கிராமத்து பிராமணர்களுக்கு இடஒதுக்கீட்டில் இடம் தரப்பட வேண்டும்

கிராமத்து பிராமணர்களுக்கு இடஒதுக்கீட்டில் இடம் தரப்பட வேண்டும்

அனைவரும் அர்ச்சகராவது காலத்தில் எவ்வளவு முக்கியமோ , அதேயளவிற்கு கிராமத்து பிராமணர்களுக்கு இடஓதுக்கீட்டில் இடம் ; வாய்ப்புகளில் ஏற்படுத்தித் தர வேண்டியதும் முக்கியம்.இரண்டுமே தவிர்க்கப்படக் கூடாதவை .இந்த இரண்டில் ஒன்றை மட்டும் ஏற்கிறேன் என்று எவரேனும் பேசுவார்களேயானால் ,குரல் எழுப்புவார்களேயாயின் அவர்கள் வெறும் அரசியல் தரப்பினர் மட்டுமே .பண்பாடு தொடர்பான விஷயங்களில் வெறும் அரசியல் குரல்கள் மட்டுமே போதுமானவை அல்ல.அதுபோல பண்பாடு சார்ந்த விஷயங்களில் பிறர் உரிமைகள் காக்கப்படுதல்  அவசியமானது.இன்றைய நிலையில் கிராமத்து பிராமணர்கள் ஒடுக்கப்படுபவர்கள் மட்டும் இல்லை.பாதுகாப்பின்மையை உணர்ந்து கொண்டிருப்பவர்கள்.வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கிற பிராமணர்கள்  அனைவரையும் ஒடுக்கப்பட்டோராக கருதுதலே நியாயம். நீதி.யாரையுமே வஞ்சிப்பது நல்லதல்ல என்னும் போது பிராமணனை மட்டும் வஞ்சிப்பது எப்படி நீதியாக இருக்க முடியும் ?

அனைவரும் அர்ச்சராக வேண்டும் என்பது சரிதான்.ஆனால் அதற்கு வெறும் பட்டையப் படிப்புகள்  மட்டுமே போதுமானவை அல்ல.அர்ப்பணிப்பும் ஆன்மீக நாட்டமும் சிறுவயது தொடங்கி அவசியம்.ஆனால் இங்கே கிறிஸ்தவர்களுக்கு உள்ளது போல ,இஸ்லாமியர்களுக்கு உள்ளது போல நிறுவனம் சார்ந்த படிப்புகள் இன்னும் தொடங்கப்படவே இல்லை.அப்படியிருக்கும் குறைந்தபட்ச படிப்புகளை தவிர்க்க இயலாமல் சிறுவயது முதற் கொண்டு படிப்பவர்கள் இங்கே பிராமணர்களாக மட்டுமே இருக்கிறார்கள். கேரளாவில் ஈழவர்கள் அனைத்து ஆன்மீகச் செல்வங்களையும் தங்கள் வயப்படுத்தியிருக்கிறார்.அது போலவே தமிழ் நாட்டிலும் தலித்துகள் உட்பட ,பிறர் ஆன்மீகச் செல்வங்களை முதலில் அர்ப்பணிப்புடன் தங்கள் வயப்படுத்த வேண்டும்.

பிராமணர்கள் காலம் காலமாக செய்து வருவதால் ,பயின்று வருவதால் அவர்களுக்கு கோவிலில் நின்று புழங்குதல் எளிமையாக இருக்கிறது.அதற்குப் பதிலாக அங்கே ஒருவர் வந்து நிற்கும் போது வெறும் உரிமையுணர்ச்சி மட்டுமே காணாது.நிபுணத்துவம் இருத்தல் வேண்டும்.பாடமாக ஒன்றிரண்டு ஆண்டுகள் மட்டுமே கற்றதை வைத்து அங்கே நிற்பது சிறப்பல்ல.சிறுவயது முதலே கற்றுத் தேர்ந்து கொள்ளுகிற ஆன்மீக அறிவும் ஞானமும்  அர்ப்பணிப்புணர்வும் அவசியம்.இதற்கென தொடக்க காலக் கல்விச் சாலைகள் பிராமணர்களைக் கொண்டே தமிழ் நாட்டில் தொடங்கப்படுதல் நலம். ஓதுவார்களையும் ,பிற ஆன்மீகச்  சான்றோர்களும் இத்தகைய கல்விச் சாலைகளில் பங்கெடுக்க வேண்டும்.இத்தகைய கல்விகள் புழக்கத்திற்கு வராத வரையில் வெறுமனே வாய் பேசியோ ,பிராமணர்களை   அவதூறு செய்தோ ஒரு பலனும் ஏற்படப் போவதில்லை.அவர்கள் காலம் காலமாக ஆன்மீக வளங்களைக் காக்கிறார்களோ இல்லையோ கோவிலைக் காத்து வருகிறார்கள்.இந்த உண்மையை ஏற்காதோருடன் உரையாடல் செய்வதாலும் ஏதும் பலன் இல்லை.

1 comment:

  1. /அனைவரும் அர்ச்சகராவது காலத்தில் எவ்வளவு முக்கியமோ..../ என்று கட்டுரையைத் தொடங்குகிற நீங்கள் அடுத்த பத்தியிலேயே /அனைவரும் அர்ச்சராக வேண்டும் என்பது சரிதான்.ஆனால் அதற்கு வெறும் பட்டையப் படிப்புகள் மட்டுமே போதுமானவை அல்ல.../ என்கிறீர்கள். அரசு வேலைகளுக்கெல்லாம் பாடசாலை படிப்புகள் போதும். ஆனால் கோயிலில் போய் அர்ச்சனை செய்வதற்கு அந்தப் படிப்பு போதாதா நண்பரே! சரி முதலில் அர்ச்சகர் டிரெயினி என்று பெரிய கோவில்களுக்கு பிறசாதியினரை எடுத்து அவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு தேர்ந்த அர்ச்சகர்களை வைத்து - அவர்கள் பிராமணர்களாகவே இருக்கட்டும் - டிரெயினிங் கொடுத்து அப்புறம் அர்ச்சகராக ஆக்கிக் கொள்ளட்டும். அதையெல்லாம் பிராமணர்கள் அனுமதிப்பார்களா? கிராமத்தில் இருக்கும் எந்த பிராமணனும் ஏன் நகராட்சி அலுவலகங்களுக்கு குப்பை அள்ளுபவர்களாகவும், மலக்குழிக்குள் இறங்கி சுத்தப்படுத்தும் வேலைகளுக்கெல்லாம் அப்ளிகேஷன் கூடப் போடுவதில்லையே, ஏன்? அவையும் அரசு வேலை தானே? அந்த வேலைகளையெல்லாம் சில குறிப்பிட்ட சாதியினர் மட்டும் தானே காலங்காலமாக செய்து கொண்டிருக்கிறார்கள்? அந்த வேலைகளை செய்கிறவர்களின் பிள்ளைகளுக்கு இருக்கிற இட ஒதுக்கீடு மட்டும் உயர்சாதியினரின் கண்களை ஏன் உறுத்த வேண்டும்? முதலில் எல்லா வேலைகளையும் எல்லோரும் செய்ய முன் வரட்டும். பிராமணர்கள் அவர்களின் கோயில் காரியங்கள் செய்கிற பணிகளில் பிற சாதியினரையும் அனுமதிக்கட்டும். அப்புறம் இட ஒதுக்கீட்டிலும் சாதியுடன் சேர்த்து ஏழ்மையையும் கணக்கிலெடுத்துக் கொள்ளலாம். கிராமத்து ஏழை பிராமணர்களுக்கும் எப்படியாவது கோயில்களின் மூலம் ஒருவேளை உணவாவது கிடைத்து விடுகிறது. அதுவும் கிடைக்காத தாழ்த்தப்பட்ட ஜாதியினர் கிராமத்தில் இன்னும் இருக்கிறார்கள் என்பதை மனதில் நிறுத்துங்கள் நண்பரே...!

    ReplyDelete

அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...