"இடங்கை இலக்கியம் "

"இடங்கை இலக்கியம் "


ஜெயமோகன் அந்திமழை இதழில் எழுதியுள்ள இடதுசாரி இலக்கியம் பற்றிய "இடங்கை இலக்கியம் " என்னும் கட்டுரை தமிழ்நாட்டில்; இன்னும் ஐம்பது ஆண்டு காலத்திற்கு இடதுசாரி இலக்கியம் பற்றிய வரையறைக்கு போதுமான கட்டுரை .இந்த கட்டுரை குறித்து காலையில் பேசிய கோணங்கி "இடதுசாரி இலக்கியம் பற்றியும் ஜெயமோகன் அளவிற்கு வேறு யாராலும் பேச இயலாதிருப்பது இங்குள்ள சோகம்தான்" என்றார்.பரந்து விரிந்த அர்த்ததளத்தில் வைத்து ,பெரும்பாலும் யாரையுமே தவிர்க்காது இந்த கட்டுரையினை ஜெயமோகன் எழுதியிருக்கிறார்.இடதுசாரிகள் பற்றிய இந்த கட்டுரையின் முக்கியத்துவத்தை இந்த கட்டுரை வழியாக அறிவது ஒரு வழியென்றால், ஒரிஜினல் இடதுசாரிகள் இந்த இதழின் பிற பக்கங்களில் எழுதியிருப்பவற்றைப் படிப்பது மற்றொரு வழி.பெரும்பாலும் அவர்கள்  உளறியிருக்கிறார்கள் என்று சொல்வதே பொருத்தமானது.

ஜெயமோகன் அளவில் விரிந்த தளத்தில் ; இடதுசாரி இலக்கியம் என்பதற்கு சொல்லியிருக்கும் வரையறை மிகவும் முக்கியமானது.மனித மையம்,வரலாற்றுணர்வு ,பொருளியல் அடைப்படை ஆகியவற்றை முதன்மை கொள்ளச் செய்யும் படைப்புகளை இடதுசாரிப் படைப்புகள் எனலாம் என்கிறார் ஜெயமோகன்.இதில் மனித மையம் ,வரலாற்றுணர்வு இரண்டும் பின் வந்த சிந்தனைகளின் பால் கேள்விகளுக்கு பகிரங்கமாக உட்படுத்தப்பட்டவை.தங்களை காப்பாற்றிக் கொள்ளும் திறன் இழந்து இன்று  நிற்பவை.இடதுசாரிகளின் மனித மையமும் ,கிறிஸ்தவத்தின் மனித மைய சிந்தனைகளும் தொடர்புகள் கொண்டவை.

சுந்தர ராமசாமியை இரண்டிற்கும் இடைப்பட்டவராகக்  காண்கிறார் ஜெயமோகன்.அது சரியான கணிப்பென்றே எனக்கும் தோன்றுகிறது.ஜெயகாந்தன் தொடங்கி யவனிகா ஸ்ரீராம் வரையில் என நீண்ட பட்டியல் இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கிறது.ஒவ்வொருவரைப் பற்றியும் ஓரிரு வாக்கியங்களேனும் அவர்களை புரிந்து கொள்ள வகை செய்யும் வண்ணம் இந்த கட்டுரையில் அமைந்துள்ளது.

ஜெயமோகனின் கட்டுரை இவ்வாறு முடிவடைகிறது.அது இன்னும் அவருக்கு இடதுசாரி எழுத்துக்கள் பேரில் நம்பிக்கை இருப்பதையே காட்டுகிறது.

"இடதுசாரிக் கட்சி அரசியல் அதன் இடத்தை மெல்ல இழந்து வருகிறது.அதன் பொருளியல் வாதம் இலக்கியத்தில் வெகுவாக மறுக்கப்பட்டு விட்டது .ஆனால் மானுட மைய நோக்கு ஒரு உயர் லட்சியவாதமாகவே நீடிக்கும் என நினைக்கிறேன்.அதன் வரலாற்றுவாதம் ஒரு தத்துவக் கருவியாக இன்னும் நெடுங்காலம் சிந்தனையில் வாழும்.ஆகவே இடதுசாரி எழுத்து உருவாகி வந்து கொண்டுதான் இருக்கும் "

ஜெயமோகனின் இந்த கட்டுரையைக் காட்டிலும்   இடதுசாரிகளுக்கு   பெரிய பத்திர பிரமாணங்கள் இருக்க இயலாது என்றுதான் நினைக்கிறேன்.ஆனால் என்னுடைய பிரச்சனை அவர்களுடைய பொருளியல் நோக்கு அன்று . வரலாற்று மையவாதமும்,மனித மைய நோக்கும் சிந்தனைத்தளத்தில் சரிந்து விழுந்து கிடைப்பதைத்தான் அவர்களுடைய  பெரிய பிரச்சனைகளாகக் கருதுகிறேன்.அவற்றிலிருந்து வெளியேறுவது எப்படி என்று தெரியாமல்தான் அவர்களுடைய கம்பனிக் குதிரைகள் ஓடிய வளாகத்தையே சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கின்றன.பிராங்பர்ட் மார்க்சியர்களை ஏற்றுக் கொள்ளாதவரையில் இவர்களால் சிக்கலில் இருந்து ஒருபோதும் வெளியில் வரவே இயலாது.

No comments:

Post a Comment

அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...