வினைப்பதிவுதான் அந்த நறுமணம் குன்றா மாலை

வினைப்பதிவுதான் அந்த நறுமணம் குன்றா மாலை

நானொன்றும் புதிதாகச் சொல்வதில்லை

வினையை ஒரு கட்டத்தில் நிறுத்தக் கற்றுக் கொள்ளவேண்டும்.இது மிகவும் எளிமையானது.எல்லா வினைகளும் பதிவாகும்.பதிவு ; நாம் கூறுகிற நியாயங்களைக் காரணங்களை பொருட்படுத்துவதில்லை.அது உள்ளது உள்ளவாறு பதிவாகும்.இப்படித்தான் பதிவாக வேண்டும் என்று நாம் அதன் மீது எந்த செல்வாக்கையும் பயன்படுத்தவே முடியாது.அறிவின் செல்வாக்கையோ,அறத்தின் செல்வாக்கையோ ,செய்த பேருபகாரங்களின் செல்வாக்கையோ,திருப்பணிகளின் செல்வாக்கையோ,அருங்கொடைகளின் செல்வாக்கையோ  எதையுமே அதன் மீது செலுத்த முடியாது.இவற்றின் மூலம் கொஞ்சம் அதன் ஆங்காரம் தணிக்கலாம் அவ்வளவுதான்.வினையை நிறுத்திக் கொள்வோமெனில் அதன் வேகம் தணிந்து பதிவுகள் செல்வாக்கை இழக்கும்.அது புதுத்தன்மை  பெறும்.

வினையை நிறுத்திக்  கொள்ளுதல் என்பதற்கு செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளுதல் என்று பொருள் கிடையாது.தேவையற்ற வினைகளின் ஓட்டத்தைக் காரியங்களில் இருந்து பொறுப்பை விலக்கிக் கொள்ளுதல் அது.அதன் மூலம் தேவையான காரியங்களின் செயல் ஓர்மைக்குள் வரும்.தேவையான செயல்கள் துரிதமாகும்.

நாம் பொதுவாகவே தேவையற்ற அனைத்திற்கும் பொறுப்பேற்று எதிர்வினை செய்து கொண்டேயிருப்பவர்கள்.தன் முனைப்பும் ,அங்காரமும் தணியும் போது இந்த குணங்கள் அடங்கும். நான்  பெருவாரியான எனது காலங்களை  தேவையற்ற காரியங்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதிலேயே விரயம் செய்தவன்.தெருவில் இருவர் கட்டிப் பிடித்து உருண்டு கொண்டிருந்தால்  நின்று விடுவேன்.நமக்கு இதில் ஏதேனும் பொறுப்பு உண்டா ? என்று கேட்டுக் கொள்வதே இல்லை.பொறுப்பு உண்டா இல்லையா  என்பதை எப்படியறிவது ? நடக்கும் காரியத்தை மேம்படுத்துவதற்கு அந்த சந்தர்ப்பத்தில் நம்மிடம் ஒரு காரியம் கைவசம் இருக்கிறது என்றால் நிச்சயமாக கடந்து செல்லக் கூடாது.அப்படியில்லையெனில் அங்கே நிற்கவே கூடாது.விஷயம் இவ்வளவுதான்.நாம் நிற்பதன் மூலம் நடக்கும் காரியம் மேலும் சுருள்வதற்கே வாய்ப்பிருக்கிறது என்றால் திரும்பியே பார்க்கக் கூடாது,போய்விட வேண்டும்.ஒரு விபத்து .நீங்கள் நின்றால் நிச்சயம் பலனுண்டு என்றால் கடந்து சென்றால் பாவம்.அதே சமயம் அங்கே ஏற்கனவே இருக்கிறவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்னும் நிலை இருக்கும் போது சென்று மூக்கை நுழைக்கக் கூடாது.எல்லா விஷயங்களிலும் போய்   சிக்கிக் கொள்வதென்பது நமது அகங்காரத்தால் விளைவது.நேடிக் கொள்வது.எந்தெந்த செயல்களில் நமது மனநிறைவும் மகிழ்ச்சியும் அதிகமாகிறதோ அவையே  உரிய செயல்கள்.மன நிறைவு தருகிற மகிழ்ச்சியே மகிழ்ச்சி.

இந்த உரிய செயல்கள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும்.ஏனெனில் மன நிறைவுக்கு பல்வேறு மாறுவேடங்கள் உண்டு.ஒருவரிடம் இருப்பது போல  மற்றொருவரிடம் இருக்காது.ஒருவருக்கு காய்கறி நறுக்கினாலே மன நிறைவு ஏற்பட்டு விடும்.மற்றொருவருக்கோ கடலில்  இறங்கி முதலைகளுடன் சண்டையிட  வேண்டியிருக்கும் .மன நிறைவு என்பது  அகத்தில் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் பள்ளங்களை பொறுத்த விஷயம். எனவே எந்த நீதி போதனைகளுக்கும் இவ்விஷயத்தில் இடமில்லை.மாதிரிகள்  இல்லை.இதனைச் செய்தால் எல்லோரும் மன நிறைவோடு இருப்பார்கள் என்று சொல்லத் தகுந்த காரியங்கள் எதுவுமே இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை.ஒருவர் செய்ய விரும்பாத  காரியத்தை மற்றொருவர் செய்வதால்  அவருக்கு மன நிறைவு உண்டாகலாம்.எனவேதான்  பகவான் குற்றங்களை பார்ப்பதில்லை,குணத்தை மட்டுமே பார்க்கிறான் என்றோரு வாக்கியம் கீதையில் வருகிறது.இந்த வாக்கியம் நான் சொல்லி வருகிற செய்தியோடு முரண்படுவது போல தோன்றலாம் .நீங்கள் உங்களுக்கு மன நிறைவு தருகிற விஷயங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இதில் முரண்பாடு இல்லை என்பது விளங்கி விடும்.ஒரு கணத்தில் கொலை செய்த்து விட்டு வாழ்க்கை முழுவதும் திருங்கத் திருங்க விழித்துக் கொண்டிருப்பவர்கள் இருப்பார்கள்.உண்மையில் யோசித்துப் பார்த்தால் அது அவன் வேலையில்லை,ஆனால் எப்படியோ நடந்து முடிந்திருக்கிறது.

வஞ்சமும் ,பழியுணர்ச்சியும் இருக்கும் வரையில் செல்வம் தங்குவதில்லை.அனைத்தும் தீரட்டும் என்று அது காத்துக் கிடக்கும்.அனைத்தையும் அடித்துக் கொண்டுபோய் நிறுத்தும் .

கடவுள் நின்று நடத்திய சில கொலை வழக்குகள் உண்டு.அது போல கடவுள் முன்னின்று உடனடியாக காட்டிக் கொடுக்கும் கொலை வழக்குகளும் உண்டு.பக்கத்து சுடலைக்கு மாலை அணிவித்து விட்டு அந்த மாலையை எடுத்து பிணத்தின் மேல் வீசி எரிக்கும் பழக்கம் கொண்ட  குழு.ஒரு வெளியூரிலிருந்து வந்த அப்பாவியைக் கொன்று உறுப்பறுத்து எரித்து விட்டார்கள்.காலையில் வந்து பார்த்தால் காவ்லத் துறையினரின் கண் முன்னால் அந்த மாலை நறுமணத்துடன் எரிபடாமல் புத்தம் புதிதாக கிடந்தது.அந்த கொலை வழக்கின் தடயமே அந்த வாடாத மாலைதான்.ஒரு நாளில் குற்றவாளியைத் தூக்கி விட்டார்கள்.

வினைப்பதிவுதான் அந்த நறுமணம் குன்றா மாலை.அது வாடுவதே இல்லை.

நானொன்றும் புதிதாகச் சொல்வதில்லை

காலம் முழுக்க மோதல் கொலைகள் செய்து புகழ் பெற்ற நேர்மையான அதிகாரியொருவர்,செய்யாத சாதாரணமான பெற்றிக் கொலை வழக்கில் மீள முடியாமல் ஓய்விற்கும் முந்தைய தினத்தில் பணியில் இருந்து விலக்கப்பட்டார்.வழக்கில் கொலையுண்டவனின் மனைவி சொன்ன சாட்சி மிக கடுமையானதாக இருந்தது. அந்த சாட்சியை யாராலும் விலைக்கு வாங்கவோ ,வளைக்கவோ இயலவில்லை.ராமச்சந்திரன் நாயரின் "நான் என் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி "என்ற நூலைப் பற்றி ,நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? என்று நான் அவரிடம் ஒருமுறைக் கேட்டபோது ,சிரித்துக் கொண்டே ராமச்சந்திரன் நாயர் ஒரு கோழை என்று பதில் சொன்னவர் அவர்.

No comments:

Post a Comment

அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...