ஊழலை மிகைப்படுத்துவதில் உயர்சாதித் தன்மை ஒளிந்திருக்கிறது

ஊழலை  மிகைப்படுத்துவதில் உயர்சாதித் தன்மை ஒளிந்திருக்கிறது

எங்கள் பகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது ஒருமுறை அவர் பேசிய விஷயம் என்னை வெகுவாகக் கவர்ந்தது .அவரை அவருடைய செயல்களால் எனக்குப் பிடிக்கும் .அவை எதுவும் வெற்றுப் பாசாங்கு வேலைகளாக இருந்ததில்லை.நடைமுறை சார்ந்து அனுபவத்துடன் பேசுபவர்.ஒருமுறை பேருந்து நிலைய வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ,அவரும் ஒற்றை ஆளாக வந்து நின்றார்.ஏராளமான ஆழ் துளைகள் மூலம் பேருந்து நிலையத்திற்குள் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காக நடைபெற்ற பணி அது.அரைகுறையாக வேலையை செய்து வைத்திருந்தார்கள்.எவ்வளவு ஆழத்திற்கு குழிகள் அமைக்கப்பட வேண்டுமோ ,அந்த அளவு சரியாக அமைக்கப்படவில்லை . அவரிடம் ஒப்பந்தக்காரர் சரியாகத்தான் இருக்கிறது என்று காரணங்களை சொல்லிக் கொண்டே இருந்தார்.ஒரு அளவிற்கு மேல் பொறுமையற்று நானும் கொத்தனாக இருந்து இந்த நிலைக்கு இன்று வந்திருப்பவன்தான் என்று கூறிய அவர் நேரடியாக வேலையில் இறங்கி; எவ்வளவு குறைவான ஆழத்தில் குழிகள் இருக்கின்றன என்று நேரடியாக செய்து காட்டினார்.பின்னர் அத்தனை குழிகளும் மீண்டும் வேலைகள் செய்து சரி செய்யப்பட்டன.

மற்றொரு முறை நண்பர் ஒருவரோடு சந்தித்த போது இப்போதெல்லாம் ஊழல் அதிகமாகிவிட்டது என்கிறார்களே ? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று நண்பர் அவரை கேட்டார் .முந்தைய தலைமுறையில் அரசியல்வாதிகள் நாலு தலைமுறைக்கு செலவச்  செழிப்புள்ள குடும்பத்தில் இருந்து வந்தார்கள் ,அவர்கள் காரில் வருவது உங்கள் கண்களை உறுத்தவில்லை .இப்போது நான் முதல் தலைமுறை .நான் வருகிற கார் முழுவதிலும் என்னுடைய முழு உழைப்பின் வியர்வையும் நனைந்திருக்கிறது.ஆனால் இதனைக் காண உங்களுக்குப் பொறுக்கவில்லை.நான் இப்போது இந்த காரில் வருவது உங்கள் கண்களை உறுத்துகிறது .இவன் எப்படி காரில் வரலாம் ,இவன் அப்பன் மண் சுமந்தவன் ,இவன் அம்மை களை பறித்தவள் இவனுக்கு என்ன சொகுசு வேண்டியிருக்கிறது ? என்று நினைக்கிறீர்கள்.இதுதான் அடைப்படை பிரச்சனை என்று பதில் சொன்னார்.ஆனால் அந்த காரிடம் நின்று விசாரித்துப் பாருங்கள் ,நான் ஒருபோதும் நான்கு மணிநேரத்திற்கு அதிகமாக தூங்கியதில்லை என்பது அதற்கு நன்றாகத் தெரியும் என்றார்.சாக்கடை எல்லா இடத்திலும்தான் இருக்கிறது.அதுபோலத்தான் ஊழல்.அத்தனைக்கும் நானா பொறுப்பு ? என்றும் திருப்பிக் கேட்டார்.நான் கடினப்பட்டு சம்பாதித்தவற்றையெல்லாம் அரசியல் இழுத்துக் கொண்டு போகிறது என்பது உங்களுக்கு விளங்காது தம்பி.ஆனால் இதில் எனக்கு சந்தோசம் இருக்கிறது.பத்தாம் வகுப்பே தேறாத எனக்கு இதுதான் ஒரு சமூக அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்.அவர் சொல்லியவை அனைத்தும் உண்மை என்பது எனக்குத் தெரியும்.

இங்கே ஊழலை மிகைப் படுத்துபவர்களிடம் நீங்கள் கூர்ந்து கவனித்தால் உயர்சாதித் தன்மை ஒளிந்திருப்பதைக் காண முடியும்.எனக்குத் தெரிந்த வரையில் இந்த தன்மை இல்லாமல் ஊழலைப் பற்றி பேசுகிற மனிதர்கள் மிகக் குறைவு.அப்படியில்லாமல் ஊழலைப் பேசுபவர்கள் அதிகார வெறி நிரம்பியவர்களாக இருக்கிறார்கள்.இதுபோலவேதான் திராவிட இயக்கத்தை முழுமையாக எதிர்ப்பவர்களும் .எனக்கு திராவிட இயக்கம் பேரில் நிறைய பராதுகள் இருக்கின்றன.நான் மதிக்கிற ஒரேயொரு மிகச் சிறந்த முட்டாள் பெரியார் மட்டும் தான்.நான் ஐயப்பன் நடையில் வேண்டுமாயினும் வந்து சத்தியம் அடித்துச் சொல்கிறேன்.ஆனால் நான் வைக்கிற விமர்சனங்களும் ,உயர் சாதித் தன்மையில் நின்று திராவிட இயக்கத்தைக் குறை கூறுகிற குரல்களும் ஒன்று அல்ல.அதிகாரத்தையும் ,அதன் நிமித்தம் பொருளையும் சகல சாதியினருக்கும் ஜனநாயகப்படுத்தியதில் திராவிட இயக்கத்தின் வழி வந்தவர்களுக்கு இணை தமிழ்நாட்டில் கிடையாது.நிறைய போலி செய்திருக்கிறார்கள்.இலக்கியத்தை ,கல்வியை ,அறிவை எல்லாவற்றையும் இவர்களை போன்று போலி செய்த இயக்கமும் கிடையாது.ஆனால் இவர்களை நிராகரிக்க முடியாது.

பிற்படுத்தப்பட்ட ,தலித் சாதிகளை சேர்ந்த தரப்புகள் அரசியல் அதிகாரத்திற்கு வரும்போது பரவலாக வேகமாக இந்த குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.இது இவர்கள் பெற்று வரும் அதிகாரத்தின் மீதான குற்றச்சாட்டே தவிர ஊழல் மீதான குற்றச்சாட்டு அல்ல.

ஊழல் நீக்கமற நிறைந்திருக்கிறது எல்லா இடங்களிலும்.நமது அமைப்பு ஊழலை மேலாண்மை செய்யவும் பராமரிக்கவும் அதிக பட்ச சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது.இதில்  பலனடையாதவர்கள் யாருமே இங்கே இருக்கவே முடியாது.நீங்கள் பல சந்தர்ப்பங்களில் உயிர் பிழைத்து வெளியேற இந்த சாக்கடை பாதைகளே உதவி செய்கின்றன என்பது மறுக்கயிலா உண்மை .  பிரிட்டிஷ் காரனிடமிருந்து அப்படியே இந்த ஊழல் அமைப்பை இறக்குமதி செய்திருக்கிறோம்.நாம் எல்லோருக்குமே இதில் பங்கும் பொறுப்பும் இருக்கிறது.இந்த அமைப்பின்   முன்பாக பகுதி நேர்மையாக ஒருவர் இருப்பது மட்டும்தான் சாத்தியம்.நீங்கள் வெறுமனே பழி வாங்கப்படுகிறீர்கள் என வைத்துக் கொள்வோம் .ஊழல் மூலமாகத்தான் நீங்கள் தப்பித்து வெளியில் வர முடியும்.

அரசியல் என்பது கோடி நுண் துளை கண்கள் கொண்டதொரு மகாமிருகம் . நீங்கள் இங்கே  வேறு யாரேனும் ஒருவரின் குரலில் பேசிக் கொண்டிருப்பதற்கும் கூட வாய்ப்புகள் உண்டு.இனிக்கின்ற அனைத்திற்கும் இனிப்புதான் சுபாவமென்று சொல்லவே முடியாது.

1 comment:

  1. /நீங்கள் இங்கே வேறு யாரேனும் ஒருவரின் குரலில் பேசிக் கொண்டிருப்பதற்கும் கூட வாய்ப்புகள் உண்டு./ நீங்கள் யாருடைய குரலில் யாருக்காகப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் மணிவண்ணன்!

    ReplyDelete

திடீரென ஒருநாளில் நாங்கள் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டோம்

 கவிதைகள் 1 உனக்கு எவ்வளவு பெரிய தோள்கள் நீ விரும்பியவாறெல்லாம் உன்மீது படர்ந்தேறும் காடுகள் மயங்கும் மஞ்சு உடலெங்கும் வெண்ணூற்றுச...