அடையாளங்களை வழிபடுவது எப்படி?

அடையாளங்களை வழிபடுவது எப்படி?
இது நமக்குப் புதியதல்ல.புனித அடையாளங்கள் அனைத்தையும் வழிபட மட்டுமே அறிந்த மக்களாகிய நமக்கு இது முதல் அனுபவமும் அல்ல.
இந்திய அரசின் கொடூரமான முகம்,தன்னை மறைத்துக் கொள்ள உருவாக்கிக் காட்டிய கருணை முகம் அப்துல் கலாமுடையது.நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இது ஒரு தனி மனிதனின் முகம் அல்ல.ஐரோம் ஷர்மிளாவிடமும் , கூடங்குளத்திலும் தனது ஈவிரக்கமற்ற முகத்தை உறுதியாக வெளிபடுத்திக் கொண்டிருக்கும் இந்த அரசின் கருணை முகம்.இந்த கருணை முகம் நிஜமானதுதானா? இந்த முகத்திற்கு பல சாயங்கள் உண்டு.அறிவு,தொழில் நுட்பம்,இந்தியாவின் வல்லரசு கனவு என்று பலவற்றையும் உள்ளடக்கியது இந்த கருணை முகம்.சிறுபான்மையினரின் தரப்பையும் கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்டிருத்தல் இதம் ,மகத்துவம்..இந்திய அரசு தனது பிரகடனமாய் உருவாக்கிய அடையாளங்களிலேயே ஆகச் சிறந்த சிற்பம் இது என்றும் சொல்லலாம்.ஆகச் சிறந்த கடவுள் சிற்பம்.வகுத்தெடுத்த பொது மனசாட்சி.
கழிந்த பதினைந்து வருடங்களில் இந்திய தேசியத்தின் தொழிநுட்பக் கடவுளாக கலாம் உருவாக்கப்பட்டார்.அது கருணையின் சாயலில் உருவாக்கப்பட்டது.இந்த கதாபாத்திரத்தை நிறைவு செய்யும் தகுதி வேறு ஒருவரும் அமையவில்லை என்பதே இந்த கடவுளின் தனிச்சிறப்பு .அவ்வளவு கச்சிதமாகப் பொருந்தியதுதான் இந்த கருணை முகத்தின் சிறப்பே ! ஒருவகையில் சொல்லிப் பார்த்தால் ஏவுகணை,அணு ஆயுதங்களின் தரப்பிலிருந்து அணுவுலைகளின் தரப்பிலிருந்து உருவாக்கப்பட்ட கருணைமுகம் இது.
தொழில்நுட்பத்தின் நேர்மறையான தாக்கங்களை மட்டும் குறிப்பதே இந்த கடவுள் உருவாக்கத்தின் நோக்கம்.அதனை கலாம் செவ்வனே செய்தார்.நாம் இந்த கடவுளின் நேர்மறையான தகுதிகளைப் பற்றி புளகாங்கிதப்பட்டு ,போற்றி ஒருபுறம் நெகிழ்ந்து போயிருந்த சமயத்தில்தான் ; இந்த கடவுளின் எதிர்மறையான அனைத்து கசடுகளும் ஏழைகளின் வீடுகளில் கொல்லைப்புறங்கள் வழியாகக் கொண்டு கொட்டப்பட்டன.எதிர்த்து கேட்க இயலவில்லை.ஏனெனில் இது கடவுள் கொண்டு கொட்டிய கழிவு.புனிதக் கடவுளின் ஏற்பாடு.
நாம் எதனைப் போற்றிப் பாதுகாக்கவிரும்பினோமோ அது கொண்டு வந்து கொட்டிய கசடு." இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டுமெனில் பரந்து கெடுக்க உலகியற்றியான் " என்ற தமிழ் முனியின் அறத்தை நாம் இதன் வாயிலிருந்து பரவசப்பட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் போதேதான் இந்திய முழுவதிலும் உள்ள ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். ஏழைகளுக்கு எதிரான அரசாங்கத்தின் அனைத்துக் குற்றங்களும் கனிந்தன.வெளிநாட்டு வணிகம் செழிக்க அனைத்து வளங்களும் தாரை வார்க்கப்பட்டன.பூர்வகுடிகள் அகற்றப்பட்டார்கள்.கொல்லப்பட்டார்கள் .அவர்கள் குற்றவாளிகள் என நம் முன்னால் நம்ப வைக்கப்பட்டார்கள்.நம்மால் எதனையும் தடுக்க முடியவில்லை.இந்த கருணை முகத்தை நம் முன் காட்டித் தடுத்தார்கள்.ஏழைகள் கொல்லப்படுவதும் ,அகற்றப்படுவதும் ,தண்டிக்கப்படுவதும் ,குற்றவாளிகளாக ஆக்கப்படுவதும் ஒரு தேசத்தின் நலனுக்காக என உறுதியாக நம்மை நம்ப வைக்கும் கடவுளின் முன்னே நாம் என்ன செய்துவிட முடியும் ?
ஒருநாளில் நாமெல்லோருமே காணாமல் போய்விடவேண்டும்.ஏனென்றால் அது தேச நலனுக்காக என்று மிகத் தெளிவாக நமக்குப் போதிக்கப்பட்டது. .நமக்கெல்லாம் இங்கே இடமேயில்லை என்பது தெளிவாகப் புரிகிறது.அதுவும் தேச நலனுக்காகத்தான்.நீங்கள் சொல்வது எதையுமே கேட்கமுடியாது ஏன் என்றால் அது தேசநலனைக் கருத்தில் கொண்டிருக்கிறது.உங்களுக்கு இங்கே ஒரு பெறுமதியும் இல்லை ஏனெனில் தேசநலனே இங்கு முக்கியம்? யாருடைய தேசத்தின் நலன் இது? நீங்கள் இங்கே இடம் பெறலாகாது ஏனெனில் இங்கே நடை பெறுவது புனிதப் பயணம்.உங்களுக்கு இங்கு இடம் இல்லை.யாருடைய புனிதப் பயணம்?
இருபதாண்டுகளில் மிகத் தெளிவாக ஏழைகள் இரண்டாம் தர மக்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள் .நீங்கள் எவரும் கேட்கக் கூடாது ஏனென்றால் அவர்கள் தேசநலனை முன்வைத்தே இரண்டாம் தரமான மக்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள் .ஏழை மக்களே நீங்கள் கொல்லப்படுதலை,ஒடுக்குமுறைக்குள்ளாவதை ,நீங்கள் குற்றவாளிகளாகக் கருதப்படுவதை , தண்டிக்கப்படுவதை , அத்துமீறப்படுவதை சகித்துக் கொள்ளுங்கள்.பொறுத்துக் கொள்ளுங்கள்,உடன்படுங்கள்.ஏனெனில் உங்களைவிட இந்த நாட்டின் தேசநலனே முக்கியமானது.அதை நாங்கள் பராமரித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறுகிற இந்த அரசாங்கத்தை நோக்கி எங்களைக் கொலை செய்யவும் துணிகிற உங்களுடைய தேசநலம் என்பது என்ன?,வெளிநாட்டுக்கு அனைத்து இந்திய வளங்களையும் விற்பதில் நீங்கள் அடைந்துள்ள சாதுர்யமா ? என்று கூட நாம் கேட்கத் துணிவற்றுப் போனமைக்கு அது நம் முன் வைத்த இந்த கருணை முகமே காரணம்.
தேசநலன் என்னும் போலிக் கருத்தாக்கத்தை முன்வைத்து ஆடப்பட்டும் இந்த சூதாட்டத்தில் எதிரிகள் ஏழைகள் என்பதை ஏழைகளின் கண்களிலிருந்தே மறைத்தது இந்த கருணை முகம்தான்.
எல்லாவற்றுக்கும் மேலான ஒரு கடவுளின் திருப்பணி நடந்து கொண்டிருக்கும் போது நம்மால் இடையூறு செய்ய இயலுமா? இந்திய அரசின் அனைத்து விதமான ஏழை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் கொள்கைகளையும் புனிதப்படுத்திக் கொள்ள இந்த முகம் தேவையாய் இருந்தது.
இன்று இந்த முகத்தின் புனிதத்தன்மைக்காக மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.அரசியல்வாதிகளோ இனி இப்படி தீமைகளின் தரப்பிற்குக் கனகச்சிதமாகப் பொருந்தும் ஒரு முகம் தங்களைத் தற்காத்துக் கொள்ள எப்போது கிடைக்குமோ என்கிற கவலையில் ஒருமித்துக் கதறுகிறார்கள் .
வந்தே மாதரம்
ஜெய் ஹிந்த்

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"