குண்டர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்வதே கூட தவறு எஜமானர்களே

குண்டர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்வதே கூட தவறு எஜமானர்களேவளர்மதி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக மூன்று நாள்களாக எழுத நினைத்து இயலாத மனநிலை .இது முற்றிலும் தவறானது என்பதை இங்கே புரியச் செய்வதில் ஒருவிதமான கடுமை சூழ்ந்திருப்பது தெரிகிறது.நமது கூட்டான மனநிலைகள் அசாதாரணமாக மாறிவருவதாக தொடர்ந்து உணர்ந்து வருகிறேன்.வளர்மதியின் அரசியல் பின்னணி காரணமாகவோ அல்லது அவருடையது போன்ற அதிருப்தி அரசியலின் உள்நோக்கங்கள் புரியாமலோ இதனை நான் சொல்லவில்லை.வழக்கமாக குண்டர்கள் மீது இவ்வழக்கைப் போடுவதே கூட சட்டத்திற்குப் புறம்பான செயல்.அந்த சட்டம் முறைப்படியான சட்டம் அல்ல.மனித உரிமைகளின் மாண்பைக் குலைக்கிற ,மனித உரிமைகளில் அளவிற்கு அதிகமாக அத்துமீறுகிற ஒரு சட்டம். அப்படியிருக்கும் போது இதுபோல மாணவர்கள்,அரசியல் இயக்கங்களில் உள்ளவர்கள் எதிரிகள் எல்லோர் மீதும் இதனை பிரயோகப்படுத்தலாம் என அரசு நினைப்பது மிகவும் ஆபாசமானது.முதலமைச்சர் இந்த வழக்கு பற்றி பேசிய விதம் மிகவும் அருவருப்பானது.அரசாங்கம் ஒருவிதமான காண்டாமிருகத் தன்மையை அடைந்து வருவதையே இச்செயல்கள் உணர்த்துகின்றன.இதனை கூட்டு மனங்களுக்கு புரியச் செய்வதில் ஏற்படுகிற இடர்பாடுகள் அவையும் காண்டாமிருகத்துடன் இணைந்திருப்பதையே சுட்டிக் காட்டுகின்றன .

காண்டாமிருகம் நாடகம் படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும் .அது ஒரு ஜெர்மன் நாடகம்.க்ரியா வெளியிட்டிருக்கும் முக்கியமான மொழிபெயர்ப்பு நாடகங்களில் ஒன்று அது.அந்த நாடகத்தில் இங்கே எல்லோரும் காண்டாமிருகமாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒருவன் கத்திக் கொண்டே ஓடுவான்.அவன் அப்படியோடிக் கொண்டிருக்கும் போதே அவனுடைய கரங்கள் காண்டாமிருகமாக மாறிக் கொண்டிருப்பதனையும் அவன் பார்ப்பான்.இதுவொரு குறியீடுதான்.ஆனால் சர்வாதிகாரத்தை நோக்கி அரசு வேகமாக நகருவதை உணர்த்துகிற குறியீடு அது.திருமுருகன் காந்தி ,வளர்மதி போன்றோரின் அரசியல் பின்னணிகள் பேரில் எனக்கு கிஞ்சித்தும் மதிப்பில்லை. ஆனால் இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து ஒடுக்குவது என்பது மகா கேவலமான வழிமுறை.அதிலும் முதலமைச்சர் போராட்டங்களை தூண்டினால் இதுபோல செய்யத்தான் செய்வோம் என சூழுரைப்பது சட்டம் அறியாத ஆபாசமான நிலை.ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது.ஊர் நாட்டாமை முழக்கம். மோதல் கொலைகளை ஒரு முதலமைச்சர் நியாயம் செய்து பேசுவதற்கு ஒப்பானது , இது போன்ற குண்டர் தடுப்பு கைதுகளை நியாயம் செய்வது.போராட்டங்களை சட்டவிரோதமாக ஒடுக்கி வெற்றியை நிலைநாட்டுவதல்ல அரசாங்கத்தின் வேலை.

போலீசார் கூட்டமெனில் அரசியல் பேசுவீர்களா ? மோடிக்கு எதிராகப் பேசுவார்களா ? என்றெல்லாம் இப்போது கேள்விகள் எழுப்புகிறார்கள்.நாங்கள் என்ன பேச வேண்டும் ? எதனைப் பேசக் கூடாது என்பதை முடிவு செய்யும் வேலையை இப்போது புதிதாக போலீசாரிடம் பணித்திருக்கிறோமா என்ன ? இங்கே என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது சரியாக விளங்கவில்லை.ஆனால் ஏதோ தொடர்ந்து தவறாக நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது என்பது மட்டும் உறைக்கிறது. நடைபெறுகிற இத்தகைய அரச செயல்கள் மிகவும் ஆபத்தானவை. மனித உரிமைகளுக்கு குந்தகம் விளைவிப்பவை.

No comments:

Post a Comment

திடீரென ஒருநாளில் நாங்கள் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டோம்

 கவிதைகள் 1 உனக்கு எவ்வளவு பெரிய தோள்கள் நீ விரும்பியவாறெல்லாம் உன்மீது படர்ந்தேறும் காடுகள் மயங்கும் மஞ்சு உடலெங்கும் வெண்ணூற்றுச...