அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ...
காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வரவில்லை என்று கூறினேன்.அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.காமராஜர் பற்றி இன்று பொதுவாகப் பேசப்படும் பொதுமனநிலையிலிருந்து, அதற்கு உட்பட்டு எதையும் பேச இயலாது.மாறாகப் பேசும்போது அவை தவறாக எடுத்துக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் . பிறந்த சாதியைச் சேர்ந்த சாதியவாதிகள் காமராஜரை எப்படி இப்படி பேசலாம் எனவும் பிற சாதியவாதிகள் காமராஜர் என்பதால் பேசுகிறேன் என்று வேறுவிதமாகவும் அணுகுவதற்கான வாய்ப்புகளே இன்றைய தினத்தில் அதிகம்.
ஆன்டனி எனது நண்பர்.புரிந்து கொண்டார் என்று நினைக்கிறேன்.ஏற்கனவே அவரது அழைப்பை ஏற்று சென்னை சென்று ஒருமுறை அந்த ஷோவில் பங்கேற்றிருக்கிறேன் . மற்றொரு முறை சென்றபின் ஏற்பாடு செய்த அரங்கில் பங்கேற்க முடியாது என மறுத்துத் திரும்பவும் செய்திருக்கிறேன்.அன்டனி ஊடகக்காரர்களில் சற்று விதிவிலக்கானவர்.புரிந்து கொள்ளக் கூடியவர்.அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் குட்டிரேவதி,பிரபஞ்சன் உட்பட காமராஜரின் பிறந்த சாதியை சேர்ந்த மூவரும் அழைப்பை மறுத்து விட்டீர்கள் அதுவும் நல்லதுதான் என்றார் அவர்.அவர் பிறந்த சாதியிலேயே பிறந்ததால் அவரைப் பற்றி பேசகூடாது என்கிற எண்ணம் எனக்கில்லை.அப்படி ஒரு புனிதத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டிய துர்பாக்கியத்தில் நானில்லை.
காமராஜர் கடந்த தலைமுறையினரின் நற்குணங்களுக்கு ஒரு அரிய சான்று என்பதில் சந்தேகமே இல்லை.ஆனால் நவீன அரசாங்கத்தை ஏழை மக்களுக்கு சாதமாக்கியதுதான் அவரது தனிப்பெரும் பண்பு. அது அவ்வளவு எளிதானதொரு காரியமில்லை. நவீன அரசு எந்திரத்தை ஏழைகளுக்கு சாதகமாக வளைப்பது அவருக்குப் பிறகு ஒருபோதும் சாத்தியப்படவும் இல்லை.அப்பர் கோதையாறு நீர்மின்நிலைய திட்டம் அவர் எப்படி இதனை சாத்தியப்படுத்தினார் என்பதற்கு ஒரு குறியீடு.உலகிலேயே நவீன அரசு கேந்திரத்தை இவ்வளவு தெளிவாக ஏழைகளின் பக்கமாகத் திருப்பிய ஒரே ஒரு தலைவன் உண்டெனின் அது காமராஜர் ஒருவர் மட்டும்தான்.
நவீன அரசு கேந்திரம் அதன்பின்னர் தமிழ்நாட்டில் தீமையடையத் தொடங்கிவிட்டது.காமராஜருக்குப் பிறகு அதனைக் கைப்பற்றியவர்கள் நவீன அரசின் சுய குணத்தை வெளிப்படுத்தினார்கள்.பெரும் அபாயங்கள் ஒளிந்திருந்த இந்த கேந்திரத்தின் நேர்மறையான பண்புகளை மட்டுமே வெளிக்கொணர உலகிலேயே காமராஜரைத் தவிர ஒருவராலும் இயலவில்லை.சிங்கத்தைப் பூட்டி ஏர் உழுகிற காரியம் காமராஜரால் சாத்தியமானது.
ஆனால் அவரது எளிமை பேரில்லெல்லாம் எனக்கு எண்ணங்கள் இல்லை.காமராஜரை எளிமையை முன்வைத்து போற்றுபவர்கள் அவர் அரசு எந்திரத்தை நேர்மறையாக பயன்படுத்திய விதத்தையும் ,நவீன அரசின் அபாயத்தையும் நம்முடைய கண்களில் இருந்து மறைக்கப் பார்க்கிறார்கள்.அவர் காலத்தில் அவர் பேணிய பண்புகள் பிற தலைவர்களிடமும் காணக் கிடைப்பவைதான்.ஜீவானந்தம் ,பெரியார்,ராஜாஜி என பலரிடமும் இருந்தவைதான்.அந்த தலைமுறையின் இறுதிப் பயணம் என்று தோழர் நல்லக்கண்ணுவை வரையறை செய்யலாம்.
நான் கூறுகிற விஷயம் என்னவெனில் ஒரு வேளை காமராஜர் எளிமையானவராக இல்லாதிருந்திருப்பாரேயானாலும்கூட அவர் செய்த காரியங்களில் ஒரு குறையுமே இருந்திருக்காது.அவர் ஆற்றிய காரியங்கள் தீர்க்கதரிசனங்களால் மட்டுமல்ல கூரிய அடித்தட்டுப் பார்வையால் விளைந்தவை.அவர் ஆற்றிய காரியங்கள் எளிமையால் சாத்தியமானவை போல ஏற்பட்டிருக்கக் கூடிய இன்றைய தோற்றம் முற்றிலும் பிழையானது.அடித்தட்டுப் பார்வைகளை முற்றிலும் கைவிட்டுவிட்ட இன்றைய அரசியல்வாதிகள் எளிமையின் பொருட்டு அவரை கொண்டாடுவது மிகப் பெரிய மோசடி மட்டுமல்ல அபாயகரமானது. போலிக்காமராஜர்களை உருவாக்க வழிவகை செய்யக்கூடியது.
காமராஜர் ஆட்சிக்கு வந்தவுடன் தந்தை பெரியார் "கறுப்புத் தமிழன் ஆட்சிக்கு வந்துவிட்டான் இனி ஒரு கவலையும் இல்லை" என தலையங்கம் எழுதுகிறார்.பெரியாருக்கும்,காமராஜருக்குமான இணைப்பே அடித்தட்டு பார்வைகளால் சமநிலை பெற்றவையே அன்றி எளிமையால் உருவானவை அல்ல.
இன்று எனது மகள் படிக்கும் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை பள்ளியில் காமராஜரைப் பற்றி பேச அழைத்திருந்தார்கள்.இரண்டு விஷயங்களை மாணவர்களுக்கு சொன்னேன்.தலித் தோழர்கள்,உடன் பணியாற்றியர்கள் சாதி ரீதியில் அவமானங்களுக்கு உட்படுத்தப்பட்ட வேளைகளில் அவர் எவ்வளவு கொதித்தார் என்பதற்கான உதாரணங்களாக சில சம்பவங்களைச் சொன்னேன்.அவர் உருவாக்கிய கிராமப்புறக்கல்வி பயின்று , ஆளாகி பின்பு சாதித் திமிருக்குத் திரும்புவது என்பது காமராஜருக்குச் செய்கிற துரோகம் என்பதை எப்பொதும் நினைவில் வையுங்கள் என கேட்டுக்கொண்டேன்.
ஆங்கிலத்தில் ஒருவேளை காமராஜ் திரைப்படம் வெளிவருமானால் அவர் புகைக்கும் ஒரு சில காட்சிகள் மேலும் இடம் பெறவேண்டும் என்பது எனது விருப்பம்.காமராஜர் திரைப்படத்தை பாலகிருஷ்ணன் ஆங்கிலத்தில் படமாக்க முயற்சி மேற்கொண்ட போது ஆரம்ப கட்ட திரைக்கதை வேலைகளுக்காக அவருடன் இணைந்து காமராஜர் பற்றி நிறைய படித்தேன்,நிறைய தேடினேன்.தெரிந்து கொண்டேன்.அவர் பற்றி புதியதாக ஒரு அவதானத்துடன் நூல் எழுதும் அளவிற்கு பல விஷயங்களைத் அறிந்து கொண்டேன்.குளிர்பதன வசதியின்றி தூக்கம் கூடாதவர் காமராஜர் என்கிற தகவல் உட்பட அப்போது தெரிந்து கொண்டதுதான் .
காமராஜர் தீவிரமான அசைவ உணவுப்பிரியர் . மட்டன் பிரியாணி அவருக்கு மிகவும் பிடித்தமான உணவு.புகைப்பதில் மன்னன்.புகையின் மஹா ரசிகர் அவர்.

 [15  -07 - 2015  ல் என்னுடைய முகநூல் பதிவு ]
https://www.facebook.com/permalink.php?story_fbid=1614447755511542&id=100008389998084

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"