இடைவெளி இதழ் 2

இடைவெளி இதழ் 2 

வெளிவந்துள்ளது.எழுதுவதற்கும் ,படிப்பதற்கும் ஆசையைத் தூண்டுகிற இதழ்.என்னுடைய எட்டு கவிதைகள் இந்த இதழில் வெளிவந்துள்ளன.சில இதழ்கள் தான் கையில் வைத்திருக்கும் போது பெருமையாக உணரச் செய்பவை.இடைவெளியும் அவற்றில் ஒன்றாக இணைந்திருக்கிறது. முடிந்தவர்கள் விலைக்கு வாங்கி இதழை  படித்துப் பாருங்கள்.150  பக்கங்களில் நல்ல தாளில், நல்ல கட்டுமானத்தில் ,நல்ல படைப்புகளோடு இருக்கிறது இடைவெளி 2



லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள்

1

எனது அறை திறந்துதான் இருக்கிறது
எப்போதும் போலவே

எப்போது வேண்டுமாயினும் நீங்கள் வரலாம்

நீங்கள் யார் என்று கேட்க மாட்டேன்
ஊர் பெயர் அவசியமற்றது
உங்கள் பாலினம் என்ன ? தேவையில்லை

முதலில் கண்ட கனவில் திறக்கப்பட்டதிந்த கதவு
எட்டு பாழிகள் இருந்தன

நீங்கள் உங்கள் பெருமைகளை எடுத்து வந்தால்
இங்கே உங்களுக்கு சோர்வு தட்டக் கூடும்

திறக்கப்பட்ட எட்டு பாழிகள் வழியே
தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்
தெருக்கள் சாலைகள் வீடுகள் கேந்திரங்கள்
கிளிகள் சிட்டுக் குருவிகள் என
எனக்கு ஒன்பது கண்கள் தெரியுமா ?
எட்டாவது பாழியிலிருந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது
எனது முதிர்ந்த ஆண்குறி
என்னுடைய மூன்றாவது கண்

எட்டு கண்களுடன் நீங்களும் வந்திணைந்தால்
நாம் ஒன்பதாவது கண் வழியே ஒன்றாகக் காண்போம்
நதிகளையும் ,மாமலைகளையும் ,தொடுவானத்தையும்

தேகம் இதில் முதல் கண்
தேக்கமற்றது இரண்டாவது கண்
பரலோகம் ஒரு கண்
பார்க்க இயலாதைவை இரண்டு கண்கள்
பார்க்க இயலாதவற்றைக் காணும் கண்கள் இரண்டு

நெற்றிக்கண் என்கிறார்களே
அது எப்போதும் கனவு பார்ப்பது எனக்கு

திறந்துதான் இருக்கிறேன்
உள்ளே வரலாம்
இல்லாத அறைக் கதவை தட்டுவதற்குப் பதிலாக
"சாப்பிட்டு விட்டீர்களா ?" என்று கேட்டு விட்டு வாருங்கள்
இல்லையெனிலும் எப்போதும் உங்களுக்கான உணவை
எடுத்துதான் வைத்திருக்கிறேன்
உடலின் அப்பம் போல

நீங்கள் திரும்பிச் செல்கையில் என்னிடம்
சொல்லத் தேவையில்லை

இரண்டு கண்களோடு மட்டும் இந்த அறைக்குள் உட்புகுந்தால்
கருக்கரிவாள் இன்னும் பதமாகத் தானிருக்கிறது
இரண்டு கண்கள் கொண்ட தலைகளை கொய்த்தெடுக்க
அது தயாராக இருக்கக் கூடும்
ஜாக்கிரதை


2

விடுதலைக்கான என்னுடைய முதல் அடியில்
எப்போதும் ஒரு சிறைச் சாலைக்குள் வந்து விழுகிறேன்
அதன் பின்னர் அங்கிருந்து சிகிரெட் புகைக்கக் தொடங்குகிறேன்

முட்புதரில் இறங்கி ஆற்றைக் கடக்கவேண்டும்
முட்புதரில் இறங்குதல் என் வேலை
பின்னர் ஆறு தன் வசம் என்னை அடித்துச் செல்லத் தொடங்குகிறது

என்மேலே உருண்டு விழுகிற சரளைக்கற்கள்
நாங்களும் இப்படித்தான் முட்புதரில் இறங்கினோம்
என்று ரகசியம் பேசுகின்றன

நாங்கள் ஒரு ஊரிலிருந்து மறு ஊருக்குள் செல்வதற்குள்
ஆகாசம் கண்டோம்
ஒரு இரவைக் கடப்பதற்குள்
உயிர்கள் ஜனிப்பதை பார்த்தோம்

ஒரு யுகத்திற்குள்ளிருந்து மறுயுகத்திற்குள் நுழையும் போது
நம்புவீர்களா தெரியவில்லை
நாங்கள் ஏன் முட்புதரில் இறங்கினோம்
என்பது
தெளிவாயிற்று

3

எவரைப் பார்ப்பதற்கும் வெறுங்கையோடு
சும்மா வருவதில்லை நான்

மடங்கி மடங்கிச் செல்லும் மலைத்தொடரில்
நடுவில் தோற்றங்காட்டும் பௌர்ணமியை கொண்டு வந்தேன்
நேற்று உங்களிடம்

மொய் எழுதாமல் சோற்றில் கைவைக்கும் பழக்கம்
எனக்கில்லை
வழிநெடுக உதிர்ந்து கிடந்த மஞ்சள் பூந்தரையை
மரங்களுடன் அள்ளியெடுத்து வருவது எனது வாடிக்கை

கைபிடித்து என்னை வரவேற்றுப் பாருங்கள்
நீங்கள் விட்டகலும் காட்சிகளின் வெப்பம் உண்டு என் கையில்

சிறுவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு பேருந்துக்கு வெளியே
ஓடிக்கொண்டிருக்கும் தாவரங்கள்
யுவதிகளுக்கோ பகலில் தருவேன்
இரவின் நட்சத்திரங்கள்

எனினும் குழந்தைகள் வசிக்கும் வீட்டில்
வேடிக்கையைத் தரயியலாமல் வெறுங்கையோடு செல்பவர்கள்
துரதிர்ஷ்டவசமானவர்கள்
கூர்ந்து என் கண்களை பார்க்கச் செய்தவர்களுக்குக்
கடல் காட்டுவேன்

4

பாமா இல்லத்தில்
யார் வாயிலில் நின்றாலும்
பாமாவே தோன்றுகிறாள்

முன்பக்க கேட் நான்கடியகலம்
ஒரு பக்கம் சற்றே திறந்திருக்க வேண்டும்
திறந்த ஒருபக்க கேட் மேல் நுனி பிடித்து
நிற்கவேண்டும் பாமா

ஒரு காலுயர்த்தி படியில் நிற்க
புறப்படும்
ஒரு நளின வில்லின் வளைவு

மேற்கு பார்த்த தெருவில் பாமா
மேற்கில் உடல் திரும்பி
கிழக்கில் முகம் பார்க்கிறாள்

இப்படி பாமா இல்லத்தில்
பாமாதான் நிற்கவேண்டும் என்பதில்லை
யார் வேண்டுமாயினும் நிற்கலாம்
நிற்க வேண்டும்
நின்றால் அவள்தான்
பாமா

பாமா நின்று நோக்கும் வீட்டில்
பாமா நோக்காத திசையிலிருந்து வந்து கொண்டிருப்பவன்தான்
கண்ணன் என்பது
பாமா அறியாததா என்ன ?

5

நீங்கள் வருவதற்கு தைரியப்படாத இடத்தில் இருந்து கொண்டிருக்கிறேன்
நீங்கள் தைரியப்பட்டால் இயலக்கூடிய இடம்தான் இது

தைரியப்பட்டதால்தான் இங்கு வந்து சேர்ந்தேன்
என்றும் சொல்வதற்கில்லை
கழுகின் கழுத்து வசீகரத்தில் குருடனாக ஏறி அமர்ந்து
வந்திங்கு சேர்ந்தேன்

இங்கே கொஞ்சம் சித்து கிட்டும்
ஜோதிடம் அகப்படும்
தரிசனம் தோன்றும்
வாக்கு பலிதமாகும்

ஐந்து கடல் ஏழுமலை
ஆயிரம் பூதங்கள் தாண்டியும் வரலாம்
நேரடியாகவும் வரலாம்
வழிப்பாதை தெரியவேண்டும்

ஆமை முட்டைகள் பொரித்து கடலுள் நகரும் பாதையில் தொடங்கி
யானைத்தடம் கடந்து
மலை மேல் பவனித்து
காற்று வரும் திசையில் வந்து சேரவேண்டும்

கடினமேதுமில்லை
ஒரு வண்ணத்துப்பூச்சியின் வழிப்பாதைதான் இது
என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள் ?
வந்து சேருங்கள் மேனியெல்லாம்
வண்ணத்தின் பிசுபிசுப்பு காண்பீர்


6

ஏரியுடல்

வற்றிக் கொண்டிருக்கும் ஏரிதான்
வற்றிக் கொண்டிருப்பதை தெரியப்படுத்த விரும்பாத கொக்குகள்
அதன் ஈரம் கொத்துகின்றன

அக்கரையிலிருந்து புறப்பட்டு வரும் வாத்துகள்
நீர்வளையங்களில் நெளிகிறது ஏரியின் சுடு முதுகு

கரைக்குத் திரும்பியவை மீண்டும் நீர்வளையங்களில் நீந்துகின்றன

யோனியை வானுக்குயர்த்தும் தாமரைகள்
நீ எவ்வளவு வற்றினாலும் எனது வேர் உனது
ஊற்றில்தான் இருக்கிறது பாரேன் என்கிறது

முக்காலத்திற்குள் இந்த காட்சியை அழைத்துச் சென்றதொரு
பழம்பாடல்
ஒலிப்பெட்டிக்கு சொந்தக்காரக் குறவன்
வானம் பார்த்தபடி கரையில்
படுத்திருக்கிறான்

அவன் உனக்கு குறவனைப் போலே
தோற்றங்காட்டுகிறான்
ஏகன் அனேகன் இந்த நிமிடத்தில் அவன் தானென்று
எனக்கு சொல்லித்தந்ததோ
ஏரிக்கரை அரசமரம்

உடன்தானே
அரசின் இலைகளிலெல்லாம்
அனேகனின் தளிர் வசந்தம்
நான் ஏரியின் நீர்வளையங்களை
எடுத்துத் திரும்பினேன்

எனது வளை இடுப்பிலிருந்து
எதனை அப்படி எடுத்தாய் ? என்று கேட்டாயே
உனக்குத்தான் இந்த பதில்

7


வழிநெடுக பூக்களை சிதறி விட்டுப் போயிருக்கிறான்
இன்று சுடுகாட்டுக்குச் சென்றவன்
அதில் அவன் பார்த்த பூக்களும் உண்டு
பார்க்காத பூக்களும் உண்டு

எல்லோரும் திரும்பி களைத்த பின்னர்
வீதியில் கிடந்தது நசிந்து அழும் இந்த பூக்களை
மிதிக்காமல் செல்ல முயல்கின்றன என் கால்கள்

எல்லோருடைய கால்களும் இப்படித்தான் முயற்சித்திருக்கக் கூடும்
என்றாலும் நசுங்கி விடுகின்றன இந்த பூக்கள்

இதற்கு முன்னர் போனவனுக்கு இப்படித்தான்
இனி புறப்பட போகிறவனுக்கும் இப்படித்தான்
நேர்கொண்டு நாளை உனது சூரியோதயத்தை
அவசியம்
கண்டு விடு.

8

நீ வெளியேறிச் செல்லும் போது
ஒரு கொக்கு சாலையில் குறுக்கே பறந்து சென்றால் நீ
பாக்கியவான்

ஒரு செம்பருந்தைக் காணாமல் திரும்புவதை ஒருபோதும்
பயணமென்று கூறாதே

கூட்டமாக பறவைகள் நீலத்தின் உயரத்தில்
வரிசையாக நகரும் போது அப்படியே நின்று விடு

மரங்களில் இருந்து சப்தத்தில் விடற்கும்
சிறகுகள் மீண்டும் அமரும் வரையில் காத்திரு
செம்மறிகளை தொட்டுப் பார்த்து
பீதியுண்டாக்காதே

எதையும் தொட்டுப் பார்க்க விழையாதே
அது சம்சாரியின் வேலை

இரண்டு மைனாக்கள்
உனக்குக் காத்திருக்கும்
பேசிப் பழகி விடு.

நீ பேசுவது அவற்றுக்கும்
அவற்றின் மொழி உனக்கும்
எட்டும் போது பெரும்பாலும்
காக்கைகள்
உன் கையில் வந்து அமரத் தொடங்கி விடும்

இத்தனையும் செய்து விட்டு
வீடு திரும்பும் போது எங்கே போயிருந்ததாய் ?
என்று கேட்பார்கள்
சும்மா இங்கே தான் இருந்தேன் என்று
சொல் தைரியமாக
தவறில்லை

கொஞ்சம் அசதியாக இப்படித்தான் செய்கிறேன் என்றால்
கொலைமுயற்சி செய்வாளுன்
மனைவி
ஈவிரக்கமின்றி
மறைத்து விடு

வெளியே விஷயம் தெரிய வேண்டாம்
தீவிரவாதி என்பார்கள்

No comments:

Post a Comment

திடீரென ஒருநாளில் நாங்கள் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டோம்

 கவிதைகள் 1 உனக்கு எவ்வளவு பெரிய தோள்கள் நீ விரும்பியவாறெல்லாம் உன்மீது படர்ந்தேறும் காடுகள் மயங்கும் மஞ்சு உடலெங்கும் வெண்ணூற்றுச...