வஞ்சம் என்பது அகத்தைக் கொல்லும் விஷம்

வஞ்சம் என்பது அகத்தைக் கொல்லும் விஷம்

வஞ்சம் என்பது அகத்தைக் கொல்லும் விஷம்
உங்களை ஒரு விஷயம் பாதிக்கிறது .பாதித்துக் கொண்டே இருக்கிறது.ஆனால் இதனை நீங்கள் வெளிப்படுத்தினால் உங்களை சுற்றியிருக்கும் நண்பர்கள் நவுசுவார்கள்.உங்கள் குழு உங்களை
சந்தேகிக்கும் . சமூகம் கீழிறக்கும் என்பவை கருதி எப்போது மூடிக் கொள்கிறீர்களோ அப்போதிலிருந்து உங்கள் அகமும் மூடிக் கொள்கிறது.அதன் வழியாக அத்தனை நச்சுக்களும் சிறுகச்சிறுக உங்களை பற்றிக் கொள்கின்றன . கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் உங்களையும் அறியாமலேயே கீழிறங்கி கொண்டிருப்பீர்கள்.பிறகு பல சமயங்களில் அகம் எவ்வாறு தன்னிடம் மூடிக் கொண்டது என்பது கூட விளங்குவதில்லை.அகம் மூடிக் கொள்கிறவன் ஒருபோதும் எழுத்துக்கு லாயக்குப் படவே மாட்டான்.அவனிடம் விழிப்புணர்ச்சி தூண்டபட்டு ; கடின உழைப்புடன் அகத்தை மீண்டும் முதலிலிருந்தே தொடங்க வேண்டுமாயின் ,முதலிலிருந்தே அவனைப் பாதிக்கத் தொடங்கியவர்களிலிருந்தே சொல்லித் தொடங்கி வர வேண்டும். பாதிப்பு என நான் குறிப்பிடுவது,ஏற்கனவே உங்களிடம் இருந்த அகம் உடைந்த விதத்தைப் பற்றியே.
இந்த வஞ்சத்தில் மற்றொரு ரகம் உண்டு.பாதிக்கிற எழுத்தாளனை அரைகுறையாக உள்வாங்கி வாழ்நாள் முழுதும் அவனை எதிர்த்து கொண்டிருத்தல்.அவன் குறிப்பிடுகிற நூல்கள்,எழுத்தாளர்கள் , கவிகள் எல்லோரையும் எடுத்துக் கொள்வார்கள்.அவனை தீவிரமாக எதிர்த்துக் கொண்டிருக்கும் இந்த பண்பு தமிழில் அதிகமானோருக்கு இருக்கும் நோய்.மதிப்பீடுகளை உருவாக்கும் எழுத்தாளர்கள் அதிகம் பாதிக்கும் தன்மை கொண்டவர்கள் என்பதை ஏற்க இயலா நோய் இது.
முதல் வீச்சில் நம்பிக்கைக்குரிய சில அடிகளை எடுத்து வைத்து விட்டு உள்ளுக்குள் அடைத்து தாழ்பாள் போட்டுக் கொள்கிற பல கவிஞர்களை அறிவேன்.அவர்கள் பெயர்களை இப்போது பட்டியலிட்டால் ஆள் வைத்தேனும் அடிக்க வருவார்கள் என்பதால் சொல்லத் துணிவில்லை.தமிழில் எழுதுகிறவர்கள் பற்றி நீங்கள் ஆதரவாக ஐநூறு வார்த்தைகள் பேசியிருக்கலாம்.ஆனால் எதிர்மறையாக ஐந்து வார்த்தைகள் பேசியிருந்தாலும் அவர்கள் மரணப் படுக்கையில் இருக்கும் போது கூட நினைவில் வைத்துக் கொண்டே இருப்பார்கள்.சுய எழுத்துக்களின் பேரில் இவ்வளவு தூரத்திற்கு உடமை மனோபாவம் கொண்டவர்களை வேறு மொழிகளில் பார்க்க முடியுமா தெரியவில்லை.ஐந்து வார்த்தைகள் எதிர்மறையாகப் பேசியிருந்தால் நீங்கள் அவன் பிணம் எரியும் போது கூட அருகில் செல்லாமலிருப்பதே சிறந்தது.அப்படி நீங்கள் சென்றால் அவன் அவள் பிணம் எழும்பி உங்களை நாலு வார்த்தைகள் திட்டிய பின்னர்தான் எரியத் தொடங்கும்.எரியூட்டுவர்களுக்கு
இதுவொரு இடையூறும் கூட.
முதல் வீச்சுக்குப் பின்னர் தங்களை பலரும் அரசியல் , கொள்கை,குழு என்று மூடிக் கொள்ளுவதே இந்த அவலத்திற்கு காரணம்.ஒவ்வொரு படைப்பாளிக்கும் இரண்டாவது ஒரு எழுச்சி என்பது உண்டு.அது இல்லாதவர்கள் பெரும்பாலும் முழுமை பெறுவதில்லை.
இந்த இதழ் அம்ருதா கிடைத்ததிலிருந்து அதில் வெளியான ஷங்கர்ராம்சுப்பிரமணியனின் ஒரு கவிதை பற்றி நான்கைந்து பேரிடம் பேசி விட்டேன்.அவருடைய மூன்று கவிதைகள் இந்த இதழில் வெளிவந்துள்ளன.மூன்றில் ஒன்று தலைசிறந்த கவிதை.
ஷங்கர் தன்னை மாற்றி எழுத முற்படும் கவிகளில் ஒருவர்.வேறு ஆடை அலங்காரம் செய்து கொள்வதை போன்றதுதான் இச்செயல்.ஆனால் முக்கியமானது.ஒரு
சட்டையில் , சுடிதாரில் ,ஜீன்ஸில் அழுகி நாறுவதற்கு பதிலாக இப்படி புதிய ஆடை அலங்காரத்திற்குள் நுழைய முற்படுத்தலே சிறப்பானது. உத்தமம்.ஷங்கரின் இந்த மாற்றுறுப்பு அறுவை சிகிச்சை பரிசோதனை பற்றி எனக்கு ஒரு பாராட்டுணர்வும் அதே வேளையில் அதில் அதிருப்தியும் கூடவே இருந்தன.விக்ரமாதித்யன் அண்ணாச்சியிடம் கூட "ஷங்கர் உணருவதையெல்லாம் கவிதை என நம்பும் இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டார் போலிருக்கிறதே அண்ணாச்சி ?" என்று கழிந்த சந்திப்பில் கேட்டேன்."அவருடைய ஆனந்தக் கவிதைகள் பயங்கரமான பாதாளத்தில் இருக்கிறதே ! என்றேன்.அவர் சிரித்தார்.அம்ருதாவில் வெளியாகியிருக்கும் இந்த கவிதை அந்த எண்ணத்தை உடைத்து எறிந்து விட்டது.இதையும் நான் உடனடியாக வெளியில் சொல்ல மறுத்து உள்ளில் புழுங்குவேன் எனில் என் நெஞ்சமே என்னை காறியுமிழும்.அந்த கவிதை இது.
"மழை பெய்த தெருவில்
கூழாங்கற்கள்
தவளைகளாக மாறின.
வட்டமாய் அணிவகுத்து
துள்ளித் தொடங்கின
தங்கள் இலக்கில்லாத முற்றுகையை .
தவளைப் போர் வீரர்களே
தவளைப் போர் வீரர்களே
உங்கள் பிறப்பின் உற்சாகத் துள்ளலை
வீட்டுத் திண்ணையில் படுத்திருக்கும்
நாய் பார்த்துக் கொண்டிருக்கிறது
நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்"
கவிதையின் ரசாயனம் கச்சிதம் அமைய பெற்ற கவிதை இது.
நமது சூழலின் பெருத்த சீர்கேடுக்குக் காரணமே ஏற்படும் பாதிப்பிலிருந்து விலகிக் கொள்வதுதான்.பாதிப்புகளை மனம் மோதி எதிர்ப்பதுதான். மனம் விலகாது உடல் விலகியிருக்கும்.இந்த முரண் வஞ்சம்.தீமை.
பாதிப்பை ஏற்கத் தொடங்குங்கள் வஞ்சம் தீரும்

No comments:

Post a Comment

அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...