அய்யா வைகுண்டர் இதிகாசம் 1

முகப்பு


1

சிறு வயதில் கோடை விடுமுறை காலங்களில் சாமிதோப்பில் கொண்டு விடுவார்கள்.எங்கள் ஊரில் இருந்து கடற்கரை வழியாக சிற்றன்னை மாமா ஒருவர் என்னை மிதிவண்டியில் ஏற்றிக் கொள்வார்.மிதிவண்டியின் முன்புறம் தங்கையோ தம்பியோ அமர்ந்திருப்பார்கள்.

மதிய உணவிற்குப் பிறகாக எங்களை அழைத்துக் கிளம்புவார் மாமா.சாமிதோப்பிற்கு மணக்குடி வழி செல்லும் பாதையே அவர் தேர்வு செய்வது.அதுவே பாதுகாப்பானது என்று அவர் கருதினார்.பறக்கை வழியாகச் சென்று வடக்குத் தாமரைக்குளம் மார்க்கமாக வயல்வழியே இப்போது செல்லுகிற பாதை ,அப்போது இல்லை.வயல்வழியே ஒரு ஒடுங்கிய கோடு போன்ற ஒல்லியான பாதை உண்டு. அது பழையாற்றில் சென்று முட்டும்.சேறும் சகதியும் நிறைந்து பூச்சிகளின் அரவம் நிறைந்த பாதை அது.பெரும்பாலும் பூச்சிகளின் ரீங்காரம் கேட்டுக் கொண்டே இருக்கும்.கடப்பவர்கள் பயமுட்டும் கதைகளைப் பேசிய வண்ணம் கடப்பார்கள்.

குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு உகந்த வழியாகவே மணக்குடி பாதையை அவர் தேர்வு செய்வது.பெரியவர்களும் அந்த பாதையில் செல்லுமாறே அறிவுரை சொல்லி அனுப்பி வைப்பார்கள்.மணக்குடி செல்வது வரையில் கடற்கரை வழியே தொடர் மணற்குன்றுகள் உண்டு.பொடி மணல் சுடும் பாதை அது.சுடும் போது ஓடி கடல் முற்றச் செடிகளில் ஏறி நின்று கொள்வோம்.பின்னர் ஓடுவோம்.சில மணற்குன்றுகளின் உயரம் ஒரு தென்னைக்கு நிற்கும்.உயர்ந்த தென்னைகள் சில சமயம் தலையை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருப்பது உண்டு.இந்த குன்றுகள் இடம்மாறும் தன்மை கொண்டவை.பருவத்திற்கு பருவம் சற்றே மாறுபடக்கூடியவை.ஒரு மணற்குன்றின் மேட்டில் தவறினால் நாற்பது ,அய்ம்பது அடிகள் உருண்டு கீழே வர வேண்டியிருக்கும்

சிற்றன்னை மாமா மிதிவண்டியை உருட்டிக் கொண்டே வருவார்.எப்போதேனும் சில இடங்களில் ஒடுங்கிய சாலைகள் வரும்.அப்போது ஏறிக் கொள்வோம்.

மணக்குடியை கடக்கையில் பொழி மிதமாக ஓடும்.பழையாறு மணக்குடி கடலை வந்து அடைவதையே பொழி என்பார்கள்.பெரும்பாலும் அவர் எங்களை அழைத்துச் செல்லும் நாட்களில் பழையாறு அய்ந்து விரல்கள் போல பிரிந்து நீரினை எடுத்துக் கொண்டு கடலை நோக்கி சென்று கொண்டிருக்கும்.பார்த்தலுக்காத காட்சி இது.அதன் ஊடே புகுந்து மறுகரைக்குச் செல்வோம்.குழந்தைகளாக ஒருபுறம் நதியும் மறுபுறம் கடலும் கொண்டு நடுவில் ஏறிக் கடக்கையில் இரண்டு பக்கமும் மிகவும் உயரமாகத் தெரியும்.

குழந்தையாக இருக்கையில் எல்லாமே மிஞ்சிய உயரமாக இருப்பதையே பார்த்தேன்.ஆறு உயரமாக இருந்தது,குளம் உயரமாக இருந்தது.கிணறு உயரமாக இருந்தது.அப்போதுதான் சரியாகப் பார்த்தேனோ என்னவோ என்றிருக்கிறது இப்போது.அது வேறு ஒரு நிலக் காட்சி .பரப்பிரம்மத்தை நேரடியாகக் காண்பது,பின்னர் இயலாது மறைந்து விடுகிறது

மணக்குடியைக் கடந்தால் தார் சாலை வரும்.சாமிதோப்பை சென்றடைவோம்.கருக்கல் ஆகிவிடும்.மிதிவண்டி வேகம் கூட்டி ஓடும்.

###

சாமிதோப்பில் இருக்கும் நாட்களில் அப்போதெல்லாம் மாலை வேளைகளில் தினந்தோறும் சாமிதோப்பு வைகுண்டசாமி பதியில் உருண்டை அன்னம் தருவார்கள்.வடக்கு வாசலில் அந்த உருண்டை அன்னம் வாங்குவதற்காக ஏராளம் பேர் வருவார்கள். அவர்களிடம் அமர்ந்து வாங்குவோம். ஒரு கைப்பிடி எடுத்து அவர்கள் இட்டுச் செல்வது எங்களுக்கு இரண்டு கையிலும் சூடாக நிறையும்.அப்போதுதான் தினந்தோறும் வாகனம் இரண்டு வீதிகளை சுற்றி வரும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நான் சொல்வதெல்லாம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் .வாகன பவனி இரண்டு வீதிகளையும் நிரப்பிச் சென்றதும் அன்னம் கிடைக்கும்.அதில் வினோதமான ருசி உ ண்டு.தொடர்ந்து அதன் ருசியைத் தேடிக் கொண்டேயிருப்போம் மறு நாள் மாலை வரையில்.

வாகனத்தில் சாமியை ஏற்றி தூக்கத் தொடங்கியதும் அதற்கு பேரழகு உண்டாகிறது.மணக்குடியில் பொழியில் ஒருபக்கம் கடலுக்கும் ,மறுபக்கம் பழையாற்றுக்கும் என இடையே உயரம் பார்த்து கடக்கையில் தோன்றுகிற பேரழகு.தொங்கும் பிச்சி வெள்ளைச் சரம் மெல்ல அசைந்து வாகனம் நகருகையில் அது வேறொன்றாக மாறிவிடுகிறது.அதற்கு ஒரு சுவையும் இருக்கிறது.அது அந்த உருண்டை அன்னத்தின் சுவை.அதன் மணம் அதனுடைய மணம்.அய்யா வைகுண்டசாமியின் நறுமணம்.

அப்போது சாமிதோப்புப் பதியில் வடக்குவாசலில் அன்னசாலையில் அமர்ந்திருந்த குழந்தையாகவே,
இப்போதும் அவருடைய வழிபாடு,வரலாறு,நெறிகள் ஆகியவற்றை எழுத அமர்ந்திருக்கிறேன்.ஏற்கனவே சான்றோர் அரி கோபாலன் சீடர் ஏற்றெடுத்து ,அய்யாவின் அன்போடு அவர் காலத்திற்கு ஏற்ப அகிலத்திரட்டம்மானையை படைத்து அருளிச் சென்றார்.சரியாக ஓராண்டிற்கு முன்னர் ஜெயமோகன் நீங்கள் இதனைச் செய்ய வேண்டும் என்று சொன்னார்.அதுவரையில் நான் யோசித்துப் பார்த்ததுக் கூட கிடையாது.நம்மால் எப்படி முடியும் ? என்று நம்பிக்கையே ஏற்படவில்லை.குரு பூர்ணிமாவில் தொடங்கிவிட வேண்டும் என முடிவெடுத்துத் தொடங்கி விட்டேன்.அவரால் ஆவதுதான் எல்லாமே இதுவும் அவரால் ஆகட்டும்.இது அரிகோபாலன் போன்ற பேரறிஞனின் முயற்சி அல்ல.எளிய குழந்தை முயற்சி.அய்யா உடனிருப்பார் என்ற நம்பிக்கையிலேயே தொடங்கியிருக்கிறேன்.ஊக்கம் தாருங்கள்.பொறுத்துக் கொள்ளுங்கள்.

எது நன்மையோ அதனை அவரே நடத்தித் தரட்டும்.

- லக்ஷ்மி மணிவண்ணன்

Comments

  1. நல்ல முயற்சி; வேறு யார் செய்வது; சிலர் செய்யலாம். ஆனால், செந்தமிழின் செம்மாந்த நடை கைவரபெற்ற நீங்கள் எழுதினால் இன்னும் சிறக்கும்; அய்யாவின் அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். அய்யாவின் இதிகாசம் உங்கள் பேர் நிலைக்க வைக்கும்; உங்களையும். என்னுடைய உளமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. உங்களால் முடியும் மூத்தவரே, வெண்முரசு எனும் பெரும் காவியம் முடித்த ஜெயமோகன் அவர்களை குருபூர்ணிமா நாளில் சந்தித்துவிட்டு தொடங்கி உள்ளீர் .அய்யா வைகுண்டர் உங்களை வழிநடத்துவார் .வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  3. தங்களின் இம்முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள். திரு.ஜெயமோகன் அவர்களின் வாழ்த்து, உங்களுக்கு குருவின் ஆசியாகவே கிடைத்துள்ளதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  4. இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன் கண் விடல் என்ற குறள் தான் நினைவிற்கு வந்தது. ஜெயமோகன் சார் சரியான நபரிடத்தில் தான் பணித்து இருக்கிறார். பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் அவரைப்பற்றிய சிறு பகுதி மட்டுமே உள்ளது. இப்போது தங்கள் எழுத்து மூலம் அய்யா வைகுந்தரைப் பற்றி அதிகமும் தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சியே.

    ReplyDelete
  5. நல்ல துவக்கம்..தங்களின் இம்முயற்சி பெரு வெற்றி பெற வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  6. அய்யா உண்டு ! அரிகோபாலன் போன்ற பேரறிஞனின் முயற்சி தவத்திரு அய்யா வைகுண்டரின் அகிலத்திரட்டு அம்மானை கிடைத்தது போல் திரு. ஜெயமோகன் அவர்கள் மூலம் மகாபாரதம் சரித்திர வெண்முரசு எனும் பெரும் காவியம் அருளப்படுவது போல் தங்களின் இப்பெருமுயற்சி சரித்திரம் படைக்க அய்யாவின் அடியவர்களின் ஆசியுடன் இம்முயற்சி பெரு வெற்றி பெற வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  7. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. மிக்க மகிழ்ச்சி, தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்