துப் பார்க்கையில் ஒருவருக்கொருவர் ஆச்சரியபடத்தக்க வகையில் அப்போது நிறைய கால அவகாசம் இருந்தது.அது ஒரு சூக்குமமான இணைப்புதானோ என்னமோ ? சுராவை சந்திக்காமல் இருந்திருந்தால் என்னைப் பொறுத்தவரையில் தடம் தெரியாமல் அழிந்திருப்பேன் என்பதே உண்மை.

சாராம்சமாக தலைகீழாக உள்ளிறங்கியிருப்பவர் அவர்.தெய்வம்தான் இந்த வாய்ப்புகளை சூது செய்திற்றோ என்கிற ஐயம் எப்போதும் எனக்கு உண்டு.அவரோடு நெருங்கியிருந்த காலங்கள் எட்டு வருடங்கள்.ஜெயமோகனுக்கு இன்னும் அதிகம் இருக்கும்.அவரோடு இணைந்திருந்த காலங்களில் அவர் கூற்றுகளில் பலதும் எனக்கு விளங்கவில்லை என்பதே உண்மை .ஆனால் அவை எதுவுமே மனதிலிருந்து விட்டுப் போயிருக்கவில்லை.பௌதீகமாக அவரை இழந்த பிறகுதான் அவர் எனக்கு அர்த்தமாகத் தொடங்கினார்.ஜெயமோகனுக்கும் அவருக்கும் வாழுங்காலத்தின் எங்கள் சந்திப்பின் தொடக்க காலத்திலிருந்தே புரிந்து கொள்ளுதலில் இடைவெளிகள் இருந்ததில்லை.ஜெயமோகன் அவரோடொப்பம் அவர் யார் என்பதை கணிசமாக புரிந்து கொண்டிருந்தார்.

எம். கோவிந்தன்,பி.கே.பாலகிருஷ்ணன்,டி.டி . கோசாம்பி போன்றோர் விஷயங்களில் இருவருடைய பார்வைகளிலும் அதிக இடைவெளிகள் கிடையாது.ஜெயமோகன் என்னுடைய மனவேகத்திற்கும் முப்பது வருடங்களுக்கும் அதிகமான தொலைவில் சிந்திப்பவராகவே அப்போதும் இருந்தார்.இப்போதும் இருக்கிறார். சுராவை அவர் கடந்து செல்லும் போது சுராவின் நிழல் உறுதியாக என்னில் கட்டியாக பற்றிற்று.சுராவை என்னிலிருந்து கழற்றுவது அவ்வளவு எளிதான காரியமல்ல.

சுராவின் போதாமைகள் குறித்து பேச்சு வரும்போதும் அதன் நீட்சியாகத் தான் ஜெயமோகனைப் பார்க்கிறேன்.அதன் பிரம்மாண்டமானதொரு நீட்சி.கழிந்த சந்திப்பில் சுரா நம்மை காப்பாற்றியிருக்கிறார் என்று ஜெயமோகன் சொன்னதைக் கேட்க நெகிழ்ச்சியாக இருந்தது.அதுதான் உண்மை .எல்லோரையும் போல கெட்டி இறுக்கமடைந்தோ,சமய சார்புகளிலோ மோதிவிடாமல் ,மோதிக் சிதறாமல் படைப்புப் பார்வைகளில் நின்று அவர் எங்களை பாதுகாத்திருக்கிறார்.

ஜெயமோகனைப் பொறுத்தவரையில் ஆரம்பத்திலிருந்து இன்றுவரையில் அவர் என்னுடைய பார்வைகளில் ,கண்ணோட்டங்களில் புதிதாக சிலவற்றை திறந்து விடுபவராகவே இருந்து வருகிறார்.ஒவ்வொரு சந்திப்பிலும் அது நிகழ்கிறது.என்னை எந்த இடத்தில் திறக்கிறார் என்பது எனக்குத் தெரிவதை போன்றே அவருக்கும் தெரிந்திருக்கும் என்றே நம்புகிறேன்.அதனாலோ நேரடி தொடர்பினாலோ மட்டுமல்ல.உடன் வாழும் காலத்திலேயே அவர் டால்ஸ்டாய் .தாஸ்தெவெஸ்கி போன்றதொரு அபூர்வமாக அவர் உருவெடுத்திருக்கிறார்.அவருடைய பெறுமதிகள் அனைத்துமே அதனால் ஆனவை.பலருக்கும் அவர் நம்முடன் உடனிருப்பதால் அவர் இருப்பின் ரூபம் கண்மறைக்கிறது.

ஜெயமோகனுடன் சந்திப்பது எல்லோருக்கும் எப்போதும் உத்வேகமளிப்பதாகவே இருக்கும்.எதிர்மையாகத் தோன்றுவோருக்கும் கூட உத்வேகமளிக்கும் .அந்த உத்வேகம் குறுக்கும் நெடுக்குமாக நம்மை படைப்பின் திசை நோக்கி உந்தக் கூடியது.

வாருங்கள் சந்திப்போம் .
வருகையை அறியத் தாருங்கள்

நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளி
7 / 131 E பறக்கை @ போஸ்ட் ,நாகர்கோயில்
குமரி மாவட்டம்

தொடர்பு எண் - 9362682373

மின்னஞ்சல் - slatepublications @gmail .com

No comments:

Post a Comment

நினைத்தார்கள் நினைத்திருந்தேன் - 62

நினைத்தார்கள் நினைத்திருந்தேன் 1 இடையில் இறந்து விடுவேன் என்றே எல்லோரும் நினைத்தார்கள் நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன் 2 ...