விருதுகளைப் பொறுத்தவரையில் ...

விருதுகளைப் பொறுத்தவரையில் ...
பெறுவதைப் பற்றியோ , தவிர்ப்பதைப் பற்றியோ யாருக்கும் பரிந்துரை செய்ய இயலாது.அது நிச்சயமாக பெறுபவரின் சுயமரியாதையுடனும் ,வாழ்வியல் கண்ணோட்டத்துடனும் தொடர்பு கொண்டது.அதே சமயத்தில் பொதுவான மதிப்பீடுகளை அது புறக்கணிக்காமல் இருப்பதே நல்லது.உதாரணமாக வைரமுத்து விருதை விக்ரமாதித்யன் பெற்றால் அதில் குறை சொல்ல ஏதுமில்லை.பசிக்கும் குழந்தை வழிப்பறி செய்து உண்பதற்கு இணையானது அந்த செயல் . முற்றிலுமாக புறக்கணிப்பிற்குள்ளாகி வருகிற அவருக்கு இதைச் செய்யாதீர்கள் என்று அறிவுரை சொல்லும் தார்மீகம் இங்கே எவருக்குமே கிடையாது.அதே சமயத்தில் கல்யாண்ஜி,கலா ப்ரியா போன்றோர் பெறும்போது இவர்களில் ஒரு சாக்கடைத் தன்மை தோன்றுவதைத் தவிர்க்க இயலாது.ஒருவேளை வைரமுத்து விருதை அசோகமித்திரனோ ,ஞானக்கூத்தனோ பெற்றிருப்பார்களேயாயினும் கூட ஒருகுறையும் ஏற்படாது.இந்த வேறுபாடு என்ன என்பது பற்றி ஒருவர் அறிந்திருப்பாரேயாயின் அவரே விருது பெறுவதில் பொறுப்பேற்பவர் ஆகிறார்.இது முதல் விஷயம்.
இரண்டாவதாக அந்த விருது நமது முன்னோர்களில் எவர் எவரையெல்லாம் சென்று சேர்ந்திருக்கிறது என்பது முக்கியம்.அதையேன் நான் கருத்திற் கொள்ளவேண்டும் ? என்று பெறுபவர் கேட்பாரேயாயின் நல்லதுதான்.அவருடைய பின்நவீனத்துவ ஊழலுக்கு நன்றி கூறலாம்.தேவை புணர்ச்சிதான் என்றான பிறகு நாயுடன் புணர்ந்தாலென்ன ,நரியுடன் புணர்ந்தாலென்ன ? என்று விகடம் பேசுவதற்கு ஒப்பானதுதான் இந்த பின்விகடமும்.உதாரணமாக சந்ரு மாஸ்டர் முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகிற இடத்தில் சென்று மணிவண்ணனுக்கோ ,நடராஜுக்கோ , அபராஜித்துக்கோ ,ராமச்சந்திரனுக்கோ பெற்றுக் கொள்ளும் தைரியம் ஏற்பட வேண்டுமாயின் அதற்கு சில சிறப்பு காரணங்கள் இருந்தே ஆக வேண்டும்.ஆதிமூலம் புறக்கணிக்கப்படுகிற இடத்தில் சென்று அபராஜித் ஒரு பரிசைப் பெறலாம் அதில் தவறேதும் கிடையாது.ஆனால் சந்ரு புறக்கணிக்கப் படுகிற இடத்தில் சென்று அவர் கை நீட்டினால் அது பொறுப்பான ஒரு செயல் இல்லை.இதனையெல்லாம் விலாவாரியாக தர்க்கங்களைக் கொண்டு விளங்க இயலாது.இருதயம் கொண்டு விளங்கவேண்டும்.ஒரு சம்பவத்தை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.ராஜமார்த்தாண்டன் விருதென்று நினைக்கிறேன்.ஷங்கர்ராமசுப்ரமணியனுக்குக் கிடைக்கவிருந்த சமயத்தில் அவர் மறுத்தார்.மறுப்பிற்கான விபரத்தில் லக்ஷ்மி மணிவண்ணனை முற்றிலுமாக புறக்கணிக்கிற ஒரு இடத்தில் எனக்கு கைநீட்டி பரிசைப் பெறுவது என்பது சங்கடத்தைத் தரக்கூடியது என்று தெரிவித்திருந்தார்.அந்த பதில் உண்மையாகவே எனது மனதை நெகிழ வைத்தது.நாம் வாழ்வதற்கான அர்த்தம் எங்கேனும் ஒரு சிற்றிடத்தில் சுடர்விட்டால் போதுமானது என்று தோன்றியது.எனக்கு ஒரு பெருமை நிகழும் அரங்கில் தப்பித் தவறி விக்ரமாதித்யனோ ,வண்ணநிலவனோ ,நகுலனோ , சுந்தர ராமசாமியோ வந்து விடுவார்கள் எனில் அந்த பெறுமதியை அவர்கள் கால்மாட்டில் வைத்து விட்டு ஓடிவிடுவேன் நிச்சயமாக .நானொரு வெற்றுப் பரதேசிதான் ஆனாலும் கூட . இதனையும் தர்க்க ரீதியில் உணர இயலாது.
மூன்றாவதாக முக்கியமானதொரு விஷயம் ; உங்களை ஒரு பெறுமதி வந்தடைந்த பிறகு அதுவே பிற்காலங்களில் மோசமான பன்னாடைகளின் கைகளை சென்று சேராது என்பதற்கான சிறிய உத்திரவாதமேனும் கொடுக்கும் தரப்பில் இருக்கவேண்டும் . இதனை பெறுபவன் நிச்சயமாக உணரமுடியும் .
பல சமயங்களில் பத்து பதினைந்து பன்னாடைகளைக் குளிப்பாட்டுவதன் பொருட்டுத் தான் ஒரு மூதாதைக்கு நெய்யபிஷேகம் நடைபெறுவது.ஒரு உருப்படியை மட்டும் காட்சிப்படுத்தி விட்டு கவரிங் வியாபாரம் செய்வது போலே.பிரான்சிஸ் கிருபாவை முன்வைத்து மிச்சமெல்லாம் தகரமென்றால் அது வெறும் தகர வியாபாரம் தானே ? இனி சாண்டில்யன் விருது ,மெகா ஸ்டார் ராஜேஷ் குமார் விருது என்று நாய்ப்படைகள் கிளம்பினால் எந்த நாடு தாங்கும் ? அம்மை காளி அனைத்தையும் அறிந்துவிடமாட்டாளா என்ன ?

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"