சசிகலாவை ஏன் ஆதரிக்க வேண்டும் ?

சசிகலாவை ஏன் ஆதரிக்க வேண்டும் ?

இரண்டு காரணங்கள் பிரதானமானவை.முதலில் அ.தி.மு.க என்ற கட்சி காப்பாற்றப்பட்டாக வேண்டும்.அது வெற்றிடமாகக் கூடாது.அப்படியொரு வெற்றிடம் ஏற்படுமேயானால் அதுவே இப்போது பிளவை ஏற்படுத்துபவர்களின் ஆசையில் இருக்கிறது.அந்த வெற்றிடத்தில் தங்களைப் பொருத்திக் கொள்ள முடியும் என நினைப்பவர்களின் ஆசை பலிக்கக் கூடாது.பா.ஜ.க இப்படியொரு முயற்சியை எடுத்துக் பார்க்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.பன்னீர் அவர்களுக்குத் தோதான ஒரு நபராக தற்போது அவர்களுக்குத் தென்படுகிறார்.பன்னீரை முதன்மைப்படுத்தி மாநில அதிகாரத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று பா.ஜ .க கருதுகிறது.

பா.ஜ.க தமிழ்நாட்டை தங்கள் கைவசம் கொண்டுவந்தாலும் எனக்கு அதில் ஒன்றுமில்லை.ஆனால் வெறும் வெற்றிடம் நிரப்பிகளாக அவர்கள் இங்கே வந்து சேரக் கூடாது.ஜனநாயக ரீதியில் இந்த இடத்திற்கு அவர்கள் வர வேண்டுமே அல்லாது இது போன்ற குறுக்குவழிகளில் அவர்கள் வரக் கூடாது.இந்தியாவின் பல மாநிலங்களில் பா.ஜ.கவின் இந்த குயுக்தி பற்றிய விமரிசனங்கள் உள்ளன.அகிலேஷ் யாதவ் போன்றவர்களும் ஏற்கனவே இந்த குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார்கள்.மாநிலங்களில் பிளவு அரசியலின் மூலமாக அவர்கள் இடம் பிடிக்க முயல்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு தமிழ்நாட்டில் வெளிப்படையாகத் தெரிகிறது.  

பா.ஜ.க பிளவு அரசியலில் அறுவடை செய்யப் பார்ப்பது தமிழ் நாட்டில் முறியடிக்கப்பட தற்போதைய நிலையில் சசிகலாவை ஆதரிப்பது தவிர பிற வழிகள் ஏதும் கிடையாது.பின்னாட்களில் சசிகலா   பா.ஜ.கவை நோக்கியோ , அல்லது பா.ஜ.க சசிகலாவை நோக்கியோ திரும்பாது என்பதற்கு என்ன நிச்சயம் ? என்று ஒரு கேள்வியைக் கேட்கலாம்.அதிகாரத்திற்கு யார் திரும்புகிறார்களோ அவர்களை நோக்கித்தான் பா.ஜ.க இருக்கும் அதில் சந்தேகமில்லை.ஆனால் சசியை ஆதரிப்பதன் மூலமாக பா.ஜ.கவின் 'பிளவில் குயுக்தி அரசியல்"  தன்மையிலிருந்து தமிழ்நாடு தன்னை தற்காத்துக் கொள்ள முடியும் .இப்போதைய வெற்றிடத்தின் கனவு அவர்களுக்குப் பலிக்கவில்லையெனில்  இது போன்றதொரு வெற்றிடம் உருவாகி மீண்டும் அவர்கள் இப்படியொரு கனவு காண தமிழ்நாட்டில் முப்பது வருடங்கள் ஆகும்.

பன்னீர் ஏன் அ.தி.மு.கவை காப்பாற்ற மாட்டாரா என்று கேட்டால் ; பிற சக்திகளின் பின்புறத்திலிருந்து புதிதாக தனது அரசியல் கனவை எய்தியிருப்பவர்  அவர் .அ.தி.மு.க வை காப்பதல்ல அவரது பிரயாசை .பிறர் மூலம்  தனக்கு கிடைத்திருக்கும் அரசியல் கனவை நிறைவேற்றும் அதிகாரப்  போட்டியில் அவர் இப்போது பிரவேசித்திருக்கிறார்.இதில் அவர் வெற்றியடைந்தாலும் சரி ,பின்னடைந்தாலும் சரி  அவர் வேறு இடத்துக்கே மெல்ல மெல்ல  நகர்ந்தாக வேண்டும்.ஏனெனில் தற்போது அவர் கொண்டுள்ள ஆசை என்பது தன்னை தற்காத்துக் கொண்டு ,பிற ஒரு தலைமைக்கு கீழ்ப்படிந்து அதிகாரத்தில் இருக்க முடிந்தால் இருப்பதுதானே அன்றி அ.தி.மு.க வைக்   காப்பதல்ல .அது அவருக்கு அவசியமும் அல்ல.அந்த அவசியத்தை அவர் கடந்து விட்டார்.ஜெயலலிதா இறந்த போது கூட பன்னீர் இதனைக் கண்டடைந்திருக்க வில்லை.தன்னிடம் இப்படியொரு கூறு உண்டு என்பதை சமீபமாகவே மெல்ல மெல்ல  அவர் புரிந்து கொண்டிருக்கிறார்.

அப்படியானால் யார் தான் காட்சியைக் காப்பாற்றுவார் ? என்று கேட்டால் எவர் ஒருவர் கட்சி நலிவடைந்தால் தானும் சேர்ந்து நலிவடைந்து போவாரோ,உபத்திரவங்களுக்கு ஆளாவாரோ அவரில் மட்டுமே கட்சியின் இருப்பு சாத்தியப்படும்.அ.தி.மு.க இன்றுள்ள நிலையில் நலிவடையுமேயானால் சசிகலாவும் நலிவடைவார் .யோசித்துப் பார்த்தால் பிறர் ஒருவருக்கும் இந்த நெருக்கடி கிடையாது.பன்னீரின் தற்போதைய நிலவரத்தைப் பொறுத்தவரையில் கமந்தாலும் லாபம்,மலந்தாலும் லாபம்.புதிய தனது அரசியல் கனவை அதிகாரத்துடன் எட்டிப் பிடிக்க வேண்டுமாயின் அவர் தற்போதைய சதுரங்கத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் அவ்வளவுதான் விஷயம்.வெற்றிபெறவில்லையெனில் அது அவருடைய புதிய அரசியல் கனவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும்.அல்லாது எது நடந்தாலும் அவருக்குப் பாதிப்பில்லை.வெற்றியில்லை என்று தெரிந்தால் அரசியலில் பின்னகரவும் அவருக்கு வாய்ப்புண்டு.ஒருபோதும் பன்னீரின் ஆசை அரசியல் என்று எனக்குத் தோன்றியதே இல்லை.பிற ஆசைகளும் தூண்டுதலும்தான் அவரை இங்கே இருக்கச் செய்பவை.ஜெயலலிதா   மறைவிற்குப் பின்னர் பா.ஜ.க ஏற்படுத்தி வருகிற சூழ்நிலைகள் காரணமாக திடீரென கடவுளைக் கொண்டவனின் பதற்றத்தில் விட்டுவிடக்கூடாது என்று சிந்திக்கிறார்.எல்லாவிதமான சாதாரணமான மனிதனுக்கும் இது போன்ற சந்தர்ப்பங்களில் இப்படியெல்லாம் சஞ்சலம் ஏற்படுவது தவிர்க்க கூடியது அல்ல.

சசிகலாவின் விஷயம் இப்படியானதில்லை.அ.தி.மு.க விற்கு நெருக்கடி ஏற்படுமேயாயின் அது இன்றைய நிலையில் சசிகலாவுக்கு சேர்ந்து ஏற்படுகிற நெருக்கடி.அ.தி.மு.க விற்கு எதிரான மனோபாவம் கொண்ட அனைவருமே சசியை எதிர்ப்பதற்கு பன்னீர் புனிதமானவர் ,தகுதியானவர்,அல்லது சசிகலாவை விடவும் மேம்பட்டவர் என்பதல்ல அர்த்தம்.அ.தி.மு.க வீழ வேண்டும் என்பதில் இந்த கூட்டுமனங்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமேயாயின் தற்போது இப்போதைய  நிலையில் சசியை தீவிரமாக  எதிர்க்கும் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் என்ன காரணங்களையெல்லாம் சொல்லி எதிர்க்கிறாரோ ,அந்த காரணங்களின் அடிப்படையில்தான் சசியை நான் ஆதரிக்கிறேன்.மற்றபடி சமூக ஊடகங்கள் தற்போதைய ஊடக  மனநிலையைப் பிரதிபலிப்பவை.நாளையே ஊடகங்களின் திசை திரும்புமாயின் அவை அனைத்தும் திரும்பி விடும்.நாளையே அந்த ஆர்.எஸ்.காரர் சசியை ஆதரிக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.அப்போது சசியை எதிர்க்கும் நிலையில் இருக்க வேண்டியும் வரலாம் எனக்கு.

இரண்டாவது காரணம்  காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும் சரி ,பா.ஜ.க என்றாலும் சரி  தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முற்றிலும் கைத்தடியாகி விடமாட்டார் , மக்கள் செல்வாக்கின் அடிப்படையில் நின்று மாத்திரமே சற்று வளைக்க முடியும் என்கிற தன்மையை ஆளுமையில் கொண்டுள்ள தலைவர்கள் ; குறைபாடுடையவராயினும் அவர்கள் தலைமையில் இருப்பதே நல்லது.கைப்பாவை அரசியல் பிற மாநிலங்களுக்கு ஒத்து வருவது போல தமிழ்நாட்டிற்கு உதவாது.  பா.ஜ.க பன்னீர் இருப்பதை மிகவும் பாதுகாப்பு என்று கருதுகிறது.சசி இருப்பதுதான் அ.தி.மு.கவிற்கும் ,தமிழ்நாட்டிற்கும் பாதுகாப்பு என்று நான்  கருதுகிறேன்.வெளிப்படையாக நான் சொல்வது  இது சிறிய வேறுபாடு போல தோன்றக் கூடும்.உண்மையில் இது ஆகப்பெரிய வேறுபாடு.

பன்னீர் இப்போது மத்திய அரசாங்கத்தின் தூதுவர்.சசி நடத்துவது கட்சியை அவர்களிடமிருந்து காப்பதற்கான போர்.

No comments:

Post a Comment

நினைத்தார்கள் நினைத்திருந்தேன் - 62

நினைத்தார்கள் நினைத்திருந்தேன் 1 இடையில் இறந்து விடுவேன் என்றே எல்லோரும் நினைத்தார்கள் நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன் 2 ...