கமல் ஹாசனுக்கு உண்மையாகவே அரசியல் தெரியவில்லை.

கமல் ஹாசனுக்கு உண்மையாகவே அரசியல் தெரியவில்லை.

முழுதும் கற்பனையான தளத்திலிருந்து கான்வென்ட் குழந்தைகளின் அரசியல் பேசுகிறார் கமல் ஹாசன் .இங்குள்ள கள நிலவரத்திற்கும் அவர் பேசுகிற அரசியலுக்கும் தொடர்பில்லை.இந்த இடத்தில்தான் அ.தி.மு.க அமைச்சர்களோடு அவருக்கு முரண்பாடு ஏற்படுகிறது.கழிந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியைக் காட்டிலும் ,அதற்கும் முந்தைய கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியை காட்டிலும் ஊழல் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் குறைவு என்பதே உண்மை.இந்த ஆட்சியில் இருப்பவர்கள் ஆட்சியில் இருப்பதற்கே   வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு சதா போதத்தோடு இருந்தாக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள்.ஊழலை பொறுத்தவரையில் கடந்த இரண்டு ஆட்சிகளை விட இப்போது சிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.ஆனால் இந்த உண்மைக்கு புறம்பாக கற்பனையான, யார் மீது வேண்டுமாயினும் சுமத்த தக்க  ,உயர் வர்க்க மிகை புகார்களை ; இந்த ஆட்சியின் மீது சொல்லும் போதுதான் பிரச்சனையாகிறது."நாங்களே பட்டினியில் இருக்கிறோம். நீ எங்களை ஸ்டார் கோட்டால் சாப்பாடு என்பாயா ? "என்கிற விதத்தில் அமைச்சர்கள் எதிர்வினையாற்றுகிறார்கள்.கமல் ஹாசனின் இத்தகைய நடத்தையை கிரண்பேடி போன்றோரின் எலைட் அப்பாவித்தனத்துடன் ஒப்பிடலாம்.இந்த அப்பாவித்தனத்தினுள் ஒளிந்திருப்பது வெற்று அதிகாரத் திமிர் கொண்டதொரு வேட்கை மிருகம் .

பொதுவாக எல்லாம் கேட்டு விட்டது ,ஊழல் மலிந்து விட்டது என்பது போன்ற பொது புகார்களை சொல்பவர்கள் ,அது யாருக்குப் பொருந்துகிறது என்பதை அறிந்து பேசுவதில்லை.கமலிடம் வெளிப்படுவது இது போன்றதொரு அப்பாவித்தனம்தான்.ஆசிரியர்கள் பணியிட மாற்றத்திற்கு இவ்வளவு,உதவி காவல் ஆய்வாளர் பதவிக்கு இவ்வளவு,பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் கட்சிக்கு இவ்வளவு என வரையறுத்து எம்.ஆர்.பி .விலையில் ஊழல் கருணாநிதியின் ஆட்சியில் தொடங்கப்பட்டு,ஜெயலலிதா காலத்தில் விலையில் மேற்படி மாற்றம் செய்யப்பட்டது.இது ஒருபுறம் எனில் சமூகத்தில் பொது புகாருக்கு உள்ளாக்கப்படும் பல விஷயங்கள் தேவைகளின் அடிப்படையில் வாழ்பவை .  ஊழலால் மக்கள் பாதிக்கப்படுகிறார்களா என்றால் உண்மைதான் பாதிக்கப்படுகிறார்கள் .ஆனால் அதனைக் காட்டிலும் அதிகமான அளவிற்கு பாதுகாக்கவும் படுகிறார்கள்.அதனால்தான் ஊழலின் இருப்பு சாத்தியமாகிறது.ஊழல் உள்ள அரசாங்கத்தைக் காட்டிலும் ஊழலற்ற அரசு கொடூரமானது என்கிறார் சாம்ஸ்கி.இதே எண்ணம் அமர்த்திய சென் போன்றோருக்கும் ஏகதேசம் இருக்கிறது.

இங்கே நீங்கள் ஒரு குற்றச்சாட்டை ஒருவர் மீது முன்வைக்கும் போது அது அவருக்குப் பொருந்துகிற வண்ணம் சொல்ல வேண்டும் ."இப்போதைய அ.தி.மு.க அரசு பா.ஜ. கவின் எடுபிடி அரசு என்று "ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தால் இருநூறு சாதமானம் அது பொருந்துகிற குற்றச்சாட்டு .அதனைச் சொல்லும் திராணி கமல் ஹாசனுக்கு ஒருபோதும் வராது.இது போன்ற கிளிப்பிள்ளை புகார்களை வேண்டுமாயின் அவர் வாழ்நாள் முழுதும் தெரிவித்துக் கொண்டே இருக்கலாம்.அதனால்தான் அவருக்கு அரசியல் தெரியவில்லை என்கிறேன்.

பொருந்தா புகார்களை தெரிவிப்பது என்பது நமது மக்கள் மத்தியில் குற்றத்தைக் காட்டிலும் அதிக வெறுப்பிற்கு உரியது.இதனை எவ்வாறு ?
என்று கமல் புரிந்து கொள்ள வேண்டுமெனில் , அவர் மீண்டும் குழந்தை பருவத்திலிருந்தே தவழ்ந்துதான் வந்தாக வேண்டும் பாவம் .

1 comment:

  1. கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியவில்லை என்று சொல்கிற உங்களுக்கு அரசியல் தெரிகிறதா மணிவண்ணன். ஒரு அரசின் ஊழல் பற்றிப் பேசுவதற்கு என்ன பெரிய அரசியல் தெரிய வேண்டி இருக்கிறது. குடகா ஊழலில் நேரடியா சம்பந்தபட்டவருக்கு வெளிப்படையாக பதவி உயர்வு கொடுத்து ஊக்குவிக்கிறது எடப்பாடி அரசு. எதற்கு? பயப்படாதே, நாங்கள் இருக்கிறோம், எங்களைக் காட்டிக் கொடுத்து விடாதே என்கிற பயத்தினால் தானே! எல்லா ஆட்சிகளிலும் ஊழல் இருக்கத் தான் செய்தது - காமராஜர் ஆட்சி உட்பட. இலைமறை காய்மறையாக இருக்கும். ஆனால் கருணாநிதியின் ஆட்சியில் கொஞ்சம் வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால் ஜெயலலிதா ஆட்சியிலும் எடப்பாடி ஆட்சியிலும் தான் அப்பட்டமாக இருக்கிறது. ஜெயலலிதாவோ கருணநிதியோ ஊழலில் சம்பந்தப்பட்டவருக்கு உடனேயே பதவி உயர்வு கொடுத்து ஊக்குவித்தது நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. உச்சநீதி மன்றமே ஊழல் செய்து தான் சொத்து சேர்த்தார் என்று தண்டனை வழங்கி ஜெயலலிதாவின் சொத்துக்களைப் பறிமுதல் பண்ண உத்தரவிட்டிருக்கிறது என்பதை மனதில் வையுங்கள் நண்பரே! அவரைத்தான் தலையில் வைத்துக் கொண்டு கொண்டாடிக் கொண்டிருக்கிறது எடப்பாடி அரசு. ஊழலில் ஜெயலலிதா, எடப்பாடிகளோடு கருணாநிதியை எப்படி ஒப்பிடுகிறீர்கள் என்றே தெரியவில்லை. கருணாநிதி எந்த நீதிமன்றத்தாலும் குற்றவாளி என்று சுட்டிக் காட்டப்படவில்லை நண்பரே! அதிமுக வை விமர்சிப்பதால் அதன் அமைச்சர்கள் கமல்ஹாசனின் மீது காட்டமாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இதில் பிஜேபி எதற்கு லபோதிபோ என்று கமல்ஹாசன் மீது விழுந்து புரள்கிறது. நீங்கள் சொன்னது மிகச் சரி. அதிமுக அரசு தொடர வேண்டுமென்பதில் அதிமுகவினரை விடவும் பிஜேபியினருக்கு அதிக ஆர்வம் இருக்கிறது என்பதற்கான அப்பட்டமான சாட்சியம் தான் இது.

    ReplyDelete

போலிச் சாமியாட்டங்கள்

போலிச்  சாமியாட்டங்கள் நடிகர்கள் தமிழ் நாட்டில் தொடர்ந்து அரசியலுக்கு முயற்சி செய்வதை பார்க்கும் போது ,தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்ச...