அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து  கவிதைகள்

1

அழகிய புது மனைவி

யோனி மடிப்பில் பிசுபிசுப்பு
நேற்று சாயங்காலம் ரயிலேறிய
ஒருத்தனின் புது மனைவி அவள் .
நேற்று அவள் ரயிலேறும் போது
கழுவப்பட்டு புதுக்கனவு மூண்ட யோனியாய்
அது இருந்தது .
இப்போதோ காலை ஒளி கண்ணாடியில்
பிரதிபலித்து கனவு தளர்ந்த உடலை
மூடுகிறது ,கண்கள் கூசுகின்றன
ரயில் நிலையத்தில் நடந்து செல்கிறாள்
அழகிய புது மனைவி

நேற்று ரயிலேறும் போது
கணவனும் கணவனின் நண்பனும்
உடன் வந்தனர் .
கணவனோ அழகிய புது  மனைவியின்
கரங்களை பற்றியபடி ஓடும் ரயிலுக்கு
வெளியே தனித்திருந்தான் .
நண்பன்
புது மனைவி பேரில் கொண்ட கவர்ச்சியால்
கணவனுக்குப் புரியாமல் புது மனைவிக்கான
சமிக்சைகள் செய்து கொண்டிருந்தான்
ஆனாலோ எல்லா சமிக்சைகளும் எல்லோருக்கும்
திறந்தேயிருக்கின்றன 

அழகிய புது மனைவி
நேரடியாய் வெறுத்து ,விரும்பிய போதும்
சமிக்சைகளை பொருட்படுத்தவில்லை
நண்பனின் கண்கள்
அழகிய மனைவியை ஊடுருவி
அறுத்தன .
இப்படி அழகிய மனைவியின்
ரயில் பயணம் கணவனோடும்
நன்பனோடும்
கனவாய்
நிகழ்ந்தது

நடைபாதையில் இப்போது அவள்
நடந்து செல்லும் போது
ஊடுருவிய கண்கள் வெளிறி விட்டன
வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது

2

தொடர்வண்டியில் தொங்கும் இளவரசி

ஆடும் கைப்பிடிகளிரண்டினிடையே
உடலைக் கோத்துத் தொங்கவிட்டபடி
ஆடிக் கொண்டிருக்கிறாள்
தொடர்வண்டியில் தொங்கும் இளவரசி

நள்ளிரவில் புறப்படும் புறநகர்
தொடர்வண்டியில் உடல் தொங்காத கைப்பிடிகள்
இளவரசிகளுக்காக ஆடியபடி காத்திருக்கின்றன
புலப்படாத இளவரசிகள் ஒரு வேளை
அந்த கைபிடிகளில் உடலைக் கோர்த்திருக்கக் கூடும்

கடவுள் பயணிக்கும் நள்ளிரவில்
ஆளற்ற இருக்கைகளிலிருந்து பயணிக்கிறார்கள்
அவர்களின் காதலர்கள்.

இளவரசிகளைக் கவர்ந்திழுக்க வேண்டிய
காதலர்களின் கண்கள்
உள் திருங்கியிருக்கின்றன

கடக் கடக் ஓசையுடன்
தொங்கியபடி பயணிக்கும் இளவரசியின்
நதியில் தோய்ந்த வரி படர்ந்த  வெள்ளையுடலில்
கருங்கல் சிற்பமாய்
கரிய யோனி

விலா எலும்புகள்
துருத்திய மார்பில்
சதையற்றுச் சப்பிய முலைகள்
உலர் திராட்சை
முலைக் காம்புகள் 

சிற்ப யோனியை
சதைக்குறிகளால்
முட்டி நெரிக்கும் நிகழ்காலம்
தூங்கும் வேளையில்
இளவரசி பயணித்துக் கொண்டிருக்கிறாள்

தொடர்வண்டியில் பொருள்களின் அறையில்
திரிசடையோடும் ,கறுத்த பாசி படர்ந்த உடலோடும்
சிற்பக்குறி வெளித்தெரிய
அவளது காதலன்
தூங்காமலிருக்கிறான்

ஆளற்ற இளவரசர்களோடு
தனிமையில்  பயணிக்கும் இளவரசியின் கண்கள்
முதிய நிழலுருவங்கள் ஊடாடித் திரியும்
நீளமான பழுதடைந்த கொட்டாலைகளை
கனவு காண்கின்றன

கொட்டாலை முற்றத்தில்
அழகிய கோலம் ஈரமுலராமலிருக்கிறது

3

காதலன்

எல்லோருக்கும் மனைவியாகும்
தகுதிகளுடன் வளைந்து வரும் யுவதி
குழந்தையைக் கொஞ்சுவது
காலைப்பொழுதை பிரத்யேகமான பொழுதாக
மாற்றுகிறது .
நீர் தெளித்து இடைப்பட்ட
புதுக்கோலங்கள் நம் நினைவுக்கு வர வேண்டும்

பொறியாளர் ஒருவருக்கோ ,மருத்துவருக்கோ
அதிகாரிக்கோ அல்லது சாமானியருக்கோ
அவளுடைய குழுவைச் சேர்ந்தவர்களில்  எவரேனும்
ஒருவருக்கோ அவள் மனைவியாகலாம்
திறமையான ஒரு போர்க்கால
மனைவியாக

வெயிலுடன் பெய்யும் மழை மனதை
தொடர்ந்து ஜெபம் செய்பவள் அவள்

பொதுவான இசை
பொதுவான நாட்டியம்
சிறந்த கவிகளின் பெயர்கள்
பெரிய நதிகள் ,மலைகள்
மேலும் சிகரங்களை அவள் அறிவாள்
அவற்றின் அபாயக் கோடுகளை
நன்றாகவே அறிவாள்

அறிய அறிய எவருக்கோ மனைவியாகப்
போகிறோம் என்பது
அவளைக் கனவு ராணியாக்குகிறது
பருவமெய்தியதிலிருந்து
இயற்கையின் பாடலாய்
நடனமிட்டபடி
குழந்தைகளைக் கொஞ்சுவது
குளித்து முடித்த தேவதைகளை
நினைவுகூரச் செய்யும் .

குழந்தைகளைப் போல
தூக்கங்களின் முகப்பு பொலிவுப் புன்னகை
அவளுக்குப் புதிதல்ல

எந்த மனநல ஆலோசகரும்
பயிற்சியளிக்க வேண்டிய
சாதுர்யங்களை அவளுடைய வளர்ச்சி
கடந்து விட்டது

உலகம் இவ்வளவு இனிமையாக
ஒவ்வொரு நாளும் பிறந்து
படுக்கையில் தூக்கத்துக்குத்
தனியே கனவுகளைத் தந்து
அழைக்கிறது
இளைஞர்கள் எல்லோரும் நல்ல மனைவியிடம்
முன்னோட்டமாக நடந்து கொள்வது விசித்திரம்

புரியாத குழந்தை ஜீவனற்ற தன்மையில்
நடனமிடும் அவளது கனவுகளை
உணர்கிறது

உலகம் ஒரு பேரழகு
கடவுள் கணவனாகவும்
சாத்தான் காதலனாகவும் அமையும்
கனவு ஒன்றை மட்டும்
அவள் காணாதிருக்க வேண்டும் 

4

மூன்றாம் தலைமுறை பெண்கள்

ஊருக்கு வரும் போதெல்லாம்
பராதி சொல்லி அழுதுவிட்டுப் போவாள்
தங்கம்மாள் மாமி 
ரங்கமணி மாமி யாரைக் கண்டாலும்
அழுது விடுவாள் .
காலத்தின் சிறகு கொண்டு வந்து
கொடுத்த நரம்பாய் நெளியும்
உள்ளுடலின் கனத்தால்
சதா நீர் துளிர்த்து நிற்பாள் ஒரு சித்தி
ஊரிலிருந்து குழந்தையை அடித்திழுத்து
சாபமிட்டுத் திரும்ப மாட்டேனென சபதமிட்டுச் செல்பவள்
அடித்திழுத்துத் திரும்பி
அம்மாவுக்குப் பராதிகள் சொல்வாள்
பராதியில் உடலை வதைத்து
சுற்றம் முறிப்பாள் அக்கா

ஊர்வீட்டு ஆண்களையெல்லாம்
உத்தமர்கள் என்று சொல்வதற்கில்லை
உத்தமர்கள் இல்லை என்றும் சொல்வதற்கில்லை

ஊருக்குள் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக
உடல் கொண்டலையும் பழந்தெய்வங்களின்
முகக்குறி  கொண்ட தாவரங்களும்
வளரும் நிலா வெளிச்சமும்
ஊருக்குள் மூன்றாம் தலைமுறையாக நடமாடும்
பெண்களின் கண்ணீரையும் ,பராதிகளையும்
சாட்சியாய் பார்த்து வருகின்றன

5

ருக்மணி அக்கா

ருக்மணி அக்கா
இடுப்பில் குழந்தையுடன்
தன்னிடமிருந்த விஷேசமான புகைப்படக்கருவியால்
தனது புகைப்படங்களைப் படமெடுத்துக் கொண்டாள்
வளர்ந்த மகனின் கண்கொண்டு
படமெடுக்கும்
லென்ஸின் மூடியைத் திறக்க மறந்த
கருவி அது

சுற்றுலா ஸ்தலத்தில்
பல கோணங்களில்
ருக்மணியக்காவின்  புகைப்படங்களை
எடுத்துக் கொண்டன
புகைப்படங்கள்

லென்ஸின் மூடி திறக்க மறந்த
ருக்மணியக்காவின் புகைப்படக்கருவி
மூன்று கண்கள் கொண்டது
உடலுக்குள்ளிருந்து அறியப்படாத கண்ணீராய்
திரளும் கண் ஒன்று
அவளாய் ஆக இயலாத கனவின்
கண் மற்றொன்று
புகைப்படங்களைச் சாட்சியாய்
பார்த்துக் கொண்டிருந்த சுற்றுலா ஸ்தலத்தின்
கண் மூன்றாவது

எவராலும் அச்சிட்டுப் பார்க்க இயலாத
புகைப்படங்களுடன் கூடிய பழுதடைந்த கருவி
திருமணப் புடவை சுற்றப்பட்டு
இரும்புப் பெட்டியில் இருக்கிறது .
எடுக்கப்பட்ட எல்லா படங்களுமே
ருக்மணியக்காவுக்கு
தெளிவாய் தோன்றுகின்றன 


- லக்ஷ்மி மணிவண்ணன்

( வீரலெட்சுமி கவிதைத் தொகுப்பிலிருந்து ) 

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அய்யா வைகுண்டர் இதிகாசம் 1